அறிதல் பற்றிய ஆய்வு (Epistemology) – இஸ்லாமிய அகீதா 01

இஸ்லாமிய அகீதா பாடநூல்

முதலாவது பாடம்

அறிதல் பற்றிய ஆய்வு (Epistemology)

பாடத்தின் நோக்கங்கள்:

1. அறிதல் (Knowing) என்பதன் பொருளைப் புரிந்துகொள்ளல்
2. அறிவின் மூலங்கள் (Sources of Knowledge) அல்லது அறிதல் கருவிகள் பற்றிய அறிமுகத்தைப் பெறல்

மனிதன் படைக்கப்பட்ட போது, தொடக்கத்தில் அவனுடைய ஆன்மாவும், சிந்தனையும் எந்தவித அறிவும் இல்லாத நிலையில் இருந்தது.

“இறைவன் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து – நீங்கள் எதுவும் அறியாதவர்களாக இருந்த நிலையில் வெளியே கொண்டு வந்தான். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருப்பதற்காக உங்களுக்குச் செவிப்புலன், பார்வை மற்றும் இதயங்களை வழங்கினான்.” (அந்-நஹ்ல்: 78)

இதனால், இறைவன் மனிதனில் உண்மையைத் தேடும் உணர்வை உண்டாக்கினான். இதன் மூலம் அவன் எப்போதும் கற்றல் மற்றும் அறியாதவற்றை கண்டுபிடித்தல் முதலான செயற்பாடுகளில் ஈடுபட முடியுமாக அமைந்ததோடு, அறிவு மற்றும் ஞானத்தைப் பெற்று, தனக்கு விருப்பமானவற்றை அடைவதும் அவனுக்கு சாத்தியமாயிற்று. வேறு வார்த்தையில் கூறுவதாயின், மனிதன் எப்போதும் அறிவைத் தேடும் உயிரினமாக இருக்கிறான். எனினும், அறிதல் செயற்பாடு, ஐம்புலன்கள் மூலம் மட்டுமே நிகழுமா? அல்லது ஐம்புலன்களை விடவும் அறிவின் மூலங்கள் அல்லது அறிதல் கருவிகள் வேறு ஏதும் உள்ளனவா? என்பன மிகவும் முக்கியமான, பயனுள்ள கேள்விகளாகும். எனவே, ஒரு சம்பூரணமான மதத்தைக் கண்டடைய, முதலில் அறிவின் மூலங்கள், அறிதல் கருவிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்வது அவசியமாகும்.

அறிவு மூலங்கள் அல்லது அறிதல் கருவிகள்

மனிதன் புதிய அறிவுகளைப் பெறுவதற்கு, அறிதல் கருவிகளின் பால் தேவை உடையவனாக இருக்கிறான். எனினும், ஐம்புலன்கள் மட்டும் அறிவைப் பெறுவதற்கும், அறிதல் செயற்பாட்டை மேற்கொள்வதற்குமான ஒரே வழி அல்ல. மாறாக, அறிவைப் பெறுவதற்கான பல்வேறு வழிகளில் அல்லது மூலங்களில் ஒன்றாக மட்டுமே அதனைக் கருத முடியும்.

சிலர் புலன்கள் மூலம் கிடைப்பது மட்டும் தான் அறிவு என்று நம்புகின்றனர். அறிவு மற்றும் ஞானத்தை புலனுணர்வுக்கு உட்பட்டவைகளாக மட்டும் வரையறுக்கின்றனர். ஆனால், அறிவைப் பெறுவதற்கான வழி, புலனுணர்வுகள் மட்டுமல்ல. அறிவுகள் புலனுணர்வுகளால் மட்டும் கிடைக்கப் பெறுவதில்லை. மாறாக, சில அறிவுகள் புலனுணர்வுகள் அல்லாத வழிகளிலும் கிடைக்கின்றன.

இவ்வகையில், இவ்ஆய்வின் தொடர்ச்சியில் மிக முக்கியமான அறிவு மூலங்கள், அறிதல் கருவிகளுடன் அறிமுகத்தைப் பெறுவோம்.

அ) ஐம்புலன்கள் (Five Senses):

மனிதன் தனது பல அறிவுகளை ஐம்புலன்கள் மூலம் பெறுகிறான். (ஐம்புலன்கள்: பார்வை, செவிமடுத்தல், வாசனை, சுவை மற்றும் தொடுதல்).

இவ் ஐம்புலன்கள், பிறப்பிலிருந்து வாழ்வின் இறுதித் தருணம் வரை அறிவை வளர்ப்பதற்கான கருவிகளாக இருக்கின்றன. தாயின் அழகிய முகத்தைப் பார்த்தல், மலர்களின் இனிய வாசனையை நுகர்தல், உணவுகளின் சுவையை ருசித்தல் போன்ற எல்லாமே ஐம்புலன்கள் மூலம் கிடைக்கின்றன. எனவே, ஒருவருக்கு இப்புலன்களில் ஒன்று இல்லையென்றால், அப்புலன் மூலம் கிடைக்கும் அறிவுகளிலிருந்து அவர் விலக்கப்படுவார். உதாரணமாக, குருடர் ஒருவர் மலர்களின் நிறத்தை ஒருபோதும் பார்க்க முடியாது. எனவே, கண்கள் மூலம் கிடைக்கும் காட்சி சார்ந்த அறிவிலிருந்து அவரால் எப்பயனையும் பெற முடியாமல் போகும்.

ஆ) பகுத்தறிவு அல்லது புத்திஜீவியம்:

ஐம்புலன்களால் உணர முடியாத விடயங்களை அறியக்கூடிய ஒரு திறன் மனிதனின் இருப்பில் உள்ளது. மனிதன் பகுத்தறிவு மூலம் வாதம் புரிகிறான், ஒப்பாய்வு செய்கிறான், புலன்களால் அறிய முடியாத விடயங்களைப் புரிந்து கொள்கிறான். உதாரணமாக, புலன்களால் உணர்ந்தறியப்படுபவை போன்று அன்பு, பகைமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை ஐம்புலன்களால் சுட்டிக்காட்ட முடியாது. எனினும், மனிதனால் அவற்றை பகுத்தறிவால் அறிய முடிகிறது. எனவே, இவ்வகை அறிவுகளை அறிவதற்கு அல்லது பெறுவதற்கு புலன்களை விட உயர்ந்த ஒரு சக்தி, ஆற்றல் மனிதனுள் இருப்பது அவசியமாகிறது. அதையே இங்கு நாம் பகுத்தறிவு என்று அழைக்கிறோம். எனவே, ஐம்புலன்களால் அறிய முடியாத கருத்துக்களை அறிவது, ‘பகுத்தறிவுத் திறன்’ என்று அழைக்கப்படும் மற்றொரு சக்தியின் மூலம் நமக்குச் சாத்தியமாகிறது.

இ) ஆன்மீக அனுபவம் அல்லது ஆன்மீகப் புரிதல்:

உள்ளத்தைச் சுத்திகரிப்பதன் மூலமும், மனதிலிருந்து அழுக்குகளை நீக்குவதன் மூலமும், மனிதனுக்கு சில அறிவுகளை அடையக்கூடிய ஒரு ஆத்மநிலை ஏற்படுகிறது. பாவங்களிலிருந்து விலகிய இதயம் தெளிவாகி, எந்த தூசும் இல்லாத கண்ணாடி போலாகிவிடுகிறது. இந்நேரத்தில், அவனது இருப்பு எனும் கண்ணாடியானது, பிரபஞ்சத்தின் மெய்யம்சங்களை தன்னில் விம்பமாய்ப் பிரதிபலிப்பதோடு, அவற்றை ஆழ்ந்தறிந்து கொள்கிறது. இது குறித்து இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: ‘யார் நாற்பது பொழுதுகள் (நாட்கள்) தன்னுடைய வணக்க வழிபாட்டை இறைவனுக்காக என்று உளத்தூய்மையுடன் ஆக்கிக் கொள்கிறாரோ, அவரது இதயத்திலிருந்து நாவின் வழியாக ஞான ஊற்றுகள் வெளிப்படும்’. இவ்வகை அறிவு மற்றும் ஞானத்தின் யதார்த்தமானது, புலனுணர்வு மற்றும் பகுத்தறிவு மூலம் கிடைக்கும் அறிவுகளுடன் வேறுபடுகிறது. ஆன்மீகப் புரிதல் என்பது இறைவாக்கு (வஹி) மற்றும் உள்மனத்தூண்டல் (இல்ஹாம்) எனும் இருவகைகளில் அமைந்துள்ளது. அவ்விரண்டில் உயர்ந்த படித்தரத்தில் இறைவாக்கு காணப்படுகிறது. இங்கே நாம், இறைவாக்கு மற்றும் உள்மனத்தூண்டல் ஆகிய சொற்கள் பற்றி சுருக்கமாக விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளோம்:

வஹி எனும் இறைவாக்கு:

இறைவாக்கு என்பது ஆன்மீக அறிதல் வகையின் ஒரு பகுதியாகும். இது, இறைவன் இறைத்தூதர்களுக்கு மட்டும் வழங்கியுள்ள அறிவின் ஒரு வாயிலாகும். இறைத்தூதர்கள் மனிதர்களை வழிநடாத்துவதற்குத் தேவையான மறைவான அறிவு மற்றும் வழிகாட்டலின் பல்வேறு வழிமுறைகள் பற்றிய அறிவு போன்ற பல்வேறு அறிவுகளின் பால் தேவை உடையோராக இருக்கின்றனர் இறைவன் திருக்குர்ஆன் வசனங்களின்படி தனது இறைத்தூதருக்கு மூன்று வழிகளில் வஹியைக் கற்பிக்கிறான். எனவே, மேற்கூறியவற்றின்படி அறிவைப் பெறுவதற்கான ஒரே வழி, புலன்கள் மட்டுமே என்று கருதிவிட முடியாது. மாறாக, உலகில் சிலர் ஐம்புலன்கள் அல்லாத வழிகளிலும் அறிவு மற்றும் ஞானத்தைப் பெறுகின்றனர் என்பது தெளிவாகிறது.

இல்ஹாம் எனும் உள்மனத்தூண்டல்:

உள்மனத்தூண்டல் என்பதும் இறைவன் தனது சில நேசர்களுக்குத் திறந்து கொடுக்கின்ற அறிவுகளின் ஒரு வாயிலாக இருக்கிறது. உள்மனத்தூண்டல் ஆன்மீக அறிதலின் மற்றொரு வகையாகும். இது இறைத்தூதர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட வஹியைப் போன்றதல்ல. மாறாக இறைத்தூதர்களின் ஆன்மீகத் தரத்தை அடையாத சில நல்லடியார்களுக்கும் உரியதாகக் காணப்படுகிறது. உதாரணமாக நபி மூஸாவின் தாயாருக்கு ஏற்பட்ட உள்மனத்தூண்டல் அல்லது ஹஸரத் மர்யமுக்கு ஏற்பட்ட உள்மனத்தூண்டல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருக்குர்ஆனில் இல்ஹாம் (உள்மனத்தூண்டல்) என்பது வஹி (இறைவாக்கு) என்ற சொல்லால் கூறப்பட்டாலும், சட்டவாக்கத்திற்கான வஹியானது இறைத்தூதர்களுக்கு மட்டுமே உரியதாகும். அவர்கள் சட்டவாக்கத்திற்கான வஹியின் மூலம் இறைவனின் அடியார்களுக்கு ஷரீஅத்தை (மார்க்கத்தை) கொண்டு வரவும், பிரச்சாரம் செய்யவும் விதிக்கப்பட்டுள்ளனர். எனவே, திருக்குர்ஆனின் கண்ணோட்டத்தில் இறைத்தூதர்கள் அல்லாதவர்களுக்கு வெளிப்படும் வஹியை, இல்ஹாம் (உள்மனத்தூண்டல்) என்று கூறலாம்.

கேள்வி: அறிவு மூலங்கள் அல்லது அறிதல் கருவிகளை ஏற்றுக்கொள்வதால் கிடைக்கும் உலகத்தைப் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்கள் யாவை? அறிவு மூலங்களும், அறிதலுக்கான கருவிகளும் வேறுபடுவதால், நமது உலகக் கண்ணோட்டமும் மாறுபடுமா?. அடுத்த பாடத்தில் உலகக் கண்ணோட்டமும் அதன் வகைகளும் குறித்து ஆராய்வோம்.

பாடத்தின் சுருக்கம்

சிலர் அறிதலுக்கான கருவி புலன்கள் மட்டுமே என்று நம்புகின்றனர். ஆனால் சற்று கவனம் செலுத்தினால், புலன்கள் அறிதலுக்கான கருவிகளில் ஒன்றாகவும், அறிவுகளைப் பெறுவதற்கான வழிகளில் ஒன்றாகவும் மட்டுமே உள்ளது என்பது தெளிவாகும். அறிவுகள் வேறு வழிகளிலும் கிடைக்கின்றன. அறிதலுக்கான கருவிகளாகப் புலன்கள், பகுத்தறிவு மற்றும் ஆன்மீக அறிதல் ஆகியவற்றைக் கருத முடியும்.

வஹி மற்றும் இல்ஹாம் என்பன ஆன்மீக அறிதலுக்கான உதாரணங்களாகும். இறைவன் தனது நேசர்களுக்கு இதை வழங்குகிறான். நிச்சயமாக வஹி இறைத்தூதர்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கும் நிலையில், இல்ஹாம் இறைத்தூதர்களுக்கு மட்டும் உரியதாக அல்லாது ஏனையோருக்கும் இறைவன் வழங்கியுள்ள ஆன்மீக அறிதலின் ஒரு அறிவு மூலமாக உள்ளது.

கேள்விகள்

1.அறிதலுக்கான கருவி யாது?
அ) புலன்கள் மட்டும். ❑
ஆ) பகுத்தறிவு மட்டும். ❑
இ) பகுத்தறிவு மற்றும் புலன்கள். ❑
ஈ) பகுத்தறிவு, புலன்கள், இறைவாக்கு மற்றும் உள்மனத்தூண்டல் ❑

2.பின்வருவனவற்றில் எது பகுத்தறிவின் பண்புகளில் ஒன்று?
அ) புலன்களால் அறிய முடியாத சில விடயங்களை அறிதல். ❑
ஆ) அன்பு, பகைமை மற்றும் பொது அம்சங்களை அறிதல். ❑
இ) மேற்கூறிய அ மற்றும் ஆ. ❑
ஈ) எதுவுமில்லை. ❑

3.அறிதல் என்றால் என்ன என்பதை வரையறுக்கவும்?

4.அறிதலுக்கான கருவிகளைப் பெயரிடவும்.

5.பகுத்தறிவு மற்றும் புலன்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

6.உள்மனத்தூண்டல் மற்றும் இறைவாக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *