ஸஹீஃபா ஓர் உயிர்ப்பூட்டும் நூல்

மனித வாழ்க்கையில் ஸஹீஃபாவின் உயரிய தாக்கம் குறித்து அநேக அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நூலின் உயிர்ப்பூட்டும் தன்மையை சுட்டிக்காட்டிய இமாம் கொமைனி (ரஹ்) அவர்கள் தன்னுடைய தெய்வீக அரசியல் சாசனத்தில் (வசிய்யத் மடலில்) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள், ‘மனிதனை ஆத்மீகரீதியில் உயர்த்தக்கூடியதாக, எங்களுடைய பரிசுத்த இமாம்களிடமிருந்து உயிர்ப்பூட்டும் பிரார்த்தனைகள் அமைந்திருக்கின்றன. ஆலுமுஹம்மதி;ன் ஸபூர்வேதமான இந்த ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா எம்மிடமிருக்கின்றது.(1)

ஆயதுல்லாஹ் காமெனெயீ தாமத் பரகாதுஹு குறிப்பிடுகிறார்கள், ‘ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா நூலானது ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் மனிதனுக்கான பிரார்த்தனை சார்ந்த, உயரிய நோக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. மனிதன் அதனைக் கருத்தில் கொண்டால் ஒரு சமூகத்தை கவனயீர்ப்பு செய்து, சீர்படுத்தி எழுச்சியடையச் செய்வதற்கு, இந்த ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவே போதுமானதாகும்.(2)

மர்ஹும் பைழுல் இஸ்லாம் ஸஹீஃபாவிற்கு, தான் எழுதிய விரிவுரை நூலொன்றின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்கள், ‘இந்நூலை யாராவது உளத்தூய்மையோடும், நல்லெண்ணத்தோடும் வாசித்து, அதன் பொருள்களை விளங்கிக்கொள்வதில் ஆழ்ந்து சிந்திப்பாரேயானால் எவ்வித சந்தேகமும் இன்றி, அவருடைய உள்ளத்திலே தெய்வீக ஒளி பிரகாசித்து, அல்லாஹு தஆலாவின் பாலான தன் கவனத்தைத்திருப்பி ஈருலோக வெற்றி மற்றும் சுபீட்சப் பாதையில் செயற்படுவார்.’ (3)

ஜேர்மனிய ஆய்வாளரான பேராசிரியை அனமேரி சிமில் குறிப்பிடுகிறார்கள், ‘நானாகவே எப்போதும் இஸ்லாமிய துஆக்கள், ஹதீஸுகள், செய்திகள் என்பவற்றை அறபு மொழிமூலத்திலிருந்தே வாசிக்கிறேன். ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவின் சிறுபகுதியை ஜேர்மன் மொழியில் பெயர்த்தும் வெளியிட்டிருக்கிறேன். (4)

இந்த எழுத்தாளர் ஒரு தீவிர போக்கைக் கொண்டிருந்த கத்தோலிக்க பெண்ணின் மீது இந்நூலின் மொழி பெயர்ப்பு ஏற்படுத்தியிருந்த ஆழமான தாக்கம் குறித்து சுட்டிக்காட்டி இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், ‘இஸ்லாமியப் பிரார்த்தனைகளை நான் மொழி பெயர்க்கிறேன் என்று அக்கத்தோலிக்கப் பெண் அறிந்துகொண்ட போது, நீங்கள் இஸ்லாமிய பிரார்த்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, கிறிஸ்துவத்தில் – எங்களது பரிசுத்த கொள்கையில் ஏதும் குறைபாட்டையா கொண்டிருக்கிறோம் என்றார். என்னுடைய நூல் பதிப்பிக்கப்பட்டபோது, அதிலிருந்து ஒரு பிரதியை அவருக்கு நான் அனுப்பி வைத்தேன். ஒரு மாதத்தின் பின்னர், என்னோடு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்:

‘இந்நூலைப் பரிசளித்தமைக்கு உளப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், நாளாந்தம் பிரார்த்திக்கும் நேரத்தில் அதனையே வாசிக்கிறேன்.’ (5)

பெறுமதிவாய்ந்த இந்நூலில் இருந்து ஷீஆ அறிஞர்கள் பெற்றுக்கொண்ட தாக்கங்கள் மற்றும் வரலாற்று நெடுங்கிலும் ஷீஆ அறிஞர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிக் குறிப்பிடும் போது ஷீஆ அறிஞர்கள் மாபெரும் எழுச்சிகளுக்கும், புரட்சிகளுக்கும் ஆதாரமாகத் திகழ்ந்துள்ளனர். இவ்வாறு ஏனைய அறிஞர்களால் இருக்க முடியாமல் போனதற்கு பிரதான காரணம் உண்டு. அதாவது, மற்றவர்களிடம் இல்லாத ஹஸரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நஹ்ஜுல் பலாகாவிலிருந்து அமையப் பெற்ற கலாசாரமாகவும், மற்றவர்களிடம் இல்லாத ஆஷுறா கொண்டிருக்கின்ற கலாசாரமாகவும், மற்றவர்களிடம் இல்லாத ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா கொண்டிருக்கின்ற கலாசாரமாகவும் இருக்கின்ற ஷீஆ கலாசாரத்தையே, ஷீஆ அறிஞர் குழாம் தமது கலாசாரமாகக் கொண்டுள்ளனர்.

(1). இமாம் கொமைனியின் வஸிய்யத் நாமயே சியாஸியே இலாஹி (தெய்வீக அரசியல் சாசனம்), பக்:12
(2). ஆயதுல்லாஹி காமெனெயின் இன்ஸானே திவிஸ்தோ பஞ்சா சாலே (250 வருடகால மனிதன்), பக்:212
(3). பைழுல் இஸ்லாமின் ஸஹீஃபாவின் ஷரஹ் நூல், பக்:04
(4). மஹ்பூபா பெலங்கியின் ‘மேலைநாட்டைச் சேர்ந்த கீழைத்தியற்பெண்மனி அனமேரி சிமில்’ பாரசீகக் கட்டுரையிலிருந்து
(5). அதே கட்டுரையிலிருந்து…
(6). ஷஹீத் முதஹ்ஹரியின் ஆயன்தயே இன்கிலாபே இஸ்லாமி (இஸ்லாமியப் புரட்சியின் எதிர்காலம்), பக்:195

Scroll to Top
Scroll to Top