காஷ்மீர் விடயத்தை ஐ.நா.பாதுகாப்பு சபை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்க இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு

Kashmir and the United Nations Security Council

 

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதர் டி எஸ் திருமூர்த்தி ஐ.நா.பாதுகாப்புக் குழுவிடம் “காலாவதியான இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையை” கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் தூதர் முனீர் அக்ரம் இதற்கு பதிலளிக்கையில், “பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இருந்து காஷ்மீரை நீக்கலாம் என்று இந்திய பிரதிநிதிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள், அல்லது தங்கள் நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்”, என்று கூறினார்.”

“கட்டாயப்படுத்தி காரியம் சாதிக்கும் இந்திய இராஜதந்திரம் செல்லுபடியற்றது, அதற்கு எதிர்காலம் இல்லை. ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் வெளிப்படையான கடமைகளை அது மீற முடியாது,” என்று ஜம்மு-காஷ்மீர் மனித உரிமைகளுக்கான கவுன்சில் தலைவர் டாக்டர் சையத் நசீர் கிலானி குறிப்பிட்டார். 

பாதுகாப்பு கவுன்சில் முன்னுள்ள விஷயங்களின் பட்டியல் தொடர்பான ஐ.நா பொதுச்செயலாளர் திரு அன்டோனியோ குடரெஸின் சுருக்க அறிக்கை 2020 ஜனவரி 2 அன்று வெளியிடப்பட்டது. 2017 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் முறையான கூட்டத்தில் 56 விடயங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 13 விடயங்கள் பரிசீலிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், நிகழ்ச்சிநிரலில் உள்ள அனைத்து 69 நிகழ்ச்சி நிரல்களும் “இந்தியா-பாகிஸ்தான் விடயம்” உட்பட “பாதுகாப்பு கவுன்சில் தற்போது முன்னுள்ள விஷயங்களாக” அடையாளம் காணப்பட்டன.

பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாட்டை நிர்வகிக்கும் நடைமுறை விதிகளின் படி மட்டுமே ஒரு விடயத்தை நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்ற முடியும் என்பதை இங்கு குறிப்பிடுவது சிறப்பு. மோதல் தீர்க்கப்பட்டால் அல்லது பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களிடையே ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலை அகற்ற ஒருமித்த கருத்து இருந்தால் அகற்றுதல் நடைபெறலாம். காஷ்மீரைப் பொறுத்தவரை, இந்த நிபந்தனைகள் எதுவும் பொருந்தாது. ஸ்ரீநகரில் (ஜம்மு-காஷ்மீர் தலைநகரம்) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பு குழு (UNMOGIP) இருப்பது எங்களுக்குத் தெரியும், காஷ்மீர் தகராறு என்பது பாதுகாப்பு கவுன்சில் முன்னுள்ள விஷயம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

காஷ்மீர் சர்ச்சையை “காலாவதியான நிகழ்ச்சி நிரல்” என்று இந்தியா கூறுகிறது. காஷ்மீருக்கான கொள்கை ரீதியான தீர்வு ஐக்கிய நாடுகள் சபையால் ஏறக்குறைய உலகளாவிய ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டு ஏழு தசாப்தங்கள் கடந்துவிட்டன என்பதில் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த தீர்மானங்கள் இன்று வரை செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பதன் காரணமாக அது பிரச்சினை நீங்கியுள்ளது என்பதாகாது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் ஒருபோதும் காலாவதியானதாகவோ அல்லது வழக்கற்றுப் போய்விட்டதாகவோ அல்லது நிகழ்வுகள் அல்லது மாற்றப்பட்ட சூழ்நிலைகளால் எடுக்கப்படவோ முடியாது. காலம் கடந்துள்ளது என்பதற்காக காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை பறிக்க முடியாது. தனித்துவமான சர்வதேச ஒப்பந்தங்களை காலம் கடந்துவிட்டது என்பதற்காக நீக்குவதற்கு அனுமதிக்கப்பட்டால், காஷ்மீர் மீதான தீர்மானங்களைப் போலவே ஐக்கிய நாடுகள் சபையின் சாசனமும் அதே கதியை அனுபவிக்க வேண்டியிருக்கும். செயல்படுத்தப்படாதது ஒரு ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்யுமானால் இருபத்தியோராம் நூற்றாண்டில் பல நாடுகள் தொடர்பாக ஜெனீவா மாநாடு எடுத்த தீர்மானங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும்.

காஷ்மீர் தொடர்பான ஐ.நா.பாதுகாப்புக் தீர்மானங்கள் வழக்கமான இயல்புடையவை அல்ல. அவற்றில் அடங்கியுள்ள விடயங்கள் அனைத்தும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிக நுணுக்கமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டவையாகும், ஒவ்வொரு ஏற்பாடும் சம்பந்தப்பட்ட இரு அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே அவை பாதுகாப்பு கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரு அரசாங்கங்களின் ஒப்புதல் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவை ஒரு தனித்துவமான சர்வதேச உடன்படிக்கை மட்டுமல்லாமல், பாதுகாப்பு கவுன்சிலாலும், அடுத்தடுத்த ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளாலும் பலமுறை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் மக்கள் தங்கள் தாயகத்தின் எதிர்கால நிலையை தீர்மானிக்க உள்ள உரிமையை அவர்கள் இத்தீர்மானங்களின் மூலம் வெளிப்படையாக அங்கீகரிக்கின்றனர். தீர்மானங்களின் விதிகளின் இருபுறமும் செயல்படுத்தப்படவில்லை என்பதற்காக இந்த உரிமை இல்லையென்று ஆகிவிடாது.

ஜம்மு-காஷ்மீரின் நிலை குறித்த சர்ச்சை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதும் சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, ஜனநாயக முறையின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது இந்தியா ஏற்கனவே எடுத்த நிலைப்பாடு. இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிக்கப்பட்டது மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஜனநாயக நாடுகளின் ஆத்தாவையும் வென்றது.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதர் சர் கோபாலசாமி அய்யங்கர் 1948 ஜனவரி 15 ஆம் தேதி தனது அரசாங்கத்தின் சார்பில் கவுன்சிலில் முன்வைத்தபோது,

காஷ்மீர் இந்தியாவுக்குள் இருப்பதில் இருந்து விலக வேண்டுமா, அல்லது பாகிஸ்தானுக்குள் இருக்க ஒப்புக் கொள்ளலாமா அல்லது சுதந்திரமாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக இணைவது தொடர்பாகவும் முடிவு செய்யும் உரிமை – காஷ்மீர் மக்களின் தடையற்ற முடிவுக்கான ஒரு விடயமாக நாங்கள் அங்கீகரித்திருக்கிறோம்”, என்று கூறினார்.மகாத்மா காந்தியின் “காஷ்மீர் மக்களின் விருப்பமே காஷ்மீரின் மிக உயர்ந்த சட்டமாகும்” என்ற கூற்று பிரபல்யமானது.

இந்தியாவின் ஸ்தாபக பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர் லால் நேரு நவம்பர் 2, 1947 அன்று,

காஷ்மீரின் தலைவிதி இறுதியில் மக்களால் தீர்மானிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம். அந்த உறுதிமொழியை நாங்கள் காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் அளித்துள்ளோம். நாங்கள் வழங்கிய அந்த உறுதிமொழியை விட்டு எங்களால் வெளியேற முடியாது, வெளியேறவும் மாட்டோம்”,என்று கூறினார்.

எவ்வாறாயினும், காஷ்மீரின் மக்கள் ஒருபோதும் இந்தியாவுக்குள் இருப்பதற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் செய்வதற்கு பல சாக்குப்போக்குகளைக் காட்டி தடுத்து வந்துள்ளது. பிரச்சினையை தீர்ப்பதற்கான வேறு எந்த முறையையும் முன்மொழிந்தபோது, இந்தியா அவை அனைத்தையும் குழப்பியே வந்துள்ளது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீரை இணைப்பதை ஒருதலைப்பட்சமாக அறிவிப்பதன் மூலம் வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொள்ளும் அனைத்து பாசாங்குகளையும் அது கைவிட்டது. மேலும் ஆகஸ்ட் 5, 2019 அன்று, அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறி, இந்தியா 370 மற்றும் 35 ஏ பிரிவை ரத்து செய்தது. இந்தியாவின் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை, இது தொடர்ந்து காஷ்மீரை சர்ச்சைக்குரிய பிரதேசமாக பட்டியலிட்டு சுயநிர்ணய உரிமை என்ற பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.

காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. சாசனம் மற்றும் பொருந்தக்கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தீர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கூறிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையைத் தொடங்கவும், அந்த நோக்கத்திற்காக அவரது உதவியைப் பெறவும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் வலியுறுத்துவதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இப்போது வரை, இந்த யோசனைக்கு இந்தியா எந்தவிதமான ஆக்கபூர்வமான பதிலும் அளிக்கவில்லை, அதற்கு பதிலாக இந்தியா தனது ‘உள் விஷயங்களில்’ தலையிட வேண்டாம் என்று பொதுச்செயலாளரை எச்சரித்துள்ளது.

இந்த மாதிரியான ஒரு விஷயத்தை பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தால் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலைகளில் மற்றும் நிரந்தர உறுப்பினர்களின் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளை கருத்தில்கொள்கையில், பொதுச்செயலாளரின் இந்த உரிமையும் அதிகாரமும் தற்போதைக்கு இருப்பில் வைக்கப்படலாம் என்பதை நாங்கள் முழுமையாக உணர்கிறோம். 99 வது பிரிவைத் தொடங்குவதன் மூலம், மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கும், ஜம்மு-காஷ்மீர், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் – மூன்று கட்சிகளிடையே ஒரு ‘சிறப்பு தூதரை’ அனுப்புவதன் மூலம் நிலைமையைத் திருப்ப பொதுச் செயலாளர் உதவ முடியும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் திருப்திக்கு காஷ்மீர் சர்ச்சையை தீர்ப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் ஆராயும். அத்தகைய பணி ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும், இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் தலைநகரங்களுக்கும் சென்று இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகளின் உண்மையை சரிபார்க்க முடியும். மனித உரிமைகள் பேரவையின் வழக்கமான பொறிமுறை மற்றும் பல்வேறு மரபுகளை கண்காணிக்க நிறுவப்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கு இந்த விஷயம் மிகவும் அவசரமானது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்போதுள்ள மோதலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்ச்சியான விரோதப் போக்குகள் – மூன்றும் அணுசக்தி சக்திகள் மற்றும் காஷ்மீருடனான எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடுகள் – காஷ்மீர் மோதல் தீர்க்கப்படாவிட்டால், முழு பிராந்தியத்தையும் அணுசக்தி பேரழிவிற்கு இட்டுச்செல்லும் என்பதையும் பொதுச் செயலாளர் பி 5 க்கு எச்சரிக்க வேண்டும்.

பொதுவாக உலக வல்லரசுகள் மற்றும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுப்பதில் மகத்தான தார்மீக மற்றும் அரசியல் செல்வாக்கைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம், இது விரைவான, நியாயமான மற்றும் சர்ச்சைக்கு கௌரவமான தீர்வு காண வழிவகுக்கும் மற்றும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும்.

கட்டுரையாசிரியர் – டாக்டர் குலாம் நபி ஃபாய், வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலக காஷ்மீர் விழிப்புணர்வு மன்றத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

தமிழில் – தாஹா முஸம்மில்  

Scroll to Top
Scroll to Top