சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 01

Imam Gazzali’s Methodology in Religious Psychology

Dr. Amin Khonsari

(Part 01)

கலாநிதி அமீன் கோன்ஸாரி
மொழியாக்கம்: மர்வான் முஹம்மத்

(பகுதி 01)

சமய உளவியலானது, சமயம் மற்றும் சமயப்பற்று ஆகியவற்றை உளவியல் ரீதியில் ஆய்வுசெய்வதிலே புதிதாகத் தோன்றிய அறிவியலாகும். இது, வரையறுக்கப்பட்ட அணுகுமுறைகள், உக்திகள், விதிமுறைகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

சமய உளவியலுக்கான ஆய்வு முறைகள் – ஒரு சுருக்கமான அறிமுகம்

சமய உளவியலில் எப்போதும், விரித்துரைமுறை (Description Method) மற்றும் விளக்கமுறை (Explanation Method) எனும் இரு முறைகள் அல்லது அகநோக்கு (Introspection Approach) மற்றும் புறநோக்கு (Observation Approach) எனும் இரு அணுகுமுறைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும், சமய உளவியலில் பல்வேறு அணுகுமுறைகள், உக்திகள், முறையியல்கள் ஆகியவற்றைத் தோற்றுவித்துள்ளன. பெரும்பாலும் இன்று சமய உளவியலானது, புறநோக்கு சார்ந்த விளக்கமுறையின் போக்குகளையே பயன்படுத்தும் போதிலும், அகநோக்கு சார்ந்த விரித்துரைமுறையின் போக்குகளைக் கண்டுகொள்ளாது விடவில்லை. ‘அகஸ்டியனின் ஒப்புதல்கள்’ அல்லது இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ‘தவறிலிருந்து மீட்சி’ போன்ற நூற்களில் விரித்துரைமுறையின் போக்குகளுக்கான வேர்களையே கண்டுகொள்ள முடிகிறது.

விமர்சனம் செய்வதையும், புறவயமாக நோக்குவதையும் பின்பற்றும் விளக்கமுறையின் போக்குகளுக்கு மாற்றமாக, சமயம் மற்றும் சமயப்பற்றாளருடனான விரித்துரைமுறையின் உறவானது, சிநேகபூர்வமானதாக இருப்பதோடு, சமய நடத்தைகளை அகவயமாக ஆராய்வதற்கும் முனைகிறது.

நடத்தைவாதிகள், சமய உளவியலில் விளக்கமுறையின் போக்குகளை மட்டும் கையாளும் நிலையில், தோற்றப்பாட்டியலர் விரித்துரைமுறையின் போக்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இவ்வகையில், இமாம் கஸ்ஸாலியை தோற்றப்பாட்டியலரோடு ஒன்றாகக் கருதமுடியும். ஏனெனில் அவர், விரித்துரைமுறையின் போக்குகளிலே, சமயம் பற்றிய நேர்மையான விரித்துரைப்பை வழங்குவதற்கே எப்போதும் முனைந்திருக்கிறார்.

இவ்விரு போக்குகளில் ஒவ்வொன்றும், தான் கொண்டிருக்கும் அணுகுமுறையின் அடிப்படையில், தனக்கேயுரிய விஷேட முறைகளைக் கையாண்டுள்ளன. சமயத்திற்கு விளக்கவுரை வழங்குவதையும், அதனை அகவயமாக நோக்குவதையும் கொண்டிருக்கும் உளவியலர், சமயத்தை எதிர்கொள்வதிலே எண்ணளவுசார் முறைகளை (Quantitative Methods) கையாண்டு, புலக்காட்சிக்குரிய நடத்தையாக மட்டுமே சமயத்தை நோக்கியுள்ளனர். எண்ணளவுசார் முறைகளிலே சமயமானது, ஒரு அறிவியல் வடிவத்தில், காரண காரியத்தின்படி விளக்கப்படுகிறது.

இதற்கு மாற்றமாக, சமயத்தை விரித்துரைப்பதையும், அகவயமாக நோக்குவதையும் கொண்டிருக்கும் உளவியலர், தமது உளவியல் சார்ந்த ஆய்வுகளிலே பண்பளவு முறைகளை (Qualitative Methods) பயன்படுத்தியுள்ளனர். ஏனெனில், சமயத்தை அடிப்படையிலேயே ஒரு அகவயமான செயல்முறையாகக் கருதுகின்றனர். சமயமானது, சிநேகபூர்வமாகவும், அது கொண்டிருக்கும் பொருண்மை சார்ந்த கட்டமைப்பின் அடிப்படையிலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இவ்வகையிலேயே இமாம் கஸ்ஸாலியின் சமய ஆய்வுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உளவியல் ஆய்வுக்கான இமாம் கஸ்ஸாலியின் மூலதத்துவங்கள்

இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி, சமயம் மற்றும் அறிவாய்வியல் சார்ந்த விஷேட மூலதத்துவங்களைக் கொண்டிருந்தார். சமயக் கருத்தாக்கங்கள் மற்றும் சமயப்பற்றாளரின் நடத்தைகள் ஆகியன தொடர்பிலே அவ்விஷேட மூலதத்துவங்களின்படி, தன்னுடைய உளவியல்சார் பகுப்பாய்வை முன்வைத்திருந்தார். அவர், தனது பகுப்பாய்வுகளை விளக்கும்போது, வரையறுக்கப்பட்ட முறையியல்களைப் பயன்படுத்திருந்தார். இதனால், சமயப்பற்றாளரோடு சிநேகபூர்வமான பார்வையையும், சமயம் சார்ந்த அகநோக்கையும் கொண்டிருந்தார். இதற்குரிய சான்றுகளை, அவருடைய இலக்கியப் படைப்புகளில் கண்டுகொள்ள முடியும்.

இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி, சமயப்பற்றுணர்வை தரப்படுத்தும் விடயத்திலே பொதுஜனம், அறிஞர், ஞானியர் போன்ற சமயப்பற்றாளரின் பல்வேறு படித்தரங்களில் சிநேகபூர்வமான அணுகுமுறையைக் கையாண்டுள்ளதை, இதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ள முடியும்.

உளவியலில் காணப்படும் முறையியல்களின் பரப்பிலே இமாம் கஸ்ஸாலியின் முறையியலை, பண்பளவு முறையியல்களில் உள்ளடக்கிப் பார்க்கமுடியும். தனிநபர் அகநோக்கு, சமயப்பற்றாளரின் நடைத்தைகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தல், சமயப்பற்றாளரிலே சமய சிந்தனைகள் மற்றும் கருத்தாக்கங்களின் பிரதிபலிப்பு, சமயம் மற்றும் சமயம்சார்ந்த தோற்றப்பாடுகள் குறித்து அறிவாய்வியல் ரீதியாக விளக்கமளித்தல், புனிதப் பனுவல்களைக் கையாள்வதிலே விரித்துரை மற்றும் வலிந்துரை சார்ந்த தோற்றப்பாட்டியல் அணுகுமுறைகள் ஆகியன போன்ற முறையியல்களை இமாம் கஸ்ஸாலி கொண்டிருந்தார்.

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் முறையியலைப் புரிந்துகொள்வதற்கு, முதலில் இமாம் கஸ்ஸாலி அவர்களின் அறிவாய்வியல் கோட்பாடுகளுடனான அறிமுகத்தைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையில், இமாம் கஸ்ஸாலி அவர்களின் அறிவாய்வியல் கோட்பாடுகளை, அறிவாய்வியல் மற்றும் இருத்தலியல் (Epistemology and Ontology) பரிமாணங்களில் பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.

1- இமாம் கஸ்ஸாலியின் அறிவாய்வியல் கோட்பாடுகள்:

இமாம் கஸ்ஸாலியின் அல்முன்கித் மினல் ழலால் (தவறிலிருந்து மீட்சி) எனும் நூலானது தன்னகத்தே கொண்டுள்ள உள்ளம்சத்திலிருந்தே, ‘அறிவு’ எனும் விடயத்திற்கு, அவர் வழங்கியிருக்கும் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள முடியும். அவர் ஒரு ஐயவாதியாக இருந்த காலகட்டங்களிலே, புலனுறுப்புகளால் அறியப்படுபவைகளை பகுத்தறிவின் மூலம் சந்தேகத்திற்கு உரியவையாகக் கண்டார். அந்நேரத்தில், புலனுறுப்புகளால் அறியும்போது இடம்பெறும் புலனுணர்வின் தவறுகளை எவ்வாறு பகுத்தறிவு தெளிவுபடுத்துகின்றதோ, அவ்வாறே பகுத்தறிவினால் ஒன்றை அறிய முற்படும்போது இடம்பெறும் தவறுகளைக் கண்டறிந்து, பகுத்தறிவு ரீதியில் உறுதியானவையாக இருப்பவைகளையும் நம்பகத்தன்மை அற்றவையாக மாற்றக்கூடிய வேறொரு அறிவின் மூலாதாரம் இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். இதனால், யதார்த்தபூர்வமானது என்று நாம் நம்புகின்றவை அனைத்தும் கனவும், கற்பனையுமே அன்றி, வேறில்லை என்று அவர் கருதினார். இதன் மூலம் அவர், முழுமுதல் ஐயவாதத்திற்கு (Absolute skepticism) ஆளாகியிருந்தார். (இந்நிலையிலிருந்து விடுபட்டு, மெய்யான அறிவைப் பெற்றுக்கொள்வதற்காகவே இஸ்லாமிய மெய்ஞ்ஞானத்தின்பால் தமது கவனத்தைச் செலுத்திய அவர், பின்னைய காலங்களில் மாபெரும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது).

அறிவாய்வு ரீதியிலான வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதை தெய்வீகக் கருணைகளில் நின்றும் உள்ளதாகவும், அத்தகைய கருணையைக் கொண்டே உறுதியான, பகுத்தறிவுரீதியில் நம்பிக்கை வாய்ந்தவையாக இருப்பவைகளின்பால் மீண்டு அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாகவும் இமாம் கஸ்ஸாலி நம்பினார்.

ஆக மொத்தத்தில் இமாம் கஸ்ஸாலியின் கருத்தின்படி, இருவாயில்களின் மூலம் மனிதன் அறிவைப் பெறுகிறான்.

முதலாவது, ஆசிரியரின் உதவியோடு, ஐம்புலன்கள் மற்றும் பகுத்தறிவின் துணையினால் அமைந்த கற்றல் எனும் வாயிலின் மூலம் அறிவைப் பெறுதல். இவ்வகை அறிகையின் மூலம் புலனுணர்வினால் காட்சிப்படுத்தப்படுகின்ற புறஉலகு அறியப்படுகின்றது. இவ்வாயிலானது, அறிதலின் பொதுவான, சாதாரண முறையாகும். இமாம் கஸ்ஸாலியின் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இவ்வகை அறிவானது, அடிப்படையிலேயே இல்ஹாம் எனும் உள்மனத்தூண்டலை ஆதாரமாகக் கொண்டதாகும். மனிதன், பௌதீக உலகிலே தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவனது வாழ்வின் தொடக்கத்தில் ஒரு தொகுதி விடயங்கள் அவனுக்கு உள்மனத்தூண்டலினால் வழங்கப்பட்டது. அப்போதிருந்து, இவ் உள்மனத்தூண்டல்களால் ஆனவை யாவும், காலசுழற்சியில் கற்றல் வடிவமாகவும், போதனை முறையாகவும் மாறிப்போயின.

இரண்டாவது, தெய்வீகப் போதனையின் வழியாக மனிதன் நேரடியாக அறிவை அடைந்து கொள்கிறான். இமாம் கஸ்ஸாலியின் பார்வையில், இவ்வாறான அறிவானது, புறரீதியிலான கற்றல் முறை மற்றும் அகரீதியிலான சிந்தனை முறை எனும் இருவழிகளில் தோன்றுகின்றது.
இமாம் கஸ்ஸாலி, தெய்வீகப் போதனையை இல்ஹாம் மற்றும் வஹி எனும் இருவகையாகப் பிரித்து நோக்குகிறார். வஹியானது, இறைத்தூதர்களுக்கு மட்டுமே உரித்துடையது. அவர்கள், தாம் முழுவதுமாக இறைவனையே முன்னோக்கியோராக இருப்போர். இதனால், அல்லாஹு தஆலாவிடமிருந்து நேரடியாக, அறிவை அடைந்துகொள்கிறார்கள். அவ்வாறே, இல்ஹாமும் வஹியைப் போன்ற ஒன்றாகும். அது, உளத்தூய்மை மற்றும் அகப்பரிசுத்தம் ஆகியவற்றினால் ஓரளவுக்கு இறைத்தூதர்களுக்கு நெருக்கமாகிவிட்ட ஆன்மாவில் அமையப் பெற்றதாகும். வஹியானது, மறைவான விடயங்களைத் திரையின்றி நேரடியாகவும், தெளிவாகவும் போதிப்பதாகும். ஆனால், இல்ஹாம் என்பது அவற்றை சூசகமாகவும், மறைமுகமாகவும் உணர்த்துவதாகும். வஹியை, நபித்துவ அறிவு (இல்ம் நபவீ) என்றும், இல்ஹாமை, தெய்வீக அறிவு (இல்ம் லதுன்னீ) என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

2- இமாம் கஸ்ஸாலியின் இருத்தலியல் கோட்பாடுகள்:

இமாம் கஸ்ஸாலியின் பார்வையில் ‘இருப்பு’ எனும் எண்ணக்கருவே, மனித புரிதலுக்கான பின்புலத்தை உருவாக்கிக் கொடுக்கக்கூடிய முதன்மையான எண்ணக்கருவாகும். உண்மையில், மனிதனுடைய புரிதலின் பின்புலமே இருப்புதான். உள்ளவையெல்லாம் இருப்புதான். இருப்பு என்பது இறைவனால் நாடப்பட்ட மிகப்பெரும் யதார்த்தம் (Reality) என்பதாக அவர் கருதுகிறார். இருப்பு எனும் எண்ணக்கருவானது, மிகவும் வெளிப்படையான, தெளிவான அர்த்தத்தில் அமைந்துள்ளது. அதன் உண்மைத் தன்மையானது, இயல்பூக்கம் மற்றும் பகுத்தறிவினால் நிரூபணமாகியுள்ளது என்கிறார். இமாம் கஸ்ஸாலி, இருப்புக்கு இரு நிலைகளைக் குறிப்பிடுகிறார்.

முதலாவது, (இறைவனின் இருப்பு எனும்) உள்ளவற்றின் இருப்புநிலை. அதுவே, சுயத்தால் தன்னிறைவான மெய்யிருப்பாகவும், பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவாகவும் உள்ளது.

இரண்டாவது, (சிருஷ்டியின் இருப்பு எனும்) முழுவதும் தேவையுடையதான சுயத்தைக் கொண்டதாக இருக்கக்கூடிய தோற்றப்பாடுகளுக்குரிய இருத்தலின் உருவாக்க நிலையாகும்.

உண்மையில் இருப்பு பற்றிய இமாம் கஸ்ஸாலியின் பார்வையானது ஆத்மீகக் கருத்துரையாகவும், ஒருமைவாத கோட்பாடாகவும் இருக்கிறது. அவர், அல்லாஹு தஆலாவின் அறிவை, அறிவுகளிலேயே மிகச் சிறந்தது என்கிறார். அல்லாஹு தஆலாவின் இருப்பை நிரூபிப்பதற்கு பல்வேறு சான்றுகளை முன்வைத்துள்ளதோடு, அவனின் பண்புகளை விளக்கிக் கூறவும் முனைந்துள்ளார். இருந்தும், அல்லாஹு தஆலா எப்படியானவன் என்ற தேடலின் இறுதியில் பகுத்தறிவானது, விடைதெரியாது திகைத்து நிற்பதாகக் குறிப்பிடுகிறார். இமாம் கஸ்ஸாலி இறைவனை, பிரபஞ்சத்தின் காரணகர்த்தாவாக நம்புகிறார். பிரபஞ்சத்தின் உருவாக்கமானது, அல்லாஹு தஆலாவுடைய அறிவின் இன்றியமையாத அம்சமாகும். சாத்தியப்பாடான இப்பிரபஞ்சமே (Possible Universe), மிகச்சிறந்த சாத்தியப்பாடான பிரபஞ்சமாக இருக்கிறது என்கிறார்.

மனிதனின் அறிவை, அகரீதியான விடயங்களை அறிவதில் நின்றும் உள்ளதெனக் குறிப்பிடுகிறார். மனித மனம் மற்றும் நடத்தை ரீதியிலான தோற்றப்பாடுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தியதிலே ஒப்பற்ற அறிஞர் என்றும், அதைவிடவும் இஸ்லாமிய உளவியலின் ஸ்தாபகர் என்றும் அழைக்கப்படும் அளவிற்கு, உளவியல்சார்ந்த ஆய்வு விடயங்களிலே இமாம் கஸ்ஸாலியின் ஆழமான பார்வை அமைந்திருப்பதைக் காணலாம்.

(தொடரும்…)

Scroll to Top
Scroll to Top