ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம்

The Prophet’s Sermon on the Advent of Ramadhan

 

பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த “உயூன் அக்பர் அர்-ரெஸா” என்ற கிரந்தத்தில், இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன் இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டி, ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார் என்று விவரிக்கப்பட்டுள்ளது:

“மக்களே! அல்லாஹ்வின் மாதம் அதன் கருணை, ஆசீர்வாதம் மற்றும் மன்னிப்புடன் வந்துள்ளது. அல்லாஹ் இந்த மாதத்தை எல்லா மாதங்களை விடவும் சிறந்தது என்று அறிவித்துள்ளான்; அதன் நாட்கள் எல்லா நாட்களை விடவும் சிறந்தது, அதன் இரவுகள் எல்லா இரவுகளை விடவும் சிறந்தது, அதன் நேரங்கள் எல்லா நேரங்களை விடவும் மிகச் சிறந்தது. அவன் உங்களை இம்மாதத்தில் (நோன்பு நோற்கவும் மற்றும் இறைவணக்கத்தில் ஈடுபடவும்) அழைக்கின்றான்; அதில் அவன்  உங்களை கண்ணியப்படுத்துகிறான். அதில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சுவாசத்திற்கும் தஸ்பீஹ் (அல்லாஹ்வைப் புகழ்வது) செய்யும் பலன் உண்டு; உங்கள் உறக்கமும் வழிபாடாகும், உங்கள் நல்ல செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உங்கள் வேண்டுதல்களுக்கு பதிலளிக்கப்படுகின்றன. ஆகையால், பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் விடுபட்ட இருதயங்களுடன் உங்கள் இறைவனை நீங்கள் சரியான முறையில் இறைஞ்சவேண்டும், மேலும் நோன்பை உரியமுறையில் கடைப்பிடிக்கவும், குர்ஆனை ஓதவும் அல்லாஹ் உங்களுக்கு உதவும்படி கேட்க வேண்டும். உண்மையில், இந்த மாபெரும் மாதத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை இழந்தவர் பரிதாபகரமானவர். நோன்பு இருக்கும்போது, நியாயத்தீர்ப்பு நாளின் பசியையும் தாகத்தையும் காட்சிப்படுத்துங்கள். ஏழைகளுக்கும் தேவை உடையோருக்கு தர்மம் செய்யுங்கள்; உங்கள் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள், உங்கள் இளையவர்களுக்கு பரிவு காட்டுங்கள், உங்கள் உற்றார் உறவினர்களிடம் அன்பு செலுத்துங்கள். தகுதியற்ற வார்த்தைகளில் இருந்து உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள்; காணக்கூடாத (தடைசெய்யப்பட்ட) காட்சிகளில் இருந்து உங்கள் கண்களை தடுத்துக் கொள்ளுங்கள்; மற்றும் கேட்கக்கூடாதவற்றில் இருந்து உங்கள் காதுகளையும் காத்துக்கொள்ளுங்கள். அனாதைகளிடம் கருணை காட்டுங்கள், இதனால் உங்கள் குழந்தைகள் அனாதைகளாக மாறினால் அவர்களும் கருணையுடன் நடத்தப்படுவார்கள். உங்கள் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மனம் திருந்தி மன்னிப்பு கோருங்கள்., தொழுகை நேரங்களில் உங்கள் கைகளை உயர்த்தி வேண்டிக்கொள்ளுங்கள், இவை மிகச் சிறந்த நேரங்கள், அந்த நேரத்தில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் தன் அடியார்களை கருணையுடன் பார்க்கிறான்; அவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொள்கிறான்; அவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கிறான்; அவர்கள் கேட்டால் தாராளமாக வழங்குகிறான்; அவர்களின் மன்றாட்டத்தை ஏற்றுக்கொள்கிறான்.”

“மக்களே! உங்கள் மனசாட்சியை உங்கள் ஆசைகளின் அடிமையாக ஆக்கியுள்ளீர்கள். மன்னிப்புக்காக அவனை அழைப்பதன் மூலம் அதை விடுவியுங்கள். உங்கள் பாவச்சுமை காரணமாக உங்கள் முதுகு உடைந்து போகிறது; எனவே அவனுக்கு முன்பாக நீண்ட நேரத்துக்கு ஸஜ்தா செய்து, அதை இலகுவாக்குங்கள். தொழுகையையும், ஸஜ்தாவையும் செய்யும் அத்தகைய நபர்களை அவன் கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டான் என்று அல்லாஹ் தனது மாட்சிமை மற்றும் கௌரவத்தின் பெயரில் வாக்குறுதி அளித்துள்ளான். நியாயத்தீர்ப்பு நாளில் அவன் அவர்களின் உடல்களை நரகத்தின் நெருப்பிலிருந்து பாதுகாப்பான் என்பதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள்.

“மக்களே! உங்களிடமிருந்து எவரேனும் எந்த விசுவாசிகளின் இப்தார் (சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நோன்பை முடிப்பதற்கான உணவு) ஏற்பாடு செய்தால், அல்லாஹ் அவன் / அவள் ஒரு அடிமையை விடுவித்ததைப் போன்றதொரு வெகுமதியைக் கொடுப்பான், முந்தைய பாவங்களை அவன் மன்னிப்பான்.”

அவர்கள் மத்தியில் இருந்த ஒருவர் “ஆனால் நம்மிடையே உள்ள அனைவருக்கும் அவ்வாறு செய்யும் வசதி இல்லையே” என்று சொன்னபோது: நபி (ஸல்) அவரை நோக்கி: “நரகத்தின் நெருப்பிலிருந்து (இப்தாரை வழங்குவதன் மூலம்) உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள், வேறு எதுவும் இல்லையென்றால் உங்களிடமுள்ள பேரீத்தம் பழத்தின் பாதியாகவோ அல்லது கொஞ்சம் தண்ணீராகக் கூட அது இருக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது பிரசங்கத்தின் தொடர்ச்சியாக இவ்வாறு கூறினார்:

“மக்களே! இந்த மாதத்தில் நல்ல பழக்கவழக்கங்களை வளர்க்கும் எவரும், கால்கள் நழுவும் நாளில், சிராத் (நரகத்தின் விளிம்பு வழியாக சொர்க்கத்திற்கு செல்லும் பாலம்) மீது நடப்பார்கள். இந்த மாதத்தில் (கஷ்டப்படுத்தாமல்) தமது ஊழியர்களிடமிருந்து இலகுவான வேலையை எடுத்துக் கொள்ளும் எவருக்கும் அல்லாஹ் தனது கணக்கை எளிதாக்குவான். அம்மாதத்தில் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாத அவனை / அவளை நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவனது கோபத்திலிருந்து பாதுகாப்பான். எவரேனும் ஒரு அனாதையை மரியாதையுடன் மதித்து நடத்துகிறார்களோ, அந்த நாளில் அல்லாஹ் அவனை / அவளை தயவுடன் பார்ப்பான்.

ரமலானில் உறவினர்களை நல்ல முறையில் கையாளும் எவரும், நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவனுடைய கருணையை அவனுக்கு / அவளுக்கு வழங்குவான், அதே சமயம் உறவினர்களைத் துன்புறுத்துபவர்களிடம் இருந்து அல்லாஹ் அவனது கருணையை பறித்துக் கொள்வான். அம்மாதத்தில் பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனைகளை செய்வோரை அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றுவான்; கட்டாய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோருக்கு, மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது இதுபோன்ற செயல்களுக்கு வெகுமதி ஏழு மடங்காக இருக்கும். எவர் என் மீது சலாவத்தை (ஆசீர்வாதங்களை) மீண்டும் மீண்டும் ஓதினால், அல்லாஹ் நற்செயல்களின் தராசை (நியாயத்தீர்ப்பு நாளில்) கனமாக வைத்திருப்பான், அதே நேரத்தில் மற்றவர்களின் தராசு இலேசாக இருக்கும். இந்த மாதத்தில் குர்ஆனின் ஓர் ஆயத்தை யார் ஓதினாலும், மற்ற மாதங்களில் முழு குர்ஆனையும் ஓதியதற்கு சமமான வெகுமதி உண்டு.

“மக்களே, இந்த மாதத்தில் சொர்க்கத்தின் வாயில்கள் திறந்தே இருக்கின்றன, அவை உங்களுக்காக மூடப்படாமல் இருக்கும்படி உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டிருக்கும்போது, அவை உங்களுக்காக ஒருபோதும் திறக்கப்படாமல் இருக்கும்படி உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இம்மாதத்தில் சாத்தான்கள் விலங்கிடப்பட்டிருக்கும், ஆகவே, அவை உங்களை ஆதிக்கம் செலுத்தும்படி ஆக்கிவிடாதே என்று உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்.”

இமாம் அலி (அலை) அவர்கள் கூறுகிறார்: நான் றஸூலுல்லாஹ்விடம் “அல்லாஹ்வின் தூதரே, இந்த மாதத்தில் சிறந்த செயல்கள் யாவை?” என்று கேட்டேன்: ரசூலுல்லாஹ் அவர்கள் “ஓ அபாஅல்-ஹசன், இந்த மாதத்தில் மிகச் சிறந்த செயல் அல்லாஹ் தடைசெய்தவற்றில் இருந்து விலகி, வெகு தூரத்தில் இருப்பதாகும்,” என்று கூறினார்கள்.

http://kayhan.ir/en/news/77832/the-prophet%E2%80%99s-sermon-on-the-advent-of-ramadhan

https://thoothu2018.blogspot.com/2020/04/blog-post_26.html?fbclid=IwAR39utDq1I1nXtD1nhCedsuPf61VrkVf5GgZxG85GoF7Drvya3niWm9jSmg

Scroll to Top
Scroll to Top