சமூக விடுதலைக்கான ஆன்மீகத் தலைமை: ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்)

Spiritual Leadership for Social Liberation :
Imam Khomeini (RA), Founder of the Islamic Republic of Iran

 

ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமைனியின் 31வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு பதியப்பட்டது.

அறிமுகம்

இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் றூஹுல்லாஹ் மூஸவி கொமைனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞராகவும், மர்ஜஃ எனப்படும் சமய ரீதியாக மற்றவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு மார்க்க மேதையாகவும் திகந்தார்.

ஈரானில் நிலவிய பஹ்லவி ஆட்சி பீடத்தின் கடைசி மன்னராக இருந்த முஹம்மத் ரிஸா பஹ்லவியை ஆட்சியிலிருந்து கவிழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின் அரசியல் தலைவராகத் திகழ்ந்தவரும் இவரே ஆவார்.

இந்தப் புரட்சியைத் தொடர்ந்து இமாம் கொமெய்னி அவர்கள் ‘வலிய்யே ஃபகீஹ்’ எனும் ஈரானின் அதியுயர் அதிகாரம் பெற்ற பெரும் தலைவராக மாறினார். புதிய இஸ்லாமியக் குடியரசில் மிக முக்கிய நிலையில் கருதப்பட்ட இந்தப் பதவியை அவர் தனது வாழ்நாளின் கடைசி வரை வகித்தார்.

பல முஸ்லிம்களுக்கு அவர் ஒரு ‘மர்ஜஃ’வாக (அதாவது மார்க்க ரீதியில் பின்பற்றக்கூடிய தலைவராக) இருந்தார். ஈரானில் அவர் பெருந்தலைவர் என்பதற்கு பதிலாக உத்தியோகபூர்வமாக ‘இமாம்’ என்றே அழைக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் இந்த மரபையே பின்பற்றி வந்தனர்.

இமாம் கொமய்னி அவர்கள் மிக உயர்ந்த செல்வாக்கு கொண்ட நவீன இஸ்லாமிய தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார். இந்தத் துறையில் அவரது மிக உன்னதமான படைப்பாக நீதித்துறை கோட்பாடுகள் பற்றி அவர் எழுதிய புதிய தத்துவங்களைக் கொண்ட ‘விலாயதே ஃபகீஹ்’ எனும் நூல் அமைந்துள்ளது.

குடும்பமும் ஆரம்ப காலமும்

றூஹுல்லாஹ் மூசவி எனும் இயற்பெயரைக் கொண்ட இமாம் கொமைனி அவர்கள், ஆயத்துல்லாஹ் செய்யித் முஸ்தபா மூசவி மற்றும் ஹாஜியா ஹகா கானூம் ஆகியோருக்கு பிள்ளையாக ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து தெற்கே சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ‘கொமைன்’ என்ற இடத்தில் பிறந்தார். (இவர் 1900மாம் ஆண்டு மே 17ம் திகதியில் அல்லது 1902ம் ஆண்டு செப்டம்பர் 24ம் திகதியில் பிறந்ததாக இருவகை குறிப்புக்கள் உள்ளன).

இந்தக் குடும்பம் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றலில் வரும் செய்யித் வம்சத்தைச் சேர்ந்தது. அவரின் தந்தைவழி பாட்டனார் செய்யித் அஹமத் மூசவி ஆவார். அவரின் மூன்றாவது மனைவி ஷகீனாவுக்கு 1856ல் பிறந்தவர்தான் இமாம் கொமைனி அவர்களின் தந்தை முஸ்தபா ஆவார்.

இமாம் கொமய்னி அவர்களின் தாய் வழி பாட்டனார் மீர்ஸா அஹமத் முஜ்தஹித் கோன்ஸாரி ஆவார். இவர் ஈரானின் மத்திய பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க சமயத் தலைவராகத் திகழ்ந்தவர். அந்தக் காலத்தில் மன்னர் பரம்பரையால் பிரிட்டிஷ் கம்பனி ஒன்றுக்கு புகையிலை உற்பத்திக்கான ஏகபோக உரிமை வழங்கப்பட்டிருந்தது. அந்த புகையிலை உற்பத்திகளைப் பயன்படுத்துவதை தடை செய்து பகிரங்கமாக ‘ஃபத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்பு வழங்கியவர். இதன் விளைவாக, அந்த சலுகையை அரசினால் இரத்துச் செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியமை குறிப்பிடத்தக்கது.

இமாம் கொமைனி அவர்கள் ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே அவரின் தந்தை கொலை செய்யப்பட்டார். அவருடைய தாயும், அத்தை ஒருவரும் தான் அவரை வளர்த்தனர். பிறகு இமாமுக்கு 15 வயதாக இருக்கும் போது ஒரே ஆண்டில் அவருடைய தாயும், அவ்வாறே அவருடைய அத்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.

இமாம் கொமைனி அவர்கள் தனது ஆறாவது வயதிலிருந்தே புனித வேத நூலான திருக்குர்ஆனை கற்கலானார். ஆரம்ப கல்வியை அவர் வீட்டிலும் உள்ள10ர் பாடசாலையிலும் பெற்றுக் கொண்டார். 18 வயது வரைக்கும் அவர் தனது மூத்த சகோதரரின் பாதுகாப்பில் இருந்தார். பிறகு இஸ்ஃபஹான் மாநிலத்திலுள்ள சமயக் கற்கை நிலையத்தில் அவர் மேலதிக கல்வியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், அவர் ஈரானின் அராக் நகரிலுள்ள சமயப் பாடசாலையையே விரும்பினார். அந்தக் காலத்தில் கல்விப் புலமைக்கு மிகவும் பெயர் போன ஒரு இடமாக அது இருந்தமையே இதற்கு காரணமாகும்.

1921ம் வருடத்தில் இமாம் கொமைனி அவர்கள் அராக் நகரில் தனது மார்க்க கல்வியைத் தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டு அராக் நகர சமயப் பாடசாலை கும் நகரிலுள்ள சமயக் கல்விக்கூடத்துக்கு மாற்றப்பட்டது. அராக் நகர மாணவர்கள் அங்கு செல்லுமாறு கேற்கப்பட்டனர். இமாம் கொமைனி அவர்களும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அங்கு சென்றார். அங்கு பட்டம் பெற்ற பின்னர் அதே சமயக் கல்விக்கூடத்தில் அவர் இஸ்லாமிய சட்டவியல், இஸ்லாமிய நீதி, நிர்வாகம் மற்றும் மெய்யியல் ஆகிய பாடங்களை பல வருடங்களாகப் போதித்து வந்தார். இந்த அறிவுத்துறைகளில் அவர் பல நூற்களையும் எழுதியுள்ளார்.

கல்வித்துறையில் ஈடுபாடுகொண்டிருந்த காலப்பகுதியில் இமாம் கொமைனி அவர்கள் அரசியல் துறையில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. ஆனால் சமயத் தலைவர்கள் தீவிர அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற நம்பிக்கையை அவர் உறுதியாகக் கொண்டிருந்தார் என்பதையே அவரது கல்விப் போதனைகள், எழுத்துக்கள் மற்றும் உரைகள் என்பன உணர்த்தி நின்றன. இதற்கு ஆதரவாக மூன்று முக்கிய காரணங்களை முன்வை முடியும். முதலில் இஸ்லாமிய கற்கைகளில் அவருக்கிருந்த ஆர்வம், பாரம்பரியமான இஸ்லாமிய சட்டவியல், நீதித்துறை மற்றும் கொள்கைகள் என்பனவற்றின் எல்லைகளைத் தாண்டி நின்றதை காண முடிந்தது. அவர் தத்துவத்திலும், அறவியலிலும் ஆகக்கூடிய அக்கறையைக் காட்டினார். இரண்டாவதாக, அவரின் கற்பித்தல் முறை சமயச் செயல்பாடுகளோடு மட்டும் மட்டுப்படாமல் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அன்றாடம் கவனம் செலுத்தவேண்டிய அம்சங்களை வலியுறுத்துவதாகக் காணப்பட்டது. மூன்றாவதாக, ஈரானில் 1940களில் பெரும் பரவலாகவும், பகிரங்கமாகவும் பேசப்பட்ட மதச்சார்பற்ற போக்கிற்கு எதிராகக் குரல் கொடுத்த முதலாவது ஈரானிய சமயத் தலைவராக அவர் காணப்பட்டார். அவர் தனது கருத்துக்களை முன்வைத்து துறைசார் நூற்கள் பலவற்றையும் எழுதி வெளியிட்டார். அவர் கும் நகரிலிருந்து தெஹ்ரானுக்கு விஜயம் செய்து அன்றைய ஈரான் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களையும் செவிமடுத்து வந்தார்.

இமாம் கொமைனி அவர்கள் 1963ம் வருடத்தில் மர்ஜஃ எனும் இஸ்லாமிய சட்டவியல் துறையில் உயர்நிலைப் பதவியை அடைந்தார். அன்றைய அதிமேதகு ஆயத்துல்லாஹ் செய்யித் ஹுசைன் புரூஜர்தி அவர்களின் மறைவையடுத்து, இமாம் கொமைனி அவர்கள்; இந்த இஸ்லாமிய உயர்பதவிக்கு வந்தார்.

ஆரம்பகால அரசியல் செயற்பாடு

1961ம் வருடத்தில் நிகழ்ந்த ஆயத்துல்லாஹ் புரூஜர்தி அவர்களின் மரணமும், 1962ம் வருடத்தில் நிகழ்ந்த ஆயத்துல்லாஹ் அபுல் காசிம் காஷானி அவர்களின் மரணமும் ஷீஆ ஆன்மிகத் தலைமையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. இமாம் கொமைனி அவர்களுக்கு தலைமைத்துவத்துக்கான கதவுகளை இது திறந்து கொடுத்தது. தனது 60வது வயதில் இமாம் கொமைனி அவர்கள் மிக உன்னதமான ஒரு நிலையை அடைந்திருந்தார்.

1920கள் முதலே ஈரானில் பஹ்லவி மன்னரின் சமயச் சார்பற்ற மற்றும் சமயத் தலைவர்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு மாறான ஒரு நிலைப்பாட்டையே இஸ்லாமிய மார்க்கத் தலைவர்கள் கொண்டிருந்தனர். 1960களில் சமயத்துக்கு எதிரான மன்னராட்சியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் உச்சத்தில் காணப்பட்டன. இது அன்றைய காலகட்டத்தில் ‘வெள்ளைப் புரட்சி’ என்று அழைக்கப்பட்டது.

வெள்ளைப் புரட்சிக்கு எதிர்ப்பு

1962ம் ஆண்டிலிருந்துதான் இமாம் கொமைனி அவர்கள் அரசியல் செயற்பாடுகளில் தனது சுறுசுறுப்பைக் காட்டத் தொடங்கினார். ஷாவின் ஆட்சியால் ஈரானில் பிரகடனம் செய்யப்பட்ட வெள்ளைப் புரட்சியானது காணிச் சீர்திருத்தம், காடுகளைத் தேசிய மயமாக்கல், அரச நிறுவனங்களைத் தனியார் நலன்களுக்காக விற்றல், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வகையில் தேர்தல் மாற்றம், தொழில்துறையில் இலாபப் பகிர்வு, பாடசாலைகளில் எழுத்தறிவு இன்மைக்கு எதிரான பிரசாரம் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இருந்தது. பாரம்பரிய வாதிகளால் இவற்றுள் பல விடயங்கள் ஆபத்தானவையாகவும், மேலைத்தேச மனோபாவம் கொண்டவையாகவும் நோக்கப்பட்டன. குறிப்பாக சக்தியும், சிறப்பும் மிக்க சமயக் கல்விமான்கள் (உலமாக்கள்) இதை பெரும் அச்சுறுத்தலாகக் கருதினர். இதனால் உலமாக்கள் நாடு முழவதும் அரச எதிர்ப்பு கலவரங்களுக்குத் தூபமிட்டனர். மன்னர் முஹமத் ரிஸா ஷா பஹ்லவி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆதரவைத் திரட்டும் ஒரு மூலோபாயமாகவே வெள்ளைப் புரட்சியை அவர்கள் பார்த்தனர். ஷா தன்னை ஒரு புரட்சிகர சிந்தனைக் கொண்ட ஒருவராகக் வெளிக்காட்டிக் கொள்ளவே தேசியவாதம், நவீனத்துவம் போன்ற சொற்களை ஒரு மாயையாகக் கையாண்டு வருகின்றார் என்று அவர்கள் கருதினர்.

1963ம் வருடத்தில் வெள்ளைப் புரட்சியின் ஆறு அம்ச மறுசீரமைப்புத் திட்டத்தை ஷா அறிவித்தார். தனது ஆட்சிக்கு தாராளவாத மற்றும் முன்னேற்றவாத முகப்பை அளிக்கும் வகையில் அமெரிக்க செல்வாக்கினால் உருவாக்கப்பட்ட ஒரு பொதியாக இந்தத் திட்டங்கள் காணப்பட்டன. இமாம் கொமைனி அவர்கள் தனது ஏனைய சகாக்களை கும் நகருக்கு அழைத்து இந்தத் திட்டத்தின் தீய நோக்கங்கள் பற்றி விரிவான விளக்கமளித்து, ஷாவின் இந்த நயவஞ்சகத் திட்டத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தனது வெள்ளைப் புரட்சித் திட்டத்துக்கு மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் மன்னர் ஷா திட்டமிட்டிருந்த சர்வஜன வாக்கெடுப்பை எதிர் கொள்ள வேண்டிய விதம், அதை தோல்லிவயுறச் செய்ய வேண்டியதன் அவசியம் என்பன பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

1963 ஜனவரி 22ம் திகதியில் மிகவும் கண்டிப்பான வார்த்தைகளைக் கொண்ட ஒரு பிரகடனத்தை இமாம் கொமைனி அவர்கள் வெளியிட்டார்கள். அதில் அவர் தனது திட்டங்களையும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி இரு தினங்களில் ஷாவின் ஆயுதப் படையணி ஒன்று, கும் நகர் நோக்கி அனுப்பப்பட்டது. அத்தோடு உலமாக்களை ஒரு தனி வர்க்கமாக வகைப்படுத்தி அவர்களைக் கண்டித்து உரை ஒன்றையும் ஷா நிகழ்த்தினார். ஆனால் இமாம் கொமைனி அவர்கள் அசரவில்லை. ஷாவின் அராஜகத்துக்கு எதிரான அவரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. ஏனைய எட்டு சிரேஷ்ட கல்விமான்களின் கையொப்பத்தோடு ஷாவின் திட்டங்களைக் கண்டித்து விஞ்ஞாபனம் ஒன்றையும் இமாம் கொமைனி வெளியிட்டார். ஷா, ஈரானின் அரசியல் யாப்பை என்ன என்ன வகையில் மீறி உள்ளார் என அதில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அத்தோடு ஷாவினுடைய ஆட்சியின் ஊழல் பற்றிய விவரங்களும் அதில் அடங்கியிருந்தன. அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் முழுமையாக சேவகம் புரியும் ஒரு மன்னரே ஷா என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய வருடத்தின் (1963 மார்ச் 21) பாரசீக புதுவருடமான நௌரூஸ் புத்தாண்டு நிகழ்வுகளை ஷாவின் அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்கள் கைவிட வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

1963 ஜுன் 3ம் திகதி புனித ஆஷுரா தினத்தின் மாலை வேளையில் இமாம் நிகழ்த்திய உரையில், கொடுங்கோல் ஆட்சியாளன் யஸீத்துக்கும், ஷாவுக்கும் இடையிலான சமாந்தரங்களை அவர் மக்களுக்குத் தெளிவு படுத்தினார். ஷா தனது நிலைப்பாடுகளையும், வழிமுறைகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் மக்களால் நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்படும் காலம் வரும் என்று உறுதியான எச்சரிக்கையையும் தனது உரையில் இமாம் கொமைனி விடுத்தார்.

இமாமின் பொதுவான, மிக உறுதியான இந்தக் கண்டனங்களை அடுத்து மன்னர் ஷா மிக மோசமான பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் விளைவு இமாம் ஷாவின் படைகளால் கைது செய்யப்பட்டார். 1963 ஜுன் 5ம் திகதியில் இமாம் கொமைனி கைது செய்யப்பட்டார். இதனால் மக்கள் திரண்டெழுந்ததோடு, ஈரான் முழுவதும் பாரிய அளவிலான கலவரங்கள் வெடித்து 400க்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இமாம் கொமைனி அவர்கள் எட்டு மாத காலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு 1964ம் வருடத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

இமாம் கொமைனியின் அரசியல் கண்ணோட்டப் பாதையில் இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சமயத்தையும், சமய நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று ஈரானிய உலமாக்களால் காலாகாலமாக விடுக்கப்பட்டு வரும் வேண்டுகோள்கள் மற்றும் அறிவுரைகள் என்பனவற்றைப் பொருட்படுத்தாமல் ஈரானிய முடியாட்சியை ஒரு நவீன சர்வாதிகார ஆட்சியாக மாற்றும் திட்டங்களை ஷா முன்னெடுத்து வந்தார். இந்த நடைமுறைகளால் ஈரானிய மக்களின் சமய ரீதியான வாழ்வு முறை அச்சுறுத்தலுக்கு ஆளானது. அதன் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமயத் தலைவர்கள் ஆட்சியின் எதிரிகளாகப் பார்க்கப்பட்டனர். இதன் விளைவாக சமயத் தலைவர்களை ஒன்றிணைத்த இமாம் கொமைனி அவர்கள், ஈரானின் முடியாட்சிக்கு எதிரான சமய விழுமியங்களுடன் கூடிய ஒரு அரசை அந்த நாட்டில் ஸ்தாபிப்தற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

சரணாகதிக்கு எதிர்ப்பு

அமெரிக்க இராணுவத்தினருக்கு ஈரானில் முழுமையான இராஜதந்திர விடுபாட்டு உரிமையை வழங்கும் தீர்மானத்தை ஷாவின் அரசு மேற்கொண்டபோது 1964 நவம்பரில் இமாம் கொமைனி அவர்கள் அதை முழுமையாகவும், கண்டிப்பாகவும் எதிர்த்தார். இதை ஒட்டுமொத்த சரணாகதி என வர்ணித்த இமாம் கொமைனி அவர்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தார். இதன் விளைவாக 1964 நவம்பரில் இமாம் மீண்டும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அஞ்ஞாதவாச வாழ்வு

இமாம் கொமைனி அவர்கள் 14 வருடங்கள் அஞ்ஞாதவாசம் இருந்தார். அதில் பெரும் பகுதியை அவர் ஈராக்கின் நஜஃப் நகரில் கழித்தார். 1964 நவம்பர் 4ம் திகதியில் ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், முதலில் துருக்கிக்கு சென்றார். அங்கு பர்ஸா நகரில் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தை அங்கே கழித்தார். 1965 அக்டோபரில்தான், அவர் அங்கிருந்து ஈராக்கின் நஜஃப் நகரில் குடியேறினார். 1978ம் வருடத்தில் ஈராக்கின் அன்றைய உப ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுசைனால் அங்கிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படும் வரை இமாம் கொமைனி அவர்கள் அங்குதான் வாழ்ந்தார். அங்கிருந்து வெளியேறிய இமாம் கொமைனி அவர்கள், பிரான்ஸின் வடமத்திய பகுதியிலுள்ள நேபள்-லி-சட்டோ என்ற இடத்தில் குடியேறினார்.

இமாம் கொமைனி அவர்கள் ஈரானின் அன்றைய அரசியல் யாப்பை முழுமையாக நிராகரித்தார். அது பெல்ஜியத்திலிருந்து தருவிக்கப்பட்ட அந்நிய மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே, ஆரம்பம் முதல் அவரின் நிலைப்பாடாக இருந்தது. இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சட்டபூர்வமான நிறுவனங்களை உள்ளடக்கிய, உயர்மட்ட சமயத் தலைமைத்துவ அதிகாரங்களைக் கொண்டதாக, முஸ்லிம் சமூகம் ஆன்மிக ரீதியாகவும், உலகியல் பாதுகாப்பைக் கொண்டதாகவும் ஆளப்பட வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது.

தன்னுடைய இந்த ‘இஸ்லாமிய அரசு’ குறித்த சிந்தனைகளை உள்ளடக்கிய தொடரான விரிவுரைகளை 1970களில் அவர் நஜஃப்பில் இருக்கும் போதே, நிகழ்த்தி வந்தார். பின்னர் இந்த சிந்தனைகள் உள்ளடங்கிய விரிவுரைகளின் தொகுப்பு ‘விலாயதே ஃபகீஹ்’ எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. ஆட்சி முறை பற்றிய அவரின் மிகச்சிறந்த மிகவும் பிரபலமான கிரந்தமாக அது அமைந்திருந்தது.

ஈரானில் இமாம் கொமைனி அவர்களின் தலைமையிலான அதிகாரத்தின் போது இந்த முறைகள் முற்றாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டு, அதில் அவர் தெரிவித்திருந்த பாதுகாப்பாளர் அல்லது பெருந்தலைவர் என்ற பதவியையும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில் தனது மரணம் வரை அவரே வகித்தார்.

பிரான்ஸிலிருந்து அவர் நிகழ்த்திய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் என்பன ஷாவை மிக வன்மையாகச் சாடும் வகையில் அமைந்திருந்தன. ஷா ஒரு யூத முகவர் என்றும், அவர் ஒரு அமெரிக்கப் பாம்பு என்றும், அதன் தலை மக்களால் கல்லெறிந்து கொய்யப்பட வேண்டும் என்றும் அமைந்திருந்த கருத்துக்களாகக் காணப்பட்டன. இவை தனது இஸ்லாமிய வலையமைப்புக்குள் இருந்த எதிர்ப்பாளர்களுக்கு வெளியே பகிரப்படக் கூடாது என இமாம் விரும்பிய போதிலும் அதையும் மீறி ஈரானிய சந்தைகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகக் கிடைக்கும் வகையில் இந்த உரைகள் அடங்கிய ஒலிநாடாக்கள் அமைந்தன. இது மக்கள் மத்தியில் ஷாவின் ஆட்சியின் அதிகாரம் மற்றும் கௌரவம் என்பனவற்றை மேலும் தரம் தாழ்த்தியது. இதனால் ஷாவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் வேகமாக மங்கத் தொடங்கியதோடு இமாம் கொமைனி அவர்களை நோக்கி பல்வேறு தரப்பட்ட மக்களும் நேசக்கரம் நீட்டத் தொடங்கினர். தமது ஆன்மீகத் தலைவரின் புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்ட உரைகளை மேலும் மேலும் கேற்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் மேலோங்கியது.

ஈரானுக்கு இமாமின் மீள்வருகை

இமாம் கொமைனி அவர்களின் சிந்தனைகளால் உந்தப்பட்டு, மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மன்னர் ஷா தனது பரிவாரங்களுடன் 1979 ஜனவரி 16ம் திகதியில் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். வெற்றிவாகையோடு ஷா-எதிர்ப்பு சக்திகளின் அழைப்பை ஏற்று, இமாம் கொமைனி அவர்கள் 1979 பெப்பரவரி 1ம் திகதியில் நாடு திரும்பினார். இமாம் கொமைனி அவர்களை வரவேற்க சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டதாகக் கூறப்படுகின்றது. அங்கு வந்திருந்த ஒரு வெளிநாட்டு செய்தியாளர் இமாம் கொமைனி அவர்களிடம் இது பற்றி எப்படி உணருகின்றீர்கள்? என்று கேட்ட போது, சகலரும் அதிர்ச்சியடையும் வகையில் ‘எதுவும் இல்லை’ என்று இமாம் பதிலளித்தார்.

தாயகம் திரும்பிய முதலாவது தினத்தில் மக்கள் மத்தியில்; உரை நிகழ்த்திய இமாம் கொமைனி அவர்கள், ஷாவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஷபூர் பக்தியாரின் அரசையும் வன்மையாகக் கண்டித்தார். இந்த அரசின் பற்களை உடைப்பேன் என்று முழங்கிய இமாம் கொமைனி அவர்கள், தன்னால் உருவாக்கப்படவுள்ள இஸ்லாமிய அரசின் நன்மைகள் பற்றிய வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கினார். அந்த அரசு மக்களால் தெரிவு செய்யப்பட்ட, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பிரபலமான ஒரு அரசாக இருக்கும் என்றும் கூறினார்.

புதிய அரசை ஸ்தாபித்தல்

1979 பெப்ரவரி 11ம் திகதியில் இமாம் இடைக்கால அரசொன்றை பிரகடனம் செய்தார். 1979 மார்ச் 30 மற்றும் 31ம் திகதிகளில் அந்த இடைக்கால அரசு மக்கள் மத்தியில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது. 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என எல்லா தரப்பினருக்கும் அதில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புதிய அரசின் வடிவமாகவும், அரசியல் யாப்பாகவும் இஸ்லாமியக் குடியரசை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பதுதான் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட கேள்வி. முடியாட்சியை நீக்கி, ‘இஸ்லாமியக் குடியரசு’ முறையை ஏற்றுக் கொள்வதாக அந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 98 வீதமானோர் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து புதிய அரசியல் யாப்பின் அங்கீகாரத்துக்கான தேர்தல்களும் நடத்தப்பட்டன. ‘ரஹ்பர்’ எனும் பெருந்தலைவர் பதவிக்கு அப்பால் மக்களால் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நியதியும் அதில் காணப்பட்டது. அந்த ஜனாதிபதி பதவிக்கு பாதுகாவலர் சபையின் அங்கீகாரம் பெற்ற நபர்கள் மட்டுமே போட்டியிடவும் முடியும்.

இமாம் கொமைனி அவர்கள் ஆயுற்காலத் தலைவராகப் பணியாற்றினார். அத்தோடு அவரே புரட்சியின் தலைவர் என்றும் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டார். அதன் பிறகு இஸ்லாம் ஈரானின் புதிய அரசியல் யாப்பின் அடிநாதமானது. இஸ்லாமியச் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டியது அடிப்படைக் கடமையாகியது.

இமாம் கொமைனி அவர்கள் தனது ஆயுள் காலத்தில், இஸ்லாமிய உலகை ஒன்றிணைப்பதற்கான பல வழிமுறைகளையும் காட்டித் தந்துள்ளார். இறைதூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பிறந்த மாதமான ரபீயுல் அவ்வல் மாதத்தின் 12ம் நாள் முதல் 17ம் நாள் வரையான வாரத்தை ‘ஐக்கிய வாரமாக’ பிரகடனம் செய்தார். அதேபோல் புனித றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ‘சர்வதேச குத்ஸ்’ தினமாகப் பிரகடனம் செய்தார். இன்று உலகம் முழவதும் இது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெர்லின் மதில் உடைக்கப்பட முன்பே 1988 டிசம்பரில் அப்போதைய ரஷ்ய ஜனாதிபதி மிக்கயல் கொர்பச்சேவுக்கு கம்யூனியஸம் உலகிலிருந்து விரைவில் வீழ்ச்சியடைந்துவிடும் என எதிர்வுகூறி கடிதம் ஒன்றை எழுதியதோடு இஸ்லாத்தைக் கற்று, ஆய்வுசெய்ய முன்வருமாறு அவருக்கு அழைப்பும் விடுத்தார். கம்யூனிஸம் என்பது விரைவில் உலக அரசியல் சரித்திர நூதனசாலையில் வைக்கப்படும் ஒரு விடயமாக மாறிவிடும் என்று இமாம் அதில் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட ஒரு சில ஆண்டுகளில் அது நடந்து, இன்று அது யதார்த்தமாகியுள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

இமாம் கொமைனி அவர்களின் ஆட்சியின்கீழ் சகல துறைகளிலும் இஸ்லாமியச் சட்ட ஒழுங்குகள் அமுலுக்கு வந்தன. ஆண்களுக்கும், பெண்களுக்குமான ஆடை விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகளும், பாதுகாப்புக்களும் வழங்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு உரிய முறையில் பாராளுமன்றத்திலும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. ஷீஆ முஸ்லிம்களும், சுன்னாஹ் முஸ்லிம்களும் ஐக்கியப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இறையடி சேரல்

இறுதியில் நோய்வாய்ப்பட்ட இமாம் கொமைனி அவர்கள், சுமார் 11 தினங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 1989 ஜுன் 3ம் திகதியில் தனது 89வது வயதில் காலமானார். ஈரானிய நகரங்கள் அனைத்தினதும் மத்திய பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடி தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர். பல தினங்கள் மக்கள் கண்ணீரும், கவலையுமாகக் காணப்பட்டனர். சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வரலாற்றில் ஒரு தலைவரின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆகக்கூடுதலான மக்கள் தொகை இன்று வரை இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்த ஆன்மீகத் தலைவர் இமாம் கொமைனி அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Scroll to Top
Scroll to Top