ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவின் உள்ளடக்கம்

இமாம் ஸஜ்ஜாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது பிரார்த்தனைகளின் ஆரம்பத்தில் இறைவனைப் புகழ்ந்து துதிபாடி, பின்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அன்னாரது பரிசுத்த அஹ்லுல்பைத் அலைஹிமுஸ்ஸலாம் அவர்களின்மீது சலவாத் கூறுகிறார்கள். சலவாத்துகள் பயன்படுத்தப்படாத பிரார்த்தனைகள் மிகவும் குறைவானதே எனுமளவுக்கு, அவை அமையப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து இறைவனிடத்தில் தன்னுடைய தேவையை வேண்டுகிறார்கள்.(1)

ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா வெறுமனே இறைவனோடு உரையாடி, அவனது சந்நிதானத்தில் தம்தேவையை வேண்டி நிற்பதாக மட்டும் அமையப் பெறவில்லை. எனினும், துஆ என்ற சட்டத்திற்குள் நம்பிக்கைசார்ந்த கோட்பாடுகள், கலாசாரம், சமூகம், அரசியல், பௌதீக விதிகள் மற்றும் ஷரீஆ சட்டங்கள் முதலான விடயங்களை விளக்கிக் கூறுமளவிற்கு, இஸ்லாமிய அறிவுகளையும், ஞானங்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக இது காணப்படுகிறது. மேலும், இமாமத் பற்றிய அம்சங்கள்(2) மற்றும் தஷ்பீஹ் எனும் இறைவனுக்கு உவமைகற்பிக்கும் கோட்பாட்டை மறுத்துரைத்தல்(3) என்பனவும் ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இறைவனோடு உறவாடி, உதவிதேடும் விடயத்தில் பல்வேறுபட்ட காலங்கள், வெவ்வேறு சூழ்நிலைகள் என்பவற்றின் பொருத்தப்பாடுகளுக்குத் தக்கவகையிலான துஆக்கள் அதில் விபரிக்கப்பட்டுள்ளள. அதன் துஆக்களில் சில துஆஉல் அறபா, வதாஉர் ரமழான் போன்றவை வருடத்தில் ஒருமுறையும், பிறைகாணும்போது ஓதப்படும் துஆக்கள் போன்றவை மாதத்தில் ஒருமுறையும், இன்னும் சில வாராந்தமும், மற்றவை காலை, மாலைகளிலும் ஓதப்படக்கூடியனவாக உள்ளன. ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா துஆக்களின் தலைப்புகள் பல்வேறுபட்டவையாகும்.

(1). இப்னு அபில் ஹதீதின் ஷரஹு நஹ்ஜில் பலாகா, பா:13, பக்:220 – இன்சாபுல் அஷ்ராஃப், பா:01,   பக்:184 – தாரீகு ஜுர்ஜான், பக்:189
(2). ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா, துஆ:47, வாக்கியம்:56
(3). அர்பலீயின் கஷ்பில் கும்மா, பா:02, பக்:89

Scroll to Top
Scroll to Top