இமாம் மஹ்தி (அலை) பற்றிய சுன்னி மூலாதார ஹதீஸ்கள்
Hadiths on Imam Mahdi (A) in the Sunni Sources
(This article introduces and examines the Sunni hadiths about Imam Mahdi -A-)
‘இமாம்’ என்ற வார்த்தையை படித்த உடன் முஸ்லிம்களில் அநேகமானோர் இவர் எந்த பள்ளிவாசல் இமாம்? அல்லது எந்த மத்ஹபின் இமாம்? என்றே நினைக்க முற்படுவார்கள். காரணம் இன்று அந்தளவுக்கே அநேகமான முஸ்லிம்களிடம் மார்க்க ஞானம் உலமாக்களால் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மனித சமுதாயத்தின் விடுதலை நாயகராக, மீட்பாளராக எதிர்காலத்தில் வருவார் என்பதையும், அவரே இன்றைக்கும், இனி என்றைக்கும் எமது கலீஃபதுல்லாஹ்வாக, அதாவது அல்லாஹுவின் பிரதிநிதியாக இருக்கிறார் என்பதையும் நாம் நம்ப வேண்டியிருக்கிறது.
ஒருமுறை, தலைசிறந்த குர்ஆனிய விரிவுரையாளரான ஆயதுல்லாஹ் முஹ்ஸின் கராஅதி அவர்களுக்கும், சில சுன்னி அறிஞர்களுக்கும் இடையிலான ஒரு சிநேகபூர்வ கலந்துரையாடலின்போது, ‘கலீஃபா’ தெரிவு பற்றி பேசப்பட்டது. கலீஃபா என்பவர் ஷூறாவின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுவதே இஸ்லாமியக் கண்ணோட்டம் என்று கூறப்பட்டபோது, அப்படியாக இருந்தால் ஏன் இன்னமும் இமாம் மஹ்தியை தாங்கள் மக்களை ஒன்று கூட்டி, ஷூறாவை அமைத்து இதுவரைக்கும் தெரிவு செய்யாமல் இருக்கிறீர்கள்? என்று ஆயதுல்லாஹ் கராஅதி வினவினார். அது எப்படி முடியும் அவருடைய வருகையும், கிலாஃபத்தும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டது என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
இதுதான் எதார்த்தமாகும். ‘கலீஃபா’ என்ற சொல்லானது – அதன் முழுமையான சொற்றொடரில் ‘கலீஃபதுல்லாஹ்’ என்பதாகும். அதாவது, ‘அல்லாஹுவின் பிரதிநிதி’யாகும். எனவே, அல்லாஹு தஆலாவுக்கான பிரதிநிதியை மனிதர்கள் ஒன்றுகூடித் தெரிவு செய்வதா?! அல்லது அல்லாஹ்வே தன்னுடைய ரஸூலின் மூலம் அறிவிப்பதா?. என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
எனவே, இமாம் மஹ்தி (அலை) அவர்கள் பற்றி, அதாவது இன்றை கலீஃபா பற்றி சுன்னி மூலாதாரங்களில் வந்துள்ள சில ஹதீஸ்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இமாம் மஹ்தி (அலை) என்பவர் யார்?
உலகம் அழியும் நாள் நெருங்கும் போது வெளிப்படும் அடையாளங்களில் ஒருவரே இமாம் மஹ்தி (அலை) அவர்கள் என்று நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவ்வாறு வெளிப்படும் போது இவர் தான் இமாம் மஹ்தி (அலை) என்று அப்போது வாழும் மக்கள் சாதாரணமாகவே சிரமம் இன்றி புரிந்து கொள்வார்கள். காரணம், இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களால் அழிவு நாளின் அடையாளமாக முன்னறிவிப்பு செய்யப்பட்ட எந்த ஒன்றும் மனித சமுதாயம் அனைவரும் சுயமாக ஆய்வு செய்துதான் கண்டுபிடிக்க இயலும் என்ற நிலையில் இறைவனால் ஏற்படுத்தப் படவில்லை.
இதை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால்தான், இஸ்லாமிய வரலாற்றில் சிலர், தம்மை இமாம் மஹ்தி என்று வாதிட்டதையும், அதனால் முஸ்லிம் சமுதாயம் பிழையாக வழிநடாத்தப்பட்டுள்ளதையும் சமீப காலம் வரைக்கும்; காணக்கூடியதாக இருக்கின்றது.
முன்னறிவிப்பு ஹதீஸ்கள்
——————————————
‘என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அறேபியரை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடிவுக்குவராது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்.’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரழி)
நூல்: திர்மிதி 2331, அபூதாவூது 4269
—————————————-
‘இவ்வுலகில் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான்’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
ஆறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: திர்மிதி 2332, இப்னுமாஜா 4085
————————————
வேறொரு ஹதீஸில், இமாம் மஹ்தியின் தந்தையுடை பெயரும் நபி (ஸல்) அவர்களின் தந்தையுடைய பெயரும் ஒத்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அவருடைய தந்தையின் பெயர் எனது தந்தையின் பெயரை ஒத்திருக்கும்…’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரழி)
நூல்: அபூதாவூது 4269
ஆட்சிக்காலம்
——————————-
‘அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரழி)
நூல்: அபூதாவூது 4272
வருகை தருவது எதற்கு?
‘போரும், கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும், நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரழி)
நூல்: அபூதாவூது 4272
——————————————
முஸ்லிம்களின் மார்க்க அறியாமையை பயன்படுத்தியே சிலர் தங்களை இமாம் மஹ்தி என்று வாதிட்டுவந்துள்ளனர். அதற்குக் காரணம், முன்னறிவிப்பு தொடர்பான ஹதீஸ்களை மக்கள் அறிந்து வைக்காமல் இருப்பதும், முன்னறிவிப்பு தொடர்பான சில ஹதீஸ்களை மறைப்பதுமாகும். நபியவர்களின் வழிகாட்டல் குழப்பத்திற்கு அப்பாற்பட்டது என்பதைக் கருத்திற்கொண்டு, இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இன்னும் சில ஹதீஸ்களை கீழே பார்ப்போம்.
———————————————-
இமாம் மஹ்தி (அலை) யாருடைய பரம்பறையைச் சேர்ந்தவர்?
‘மஹ்தி என்பவர், எனது குடும்பத்தைச் சேர்ந்தவரும், பாத்திமாவின் சந்ததிகளில் உள்ளவரும் ஆவார்’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்
அறிவிப்பவர்: உம்முஸல்மா (ரழி)
நூல்: அபூதாவூது 4271
—————————————————-
அபூ ஈஸா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
அலி (ரழி) தனது மகன் ஹஸனைப் பார்த்து, ‘இவர் நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டபடி சையத் ஆவார். அவரது சிங்கங்கள் வெளியே வரும். நபி (ஸல்) அவர்களின் பெயரை ஒத்த ஒருவர் வருவார். அவர்களது அதே நடையை உடையவராக இவர் இருப்பார். ஆனால் தோற்றத்தில் நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்க மாட்டார்’ என்று கூறிவிட்டு பிறகு இந்த பூமியில் நீதியை நிலை நிறுத்துவதைப் பற்றிக் கூறினார்.
நூல்: அபூதாவூத் 4276
————————————————-
அங்க அடையாளம்
‘மஹ்தி என்பவர் எனது சந்ததியைச் சேர்ந்தவராவார், அவர் படர்ந்த நெற்றியையும், எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும், கொடுங்கோன்மையும் நிரம்பியிருக்கும் இப்பூமியில் அமைதியையும், நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரழி)
நூல்: அபூதாவூது 4272
————————————————
‘அதிக உயரமானவராக இருக்க மாட்டார்கள்’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரழி)
நூல்: இப்னுமாஜா 4083
வருகை தரும் காலம்
‘இவ்வுலகின் ஒரு நாள் மட்டும் மீதமிருந்தால், எனது குடும்பத்திலிருந்து ஒரு மனிதரை அல்லாஹ் எழச் செய்வான். போர்களால் நிரம்பி இருக்கும் இந்த பூமியில் அவர் நீதியை நிலை நிறுத்துவார்’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
அறிவிப்பவர்: இமாம் அலி (அலை)
நூல்: அபூதாவூது 4270
————————————————-
இமாம் மஹ்தி (அலை) அவர்களின் நோக்கங்கள்
1- இஸ்லாத்தையும், கிலாஃபத்தையும் நிலைநாட்டுவார்.
2- மக்களுக்கு செல்வத்தை வாரி வழங்கும் அளவுக்கு, பூமியை வளப்படுத்துவார்.
3- அன்னை பாத்திமா (அலை) அவர்களின் பரம்பறையின் சான்றாக இருப்பார்.
4- குர்ஆன், சுன்னாவின் உண்மையான குறிக்கோள்களை நிலைநாட்டுவார்.
5- அநீதியால் நிரம்பிய உலகை நீதியால் நிரப்புவார்.