பாரசீக பல்துறை அறிஞர் நஸீருத்தீன் தூஸி
Nasir al-Din Tusi (1201—1274)
நஸீருத்தீன் தூஸி
நஸீருத்தீன் தூஸி ஒரு பாரசீக பல்துறை அறிஞர் மற்றும் பல்துறை எழுத்தாளர்: ஒரு கட்டிடக் கலைஞர், வானியலாளர், உயிரியலாளர், வேதியியலாளர், கணித மேதை, தத்துவஞானி, மருத்துவர், இயற்பியல் விற்பன்னர், விஞ்ஞானி மற்றும் இறையியலாளர். பிற்கால பாரசீக அறிஞர்களில் மிக முக்கியமானவராக டூஸி அறியப்பட்டார்.
நஸீருத்தீன் தூஸி 1201 ஆம் ஆண்டில் ஈரானின் தூஸ் என்ற இடத்தில் பிறந்தார். 73 வருடங்கள் உயிர் வாழ்ந்த அவர் 1274ல் பாக்தாத்தில் மரணமடைந்தார். ‘சிந்தனையும் செயலும்’ (சயீர் வ சுலுக்) என்ற அவரது சுயசரிதையில் காணப்படும் விடயங்களைத் தவிர தூஸியின் சிறுபராயம் பற்றிய குறிப்புகள் அரிதாகவே உள்ளது.
அவரது முழுப் பெயர் முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் தூஸி. அவர் ஈரான் கொராஸானில் 1201 பிப்ரவரி 18 ல் ஜாபாரி மத்ஹப் சமூகத்தில் புகழ்பெற்ற நீதவான் முஹம்மத் இப்னு ஹசன், என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 1274 ஜூன், 26ல் பாக்தாத் நகரில் காலமானார்.
இஸ்லாமிய நாடுகளில் 13 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற அறிஞர் நாசீர் அல் டின் தூஸி ஆவார். வானியல், நெறிமுறைகள், வரலாறு, சட்டம், தர்க்கம், கணிதம், மருத்துவம், தத்துவம், இறையியல், கவிதை மற்றும் விஞானம் ஆகிய தலைப்புக்களில் சுமார் 165 நூல்களை படைத்துள்ளார். அவற்றில் 25 பாரசீக மொழியிலும் மற்றவை அனைத்தும் அறபு மொழியிலானவை. மேலும் பாரசீக, அறபு மற்றும் துருக்கிய மொழிகளில் ஒரு கிரந்தத்தையும் உருவாக்கினார். நைஷாபூரில் வாழ்ந்தகாலத்தில் ஒப்பற்ற அறிஞராக போற்றப்பட்ட டூஸியின் உரைநடை நூல்கள் இஸ்லாமிய ஆசிரியர் ஒருவரால் ஆக்கப்பட்ட மிகப்பெரிய தொகுப்பாக விளங்குகின்றன.
இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்த அவர், அவரது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுமுகமாக, கல்வியில் மிகவும் தீவிரமாக அக்கறை காட்டினார். புகழ்பெற்ற அறிஞர்களின் விரிவுரைகளுக்கு சென்று, மறுமைவாழ்வின் மகிழ்ச்சிக்காக, மக்களை வழிநடத்தும் அறிவைப் பெறுவதற்கு மிகத் தூர பயணங்களை யெல்லாம் மேற்கொண்டார்.
அவருக்கு சுமார் இருபத்தி இரண்டு வயது இருக்கையில், தூஸி வடகிழக்கு ஈரானிய குஹிஸ்தானின் கவர்னரான நசீர் அல்-டின் முஹ்தஷிம் அவர்களின் ராஜதானியில் இணைந்தார். அவரது அறிவார்ந்த படைப்புகளான அஹ்லாக்-இ நாஸிரி மற்றும் அஹ்லாக்-இ முஹ்தஸிமி ஆகியன நஸீர் அல்-தின் உடனும், மற்றும் ரிஸலா-யி மு’னிய்யா அவரது மகன் மு’ஈன்-அல்-தீன் உடன் இருந்த தொடர்பையும் மு’தஸிமின் குடும்பத்துடன் அவருக்கு இருந்த நெருங்கிய தனிப்பட்ட உறவு பற்றியும் பறைசாற்றின.
மு’தஸிம், இஸ்மாயிலி ஷீஆ பிரிவை சேர்ந்தவாராயிந்தபோதும் தூஸி அதனுடன் தனது உறவை மட்டுப்படுத்திக்கொள்ளாமல் அதற்கப்பால், கல்வி உலகத்துடன் தனது தொடர்புகளை வைத்திருந்தார். இதன் காரணமாக அவர் ஓர் அறிஞர் என்ற அந்தஸ்தில் (அல்-முஹாக்கிக்) என்று அழைக்கப்பட்டார்.
மொங்கோலிய படையெடுப்பின் காரணமாக இஸ்மாயிலியின் அரசியல் அதிகாரம் வீழ்ச்சியடைந்தது. அதனைத் தொடர்ந்து, மங்கோலியர்களுக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட இஸ்மாயிலிய மக்களும் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். மங்கோலிய படையெடுப்பு மற்றும் கிழக்கு இஸ்லாமிய பிராந்தியங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பு அதன் எந்தவொரு குடிமக்களின் வாழ்க்கையையும் விட்டு விடவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில், மங்கோலிய காட்டுமிராண்டித்தனத்திலிருந்து அப்பாவி அறிஞர்களின் உயிர்களைக் காப்பாற்றி, வடமேற்கு ஈரான் மராகேயில் மிக முக்கியமான கற்றல் மையமொன்றை உருவாக்குவதில் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றினார். அதேசமயம் இவற்றால் மனம்தளராத தூஸி தனது அறிவுத்தளத்தை விருத்தி செய்வதில் கூடிய அக்கறை காட்டினார். நைஷா பூரில் உயர் கல்வி கற்றுக்கொண்டிருந்த தூஸி, 1220ல் மொங்கோலிய படையெடுப்பினை தொடர்ந்து 1227 ஆண்டு குடிபெயர நேர்ந்தது.
அக்காலத்தில் கொராஸானின் கவர்னராயிருந்த நஸீர் அத்தீன் அப்தல் ரஹீம் அவரது மலைக்கோட்டையில் தூஸிக்கு அடைக்கலம் வழங்கினார். இக்காலத்திலேயே ஒழுக்கவியல் தொடர்பான அவரது மிகவும் பிரபல்யம் வாய்ந்த “அஃலாகி -அன் நாசிறி” என்ற நூலை எழுதி முடித்தார். இதற்காக அவருக்கு ஐந்து ஆண்டு காலம் சென்றது.
இக்காலகட்டத்தில் தூஸி இயற்றிய நூல்கள் மிகவும் பிரபலமானவை. ரவ்ளா-யி-தஸ்லீம், தவல்லா-வ-தபார்ரா, அக்லாக்-முஹ்தஸிமி, ராஜரீத்-அல்-இ’திகாத், அல்-ரிஸாலா பீ-இல் இமாமா, புஸூலி நஸ்ரியா ஆகின அவற்றுள் அடங்கும்.
நைஷாபூரில் அவர் பரீத் அத் தீன் அத்தார் என்ற சூபி ஞானியிடமும் பாடம் பெற்றார். மங்கோலிய படையெடுப்பாளர்களினால் அத்தார் கொல்லப்பட்ட பின் குதுப் அல் தீன் மிஸ்ரி மற்றும் ஃபரீத் அல் தீன் ஆகியோரின் விரிவுரைகளில் கலந்துகொண்டார். மவ்ஸல் என்ற நகரில் கமால் அல்-தீன் யூனுஸ் என்பவருடன் இணைந்து கணிதமும் மற்றும் வானியலும் கற்றார். நுணுக்கமாக புரிந்துகொள்ளும் அவரது விசேட ஆற்றல் காரணமாக தூஸி மிகக்குறுகிய காலத்தில் பல்துறை விற்பன்னரானார்.
தூஸியின் அபாரத் திறமையைக்கண்ட ஹுலாகு கான் (ஜெங்கிஸ் கானின் பேரன்) அவரை தனது விஞானத்துறை ஆலோசகராக நியமித்தார். ஹுலாகு கானின் ஆட்சியின் போது தலைநகராக இருந்த மராகே அருகில் ஒரு சம்பூரணமான வான் ஆய்வுக்கூடம் (1262 ஆம் ஆண்டில்) ஒன்றை கட்டியெழுப்பும் முயற்சியில் தூஸி வெற்றிகண்டார். இங்கு ஆய்வுகளை மேற்கொண்ட தூஸி, கிரகங்களின் நகர்வுகளை மிகத்துல்லியமாக கணக்கிட்டு ‘ஸிஜி இல்கானி’ என்ற வியத்தகு அட்டவணையைத் தயாரித்தார். வானியல் தொடர்பான இவரின் இந்த ஆய்வுகளும் கோள்களின் மாதிரி கோட்பாடுகளுமே ஐரோப்பாவிற்குள் ஊடுருவி, நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் போன்றோருக்கு உத்வேகம் அளித்தன என்று பல சரித்திரவியலாளர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆய்வகத்துக்கு மேலாக ஒரு பிரமாண்டமான நூலகத்தை அமைத்து, அங்கே இஸ்லாமிய மற்றும் சீன மத அறிஞர்களை நியமிப்பதற்கு ஹுலாகு கானின் சம்மதத்தைப் பெற்று, திட்டத்தில் வெற்றியும் கண்டார். அவர் மத நிறுவனங்களின் நிதிகளை (அவுகாப்) நிர்வகிப்பதற்கான முழு அதிகாரம் அளிக்கப்பட்டார். இஸ்லாமிய கற்றலின் பல பிரிவுகளுக்கு தூஸி முக்கிய பங்களிப்புகளைச் செய்தார். அவருடைய வழிநடத்துதலின் கீழ், இஸ்லாமிய, கணித, வானியல், தத்துவம் மற்றும் இறையியல் போன்ற துறைகளில் புதுப்பொலிவினை ஏற்படுத்தினார். அல்-தூஸியின் ‘தஜ்ரீத்’ இஸ்லாமிய தத்துவத்தின் மீதான மிகவும் ஆழமான ஆய்வாக கருதப்படுகிறது.
சாள்ஸ் டார்வின் பிறப்பதற்கு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னரே, பரிணாமம் தொடர்பான ஒரு அடிப்படை கோட்பாட்டை ஒரு முஸ்லீம் விஞ்ஞானியான அல்-தூஸி, முன்வைத்தார். இதுபோன்று உலக வரலாற்றில் இஸ்லாமிய விஞ்ஞானிகளும் அறிஞர்களும் வழங்கிய அரும் பொக்கிஷங்கள் எமது கண்களுக்கு தொடர்ந்தும் மறைக்கப்பட்டே வருகின்றன.
அல்-தூஸி ஒரு மங்கோலியப் பெண்ணை மணந்துகொண்டு மத விவகார அமைச்சையும் பொறுப்பேற்றார். அதுமட்டுமல்லாது ஹுலாகு கானின் வாரிசுகள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதில் பெரும் பங்காற்றினார்.
முஸாரியாத்-அல்-முஸாரி, அவுசாப்-அல்-அஷ்ரஃப் மற்றும் தல்கிஸ்-அல்-முஹஸ்ஸல் ஆகியன தூஸியினது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் இறுதித் தொகுப்புகளாக முத்திரைபதித்தன.
https://thoothu2018.blogspot.com/2018/12/blog-post_9.html