இமாம் காமெனயீ அவர்களின் குத்ஸ் தின சிறப்புரை

Imam Khamenei’s Special Speech on International Qods Day – 2020

 

இவ்வருட சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு (2020.05.22) ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயீ (தாமத் பரகாதுஹு) அவர்கள் ஆற்றிய உரை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

உலகோரின் இரட்சகனாகிய அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அன்னவரின் பரிசுத்த குடும்பத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் மீதும், மறுமை வரைக்கும் அவர்களின் பாதையைப் பின்பற்றக்கூடிய நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக.

உலகெங்குமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக. எல்லோரினதும் ரமழான் மாத வணக்க வழிபாடுகள் அங்கீகரிக்கப்படுவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொள்வதோடு, புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தெய்வீக விருந்தளிக்கும் இம்மாதத்தில் பங்குகொள்வதற்கு அருள்பாலித்தமைக்காக கருணையாளன் அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று குத்ஸ் தினமாகும். சங்கையான குத்ஸும், ஒடுக்கப்பட்ட பலஸ்தீனும் குறித்த உலக முஸ்லிம்களின் ஒருமித்த குரலை ஒன்றிணைக்கும் ஒரு இணைப்பைப் போன்று இமாம் கொமைனி (ரஹ்) அவர்களின் மதிநுட்பம் வாய்ந்த முயற்சியால் நிர்ணயிக்கப்பட்ட தினமாக இது திகழ்கின்றது. இது கடந்த சில தசாப்தங்களாக இது தொடர்பில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளதோடு, மேலும் அல்லாஹ்வின் சித்தத்தால் தொடர்ந்தும் அதனைச் செய்யும். சர்வதேச சமூகங்கள் குத்ஸ் தினத்தை வரவேற்றதோடு, தங்களுடைய முதலாவது கடமைபோன்று பலஸ்தீனின் சுதந்திரக் கொடியை ஏந்திக்கொண்டு அதனை அனுஷ்டித்தும் வருகின்றனர். இதனால், முஸ்லிம் சமுதாயங்களின் மனதிலிருந்து பலஸ்தீன் விவகாரத்தை பொலிவு குன்றச்செய்து, அதனை மறக்கடிக்கச் செய்வதே ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிஸம் ஆகியவற்றின் முக்கிய அரசியற்திட்டாக உள்ளது. இந்தவகையில், இஸ்லாமிய நாடுகளினுள்ளேயே எதிரியின் அரசியல், கலாச்சாரக் கூலிப்படையினரால் தோற்றுவிக்கப்படுகின்ற துரோகத்தோடு போராடுவதே மிகவும் அவசரமான பணியாக உள்ளது. பலஸ்தீன் விவகாரம் எனும் மகத்துவத்திற்கு ஏற்ப வேறெந்த விவகாரமும் கிடையாது என்பதே உண்மையாகும். முஸ்லிம் சமுதாயங்களின் நாளாந்தம் அதிகரித்துவரும் வைராக்கியம், தன்னம்பிக்கை மற்றும் விவேகம் அது மறக்கடிக்கப்படுவதற்கு அனுமதிப்பதில்லை. இருப்பினும், அமெரிக்காவும், ஏனைய சர்வாதிகாரங்களும், அவர்களின் பிராந்திய கைப்பாவைகளும் தமது செல்வம் மற்றும் திறன் அனைத்தையும் அதற்காகவே பயன்படுத்தி வருகின்றனர்.

எனது முதலாவது உரையானது பலஸ்தீன் நாட்டை அபகரித்த சோக-நிகழ்வும், அதில் சியோனிசப் புற்றுநோய்ச் சுரப்பிகளை உருவாக்கியமையும் குறித்த பெரும் நினைவூட்டலாகும். சமீபத்திய காலப்பகுதிகளில் நிகழ்ந்த மனிதக் குற்றங்களின் மத்தியிலே வேறெந்த குற்றமும் இந்தளவுக்கு எண்ணிக்கையிலும், செறிவிலும் இடம்பெற்றது கிடையாது. ஒரு நாட்டை அபகரித்து, அம்மக்களை தமது வீடு, குடியிருப்பு மற்றும் தமது மூதாதையரின் தாயகம் ஆகியவற்றிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றியமை, அதுவும் கொலை செய்து, குற்றங்களைப் புரிந்து, பரம்பரை மற்றும் சந்ததியினரை அழித்து மிகக்கொடூரமான முறையில் இவ்வாறு செய்தமை, பல தசாப்தகால இவ்வரலாற்று அடக்குமுறையினைத் தொடர்ந்தமை என்பன உண்மையில் மனிதன் கொண்டுள்ள மிருகத்தனம் மற்றும் ஷைத்தானியப் பண்பு ஆகியவற்றின் ஒரு புதிய சாதனையாக இருக்கின்றது.

இக்கொடூரத்தின் மூலக்காரணியும், முக்கிய குற்றவாளியும் மேற்கத்திய அரசுகளும், அவர்களின் ஷைத்தானிய அரசியற்கொள்கைகளுமாக இருக்கின்றன. முதலாம் உலகப்போரில் வெற்றியீட்டிய அரசுகள், உஸ்மானியப் பேரரசின் ஆசியப் புவிகோலப் பரப்பாகக் காணப்பட்ட மேற்காசியப் பிராந்தியத்தை மிகமுக்கியமான போர்-ஆதாயமாக பாரிஸில் இடம்பெற்ற மாநாட்டில் தமக்கிடையே பங்கிட்டுக் கொண்டபோது, தொடர்ந்தும் தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு இப்பிராந்தியத்தின் மையத்தில் ஒரு பாதுகாப்புத்தளம் இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தனர். இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக பிரித்தானியா ‘பால்ஃபோர் பிரகடனம்’ (Balfour Declaration) எனும் திட்டத்தின் மூலம் ஒரு பின்புலத்தை உருவாக்கி, யூத தலைமைகளின் கருத்தொருமைப்பாட்டுடன் ‘சியோனிஸம்’ எனும் பித்அத்தை (மதப்புதுமையை) அதற்கான பாத்திரவகிப்பாக உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து அதன் செயற்புலங்கள் பரவலாக்கப்பட்டன. அந்த ஆண்டுகளிலிருந்து படிப்படியாக முன்னேற்பாடுகளை ஒருங்கிணைத்து, இறுதியாக இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, பிராந்திய அரசுகளின் அலட்சியம் மற்றும் பிரச்சினை ஆகியவற்றைப் பயன்படுத்தி தமது பலத்த அடியை உட்செலுத்தி போலியான அரசையும், சியோனிஸ தேசமில்லாத அரசாங்கத்தையும் அறிவித்தனர். இப்பலத்த அடியின் இலக்காக முதல்கட்டத்தில் பலஸ்தீன தேசமும், இரண்டாம் கட்டத்தில் இப்பிராந்தியத்தின் எல்லா தேசங்களும் காணப்பட்டன.

பிராந்தியத்தில் நடைபெற்ற அடுத்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஒரு சியோனிஸ அரசை நிறுவுவதில் மேற்குலகினர் மற்றும் யூத கம்பனியாளர்களின் முக்கிய மற்றும் உடனடிக் குறிக்கோளாக, மேற்காசியாவில் தமக்கான நிரந்த இருப்பையும், செல்வாக்கையும் கொண்ட ஒரு தளத்தை உருவாக்குவதும், இப்பிராந்திய நாடுகள் மற்றும் அரசாங்கங்களில் தலையிடல், அவற்றை அடிபணியச் செய்தல், அவற்றின்மீது ஆதிக்கம் செலுத்தல் முதலானவற்றை உடனடியாக அணுகுவதற்கான சாத்தியப்பாட்டை ஏற்படுத்துவமாக இருந்தது என்பதையே காட்டுகின்றது. இந்தவகையில், பலஸ்தீனை அபகரித்து உருவான போலியான அரசுக்கு அணு ஆயுதங்கள் உட்பட இராணுவ மற்றும் அதுவல்லாத சகலவிதமான அதிகாரப் பிரயோக வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். நைல்நதிப் பரப்பிலே யூப்ரடீஸ் நதிவரைக்கும் இப்புற்றுநோய்ச் சுரப்பிகளை வளர்த்தெடுப்பதை தமது நிகழ்ச்சித் திட்டங்களில் உள்ளடக்கினர்.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான அறபு அரசாங்கங்கள் ஆரம்பகட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, – அவற்றுள் சில போற்றத்தக்கதாகக் காணப்பட்ட போதிலும் – படிப்படியாக அவர்களிடம் சரணடையத்தொடங்கினர். குறிப்பாக, இப்பிரச்சினையின் அறங்காவலனாக அமெரிக்கா உள்நுழைந்ததை அடுத்து, அவர்கள் தமது மானுட, இஸ்லாமிய மற்றும் அரசியல் கடமையையும், அவ்வாறே, அறபு வைராக்கியத்தையும், ஆணவத்தையும் மறந்துவிட்டு தவறான அபிலாஷைகளோடு எதிரிகளின் குறிக்கோள்களுக்கு உதவ முன்வந்தார்கள். இந்த கசப்பான உண்மைக்கு தெளிவான எடுத்துக்காட்டாக ‘கேம்ப் டேவிட் உடன்படிக்கை’ (Camp David Accord) உள்ளது.

போராட்டக் குழுக்களும் கூட ஆரம்ப காலப்பகுதிகளில் தாம் கொண்டிருந்த சில தியாகபூர்வ போராட்டங்களைத் தொடர்ந்து படிப்படியாக ஆக்கிரமிப்பாளருடனும், அவரது ஆதரவாளர்களுடனும் முடிவில்லா பேச்சுவார்த்தைக்குத் தள்ளப்பட்டு, பலஸ்தீன் எனும் குறிக்கோளை இயலச்செய்வதற்கு வழிவகுக்கக்கூடிய பயணப்பாதையை கைவிட்டுவிட்டனர். அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய அரசாங்கங்களுடனும், அவ்வாறே தனித்துவமற்ற சர்வதேச மன்றங்களுடனும் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது பலஸ்தீன் விடயத்தில் ஒரு கசப்பான, தோல்வியுற்ற அனுபவமாக இருக்கின்றது. ஐ.நா பொதுச் சபையில் ஆலிவ் (Olive) மரக்கிளையைக் காட்சிப்படுத்தியமை வெறும் நஷ்டத்தை ஏற்படுத்திய ‘ஒஸ்லோ’ (Oslo) உடன்படிக்கையை மட்டும் தந்தது. இறுதியில் இது யாஸிர் அறபாத்தின் படிப்பினைகொண்ட தலைவிதியை நிர்ணயிக்க வழிவகுத்தது.

ஈரானில் உருவான இஸ்லாமியப் புரட்சியின் உதயம் பலஸ்தீன் மீட்புக்கான போராட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவிட்டது. ஷைத்தானிய முடிக்கால ஈரானை தமது பாதுகாப்புத் தளங்களில் ஒன்றாகக் கருதிவந்த சியோனிச நிறுவனங்களை வெளியேற்றியமை, சியோனிஸ அரசின் சட்டவிரோத தூதரகத்தின் அமைவிடத்தை பலஸ்தீன் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தமை மற்றும் பெற்றோலிய உறவுகளைத் துண்டித்துக்கொண்டமை ஆகிய முதற்கட்ட நடவடிக்கைகள் தொடக்கம், அரசியல் ரீதியிலான பெரும் முன்னெடுப்புகள், விரிவான செயற்பாடுகள் வரைக்குமான எல்லா முனைப்புகளும் பிராந்தியம் முழுவதிலும் ஒரு ‘எதிர்ப்புக்களம்’ தோன்றுவதற்குக் காரணமாகின. இதனால், பலஸ்தீன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நம்பிக்கை இதயங்களில் மலர்ந்தது. இவ்வாறு எதிர்ப்புக்களம் தோன்றியவுடன் சியோனிஸ அரசின் மீதான செயற்பாடு மென்மேலும் கடினமானது. – அல்லாஹ்வின் சித்தத்தால் எதிர்காலத்திலும் இது இன்னும் கடினமாக ஆக்கப்படும். – இந்தவகையில், அமெரிக்கா தலைமையிலான சியோனிஸ அரச ஆதரவாளர்கள் அந்த அரசைப் பாதுகாப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் மேலும் தீவிரமடைந்தன. லெபனானில் ஹிஸ்புல்லாஹ் எனும் இறைவிசுவாசமும், தியாகவுணர்வும் கொண்ட இளைஞர் சக்தியின் தோன்றம் மற்றும் பலஸ்தீனிய எல்லைகளுக்குள் ஹமாஸ் போன்ற செயலூக்கமுடைய தாயக மீட்புக்குழுக்களின் உருவாக்கம் முதலானவை சியோனிஸத் தலைவர்களை மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய எதிர்ப்பாளர்களையும் கவலையும், பீதியும் அடையச்செய்ததோடு, சியோனிஸ ஆக்கிரமிப்பு அரசினாலான வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆதரவுகளையடுத்து பிராந்தியத்திற்குள்ளிருந்தும், அவ்வாறே அறபு சமூகத்திடமிருந்தும் உதவிகோருவதை தமது செயற்திட்டங்களின் முன்னணியில் அமைத்துக்கொள்ள வேண்டிய தேவைப்பாட்டை ஏற்படுத்தியது. இந்தவகையில் சியோனிஸ பாதுகாவலர்களுடைய கடின உழைப்பின் விளைவு, இன்று அறபு நாடுகளில் உள்ள சில தலைவர்கள் மற்றும் அறபு பிராந்தியத்தில் உள்ள துரோக அரசியல், கலாச்சாரச் செயற்பாட்டாளர்கள் முதலானோரின் பேச்சிலும், நடத்தையிலும் வெளிப்படையாகவும், அனைவரின் கண்களுக்கு முன்னால் புலப்பட்டும் காணப்படுகின்றது.

இன்று, இரு தரப்பிலும் போராட்டக்களத்தில் பலவிதமான நடவடிக்கைகள் வெளிப்பட்டு வருகின்றன. இருந்தும் அவற்றுக்கிடையில் வித்தியாசம் இருக்கின்றது. இஸ்லாமிய எதிர்ப்புக்களம் அதிகாரக் கூறுகளின் (Elements of power) நாளாந்தம் அதிகரித்து வரும் சட்டபூர்வ உரிமம், மேலோங்கும் நம்பிக்கை மற்றும் உள்ளீர்ப்பு முதலானவற்றின்பால் முன்னேறிக்கொண்டு செல்கிறது. இதற்கு மாறாக ஒடுக்குமுறை, நிராகரிப்பு மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் போர்க்களம் நாளுக்கு நாள் வெறுமையாகவும், நம்பிக்கை இழந்தும், பலவீனமாகவும் மாறிக்கொண்டு வருகின்றது. இக்கருத்திற்கு தெளிவான சான்றாக, ஒரு காலத்தில் வெல்லமுடியாத, மின்னல் வேகமுடைய இராணுவமாகக் கருதப்பட்டு வந்ததோடு, தன்மீது படையெடுத்த இரு நாடுகளின் பெரும் படைகளை ஒரு சில நாட்களிலேயே தடுத்து நிறுத்திய சியோனிஸ இராணுவம், இன்று லெபனான் மற்றும் காசாவில் உள்ள ஜனரஞ்சகப் போராட்டக் குழுக்களின் எதிரே பின்வாங்கி, தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருந்தது. எவ்வாறாயினும், போராட்டக் களமானது மிகவும் ஆபத்தானதும், மாறத்தக்கதும், நிலையான கவனிப்புக்குத் தேவைபாடுடையதுமாக உள்ளது. இப்போராட்டத்தின் கருப்பொருள் மிகவும் முக்கியமானதும், தலைவிதியைத் தீர்மானிப்பதும், வாழ்வளிப்பதுமாக இருக்கின்றது. இவ்விடயத்தில் எந்தவொரு அலட்சியமும், கவனக்குறைவும், அடிப்படையான கணிப்பீடுகளில் தவறிழைப்பதும் பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும்.

இதன் அடிப்படையில், பலஸ்தீன் விவகாரத்தில் அக்கறைகொண்ட அனைவருக்கும் சில பரிந்துரைகளை வழங்க விரும்புகிறேன்.

1. பலஸ்தீன் விடுதலைக்கான போராட்டம் என்பது தெய்வீக வழியிலான முனைப்பாகவும், இஸ்லாம் வேண்டியுள்ள ஆன்மீகக் கடமையாகவும் இருக்கின்றது. இத்தகைய போராட்டத்தில் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் ஒரு முனைப்பாளர் இதில் கொல்லப்பட்டாலும் இரு பயன்களில் ஒன்றை அடைந்துகொள்வார். இது தவிர, பலஸ்தீன் பிரச்சினை ஒரு மனிதநேயப் பிரச்சினையாகவும் உள்ளது. கொலை, குற்றங்களைப் புரிந்து, மில்லியன் கணக்கான மக்களை அவர்களின் வீடுகள், பண்ணைகள், வசிப்பிடங்கள் மற்றும் வணிகத்தளங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றிமை ஒவ்வொரு மனித மனசாட்சியையும் பாதித்து, வேதனையில் ஆழ்த்துவதோடு, முயற்சியும், தைரியமும் பெற்றிருந்தால் இதனை எதிர்த்துப் போராடத் தூண்டுகின்றது. எனவே, இதனை வெறுமனே ஒரு பலஸ்தீன் பிரச்சினையாகவோ, கூடினால் ஒரு அறபுலகப் பிரச்சினையாகவோ மட்டுப்படுத்துவது மிகப்பெரிய தவறாகும். சில பலஸ்தீன அதிகாரிகளோடு அல்லது சில அறபு நாடுகளின் ஆட்சியாளர்களோடு சமரசம் செய்துகொள்வதை, இத்தகைய இஸ்லாமிய மற்றும் மனிதநேயப் பிரச்சினையைக் கடந்து செல்வதற்கான அனுமதியாகக் கருதுவோர் பலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதிலும் தவறிழைத்தோராகவும், சில நேரங்களில் அதனைத் திரிபுபடுத்தி மோசடி செய்தோராகவும் காணப்படுகின்றனர்.

2. இப்போராட்டத்தின் இலக்கு – கடல் முதல் நதி வரைக்குமான – எல்லா பலஸ்தீன நிலப்பரப்பையும் விடுவிப்பதும், தமது நாட்டிற்கு அனைத்து பலஸ்தீனர்களையும் திரும்பச் செய்வதுமாகும். இந்த நிலப்பரப்பின் ஏதோ ஒரு மூலையில் ஒரு அரசாங்கத்தை நிறுவப்போவதாக அந்த இலக்கை தரக்குறைப்பு செய்வது, அதுவும் நெறிபிறழ்வான சியோனிஸ இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இழிவான முறையில், சத்திய வேட்கையின் அறிகுறியாகவோ அல்லது யதார்த்தவாதத்தின் அறிகுறியாகவோ அமையாது. உண்மை என்னவென்றால், இன்று மில்லியன் கணக்கான பலஸ்தீனர்கள் இப்பெரும் போராட்டத்தை விடாமுயற்சியுடையதாக ஒருமுகப்படுத்த முடியும் எனும் சிந்தனை, அனுபவம் மற்றும் தன்னம்பிக்கை முதலானவற்றில் ஒரு மேல்நிலையை அடைந்துள்ளனர். இருந்தும், ‘திடனாக அல்லாஹ்வுக்கு யார் உதவுகிறார்களோ அவர்களுக்கு அவன் உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையோனும், கண்ணியமிக்கோனும் ஆவான்.’ என்பதற்கு அமைவாக தெய்வீக உதவி மற்றும் இறுதியான வெற்றி ஆகியவற்றில் அவர்கள் உறுதியாக இருப்பார்களாக. அல்லாஹ்வின் சித்தத்தால் சந்தேகத்திற்கு இடமின்றி உலகெங்கிலும் உள்ள பல முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவி புரிவதோடு, அவர்களுக்கு அனுதாபத்தையும் தெரிவிப்பார்கள்.

3. உலகளாவிய ஆதரவுகள் உட்பட சட்டபூர்வமான, மார்க்க ரீதியில் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு வசதிகளையும் இப்போராட்டத்தில் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகின்றது. என்றாலும், மேற்கத்திய அரசுகளையும், வெளிப்படையாகவோ அல்லது அந்தரங்கமாகவோ அவர்களில் தங்கியிருக்கும் சர்வதேச நிறுவனங்களையும் நம்புவதைக் கண்டிப்பாகத் தவிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் எந்தவொரு இஸ்லாமிய செல்வாக்குமிக்க அமைப்புகளோடும் எதிரியாக உள்ளனர். அவர்கள், மனிதர்கள் மற்றும் தேசங்களின் உரிமைகளை மதிப்பதில்லை. அவர்கள்தான், இஸ்லாமிய உம்மத்திற்கு ஏற்பட்டுள்ள அனேக சேதங்களுக்கும், குற்றங்களுக்கும் காரணமாக உள்ளனர். தற்போது எந்த சர்வதேச அமைப்போ அல்லது எந்த குற்றவியல் சக்தியோ பல அறபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இடம்பெறும் தீவிரவாதத் தாக்குதல்கள், படுகொலைகள், போர் மூட்டல்கள், குண்டுவெடிப்புகள் மற்றும் செயற்கையான பஞ்சங்களுக்கு பொறுப்புக்கூறுவோராக இருக்கிறார்கள்?

இன்று உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொன்றாகக் கணக்கிடப்படுகின்றது. என்றாலும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் போரின் தீப்பிழம்புகளை மூட்டிவிட்ட நாடுகளில் இலட்சக்கணக்கான உயிர்தியாகிகளுக்கும், கைதிகளுக்கும், காணாமல் போனவர்களுக்கும் காரணமானவரும், கொலையாளியும் யார்? என்பதையோ, ஆப்கானிஸ்தான், எமன், லிபியா, ஈராக், சிரியா மற்றும் ஏனைய நாடுகளில் நடந்த இவ்-அனைத்து இரத்தக்களரிக்கும் காரணம் யார்? என்பதையோ, பலஸ்தீனில் இடம்பெறும் இத்தனை குற்றங்கள், அபகரிப்பு, அழிவு மற்றும் ஒடுக்குமுறைக்குக் காரணம் யார்? என்பதையோ யாரும் வினவியதுமில்லை, வினவுவதுமில்லை. இஸ்லாமிய உலகில் இந்த மில்லியன் கணக்கான ஒடுக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை ஏன் யாரும் கணக்கிடவில்லை? முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஏன் யாரும் இரங்கல் தெரிவிப்பதில்லை? ஏன் மில்லியன் கணக்கான பலஸ்தீனர்கள் எழுபது ஆண்டுகளாக தமது வீட்டையும், இருப்பிடத்தையும் இழந்து தூரப்பட்டு, நாடோடிகளாக அவஸ்தைப்படுகிறார்கள்? ஏன் முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவான சங்கைமிகுந்த குத்ஸ் அவமதிக்கப்பட வேண்டும்? ‘ஐக்கிய நாடுகள்’ (United Nations) எனப் பெயரளவில் இருக்கும் ஐ.நா சபை தனது கடமையைச் செய்யவில்லை. ‘மனித உரிமை’ எனப் பெயரளவில் இருக்கும் அமைப்புகளும் இறந்துவிட்டன. ‘சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையைப் பாதுகாத்தல்’ எனும் முழக்கம் எமன் மற்றும் பலஸ்தீனில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சிறுவர்களையும், பெண்களையும் உள்ளடக்கிக் கொள்ளவில்லை. மேற்கத்திய ஒடுக்குமுறை ஏகாதிபத்தியங்கள் மற்றும் சர்வதேச அளவிலான சபைகள் ஆகியவற்றின் நிலைமை இவ்வாறுதான் உள்ளது. அவமானம் மற்றும் ஊழல் ஆகியவற்றிலே பிராந்தியத்தில் அவர்களை பின்தொடர்ந்து கொண்டிருக்கும் சில அரசுகளின் நிலைமையோ அதைவிடவும் மோசமாகக் காணப்படுகின்றது. எனவே, வைராக்கியமான, சமயப்பற்றுள்ள முஸ்லிம் சமுதாயம் தன்னையும், தனது உள்வலிமையையும் மட்டுமே நம்பியிருக்க வேண்டும். தனது சக்திவாய்ந்த கரத்தை வெளிப்படுத்தி, இறைவனை நாடி, நம்பியிருப்பதன் மூலம் தடைகளைக் கடந்து செல்ல வேண்டும்.

4. இஸ்லாமிய உலகின் அரசியல் மற்றும் இராணுவத்துறை வல்லுனர்களின் பார்வையில் அலட்சியப்படுத்த முடியாத ஒரு முக்கியமான விடயமாக மோதல்களை போராட்டக்களங்களின் பின்புறத்திற்கே திருப்பிவிடுகின்ற அமெரிக்க மற்றும் சியோனிஸ்டுகளின் அரசியற்திட்டம் அமைந்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர்களை வெடிக்கவைத்தமை, எமனில் இராணுவ முற்றுகையிட்டு, தினசரி படுகொலைகளை மேற்கொண்டமை, படுகொலை மற்றும் பேரழிவு, ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை தோற்றுவித்தமை, பிராந்திய நாடுகளில் இது போன்ற வேறு சம்பவங்கள் என அனைத்தும் போராட்டக்களங்களை சூடுபிடிக்கச் செய்து, சியோனிஸ அரசுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான தந்திரங்களாகும். முஸ்லிம் நாட்டு அரசியல்வாதிகளில் அறிந்து சிலரும், அறியாமல் சிலரும் எதிரியின் இந்த தந்திரங்களின் சேவையில் உள்வாங்கப்பட்டனர். இந்த தீங்கிழைக்கும் அரசியற்திட்டம் செயல்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான வழியாக, இஸ்லாமிய உலகெங்கிலும் உள்ள வைராக்கியமான இளைஞர்களிடம் வினையமாக வேண்டிக்கொள்வது, ‘எப்படியான முழக்கத்தை தாங்கள் கொண்டிருந்தாலும், அதனை அமெரிக்காவுக்கு எதிராகவும், அவ்வாறே சியோனிஸ எதிரிக்கு எதிராகவும் எழுப்புங்கள்’ என்ற இமாம் கொமைனியின் பரிந்துரையைப் புறக்கணிக்க வேண்டாம்.

5. பிராந்தியத்தில் சியோனிஸ அரசின் இருப்பை இயல்பாக்குவதற்கான அரசியற்திட்டம், அமெரிக்காவின் முக்கிய அரசியற்திட்டங்களில் ஒன்றாகும். அமெரிக்காவின் கைப்பாவைகளின் பாத்திரத்தை வகிக்கும் பிராந்தியத்தில் உள்ள சில அறபு அரசாங்கங்கள் பொருளாதார உறவுகள் மற்றும் இது போன்றவை உட்பட அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை ஏற்படுத்த முயன்றுள்ளன. இம்முயற்சிகள் முற்றிலும் தரிசானதும், பலனற்றதும் ஆகும். சியோனிஸ அரசு இப்பிராந்தியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு கொடிய மேலதிக ஒட்டுறுப்பாகும். நிச்சயமாக இது வேரோடு பிடுங்கப்பட்டு, நீக்கப்படும். அப்போது, ஏகாதிபத்தின் இந்த அரசியல் திட்டத்தின் சேவையில் தமது வளங்களை செலுத்தியிருந்தோருக்கு அவமானமும், இழுக்குமே மிஞ்சியிருக்கும். இந்த அசிங்கமான நடத்தையை நியாயப்படுத்துவதற்கு, தீங்குவிளைவிக்கும் கொடிய யதார்த்தங்களோடு போராடி, அதனை அழிக்க வேண்டும் என்பதை கவனத்திற்கொள்ளாமல், பிராந்தியத்தில் சியோனிஸ அரசு ஒரு யதார்த்தபூர்வமானது என்று சிலர் வாதிடுகின்றனர். இன்று, கொரோனா ஒரு யதார்த்தமாக உள்ளது. புத்திசாலித்தனமான மனிதர்கள் அனைவரும் அதை எதிர்த்துப் போராடுவது அவசியம் என்று கருதுகின்றனர். இந்தவகையில், சியோனிஸம் எனும் நீண்டகால வைரஸ் நிச்சயமாக இனி நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை. இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர்களின் முனைப்பு, விசுவாசம் மற்றும் வைராக்கியத்தினால் வேரோடு பிடிங்கி எறியப்படும்.

6. எனது முக்கியமான அறிவுரையாக, போராட்டத்தைத் தொடர்ந்தும் கொண்டு செல்லல், போராட்டக் குழுக்களை ஒழுங்குபடுத்தி, அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குதல் மற்றும் பலஸ்தீன நிலப்பரப்பு முழுவதும் போராட்டக்களத்தை விரிபடுத்தல் எனும் பரிந்துரையாகும். இப்புனித முனைப்பில் பலஸ்தீன தேசத்தவருக்கு எல்லோரும் உதவ வேண்டும். எல்லோரும் பலஸ்தீன முனைப்பாளரின் கையை நிரப்பி, அவரது முதுகை பலப்படுத்த வேண்டும். எம்மால் முடியுமான அனைத்தையும் இவ்வழியில் நாம் பெருமையுடன் செய்வோம். பலஸ்தீன முனைப்பாளரிடம் மதம், வைராக்கியம் மற்றும் தைரியம் இருந்தாலும், அவருடைய ஒரே பிரச்சினை முனைப்புக்கான ஆயுதங்களின்றி வெறுங்கையுடன் இருந்தமையாகும் என்பதை ஒரு நாள் நாம் புரிந்துகொண்டோம். தெய்வீக வழிகாட்டல் மற்றும் உதவியோடு நாம் திட்டமிட்டோம். அதன் விளைவாக, பலஸ்தீனத்தில் அதிகார சமநிலை மாற்றத்திற்குள்ளானது. இன்று, சியோனிஸ எதிரியின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக நின்று காசாவினால் வெற்றி பெற முடியும். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் இச்சமநிலை மாற்றம், பலஸ்தீன் பிரச்சினையை இறுதி நடவடிக்கைகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதை சாத்தியப்படுத்தியுள்ளது. இவ்விடயத்தில் சுயமாகச் செயற்படும் அமைப்புகள் தம்மீது பாரிய பொறுப்பைச் சுமந்துள்ளன. காட்டுமிராண்டித்தனமான எதிரியுடன் சட்டபூர்வமான உரிமத்தோடும், அதிகார நிலையில் இருந்துமே அன்றி பேச முடியாது. அல்லாஹ்வின் அருளால் இச்சட்டபூர்வ உரிமத்திற்கான பின்னணி வீரமும், முனைப்பும் கொண்ட பலஸ்தீன தேசத்தவரிடம் தயாராக இருக்கின்றது. இன்று, பலஸ்தீன இளைஞர்கள் தங்களின் கண்ணியத்தைக் காக்க தாகத்தோடு உள்ளனர். பலஸ்தீனில் ஹமாஸ் போன்ற போராட்டக் குழுக்களும், லெபனானில் ஹிஸ்புல்லாஹ் இயக்கமும் எல்லோர் மீதிலும் தற்சான்றை நிறைவேற்றியுள்ளன. சியோனிஸ இராணுவம் லெபனான் எல்லைகளை உடைத்து, பெய்ரூத் வரை முன்னேறிய அந்நாளையும், அவ்வாறே ஸப்ரா மற்றும் ஷதீலா ஹம்மாம் ஆகிய இடங்களில் ஏரியல் ஷெரோன் எனும் கொடூர கொலைகாரன் இரத்தங்களை ஓட்டிய அந்நாளையும் உலகம் மறக்கவுமில்லை, மறக்கவும் மாட்டாது. மேலும், அதே இராணுவம் ஹிஸ்புல்லாஹ்வின் கடுமையான தாக்குதல்களில் பெரும் சேதங்களை அடைந்து, தோல்வியை ஒப்புக்கொண்டதன் மூலம் லெபனான் எல்லைகளிலிருந்து பின்வாங்கிச் செல்வதைத் தவிர வேறு வழியின்றி யுத்த நிறுத்தத்திற்கு கெஞ்சிய அந்நாளையும் உலகம் மறக்கவுமில்லை, மறக்கவும் மாட்டாது. நிறைந்த கை மற்றும் அதிகாரச் சமநிலை என்பது இதுதான். இப்போது சதாமின் ஆட்சிக்கு ரசாயன ஆயுதங்களை விற்றதற்காக வெட்கப்பட வேண்டிய குறிப்பிட்ட ஐரோப்பிய அரசாங்கம் பெருமைமிக்க துனிச்சலான ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தை சட்டவிரோதமானது எனக் கருதிட்டுப் போகட்டும் விட்டுவிடுங்கள். ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை உருவாக்கிய அமெரிக்கா போன்ற ஒரு அரசே சட்டவிரோதமானதாக இருக்கின்றது. அவ்வாறே, ஈரானின் பானே பகுதியிலும், ஈராக்கின் ஹலப்சே பகுதியிலும் தனது இரசாயன ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான நபர்கள் மரணத்தைத் தழுவியதற்குக் காரணமான அந்த ஐரோப்பிய அரசாங்கத்தைப் போன்ற ஒரு அரசே சட்டவிரோதமானதாக இருக்கின்றது.

7. இறுதி உரையாக, பலஸ்தீன் பலஸ்தீனர்களுக்குச் சொந்தமானது. அது அவர்களின் விருப்பத்தினாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நாம் முன்வைத்து வரும் அனைத்து பலஸ்தீனிய மதங்கள் மற்றும் இனங்களின் பொது அபிப்ராயம் கோரும் திட்டம் பலஸ்தீனின் இன்றைய மற்றும் நாளைய சவால்களுக்கான ஒரே தீர்வாகும். இந்த திட்டம், மேற்கத்தியர்கள் தங்கள் எக்காளங்களுடன் மீண்டும் மீண்டும் கூறுகின்ற யூத-விரோதவாதமானது முற்றிலும் ஆதாரமற்றது என்பதைக் காட்டுகின்றது. இத்திட்டத்தில் யூத, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பலஸ்தீனர்கள் ஒன்றிணைந்து, ஒரு பொது அபிப்ராய வாக்கெடுப்பில் பங்குகொண்டு, பலஸ்தீன் நாட்டு அரசியல் அமைப்பை தீர்மானிப்பார்கள். இதனால், நிச்சயமாக விலகிச்செல்ல வேண்டியது சியோனிச அரசியல் அமைப்பே ஆகும். சியோனிஸம் யூத மதத்தில் தானே ஒரு பித்அதும் (புதியதும்), அதற்கு முற்றிலும் அந்நியமானதும் ஆகும்.

இறுதியாக, குத்ஸ் தியாகிகளின் நினைவாக ஷேய்க் அஹ்மத் யாசீன், ஃபத்ஹி ஷக்காகி, செய்யித் அப்பாஸ் மூஸவி தொடக்கம் போராட்டக்களத்தில் மறக்கமுடியாத முகமும், இஸ்லாத்தின் பெரும் தலைமையுமாகத் திகழ்ந்த ஷஹீத் காசிம் சுலைமானி, ஈராக்கின் பெரும் முனைப்பாளர் ஷஹீத் அபூமஹ்தி அல்முஹன்திஸ் மற்றும் ஏனைய குத்ஸ் தியாகிகள் வரைக்கும் நெஞ்சார நினைவிற்கொள்கிறேன். கண்ணியம் மற்றும் போராட்டத்தின் வழியை எம்பால் திறந்துவிட்ட இமாம் கொமைனி (ரஹ்) அவர்களின் மீது ஸலாம் உண்டாவதாக. அவ்வாறே, இப்பாதையில் பல்லாண்டுகள் உழைத்த சகோதர முனைப்பாளர் மர்ஹும் ஹுஸைன் ஷெய்குல் இஸ்லாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். இறுதியாக, அனைத்துப் பார்வையாளருக்கும், நேயர்களுக்கும் நான் கூறிக்கொள்வதாவது, நமது கண்ணியத்திற்குரிய காசிம் சுலைமானி இல்லாத முதலாவது குத்ஸ் தினமாக இவ்வருட குத்ஸ் தினம் இருக்கின்றது. எனவே, அவருடைய ஆத்ம சாந்திக்காக எல்லோரும் ஒன்றாக சூறதுல் ஃபாத்திஹாவையும், சூறதுல் இஹ்லாசையும் ஓதுவோமாக.

بِسْمِ اللَّهِ الرَّحمانِ الرَّحِیمِ ﴿۱﴾ اَلحَمدُ لِلّهِ رَبِّ العَالَمِینَ ﴿۲﴾ الرَّحمانِ الرَّحِیمِ ﴿۳﴾ مَالِکِ یَومِ الدِّینِ ﴿۴﴾ إِیَّاکَ نَعبُدُ وَ إِیَّاکَ نَستَعِینُ ﴿۵﴾ اِهدِنَا الصِّرَاطَ المُستَقِیمَ ﴿۶﴾ صِرَاطَ الَّذِینَ أَنعَمتَ عَلَیهِمْ غَیرِ الْمَغضُوبِ عَلَیهِمْ وَلَا الضَّالِّینَ ﴿۷﴾
بِسْمِ اللّهِ الرَّحمانِ الرَّحِیمِ قُل هُوَ اللَّهُ أَحَدٌ ﴿۱﴾ اللَّهُ الصَّمَدُ ﴿۲﴾ لَمْ یَلِدْ وَ لَمْ یُولَدْ ﴿۳﴾ وَ لَمْ یَکُنْ لَهُ کُفُوًا أَحَدٌ ﴿۴﴾

Scroll to Top
Scroll to Top