இஸ்லாமியப் புரட்சி வெற்றியின் ரகசியம்: தக்வா உடைய தலைமைத்துவம்

The secret of the Success of the Islamic Revolution: 

The Leadership with Taqwa

 
 
ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமய்னியின் 31வது வருட நினைவு தினத்தை (03-06-2020) முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

இந்த மகத்தான மனிதர் மரணித்து 31 ஆண்டுகள் கழிந்த நிலையிலும்….. மில்லியன் கணக்கான மக்கள் மனதில் இன்றும் உயிர்வாழ்வதேன்…?

இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம். எமக்கு வேண்டிய விதத்தில் இஸ்லாமிய உலகைத் துண்டாடி எல்லைகளை வகுத்துள்ளோம். எல்லா முஸ்லீம் நாடுகளிலும் எம்முடைய நலன்களை காக்கும் விதத்தில் எமது முகவர்களை அமர்த்தியுள்ளோம். எமது கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாதபடி திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கையில் மேற்குலக நாகரீகத்தில் மூழ்கிக்கிடந்த ஈரானில் திடீரென ஒரு புரட்சி வெடிக்கிறது. அதுவும் இமாம் கொமெய்னி என்ற உலமாவின் தலைமையில் இஸ்லாமிய புரட்சியாக வெடிக்கிறது. ‘கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமென்றே போதும்’ என்ற கோஷம் வானுயர எழுகிறது. அது ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிறது. ஈற்றில், 1979ம் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று, ஈரானில் இஸ்லாத்தின் அடிப்படையிலான ஆட்சி நிறுவப்படுகிறது.
ஆன்மீகம், மறைஞானம் மற்றும் இறை போதனைகள் ஆகியவற்றில் இமாம் கொமெய்னி அவர்களின் பற்றும் ஈடுபாடும் உண்மையில் அவரை ஒரு சிறந்த தலைவராக மாற்றியது. அவரது எளிய வாழ்க்கை முறை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான சீடர்களை ஈர்த்தது. ஈரானின் முழு அதிகாரமும் இவர் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் ஒரு சாதாரண வீட்டில் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இமாம் விரும்பியிருந்தால் ஷா மன்னனால் கட்டப்பட்டிருந்த மாளிகை ஒன்றில் உல்லாசமாக வாழ்ந்திருக்கலாம். 
அதிகாரமும் செல்வமும் தன்னை ஆக்கிரமிப்பதை அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர், மறைந்து மூன்று தசாப்தங்கள் கடந்த நிலையிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இன்றளவிலும் போற்றப்படுகிறார். உலக இன்பமெல்லாம் உத்தமர்களுக்கு அற்பமானதே.
மிக முக்கியமாக, புனித குர்ஆன் மற்றும் இஸ்லாத்தின் புனித இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதான அவரது நித்திய அன்பு அவரை ஒரு ஆளுமைமிக்க ஒருவராக மாற்றியிருந்தது. அவர் எல்லா நிலைகளிலும் சூழ்நிலைகளிலும் சர்வவல்லமையுள்ள இறைவனின் விருப்பத்தை கடைப்பிடிப்பதில் எப்போதும் உறுதியாக இருந்தார். இமாம் ‘அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  உரைகளின் தொகுப்பான நஹ்ஜ்  அல்-பாலாகாவில் மிகுந்த கவனம் செலுத்தியிருந்தார்.
இஸ்லாத்தின் புனித தீர்க்கதரிசியின் உண்மையுள்ள வாரிசான இமாம் அலி இப்னு அபீ தாலிப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குர்ஆனின் போதனைகளை கடைபிடிப்பதை முஸ்லிம்கள் கைவிட்ட விதத்தை கடுமையாக விமர்சித்து எச்சரித்திருந்தார். புனித குர்ஆனுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் ஏற்ப முழு வாழ்க்கையும்  வடிவமைத்துக்கொண்ட இமாம் அலி (அலை) அவர்களின் ஆன்மீக வாழ்வை துல்லியமாக பின்பற்றும் ஒருவராக இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இருந்தார் என்றால் மிகையாகாது.
போராட்டப்பாதையில் இருந்து இமாமின் கவனத்தை திசைதிருப்ப பலர் முற்சித்தனர். அப்போது அவர் இஸ்லாம் அழிந்து ஈரான் வாழ்வதை விட, ஈரான் அழிந்து இஸ்லாம் வாழ்வதை விரும்புகிறேன். ஈரானே அழிந்தாலும் இஸ்லாத்தை விட்டுக்கொடுக்க முடியாது,” என்று உறுதியாகக் கூறினார்.
சமூக மற்றும் தார்மீக வீழ்ச்சியில் உலகம் மூழ்கியிருந்த ஒரு காலகட்டத்தில், இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் உண்மையான இறை போதனைகளை புதுப்பித்து, வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தில் ஆன்மீகத்தை ஊக்குவித்தார்.
இஸ்லாமிய புரட்சிக்குத் தலைமைத்துவம் வழங்கிய இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் ஈரானுக்கு மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளுக்கும் ஒரு பாரிய மாற்றத்தைக் கொண்டுவந்த ஒரு செல்வாக்கு மிக்க மத மற்றும் அரசியல் பிரமுகராக இருந்தார் என்பதை இன்று உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது.. இமாமின் கொள்கை மற்றும் படைப்புகள்  உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் முஸ்லிம் நாடுகளிலும் இன்றளவிலும் விழிப்புணர்வையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
முஸ்லிம் நாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டிப்பிழைக்கும் காலனித்துவ ஆதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்பு கொள்கைகளை இமாமவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
அமெரிக்காவே எமது பாதுகாப்பு என்று அரபு ஆட்சியாளர்கள் அவர்களிடம் மண்டியிட்டிருந்த காலகட்டத்தில், இஸ்லாமொன்றே எமக்கு பாதுகாப்பளிக்க வல்லது என்று உறுதியாய் இருந்து, அதனை செயலில் காட்டி, உலக முஸ்லிம்களுக்கு கண்ணியம் சேர்த்த பெருந்தகை, யுகப்புருஷர் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள்.
ஈராக் மற்றும் பிரான்ஸ் நாட்டுகளுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த நிலையிலும் கூட, விட்டுக்கொடுக்காது, பஹ்லவி ஆட்சிக்கு எதிரான எழுச்சியை இமாம் கொமெய்னி தொடர்ந்து வழிநடத்தி வெற்றிபெற்றார்.
அவரது புத்திசாதுரியமான தலைமையின் கீழ் உருவாகி வெற்றி இலக்கை அடைந்த இஸ்லாமிய புரட்சி, ஒடுக்கப்பட்ட உலக நாடுகளை காலனித்துவ சக்திகளின் ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. . இமாமின் மதிநுட்பமான தலைமையின் கீழ் வெற்றிகண்ட இஸ்லாமிய புரட்சி 20 ஆம் நூற்றாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றங்களை கொண்டுவந்தது. இந்த புரட்சி உலக பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் பிராந்திய ஆதிக்க பலம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள், உலக அரசியல் தொடர்பான கருத்துக்கள் உலகெங்கிலும் இன்னும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுவதோடு விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அவற்றை இன்றளவிலும் கொள்கையாகக் கொண்டு இன்றளவிலும் செயல்பட்டு வருகின்றன. பாலஸ்தீனம், பஹ்ரைன், எகிப்து மற்றும் பல நாடுகள் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் சித்தாந்தத்தை மாதிரியாகக் கொண்டே தமது போராட்டங்களை நடத்திவருகின்றனர் என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். 
இஸ்லாமிய புரட்சி பற்றி மௌலானா அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில் “கொமெய்னி அவர்களின் புரட்சி ஓர் இஸ்லாமியப் புரட்சியாகும். அதன் காப்பாளர்கள் ஜமாத் இஸ்லாமைச் சேர்ந்தவர்களே. பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களும் இந்தப் புரட்சிக்கு ஆதரவு கொடுத்து அதன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்தாசை வழங்குவது கடமையாகும்”. “அல் காஹிறா” சஞ்சிகை மலர் 29-1979.
ஷியா-சுன்னி ஒற்றுமையில் இமாம் கொமெய்னி அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அவரது பிரகடனங்களில் ஒன்றான “சர்வதேச ஒற்றுமை வாரம்” என்பது சுன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இடையிலான ஒற்றுமையை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். றஸூலுல்லாஹ்வின் மீலாதை கண்ணியப்படுத்து முகமாக சர்வதேச ஒற்றுமை வார பிரகடனத்தை செய்தார்.
மற்றும் “குத்ஸ் தினம்” போன்ற அவரது பிரகடனங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் வரலாற்று அடையாளங்களாகும். புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை சர்வதேச குத்ஸ் தினமாக பிரகடனப்படுத்திய தானது இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் மற்றொரு சிறப்பாகும். குத்ஸ் தினத்தன்று, உலகெங்கிலும் உள்ள மக்கள் பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையைக் வெளிக்காட்டுகிறார்கள் மற்றும் சியோனிஸ்டுகளுக்கு எதிரான வெறுப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.
பைத்துல் முகத்தஸ் விடுதலை சம்பந்தமாக குறிப்பிடுகையில் “முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரை ஊற்றினாலே போதும் இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்” என்று கூறினார் இமாம் கொமெய்னி.
இஸ்லாமிய குடியரசின் மறைந்த நிறுவனர் இமாம் கொமெய்னி, சமூகத்தில் உயர்ந்த மனித விழுமியங்களை பரப்பி, விரும்பப்படும் குறிப்பிட்ட மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் முற்றிலும் ஆன்மீக போதனைகளின் அடிப்படையில் மட்டுமே அதனை உருவாக்க முடியாது என்றும் இஸ்லாமிய புரட்சி ஒன்றினால் மட்டுமே அம்மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் உறுதியாக நம்பியது மட்டுமல்லாது, செயல் ரீதியாகவும் அதை நிரூபித்துக் காட்டினார்.
இவ்வாறு அவர் நமது சமுதாயத்தில் உயர்ந்த மனித விழுமியங்களை பரப்புவதையும், களங்கமற்ற இஸ்லாத்தின் பால் அழைப்பதையும் மக்கள் ஏற்றுக்கொண்டு, சன்மார்க்க மற்றும் இஸ்லாமிய விழுமியங்களில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஈரானிய மக்கள் மத்தியில் வியாபித்ததன் காரணமாகவும் மனித மற்றும் தெய்வீக கடமையை நிறைவேற்ற புனித பாதுகாப்பு துறைகளில் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடியதன் காரணமாகவும் அவர்கள் மகத்தான வெற்றிகளை அடைந்து கொண்டனர்.
-தாஹா முஸம்மில்
https://thoothu2018.blogspot.com/2020/06/blog-post.html
Scroll to Top
Scroll to Top