ஸஹீஃபா ஆன்மீகம் மற்றும் மெய்ஞ்ஞானத்தின் பொக்கிஷம்

இஸ்லாமிய அறிவு ஞானங்களின் மற்றும் மானுடத்திற்குப் பெறுமானங்களை வழங்குகின்ற செல்வங்களின் பொக்கிஷமாக ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவை இஸ்லாமிய அறிஞர்களும், பெரியோர்களும் கருதுகின்றனர்.(1) மேலும், இத்துஆக்களில் உயரிய ஆன்மீக சிந்தனைகள் இருப்பதாகவும் நம்புகின்றனர்.(2) அஹ்லுல்பைத்தினரின் இன்ஜீல்வேதமாகவும், ஆலுமுஹம்மதின் ஸபூர் வேதமாகவும் பெறுமதியான இந்நூல் கருதப்படுவதற்கு ஒரு காரணம், மேலான உள்ளடக்கத்தையும், பெறுமதியான கருத்தாக்கங்களையும் இது கொண்டிருப்பதாகும்.

செய்யித் நிஃமதுல்லாஹ் ஜஸாயிரீ அவர்கள் இது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள், ‘ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவின் கருத்தாக்கங்கள், அதனைத் திருக்குர்ஆனின் சகோதரி என்று குறிப்பிடுமளவுக்கு மிகவுயர்ந்த, பெறுமதியான ஒன்றாக இருக்கின்றது. அதேபோன்றுதான் நஹ்ஜுல் பலாகாவையும், திருக்குர்ஆனின் சகோதரன் என்று அழைத்துள்ளனர்’.(3) மேலும், சிறப்பான இந்நூலிலே காணப்படுகின்ற ஈமானின் ஆத்மபடிவத்தை சுட்டிக்காட்டுகையில், ‘பெறுமதியான இப்பொக்கிஷமானது, மெய்ப்பொருள் எனும் சமுத்திரத்தின்பால் தாகித்தோரின் தாகந்தீர்ப்பதற்கு முனைந்திருக்கிறது’ என்றும் அவர் நம்புகிறார்கள்.(4)

இமாம் கொமைனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், தனது பேரரான செய்யித் அலீ அவர்களுக்கு ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவை அன்பளிப்புச் செய்கின்றபோது அவருக்காக, தான் எழுதிய மடலொன்றில், இவ் ஆத்மீக விருந்தின் விரிப்பிலே மனிதர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள அருள்களையும் மற்றும் இந்நூலின் தெய்வீக அறிவுகளையும் சுட்டிக்காட்டி இவ்வாறு எழுதியுள்ளார்கள்;, ‘ஸஹீஃபாவானது (ஆத்மீக உச்சநிலைக்கு) மேலெழுந்து செல்லக்கூடிய குர்ஆனுடைய பரிபூரணமான மாதிரியாகும்.(5) எதனுடைய அருள்களை அடைந்து கொள்வதிலிருந்தும் நமது கரம் குன்றியிருக்கிறதோ அப்படியானதுதான் உன்ஸ் எனும் தெய்வீக நட்பாகும். அது, கல்வத்காஹ் எனும் (மெய்ஞ்ஞான பயற்சியைப் பெறுகின்ற) தனியறையிலே எழுகின்ற முனாஜாத் இர்ஃபானிய்யா எனும் மிகப்பெரும் மெய்ஞ்ஞான கோஷங்களில் நின்றும் உள்ளது. இது தெய்வீக நூலாகும். அல்லாஹு தஆலாவின் ஒளிவூற்றிலிருந்து எழுந்த மிகப்பெரும் இறைநேசர்களின், உயர்தகைமை பெற்ற இறைப்பிரதிநிதிகளின் தரீகதுஸ் ஸுலூக் எனும் மெய்ஞ்ஞான பயிற்சியின் ஆத்மஞானப்பாதையை, மெய்ஞ்ஞானப் பயிற்சியறையினருக்கு கற்றுக் கொடுக்கிறது. இது சிறப்பான நூலாக அமைந்திருக்கிறது. மெய்ஞ்ஞானியரின் தெய்வீக ஞானங்களை விளக்கும் முறையில், திருக்குர்ஆன் கொண்டுள்ள எளிய முறைபோன்று தெய்வீக ஞானத்தின் தேட்டத்தைக் கொண்டோருக்கு துஆ மற்றும் முனாஜாத் வடிவங்களில் விளக்குகின்றது. திருக்குர்ஆனைப் போன்றே பரிசுத்தமான இந்நூல், தெய்வீக விருந்தின் விரிப்பாகத் திகழ்கின்றது. அதிலே எல்லா வகையான அருள்களும் உள்ளன. ஒவ்வொருவரும் தம்முடைய ஆத்மீக தாகங்களின் அளவுக்கு அதிலிருந்து பயன் பெறுகின்றனர்.(6)

ஆயதுல்லாஹ் ஹஸன் சாதே ஆமுலீ குறிப்பிடுகிறார்கள், ‘சிறப்பான இந்நூல், ஆன்மீக கலாபீடங்களில் ஒரு பாடநூலாகப் போதிக்கப்படுவதற்கு வழியமைக்கவேண்டும். இதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை அறிவுகள் உயிர்ப்பிக்கப்படும்’. மேலும், அவர் குறிப்பிடுகையில், ‘அஹ்லுல்பைத்தின் இன்ஜீல்வேதமாகவும், ஆலுமுஹம்மதின் ஸபூர்வேதமாகவும் இருக்கின்ற இந்நூல், குறைந்தது பாடநூற்களிலாவது உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது இஸ்லாமிய அடிப்படைகளை உயிர்ப்பிப்பதற்கான சிறந்த திட்டமாக அமையும். என்றாலும், அதனை விளங்குதல், கற்று – கற்பித்தல் என்பன இலக்கண அறிவுகள், ஏனைய முறைசார்ந்த அறிவுகள், பகுத்தறிவு மற்றும் மெய்ஞ்ஞான அறிவுகள் போன்றவற்றை விளங்கிக் கொள்ளாது சாத்தியப்படமாட்டாது.(7) ஆயதுல்லாஹ் காமெனெயீ தாமத் பரகாதுஹு அவர்களும் கூட இவ்வாறான கண்ணோட்டத்தில், ‘குறிப்பிட்ட குழுவினர், ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா தொடர்பாக (அறிவுசார்ந்த பணிகளில்) செயற்படுவது சிறப்புவாய்ந்த ஒன்றாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.(8)

இமாம் தந்தாவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், ஆயத்துல்லாஹ் மர்அஷீ நஜஃபி கத்தஸல்லாஹு சிர்ரஹு அவர்களிடமிருந்து ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், இந்நூலிலே ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள், ‘அறிவு ஞானங்களையே அன்றி, வேறெதையுமே பெற்றுக்கொள்ள முடியாத ஒரு தொகுப்பாகவும், ஒரு தனித்துவமான நூலாகவும் இதனைக் கண்டுகொண்டேன். அஹ்லுல்பைத் மற்றும் நுபுவ்வத்தின் பாரம்பரிய சொத்திலிருந்து நிலையான விலைமதிப்பற்ற இப்படைப்பை இதுவரையில் நாம் பெற்றிராமை, உண்மையில் நமது துரதிஸ்டமே’.(9)

(1). ஷஹீத் முதஹ்ஹரியின் இஸ்லாம் வ நியாஸ்ஹாயே ஸமான் (இஸ்லாமும், காலத்தின் தேவைப்பாடுகளும்), பா:01, பக்:60
(2). ஷஹீத் முதஹ்ஹரியின் குல்லிய்யாதே உலூமே இஸ்லாமி (இஸ்லாமிய அறிவுகளின் பொதுஅறிமுகங்கள்), பக்:94, 95
(3). ஷேய்க் ஜஸாயிரியின் கிஸஸுல் அன்பியா, பக்:766
(4). அதே பக்கம்.
(5). இமாம் கொமைனியின் ஸஹீஃபயே நூர் (ஒளியேடு), பா:21, பக்:396
(6). அதே நூல், பக்:209, 210
(7). ஆயதுல்லாஹ் ஹஸன் சாதே ஆமுலியின் ரிஸாலது நூரின் அலா நூர், பக்:11
(8). பாஸ்தாரே இஸ்லாம் மாதவிதழ், எண்:10 பக்:13
(9). ஷேய்க் ஹம்த் ஆஃபரன்தீ பதிப்பித்த ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவின் முன்னுரையிலிருந்து…

Scroll to Top
Scroll to Top