ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா, ‘ஸனத்’ (அறிவிப்பாளர் தொடர்வரிசையின்) அடிப்படையில் ‘தவாதுர்’ (பல்வேறுபட்ட அறிவிப்பாளர்களை தொடர்வரிசைகளாகக் கொண்டது எனும்) நிலையில் இருக்கிறது. இது தொடர்பாக அல்லாமா ஷேய்க் ஆகாபுஸோர்க் தெஹ்ரானி என்பவர், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள், ‘இமாம் செய்னுல் ஆப்தீன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்வரை அதன் அறிவிப்பாளர் தொடர்வரிசைகள் சென்றடையக் கூடியதான முதல் ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவானது, முதவாதிராகவும், அறிஞர்களிடத்தில் அவ்விடயம் தெளிவானதாகவும் இருக்கிறது. ஏனெனில், ரிஜால் எனும் அறிவிப்பாளர்களின் படித்தரத்தில் உள்ள அனைவர்களிடத்திலும், அனைத்து காலங்களிலும் அதனை நக்ல் செய்வதற்கான இஜாசா எனும் பகிர்வு அங்கீகாரத்தை தம்முடைய ஆசிரியர்களிடமிருந்து அனைத்து அறிவிப்பாளர்களும் பெற்றிருந்தனர் என்பது, அதன் விசேட அம்சமாக இருக்கிறது’.(1)
அதேபோன்று அல்லாமா முஹம்மத் தகீ மஜ்லிஸி அவர்கள் ஸஹீஃபாவானது, ரிவாயத் மற்றும் நக்ல் விடயத்தில் ஒரு இலட்சம் சனதுகளைக் கொண்டிருப்பதாக வாதிட்டுள்ளார்கள்.(2) அல்-இர்ஷாத் எனும் தனது நூலில் ஷேய்க் முஃபீத் அவர்களும், அதேபோன்று, ஷேய்க் சதூக், ஷேய்க் அஹ்மத் பின் அய்யாஷீ, ஷேய்க் அபுல் முபழ்ழல் ஷைபானீ ஆகியோரின் மாணவரான ஷேய்க் அலீ பின் முஹம்மத் ஹஸாஸ் கும்மீ அவர்களும், மற்றும் சிலரும் அதனை பதிவு (நக்ல்) செய்திருக்கின்றனர்.(3) சுன்னி அறிஞர்களுள் இமாம் இப்னு ஜௌஸீ, கஸாயிஸுல் அயிம்மா எனும் நூலிலும், இமாம் சுலைமான் பின் இப்றாஹீம் கன்தூஸீ, யனாபீஉல் மவத்தா எனும் கிரந்தத்திலும், ஸஹீஃபா பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அதன் துஆக்களில் சில பகுதிகளை நக்ல் செய்திருக்கின்றனர். ஷேய்க் அபுல் முஆலி முஹம்மத் பின் இப்றாஹிம் கல்பாஸீ, அர்-ரிஸாலாஹ் ஃபீ சனதிஸ் ஸஹீஃபா அஸ்-ஸஜ்ஜாதிய்யா எனும் நூலில் ஸஹீஃபாவின் சனதை சுருக்கமாக விபரித்திருக்கிறார்.(4) ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவின் மிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகளில் ‘கஃப்அமீ’ கையெழுத்திலான ஸஹீஃபா பல வருடங்களுக்கு முன்னர் ஈரானிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போயிருந்தது. பின்னர், கிழக்காசியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடல் முயற்சிகளினூடாக கண்டறியப்பட்டு, கலாசார ஆர்வளர்களால் மீளவும் ‘கும்’ நகருக்கு கொண்டுவரப்பட்டு, இறுதியில் பதிப்பித்து வெளியிடப்பட்டது. இப்பிரதி, ஏனைய ஸஹீஃபாக்களில் காணப்படுகின்ற 54 துஆக்களுக்கு மேலாக 4 துஆக்களை மேலதிகமாகக் கொண்டிருக்கின்றது.(5)
(1). அத்-தரீஆ, பா:15, பக்:18, 19
(2). பலாகியின் ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா, பக்:09
(3). யனாபீஉல் மவத்தா, பா:01-02, பக்:599
(4). கிதாபே மாஹே தீன் மாதவிதழ், மலர்: 51, 52
(5). இக்னா செய்தித்தளம்