ஆசானைப் பெற்றிராத மேதை – அன்னை சைனப் ஸலாமுல்லாஹி அலைஹா

 

அபு முர்தழா மஜீதி

எந்தவொரு ஆசிரியரையும் பெற்றிராத ஒரு சாதாரண மாணவியாக இருந்து, சிந்தனையின் சிகரமாய் மாறிய அன்னை ஹஸரத் ஸைனப் ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள், அன்னை ஹஸரத் பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா மற்றும் ஹஸரத் அலி அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் உன்னத மகளாவார். இவர், நபித்தோழர் ஹஸரத் அப்துல்லாஹ் பின் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பரிசுத்த மனைவியும், இன்றுங்கூட நினைவுகளை மீட்டிக்கொண்டு நம் உள்ளங்களை அழவைக்கும் கர்பலாவின் கதாநாயகியும் இவரே.
இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷஹாதத்திற்குப் பிறகு அன்னையவர்கள்தான் கர்பலாக் கைதிகளின் அபயபீடமாகவும், கடுமையாய் நோய்யுற்றிருந்த இமாம் ஸஜ்ஜாத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாதியாகவும் திகழ்ந்தார்.
மேலும், கூபா மற்றும் ஷாமிலும் அன்னையவர்கள் தங்களின் வீரப் பிரசங்கத்தின் மூலம் யசீத் மற்றும் அவனின் அநியாயங்களை அம்பலப்படுத்தியதோடு, இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் செய்தியை மக்களுக்கு எற்றி வைத்தார்.
இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னையவர்களுக்கு பெயர் சூட்டும்போது, கடுமையாக அழுதவர்களாய் இவ்வாறு கூறினார்கள்:
‘இக்குழந்தையானது, பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக்கப்படும். மேலும், பல்வேறு துயர்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். எவர் இவருக்காக, இவருக்கு நிகழும் துன்பங்களை நினைத்து அழுகிறாரோ, அவரின் நற்கூலி இமாம் ஹஸன் மற்றும் இமாம் ஹுஸைனுக்காக அழுதமைக்கான நற்கூலிகளைப் போன்றதாகும்.’
இதனைத் தொடர்ந்து, பெருமானார் ‘ஸைனப்’ என்று பெயர் சூட்டினார்கள்.
அந்நேரத்தில் சமூகமளித்திருந்தோருக்கும், சமூகமளிக்காதிருந்தோருக்கும் ‘இப் பிள்ளையின் கௌரவத்தைப் பேணிப்பாதுகாருங்கள். நிச்சயமாக, இவர் ஹஸரத் கதீஜா அவர்களைப் போன்றவராகும்’ என்று சிபாரிசு செய்தார்கள்.
ஹஸரத் ஸைனப் அவர்கள் எவ்வாறு அன்னை கதீஜா அவர்களுக்கு ஒப்பானவர் என்று இமாம் அலி (அலை) அவர்கள் விரிவுபடுத்திக் கூறியுள்ளமை சுவாரஸ்யமானது.
ஒருமுறை அன்னையவர்களைப் பார்த்து, இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
‘நீங்கள் நுபுவ்வத்தின் மரத்திலிருந்தும், ரிஸாலத்தின் களஞ்சியத்திலிருந்தும் உள்ளவர். அதாவது, உங்களின் பேச்சும், வழிமுறையும் நுபுவத்தின் மத்தியிலிருந்தும், ரிஸாலத்திலிருந்தும் அமையப்பெற்றதாகும்.’
இமாம் ஸஜ்ஜாத் (அலை) அவர்கள் கூபாவில் வைத்து, ஹஸரத் ஸைனப் அவர்களின் அந்தஸ்தைப் பற்றி விவரிக்கும் போது, இவ்வாறு கூறினார்கள்:
‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், நீர் ஆசிரியரைப் பெற்றிராத அறிஞராகவும், சிந்தனையாளராகவும் இருக்கிறீர்கள்.’
ஹஸரத் ஸைனப் ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள் ஒரு சாதாரணமான மனிதரிடம் கல்வி கற்காதவர் என்பதும், அதேநேரம் அவரின் அறிவு எவ்வித தவறும் தடுமாற்றமும் அற்றது என்பதும் மேற்கூறப்பட்ட ரிவாயத்துகள் மூலமாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
எனவே அன்னையவர்களின் உதயத்தையும், மறைவையும் நினைவு கூர்ந்து அல்லாஹு தஆலாவின் கருணையை அடைந்து கொள்வோமாக!

தொடர்புகளுக்கு:

info@peace.lk


Facebook


Twitter


Google-plus


Instagram


Dribbble


Youtube

Scroll to Top
Scroll to Top