ஸஹீஃபா ஓர் சம்பூரண பிராரத்தனைகளின் தொகுப்பு

ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரார்த்தனைகளுக்கும், ஏனைய பிராரத்தனைகளுக்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசங்கள் குறித்து அறிஞர்கள் சிலர், சுட்டிக்காட்டியுள்ளனர். செய்யித் நிஃமதுல்லாஹ் ஜஸாயிரீ அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், ‘என்னதான் எந்தவொரு பிரார்த்தனையும், பக்திப் பாசுரமும் தன்னளவிலே விரும்பப்பட்டதாக இருந்தாலும் கூட இமாம்களின் மூலம் எமக்குக் கிடைத்திருக்கின்ற ரிவாயத்துக்களில் வந்துள்ள பிரார்த்தனைகள், நிச்சயமாக வஹியின் நிழலில் எழுந்த தெய்வீக வஹியின் வியாக்கியானமாகவும், வலிந்துரையாகவும் அமையப்பெற்ற ஒளியின் நிழலாக இருக்கின்றன. மேலும், தெய்வீக அறிவுகளின் பொக்கிஷங்களாகவும், ஞானத்தின் வளம்வாய்ந்த கோட்டைகளாகவும் இருக்கின்றன. இப்பிரார்த்தனைகளுக்கு எல்லாம் தலைமையாக ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவின் பிரார்த்தனைகள் அமைந்திருக்கின்றன. (1)

செய்யித் ஜௌஃபர் ஷஹீதி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், ‘ஏனைய இமாம்களின் பிரார்த்தனைகளோடு ஒப்பிடும்போது இப்பிரார்த்தனைகள் சம்பூரணமானவை. ஒரு அடியானின் தேவைப்பாடுகளை அல்லாஹு தஆலாவிடம் வேண்டுவதற்கான பரிபூரண வழிகாட்டலாக அமைந்துள்ள விதத்தில், இது காமிலா (சம்பூரணமானது) என்று அழைக்கப்படுகிறது’.

ஃபாழில் இஸ்ஃபஹானி ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவிற்கான தன்னுடைய முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், ‘நமது தலைவரான செய்னுல் ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனைகள், ஏனைய இமாம்களின் பிரார்த்தனைகளில் இருந்து பல்வகைத் தன்மை கொண்டதாக அமைவதோடு, அல்லாஹு தஆலாவின் சந்நிதானத்தில் தன்னுடைய வெறுமை, இழிநிலை ஆகியவற்றை ஒப்பற்றவகையில் வெளிப்படுத்துகின்ற காரணத்தால் இது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அல்லாஹு தஆலா, ஒவ்வொரு இமாம்களுக்கும் மற்றவரிடம் இல்லாத ஒரு விஷேட பண்பை அருளியிருக்கிறான். உதாரணமாக, இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வீரத்தை வழங்கியிருக்கிறான். அதேபோன்றுதான் இமாம் செய்னுல் ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிரார்த்தனைகளில் மனதின் உருகுநிலையும், மிருதுவான தன்மையும் காணப்படுகிறது. இது, சம்பூரணமான இந்த ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவின் விஷேடத்துவமாக இருக்கின்றது.(2)

(1). ஷேய்க் ஜஸாயிரியின் கிஸஸுல் அன்பியா, பக்:770
(2). ஆயதுல்லாஹ் கரஷியின் தஹ்லீலி அஸ் ஸின்தகானியே இமாம் ஸஜ்ஜாத் (இமாம் ஸஜ்ஜாத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்விலிருந்து ஒரு பகுப்பாய்வு), பக்:232

Scroll to Top
Scroll to Top