Imam Gazzali’s Methodology in Religious Psychology
Dr. Amin Khonsari
(Part 02)
கலாநிதி அமீன் கோன்ஸாரி
மொழியாக்கம்: மர்வான் முஹம்மத்
(பகுதி 01)
இமாம் கஸ்ஸாலியின் உளவியல் ஆய்வுமுறை
உளவியல் சார்ந்த பகுப்பாய்வுகளிலே இமாம் கஸ்ஸாலியின் ஆய்வுமுறைகள் மிகவும் பரந்ததாகவும், பல்வேறுபட்டதாகவும் உள்ளன. அவர், பல மூலாதாரங்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள், மிகவும் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய பகுதியாக சமயம்சார்ந்த பனுவல்கள் உள்ளன. மற்றைய பகுதியாக, இஸ்லாமிய மற்றும் கிரேக்க மெய்யியல் நூற்கள், சூஃபி பனுவல்கள், இஸ்லாமிய இறையியல் மற்றும் சட்டத்துறை மூலப்பிரதிகள் அமைந்துள்ளன.
‘இஹ்யாஉ உலூமித்தீன்’ (சமய அறிவியல்களை உயிர்ப்பித்தல்) எனும் இமாம் கஸ்ஸாலியின் மாபெரும் படைப்பாக்கத்தை நோக்கும்போது, அவருடைய இவ்வாறான ஆய்வுமுறைகள் தெளிவாகிவிடுகின்றன. இந்நூலின் பல்வேறு இடங்களிலே தன்னுடைய பகுப்பாய்வுகளுக்கு பக்கபலமாக அமைந்த பல்வேறு மூலாதாரங்களிலிருந்தும் அவர் பயனடைந்துள்ளார். அறிவுசார்ந்த பல்வேறு படைப்பாக்கங்களுக்கு அவர் வழங்கியிருக்கும் முக்கியத்துவமானது, அவருடைய சிந்தனைக் கோணங்களை பல்பரிமாணதன்மை கொண்டதாகவும், பல்வேறு பின்புலங்களைச் சூழ்ந்ததாகவும் விளக்குகின்றது. இவ்வகையில், சமயம் குறித்த பல்வேறு விடயங்களிலே இமாம் கஸ்ஸாலியின் முறையியலானது சமயம், பகுத்தறிவு, மெய்ஞ்ஞானம் ஆகியவற்றின் ஒரு கலவையாகவே காணப்படுகிறது.
கலாநிதி பாகிர் ஹுஜ்ஜதி எழுதியுள்ள இமாம் கஸ்ஸாலி மற்றும் ஏனைய இஸ்லாமிய அறிஞர்களின் பார்வையில் உளவியல் எனும் நூலிலே, இமாம் கஸ்ஸாலியின் பார்வையில் உளப்பகுப்பாய்வு மற்றும் அணுகுமுறைகள் என்பன மூன்று கட்டங்களில் குறிப்பிடப்படுகின்றன. இதன்படி, இமாம் கஸ்ஸாலியின் அணுகுமுறையானது, அகநோக்கு, பிறரின் நடத்தை குறித்த ஒப்பீட்டாய்வு மற்றும் உளப்பகுப்பாய்வு எனும் மூன்று கட்டங்களில் அமையப் பெற்றுள்ளது. அல்முன்கித் நூலானது, தன்னகத்தே உட்கொண்டுள்ள அம்சங்கள், இமாம் கஸ்ஸாலியின் அகநோக்குக்கும், ஆன்மாவின் இருப்பை அவர் நிரூபித்திருப்பதற்கும் சான்றாகும். இந்த அகநோக்கானது, தனிநபர் நடத்தையை கட்டுப்படுத்தி, ஏனையோரின் நடத்தைகளோடு ஒப்புநோக்கி ஆராய்ந்து பார்ப்பதற்கான ஒரு முன்னோட்டமாகும். ஏனையோரின் நடத்தைகளை ஒப்புநோக்கி ஆராய்கின்ற விடயத்திலே இமாம் கஸ்ஸாலி மிகவும் நுட்பமானவராகச் செயற்பட்டிருக்கிறார்.
‘இஹ்யாஉ உலூமித்தீன்’ நூலின் அனேக இடங்களிலே, குறிப்பாக ‘முஹ்லிகாத்’ எனும் மனிதனை அழித்துவிடும் தீயகுணங்கள் பற்றிய பகுதிகளில் உளரீதியான குறைபாடுகளை விபரித்துவிட்டு, ‘முன்ஜியாத்’ எனும் அழிவிலிருந்து வெற்றி தரும் நற்குணங்கள் பற்றிய பகுதிகளில் தீயகுணங்களைப் போக்கிவிடுவதற்கான செயல்முறைகளை முன்வைத்திருக்கிறார்.
இமாம் கஸ்ஸாலியுடைய உளவியல் ஆய்வின் மூன்றாவது கட்டத்திலே உளப்பகுப்பாய்வு காணப்படுகிறது. இமாம் கஸ்ஸாலியின் உளப்பகுப்பாய்வு முறையானது, மனிதனின் தனிப்பட்ட நடத்தைகளை பகுப்பாய்தல் மற்றும் உளரீதியான தேவைப்பாடுகளைப் பகுப்பாய்தல் ஆகிய இரு பகுப்பாய்வுகளைக் கொண்டதாகும். இமாம் கஸ்ஸாலி, தனது உளவியல் போதனைகளிலே விஷேட அணுகுமுறைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றை சமய உளவியல் துறையில் காணப்படுகின்ற ஏனைய பண்பளவு முறைகளில் (Qualitative methods) உள்ளடக்கியே நோக்க வேண்டியுள்ளது. பண்பளவு அணுகுமுறைகள் அடிப்படையிலே சமயவுணர்வை, ஒரு உளரீதியிலான படிமுறை செயற்பாடு என்பதாகக் கருதுகின்றன. இதனால், சமயம்சார்ந்த எண்ணக்கருக்களோடும், சமயப்பற்றாளர்களோடும் சிநேகபூர்வமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கே அவை முயற்சிக்கின்றன. இவ்வாறுதான், இமாம் கஸ்ஸாலியின் அணுகுமுறையும் அமைந்திருக்கின்றது. இதற்குச் சான்றாக, ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் படித்தரங்கள் குறித்த இமாம் கஸ்ஸாலியின் போதனைகளைக் குறிப்பிட முடியும்.
‘இஹ்யாஉ உலூமித்தீன்’ நூலில் வந்துள்ள நாற்பது தலைப்புகளிலே இமாம் கஸ்ஸாலி அவர்கள், தர்க்கரீதியான தொடர் ஒழுங்கில் ஈமான் எனும் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு உளப்பகுப்பாய்வை மேற்கொண்டிருக்கிறார். சாதாரண மக்களிடம் காணப்படுகின்ற ஆரம்ப நிலையிலான ஈமான் தொடக்கம், விஷேட நபர்கள் மற்றும் மெய்ஞ்ஞானியர் ஆகியோருக்குரிய ஈமானின் படித்தரங்கள் வரை அனைவர்களையும் உள்ளடக்கியதாக உளப்பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு எப்போதும் முனைந்திருக்கிறார். அவர், ‘இஹ்யாஉ உலூமித்தீன்’ நூலின் பல்வேறு பகுதிகளிலே, ஈமானின் பல்வேறு கோணங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு செயற்பட்டிருப்பதைக் காணலாம். ஈமானின் வரம்பை, இறையருளின் பரப்பைப் போன்று விசாலமானதாகக் கருதி, சாதாரண மற்றும் விஷேட நிலைகளில் உள்ள சமயப்பற்றாளர்கள் எல்லோரையும் உள்ளடக்கக் கூடியதாக, ஈமானின் படித்தரங்களை வரைந்திருக்கிறார். அவருடைய பார்வையில் ஈமான் சுமார் எழுபது படித்தரங்களைக் கொண்டதாகும். அவர் தாம்பெற்றிருந்த ஆன்மீக தரிசனங்களின்படி, மனிதர்களை பல்வேறு படித்தரங்களில் வகைப்படுத்தியிருக்கிறார்.
சமய உளவியலின் பொதுவான அம்சங்களில் ஒன்றுதான் மனிதனிலே எழுகின்ற ‘சமயப்பற்றுணர்வு’ (Religiosity) ஒரு உளவியல் தோற்றப்பாடு என்றவகையில் ஒற்றைத் தன்மையானதா? அல்லது பலகோணங்களைக் கொண்டதா? என்ற கேள்விக்கு விடைகாண்பதாகும்.
உதாரணமாக, ஆல்போர்ட் (Allport) என்ற சமய உளவியலாளர், சமயத்தை (சமயப்பற்றுணர்வை) ‘அகவய சமயம்’ மற்றும் ‘புறவய சமயம்’ என்று பிரித்து நோக்குகிறார். அகவய சமயத்தைப் பொருத்தமட்டில் விசுவாசமானது தன்னளவிலே உயரிய பெறுமானத்தைக் கொண்டதாகக் காணப்படுகிறது. தெய்வீகக் கட்டளைகளுக்கு மதிப்பளிப்பதனூடாக, தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதோடும், சகோதரத்துவ உணர்வைப் பெற்றிருத்தல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கப்பால் பொதுநலனுக்காக உழைத்தல் என்பவற்றோடும் இது பிணைந்து காணப்படுகிறது. இதன் எதிர்நிலையில், புறவய சமயம் என்பது வெறும் தனிப்பட்ட இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இதேபோன்று, சில சமய உளவியலாளர்கள் சமத்தை ‘கடமைப்பாட்டின் உணர்விலான சமயம்’ என்றும், ‘உடன்படிக்கையின் அடிப்படையிலான சமயம்’ என்றும் பிரித்து நோக்கியிருக்கின்றனர். ஆலென் பேர்கின் (Allen Bergin) மற்றும் பேர்னார்ட் ஸ்பில்கா (Bernard Spilka) போன்றோரின் கருத்தின்படி, கடமைப்பாட்டின் உணர்விலான சமயம் என்பது, கோட்பாட்டளவிலான மெய்யியல் பார்வையைக் கொண்டது. அதன் எதிரில் உடன்படிக்கையின் அடிப்படையிலான சமயவுணர்வு காணப்படுகிறது. இது தெளிவற்றதாகவும், வேறுபடுத்தப்படாமலும், முரண்பாட்டைக் கொண்டதாகவும், அதேநேரம் நடுநிலையானதாகவும், விசுவாசத்தை உட்கொண்டதாகவும் காணப்படுகிறது. மேலும், இது அறிவுநிலையின்படி பொதுமையானதும், தனிப்பட்டவகையில் அடைந்துகொள்வதற்கு மிக இலகுவானதுமாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
சமய உளவியலாளரான கிலார்க் எல் ஹால் (Clark L. Hull) என்பவர் பல்வேறுபட்ட சமய நடத்தைகள் பற்றிக் குறிப்பிடுகையில், முதல்நிலை சமய நடத்தையானது, ஒரு தனிநபரின் வாழ்க்கையை ஒழுங்கமைக்கும் வகையில் பரிசுத்த உலகு (மறுஉலகு) பற்றிய நம்பிக்கையை உள்ளடக்கிய அகவய பரிச்சயத்தைக் கொண்டதாகும். இரண்டாம்நிலை சமய நடத்தையானது, சமய கடமைகளை ஒரே சீராக, அதேநேரம் உயிரோட்டமற்ற முறையில் நிறைவேற்றுவதாகும். மூன்றாம்நிலை சமய நடத்தையும் கூட, ஒரு தொகுதி சமய விதிகளையும், கடமைகளையும் பிறர்மீது கொண்ட நம்பிக்கையின்படி அவ்வாறே மீண்டும் மீண்டும் செய்துவருவதாக அமைந்திருக்கிறது என்று கூறுகிறார்.
இமாம் கஸ்ஸாலியும் கூட, தமது தரிசனங்களின்படி சமய நம்பிக்கைகளை, பிறரைப் பின்பற்றுவதின் மூலமான நம்பிக்கை, இறையியல் தேடலின் மூலமான நம்பிக்கை, மெய்ஞ்ஞான நோக்கின் மூலமான நம்பிக்கை என வகைப்படுத்தி, அவற்றுக்கு இடையிலான தனித்தன்மைகளை விளக்கியிருக்கிறார்.
1. பொதுஜன நம்பிக்கை: இது பிறரைப் பின்பற்றுவதன் மூலமாக ஏற்படும் சமயம் பற்றிய நம்பிக்கையாகும். மனிதர்களில் பெரும்பாலோர், இவ்வாறான நம்பிக்கையையே சுமந்திருக்கின்றனர். யாராவது ஒருவரை நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளராக ஏற்று, செவிமடுப்பதன் மூலமாக உருவாகக்கூடிய, அதேபோன்று, செவிமடுக்கின்ற கணத்திலேயே மனம் அதனை ஏற்றுவிடக்கூடிய நம்பிக்கையாக இது இருக்கிறது.
தமது இளமைப்பருவத்தின் ஆரம்ப விருத்திக்கட்டங்களிலே இறைவன் மற்றும் இறைத்தூதர்கள் தொடர்பாக தம்பெற்றோரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைபேறாகி விடுவதாகவே பொதுஜன வாழ்க்கைமுறை அமைந்திருக்கிறது. தம்பெற்றோரின் நம்பிக்கைக்கு மாற்றமாக ஐயுறுவதே கிடையாது. தமக்கு கற்றுத்தருவோரின் உரிமையிலே எப்போதும், நல்லெண்ணம் கொண்டிருப்பதே இதற்குக் காரணமாகும். இந்நம்பிக்கையானது, மனிதவாழ்க்கையின் ஏனைய அனைத்து விருத்திக் கட்டங்களிலேயும் அவ்வாறே எஞ்சியிருக்கும். என்றாலும், இவ்வகை நம்பிக்கையின் பயனாக, மறுமையின் வெற்றி அமைந்திருக்கும் என்பதாகவே இமாம் கஸ்ஸாலி கருதுகிறார்.
பொதுஜன நம்பிக்கையைக் கொண்டோர், மறுமையில் வெற்றிபெற்று, தமக்குரிய உயர்வினை அடைந்தாலும், இறுக்கமான தெய்வீக நெருக்கத்தைப் பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள். ஏனெனில், இறுக்கமான தெய்வீக நெருக்கத்திற்கு மெய்ப்பொருள் காண்பதும், ஆத்மீக தரிசனத்தைப் பெற்றிருப்பதும் அவசியம். உள்ளமானது, பொதுஜன நம்பிக்கையின் மூலமாக இறைப்பற்றுறுதியின் பிரகாசத்திற்குரிய தரிசனத்தைப் பெற்றிருக்க மாட்டாது. ஏனெனில், இது வெறுமனே வார்த்தைகளைச் செவிமடுப்பதால் மட்டும் உண்டாகும் நம்பிக்கை. வார்த்தைகளில் கூட தவறுகள் நிகழக்கூடும். என்றாலும், மெய்ப்பொருளை உய்த்தறிவதற்குத் தூண்டுவதாகவே இவ்வகை நம்பிக்கை காணப்படுகிறது.
2. அறிவார்ந்த நம்பிக்கை: இது, நியாயபூர்வமான காரணங்களைத் தேடும் இறையியலரின் நம்பிக்கையாகும். உண்மையான அறிவிப்பாளரிடமிருந்து செவிமடுப்பதற்கு அப்பாலும், இறைநம்பிக்கையை ஆதாரபூர்வமானதாக அமைத்துக்கொள்வதில் நாட்டம் கொண்டிருக்கிறது. இதனை இமாம் கஸ்ஸாலி பின்வருமாறு விளக்குகிறார். ‘சைத்’ என்பவரைக் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துக்களை மட்டும் கருத்திற்கொள்ளாது, வீட்டின் சுவற்றுக்குப் பின்னால் எழும் சைத்துடைய குரலோசையையும் செவிமடுத்து தீர்மானிப்பதாகும். மேலும், இக்குரலோசையை சைத் வீட்டில் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாகக் கொள்வதுபோன்ற ஒன்றே இவ்வகை நம்பிக்கையாகும்.
எனவே, இந்நம்பிக்கையானது மனச்சாட்சியையும், கூடிய உறுதிப்பாட்டையும் உட்கொண்டிருக்கிறது. பொதுவாக, சான்றுகளை முன்வைப்பதில் தவறுநிகழ்வதற்கு சாத்தியமிருப்பினும் இது ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த நம்பிக்கையே. இமாம் கஸ்ஸாலி, பொதுஜன நம்பிக்கைக்கு நெருக்கமானதாகவே இவ்வகை நம்பிக்கையைக் கருதியிருக்கிறார்.
3. மெய்ஞ்ஞானியரின் நம்பிக்கை: இது, தெய்வீக தரிசனத்தைக் கொண்டதாகும். அதிலே மெய்யறிவும், நிண்ணய தரிசனமும் இருக்கிறது. இது இறுக்கமான நெருக்கத்தை, நட்பைப் பெற்றோரின் அறிமுகத்தைப் போன்றது. ஏனெனில், இத்தகையோர் தெய்வீக தரிசனத்தின் மூலமாகவே எதனையும் மெய்ப்பிக்கின்றனர். மெய்ஞ்ஞானியரின் நம்பிக்கையானது, பொதுஜன மற்றும் இறையியலரின் நம்பிக்கைகளை உள்ளடக்கியதாக இருந்தபோதிலும், அவர்களுடைய நம்பிக்கைகளிலிருந்து தனித்தன்மை வாய்ந்ததாகவே காணப்படுகிறது. மெய்ஞ்ஞானியரின் நம்பிக்கையில் தவறுக்கு இடம்கிடையாது. இதன் மெய்யறிவும், மெய்ப்பொருள் காண்பதின் படித்தரங்களும், ஏனைய படித்தரங்களைவிடவும் கூடியதாகும். மெய்ஞ்ஞானியரின் நம்பிக்கையானது, ஏனையவகை நம்பிக்கைகளைவிடவும் அறிவின் படித்தரத்திலும், பெறுமானத்திலும் மேல்நிலையில் உள்ளது.
சமயக்கற்கை மற்றும் சமய உளவியல் துறைகளில் ஈடுபாடு உடையோரில் பெரும்பாலோர், பண்பளவு முறைகளைப் போன்ற முறையியல்களையே அதிகமாகக் கையாளுகின்றனர். பண்பளவு அணுகுமுறைப் பொறிகளில் சிலவற்றை, இமாம் கஸ்ஸாலியின் ஆய்வுமுறையியல் விடயத்திலே விளக்கிக்கூற முடியும். அதேபோன்று, இமாம் கஸ்ஸாலியின் முறையியலை, சமய உளவியலில் காணப்படுகின்ற முறையியல்களோடு ஒப்பிட்டு மதிப்பிடவும் முடியும். இவற்றின் மூலமாக சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியலை சரியாக வரையறுத்துக் கொள்ளலாம்.
(தொடரும்…)