Iftar time from Sunni hadiths
நபி (ஸல்) அவர்கள் நரகவாதிகளின் அலறல் ஓசையைக் கேட்டார்கள். அதன் பிறகு, கடைவாய்கள் கிழிக்கப்பட்டு, தலை கீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களைக் கண்டார்கள். அவர்களின் கடைவாய்களினால் இரத்தங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
நபி (ஸல்) அவர்கள், ‘யார் இவர்கள்?’ எனக் கேட்டதற்கு, ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
‘இவர்கள்தான் (உரிய) நேரம் வருவதற்கு முன்பே நோன்பைத் துறந்தவர்கள்.’
(சுனனுல் பைஹகி – சுனனுல் குப்ரா, இமாம்; பைஹகி, பா 4, பக் 216)
இது சிந்திக்க வேண்டிய ஹதீஸாகும். உண்மையில், நாம் உரிய நேரத்திலா எமது நோன்பைத் துறக்கிறோம்?. நமது பிரதேச மஸ்ஜிதுகளில் ஒலிக்கும் பாங்குகளைக் கேட்டுத்தானே நாம் நோன்பைத் துறக்கிறோம். அப்படியென்றால், அதில் தவறேதும் இருக்கமாட்டாது என்று நாம் நினைக்கலாம். உண்மையில், உரிய நேரத்திலா மஃரிபுடைய பாங்கு நமது பிரதேச மஸ்ஜித்களில் ஒலிக்கின்றன? என்பது போன்ற பல்வேறு வினாக்களுக்கு பதில் தேடும் பதிவாக இதனை நாம் உங்களுக்குத் தருகிறோம்.
‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆகுவீர்கள்’ (02:183)
நோன்பு மாதத்தில் நோன்பாளியின் நல்லசெயல்கள் அனைத்தும் வணக்கமாகக் கணிக்கப்படுகிறது. நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானின் வருகையை முன்னிட்டு ஸஹாபாக்களுக்கு நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறினார்கள்.
‘மனிதர்களே! பரக்கத்தும், அருளும், பாவமன்னிப்பும் உள்ள அல்லாஹ்வுடைய மாதம் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது அல்லாஹ்விடத்தில் மாதங்களில் மிகச்சிறந்த மாதமாகும். அதன் நாட்கள், நாட்களிலெல்லாம் சிறந்த நாட்களாகும். அதன் இரவுகள், இரவுகளிலெல்லாம் சிறந்த இரவுகளாகும். அந்த மாதத்தில் நீங்கள் தய்வீக விருந்திற்காக அழைக்கப்பட்டு, அல்லாஹ்வுடைய கண்ணியமான குடும்பத்தினர்களாக ஆக்கப்படுவீர்கள். அதில் நீங்கள் விடும் மூச்சுகள் தஸ்பீஹ், உங்களது தூக்கம் வணக்கமாக இருப்பதோடு உங்களது அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படும், உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும். எனவே தூய்மையான உள்ளத்துடனும், உண்மையான நிய்யத்துடனும் இறைவனிடம் கேளுங்கள்’.
இத்தனை சிறப்புக்களையும் கொண்ட நோன்பை நாம் உரிய முறைப்படி பிடித்து தெய்வீக விருந்தில் கலந்துகொண்ட பெருமையோடு சுவனத்தை நோக்கிச் செல்லக்கூடியவர்களாக ஆகவேண்டும். இறைவனுடைய விருந்துபசாரத்தில் கலந்து கொள்வதென்றால் அவன் கூறியது போன்று நோன்பு நோற்கும் போதுதான் அதற்கான அனுமதிச் சீட்டு எமக்கு வழங்கப்படும்.
எப்போது நோன்பு நோற்க வேண்டும், எப்போது துறக்க வேண்டும் என்பது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ
‘பஜ்ர் (அதிகாலை) நேரமெனும் வெள்ளை நூல் (இரவெனும்) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவுவரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்’ (02:187)
இந்த வசனம் அருளப்படுவதற்கு முன்னர், நோன்பு துறந்த பிறகு தூங்குவது, எழுந்தால் உண்ணுவது, பருகுவது என்பன விலக்கப்பட்டிருந்தன. அந்த நடைமுறை இவ்வசனத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டு புதியதொரு வழிமுறை வழங்கப்படுகிறது.
நோன்பு நோற்றல் மற்றும் துறத்தல் விடயத்தில் மேற்கூறிய வசனத்திலிருந்து மூன்று விடயங்களை விளங்கிக்கொள்ள முடியும்.
1. இரவின் ஆரம்பத்திலிருந்து கிழக்கு வெளிக்கும் (பஜ்ர்) வரை உண்பதும், பருகுவதும் ஆகுமாக்கப்பட்டுள்ளது.
2. கிழக்கு வெளுத்தால் நோன்பு பிடிக்கும் நேரம் ஆரம்பமாகிவிடுகிறது. (நோன்பு நோற்;கும் நேரம்).
3. நோற்ற நோன்பை இரவு வரைக்கும் தொடர்ந்து, பூர்த்தி செய்ய வேண்டும் (நோன்பு துறக்கும் நேரம்).
குர்ஆன், சுன்னாவில் நாளாந்த நேர மாற்றத்திற்கேற்ப அவை ஒவ்வொன்றுக்கும் காலை, பகல், மாலை, இரவு, அதிகாலை என பிரத்தியேகப் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இரவு என்பது சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வருகிற நேரமாகும். இதற்கு, இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வாறு வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றனர்.
இமாம் பஹ்ருர் ராஸி (ரஹ்):
இரவு என்பது எது என்ற விடயத்தில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர், சூரிய கதிரின் வெளிச்சத்துடன் பகல் ஆரம்பிப்பது போல, சூரிய வெளிச்சம் போனதன் பின்னர் இரவு ஆரம்பமாகும் என்கின்றனர். இன்னும் சிலர் கிழக்குத்திசையில் செந்நிறம் இல்லாமல் போவதை சூரிய மறைவினதும், இரவினதும் அடையாளம் என்கின்றனர். மேலும் சிலர் நன்றாக இருள் சூழ்ந்து நட்சத்திரங்கள் தென்படுகிற வரைக்கும், அது பகல் வேளை என்கின்றனர். (தப்ஸீர் அல் கபீர், பா 05, பக் 112)
இவைகளுக்கு அப்பால் இரவு என்றால் என்ன? அதை எவ்வாறு அறிந்து கொள்வது என்பது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களது சம்பவமொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأى كَوْكَباً
‘அவரை இரவு மூடிக்கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டார்.’
அல்-அன்ஆனம்: 76
அதாவது இரவு வந்துவிட்டால் நட்சத்திரம் தென்படும் என்பதை இவ்வசனத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. திருக்குர்ஆனில் முப்பதுக்கும் அதிகமான வசனங்கள் காலநேரத்தைப் பற்றிச் சுட்டிக்காட்டுகின்றன.
அத்தோடு, திருக்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இரவு வரைக்கும் நோன்பைப் பூர்த்தியாக்கிவிட்டு துறக்கவேண்டும் என்பதை ஹதீஸ்களில் நோக்கும்போது, நோன்பு திறப்பது சம்பந்தமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களுள் அனேகமானவை மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்திற்கு ஒத்திசைவானதாகவே காணப்படுகின்றன. அதில் இரவு வந்த பிறகுதான் நோன்பு திறக்க வேண்டும் என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஹதீஸ்களின் கண்ணோட்டத்தில் இரவு என்பது கிழக்கில் தோன்றும் செந்நிறம் மறைந்த பின்பு வருவதாகும்.
இது பற்றிய ஹதீஸ்கள் முஸன்னப் இப்னி அபீஷைபா (பா 02, பக் 429), கன்சுல் உம்மால் (பா 08, பக் 509), ஸஹீஹ் முஸ்லிம் இமாம் நவவியின் விளக்கவுரை (பா 07, பக் 209), அல்ஜாமிஉஸ் ஸகீர் (பா 01, பக் 34), சஹீஹ் புஹாரி ஷரஹூ பத்ஹில் பாரி (பா 04, பக் 159), முஸ்னத் அஹ்மத் (பா 01, பக் 28, 35, 48, 54. மேலும் பா 04, பக் 380), சுனன் அபீதாவூத் (பா 04, பக் 216) போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக சில ஹதீஸ்களை இங்கே நாம் நோக்கலாம்:
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸரத் உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘கிழக்கில் இருந்து இருள் தோன்றி மேற்கில் பகல் சென்றுவிட்டால் நோன்பாளி நோன்பைத் திறப்பான்.’
அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்ஃபா (ரழி) அறிவிக்கிறார்கள்: நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுடன் பிரயாணத்தில் இருந்தார்கள். சூரியன் மறைந்தது, நோன்பு நோற்றிருந்த நபியவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து இப்தாரை தயார் செய்யுங்கள் என்றார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘இன்னும் பகல் முடியவில்லை, நீங்கள் நோன்பு என்பதை மறந்து விட்டீர்களா?’ எனக் கேட்க, ‘கிழக்குத் திசையில் இருளைக் கண்டால் நோன்பாளி தனது நோன்பைத் திறப்பான்’ எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையில் இருந்த கரு மேகத்தைச் சுட்டிக் காட்டினார்கள்.
இந்த ஹதீது கிழக்குத் திசையில் இருள் வந்த பிறகும் நபித்தோழர்கள் நோன்பை திறக்கத் தயாராகாது மேலும் இருளை காத்திருந்தார்கள். அப்போது நபியவர்கள் கிழக்கில் இருள் தோன்றுதல் நோன்பு திறப்பதற்கு போதுமாகும் என உணர்த்தியதை புலப்படுத்துகிறது.
‘கிழக்கில் இருள் தோன்றி மேற்கில் சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பைத் திறப்பார்.’ (ஸஹீஹ் புஹாரி, பா 02, பக் 240)
நபி (ஸல்) அவர்கள் தமது கைகளால் சுட்டிக் காட்டியவர்களாகக் கூறினார்கள்:
‘மேற்குத் திசையில் சூரியன் மறைந்து கிழக்குப் பக்கமாக இருள் வந்தால் நோன்பாளி நோன்பு திறப்பான்.’ (ஸஹீஹ் முஸ்லிம், பா 03, பக் 109 – 110)
மேற்கூறிய ஹதீஸ்களில் இருந்து மூன்று விடயங்கள் தெளிவாகின்றன.
1. கிழக்கில் இருள் தோன்றுதல்
2. பகல் போகுதல்
3. சூரியன் மறைதல்
இவை மூன்றும் நிகழாத வரைக்கும் இப்தாருடைய நேரம் தொடங்கமாட்டாது. எவரொருவர் இவ்விடயங்களைக் கவனிக்காது நோன்பு திறப்பாரோ அவர் திருக்குர்ஆனின் கட்டளைப் பிரகாரமும், நபியவர்களின் வழிகாட்டலின் படியும் நோன்பு திறந்தவராகமாட்டார். குர்ஆன், சுன்னாவில் கூறப்பட்டுள்ள பிரகாரம் நோன்பு நோற்கப்படாத போது, நோன்பு எங்களுக்கு இறையச்சத்தை ஏற்படுத்த மாட்டாது. இறையச்சம் ஏற்படாதபோது இறைவனது விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் தகுதியற்றவர்களாக நாம் மாறிவிடுவோம்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறியுள்ள பிரகாரம் நோன்பு நோற்கப்படாத போது, ‘எத்தனையோ நபர்கள் நோன்பு நோற்கின்றனர், அவர்களது நோன்பினால் பசித்திருத்தல், தாகித்திருத்தலைத் தவிர அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.’ என்ற நபிமொழியினால் சுட்டிக் காட்டப்படுபவர்களாக ஆகிவிடுவோம். இறைவன் எம்மைக் காப்பாற்றவேண்டும்.
இறைகட்டளைக்கு வழிப்பட்டு உயர்ந்த சுவனத்தை அடையவேண்டும் என்ற உறுதியான நிய்யத்துடன் சுமார் 15 அல்லது 16 மணித்தியாலங்களை பசியோடும், தாகத்தோடும் இறைவணக்கத்தில் கழிக்கும் நாம், சூரியன் மறைந்து மேற்கில் செம்மேகம் மறையும் வரைக்குமான வெறும் 15 அல்லது 20 நிமிடங்கள் மாத்திரம் காத்திருக்காது, பொறுமையை இழந்து நோன்பைத் துறப்பதன் காரணமாக நாளை மறுமையில் கைசேதப்படும் துர்ப்பாக்கியவான்களாக மாறும் நிலை ஏற்படுகிறது.
அல்லாஹ் எம்மைப் பாதுகாக்க வேண்டும். அவ்வாறெனில், ‘ஸஹர் உண்பதைத் தாமதப்படுத்துங்கள், நோன்பு திறப்பதைத் தீவிரப்படுத்துங்கள்’ என்ற நபிமொழியொன்று பரவலாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்வி நம் அனைவருக்கும் எழலாம்.
ஆம், உண்மைதான். குர்ஆன் வசனம், நபிமொழிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நோன்பு துறக்கும் நேரம் நுழைந்த பிறகு அவசர அவசரமாக நோன்பு திறக்கவேண்டும். அதைத் தாமதப்படுத்தக் கூடாது. நோன்பை இரவு வரை பூர்த்தியாக்குங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் போன்று, கிழக்கில் செம்மேகமானது கருமேகமாக மாறியதும் நோன்பைத் திறவுங்கள் என்று ஹதீஸ் கூறுகிறது. கிழக்கில் தோன்றும் செந்நிறம் இருளானதும் நோன்பை தாமதிக்காது திறந்து விடவேண்டும். கிழக்கில் இந்நிலை ஏற்படுவதற்கு முன்னர் நாம் நோன்பைத் துறந்தால் அந்நோன்பை மஃரிப் அதான் ஒலித்தவுடன் திறப்பதற்கும், ளுஹருக்கு அல்லது அஸருக்குப் பின்னர் திறப்பதற்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. அதாவது நாம் இறைகட்டளைக்கு அமைவாக நோற்ற நோன்புகளை வீணாகப் பாழாக்கி, முறித்து விடுகிறோம் என்பது உறுதி. இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நோன்பு துறத்தல் போன்ற வணக்கங்களை சற்று தாமதித்து பேணுதலுடன் செய்வதில் தவறில்லை. அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அதே வணக்கங்களை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னர் செய்தால், அதை இறைவன் அங்கீகரிக்கமாட்டான். அத்துடன் அதற்கு இறைவனிடத்தில் எவ்விதமான கூலிகளும் வழங்கப்படமாட்டாது. நோன்பை குர்ஆன், சுன்னாவில் கூறப்பட்டுள்ள பிரகாரம் பிடித்து திறக்காதவர்களுக்குரிய தண்டனை பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நரகவாதிகளின் அலறல் ஓசையைக் கேட்டார்கள். அதன் பிறகு, கடைவாய்கள் கிழிக்கப்பட்டு, தலை கீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களைக் கண்டார்கள். அவர்களின் கடைவாய்களினால் இரத்தங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள், ‘யார் இவர்கள்?’ எனக் கேட்டதற்கு, ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘இவர்கள்தான் (உரிய) நேரம் வருவதற்கு முன்பே நோன்பைத் துறந்தவர்கள்.’
(சுனனுல் பைஹகி – சுனனுல் குப்ரா, இமாம்; பைஹகி, பா 4, பக் 216)
ஆகவே, இஸ்லாமியச் சட்டதிட்டங்களைப் பேணி நோன்பை நோற்று, உரிய நேரத்தில் உரிய முறைப்படி அந்நோன்பைத் துறந்து அல்லாஹ்வின் அருளை முழுமையாகப் பெற்றுக்கொள்ள எம்மனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நல்லருள் புரிவானாக.
நாம் நோன்பு துறக்கும் போது சூரியன் மறைந்து கிழக்கில் செம்மேகங்கள் தென்படுகின்றனவா? அல்லது சூரிய ஒளி கண்களுக்கு தெரியும்போதே நோன்பு துறக்கப்படுகின்றனவா? என்பதைக் கவனித்து, நோன்பை உரிய முறையில் துறந்தால்தால் நோன்பைப் பாதுகாத்து அதற்குரிய கூலியையும் பெற்றுக் கொள்வோம். இல்லையேல் நோன்பை வீனாக்கிவிட்டு மறுமையில் கைசேதப்பட வேண்டிவரும்.