புரட்சியின் இரண்டாம் கட்டம்

இஸ்லாமியப் புரட்சியின் இரண்டாம் கட்டம்

The Second Phase of the Islamic Revolution

 

இஸ்லாமியப் புரட்சியின் மதிநுட்பம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலீ காமனயீ அவர்கள் ‘புரட்சியின் இரண்டாம் கட்டம் குறித்த அறிக்கை’ ஒன்றை கடந்த பிப்ரவரி 11, 2019ம் அன்று வெளியிட்டிருந்தார். இதனூடாக, இத்தெளிவான பாதையில் தொடர்ந்தும் பயணிப்பதற்கு கடந்த நான்கு தசாப்தங்களில் அடைந்துகொண்ட மகத்தான சாதனைகள் குறித்து விளக்கி, இஸ்லாமிய நாகரிகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அத்தியாவசியமாக அமைகின்ற பரிந்துரைகளை வழங்கியிருந்தார். பாரசீக மொழியில் வழங்கப்பட்ட இவ் உரையின் தமிழாக்கத்தை இங்கே தருகிறோம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

உலகோரின் இரட்சகனாகிய அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும். நபிபெருமான் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், அவரது பரிசுத்த குடும்பத்தார் மீதும், அவரது விஷேட தோழர்கள் மீதும், மறுமை நாள் வரையில் அழகியமுறையில் அவர்களைப் பின்பற்றி நடப்போர் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் உண்டாவதாக.

சுய வளர்ச்சி, சமூக செயலாக்கம்; மற்றும் நாகரிகத்தின் உருவாக்கம் எனும் இரண்டாம் கட்டத்திற்குள் இஸ்லாமியப் புரட்சியின் நுழைவு

அநீதிக்குட்பட்ட சமூகங்கள் அனைத்திற்கும் மத்தியிலேமிக அரிதான சமூகத்தினரே புரட்சியை மேற்கொள்வதற்கு முயற்சித்திருக்கிறார்கள். கிளர்ந்தெழுந்து, புரட்சிசெய்த தேசத்தினருக்கு மத்தியிலே புரட்சியை இறுதிவரைக்கும் கொண்டுசென்று, அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கு அப்பால், புரட்சியின் இலட்சியங்களை தங்களால் பாதுகாத்துக்கொள்ள முடிந்தோரைக் காண்பதுமிகவும் அரிதானதாகும். ஆனால், சமகால சகாப்தத்தின் பாரிய, பெருமளவிலான மக்களைத் தழுவிய புரட்சியாக இருக்கின்ற ஈரான் தேசத்தின் பிரகாசமான புரட்சியானது, தனது இலட்சியங்களுக்கு மாறுசெய்யாது நான்கு தசாப்தத்தின் பெருமைகளைப் பின்தொடர்ந்து, எதிர்கொள்ள முடியாது எனக்கருதப்பட்ட அனைத்து சோதனைகளுக்கும் முன்னே தனது கண்ணியத்தையும், இலட்சியங்களின் மூலத்தையும் பாதுகாத்து, தற்போது சுய வளர்ச்சி, சமூக செயலாக்கம் மற்றும் நாகரிகத்தின் உருவாக்கம் எனும் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ள ஒரே புரட்சியாகும். இதனை ஆரம்பித்து, தொடரச்செய்த தலைமுறையினராகவும், தற்போது இரண்டாவது நான்கு தசாப்தத்தின் பிரமாண்ட மற்றும் உலகளாவிய செயற்பாங்கில் அடியெடுத்து வைக்கும் தலைமுறையினராகவும் இருக்கின்ற இந்த தேசமக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி: உலகின் புதிய யுகத்தின் தொடக்கம்

உலகம் பொருள்முதல்வாதத்தைக் கொண்ட கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டிருந்தபோது, ஒரு பெரிய மத-எழுச்சி உருவாகும் என்று யாரும் கருதிடாத காலத்திலே, ஈரான் இஸ்லாமியப் புரட்சி வலிமையுடனும், ஒளிமிகுந்தும் களத்திற்கு வந்து, வரையறைகளைத் தகர்த்தெறிந்தது. திருச்சபைகளின் (மங்கிப்போயிருந்த) பழ(ம் பெரு)மையை உலகுக்கு மீளவும் வெளிப்படுத்திக் காட்டியது. மதத்தையும், உலகையும் ஒன்றிணைத்த கருத்தாடலைத் தொடங்கிவைத்து, ஒரு புதிய யுகத்தின் பிறப்பை பறைசாற்றியது. இதனால், பிறழ்வு மற்றும் அடக்குமுறையின் வழிசென்ற தலைவர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இவ் எதிர்வினைகள் வீணாகியே போயின. நவீனத்துவத்தின் வலது சித்தாந்தமும், இடது சித்தாந்தமும் முன்புபோல் அல்லாத, முற்றிலும் புதிதான இக்கோசத்தை செவிமடுக்காதது போல் பாசாங்கு செய்தமை தொடக்கம், அதனை முடக்கிவிடுவதற்கு விரிவான, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டமை வரைக்கும் அனைத்தையும் முயன்று பார்த்திருந்த போதிலும் தமது அழிவின் காலாவதியையே அவை நெருங்கிக்கொண்டிருந்தன. தற்போது, ஃபஜ்ர் பத்து இரவுகளின் நான்கு தசாப்தங்களும், புரட்சியின் வருடாந்த பெருவிழாவின் நான்கு தசாப்தங்களும் கடந்திருக்கும் நிலையில், பகைமையின் இரு மையங்களில் ஒன்று ஏற்கனவே அழிந்துபோயிருக்க, இரண்டாவது மிகவிரைவில் தன் மரணத்தைத் தழுவுகின்ற செய்தியை பிறர் முன்னறிவிக்கின்றதான சவால்களோடு போராடிக்கொண்டிருக்கின்றது. அதேசமயம், இஸ்லாமியப் புரட்சி அதன் இலட்சியங்களைப் பாதுகாத்து, கடைப்பிடித்து வருவதன் மூலம் முன்னேறிக்கொண்டே செல்கிறது.

இஸ்லாமியப் புரட்சியின் உலகளாவிய, உள்ளார்ந்த, பிரகாசிக்கின்ற மற்றும் எப்போதும் உயிர்ப்புள்ள இலட்சியங்கள்

எல்லாவற்றிற்கும் பயன்பாட்டிற்குரிய கால அளவையும், பாவனைக்குரிய காலாவதி தேதியையும் அனுமானிக்க முடியும். ஆனால், இவ்விதியிலிருந்து இந்த சமயப் புரட்சியின் உலகளாவிய இலட்சியங்கள் விதிவிலக்கானவை ஆகும். அவைகள் ஒருபோதும் பாவனையற்றவைகளாகவோ, பயனற்றவைகளாகவோ மாறிவிடமாட்டா. ஏனெனில், அவை எல்லாக் காலங்களிலும் மானுட இயல்புகளுடன் பொருந்திப் போகின்றன. சுதந்திரம், பண்பாடு, ஆன்மீகம், நீதி, கௌரவம், பகுத்தறிவு மற்றும் சகோதரத்துவம் ஆகிய ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் உயர்ந்து மற்றொரு காலகட்டத்தில் வீழ்ச்சியடையும் அளவிற்கு ஒரு தலைமுறையினரோடு, சமுதாயத்தினரோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. இவ்வாறான விழுமியங்களை இகழ்ந்து ஒதுக்கிவிடுகின்ற மக்களை ஒருபோதும் கற்பனை செய்துகொள்ள முடியாது. எப்போதாவது, மக்கள் (இவை குறித்து) தயக்கம் காட்டியிருப்பார்களாயின், அது மதவிழுமியங்களில் அதிகாரிகள் கொண்டிருந்த அலட்சியத்தினாலாகும். அவற்றை அவர்கள் பின்பற்றியதனாலோ அல்லது அவற்றை நிலைபெறச் செய்ய முயற்சித்தமையினாலோ அல்ல.

புரட்சிசார் ஒழுங்கமைப்பு எனும் கோட்பாட்டின் நித்திய பாதுகாப்பு

இஸ்லாமியப் புரட்சியானது ஒரு உயிர்ப்புள்ள, உறுதிமிகுந்த தோற்றப்பாட்டைப் போன்றது. நெகிழ்வுத்தன்மையும், தன்னுடைய தவறுகளை சரிசெய்வதற்கான தயார்நிலையையும் எப்போதும் கொண்டுள்ளது. ஆனால், சீர்திருத்தத்தை அங்கீகரிப்பதாகவோ, செயலேற்பு கொண்டதாகவோ அது இல்லை. இது விமர்சனங்களுக்கு உடன்பாடான உணர்ச்சிவெளிப்பாட்டை வெளிப்படுத்தக்கூடியது. அதனை இறைவனின் அருளாகவும், செயலற்ற வெற்றுப்பேச்சாளர்களுக்கு எச்சரிக்கையாகவும் கருதுகிறது. ஆயினும்கூட அது எந்தவகையிலும், மக்களின் மத நம்பிக்கையுடன் கலந்திருக்கும் தன்னுடைய விழுமியங்களிலிருந்து விலகிச் சென்றுவிடுவது கிடையாது என்பதால் எல்லாப் புகழும் இறைவனுக்கே. அரசியல் ஒழுங்கு நிறுவப்பட்டதன் பிறகு இஸ்லாமியப் புரட்சியானது, தேக்கநிலை மற்றும் மந்தப்போக்கினால் ஒருபோதும் பாதிக்கப்படவுமில்லை, பாதிக்கப்படவுமாட்டாது. புரட்சிகரமான எழுச்சிக்கும், அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிற்கும் இடையில் எந்தவொரு மோதலையும், முரண்பாட்டையும் அது காணவில்லை. மாறாக, புரட்சிசார் ஒழுங்கமைப்பு எனும் கோட்பாட்டை நித்தியமாக பாதுகாத்து வருகிறது.

இஸ்லாமியக் குடியரசும், யதார்த்தம் மற்றும் அவசியம் ஆகியவற்றிற்கு இடையிலான இடைவெளியும்

இஸ்லாமியக் குடியரசு பிற்போக்குத்தனமானது அல்ல. புதிய நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் பார்வையும், புரிதலும் அற்றதாக இல்லை. இருப்பினும், அது தன் கொள்கைகளை மிகவும் வலுவாகப் பின்பற்றி வருகின்றது. தனது எல்லைகள் தொடர்பில் சகபோட்டியாளர்கள், எதிரிகள் ஆகியோரோடு மிகவும் உணர்திறன் கொண்டதாக இருக்கிறது. இது தன்னுடைய அடிப்படைப் போக்குகளில் ஒருபோதும் விவேகமின்றி செயலாற்றுவதில்லை. ஏன் நிலைத்திருக்க வேண்டும்? எப்படி நிலைத்திருக்க வேண்டும் என்பது அதற்கு முக்கியமான ஒன்றாகும். சந்தேகத்திற்கு இடமின்றி, யதார்த்தம் மற்றும் அவசியம்(இருப்பது – இருக்க வேண்டியது) ஆகியவற்றிற்கு இடையிலான இடைவெளி எப்போதும் இலட்சியவாத மனசாட்சியை வேதனைப்படுத்தியே வருகின்றது. எவ்வாறாயினும், இந்த இடைவெளி நிரப்பப்படக் கூடியதே. கடந்த நான்கு தசாப்தங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இது நிரப்பப்பட்டு வந்துள்ளது. நிச்சயமாக எதிர்காலத்தில், ஒரு உண்மையுள்ள, விவேகமான மற்றும் ஊக்கம்மிகுந்த இளம் தலைமுறையின் பிரசன்னத்தினால் இன்னும் தீவிரமாக நிரப்பப்படும்.

இஸ்லாமியப் புரட்சி: ஈரான் மற்றும் ஈரானியரின் பெருமைக்கான மூலாதாரம்

ஈரானிய தேசமக்களின் இஸ்லாமியப் புரட்சி வலிமையானதே. ஆனால், இரக்ககுணமிக்கதும், மன்னிக்கும் மனம்படைத்ததுமாகும். அதேநேரம், ஒடுக்கப்பட்டதும் கூட. பல்வேறு எழுச்சிகளின், போராட்டங்களின் களங்கத்துக்கு காரணமாக அமைந்த எந்தவொரு தீவிரவாத அல்லது பிறழ்வான செயல்களில் இது ஈடுபட்டிருக்கவில்லை. அமெரிக்காவோ, சதாமோ யாருடனாக இருந்தாலும் கூட ஒருபோதும் முதல் தோட்டாவை இது சுட்டிருக்கவில்லை. எல்லா சந்தர்ப்பங்களிலும், எதிரியின் தாக்குதலுக்குப் பிறகே தன்னை தற்காத்துக்கொள்ள முயன்றுள்ளது. அதேநேரம், எதிர்தாக்குதலை மிகவும் பலமாகவே தொடுத்திருந்தது. இப்புரட்சியானது ஆரம்பத்திலிருந்து இன்றுவரைக்கும் இரக்க குணமற்றதாகவோ அல்லது இரத்தம் சிந்துவதாகவோ இருந்ததில்லை. அவ்வாறே, செயலேற்புடையதாகவோ அல்லது தயக்கநிலையிலோ இருந்ததுமில்லை. கொடுங்கோலர்களுக்கும், கொலைஞர்களுக்கும் எதிராக உறுதியுடனும், தைரியத்துடனும் நின்று, ஒடுக்கப்பட்டோரையும், ஆக்கிரமிப்புக்கு உள்ளானோரையும் பாதுகாத்து வந்துள்ளது. இப்புரட்சிகர துணிச்சல், தைரியம், நேர்மை, உறுதிப்பாடு மற்றும் இறையாண்மை, உலகில் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவான சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான செயற்பாடு என்பன ஈரானுக்கும், ஈரானியருக்கும் பெருமை சேர்க்கும் மூலத்தைப் பிரதிபலிக்கின்றது. அது இவ்வாறே நித்தியமாக நீடிக்கட்டும்.

எதிர்காலத்தில் பலமான எட்டுக்களை எடுத்து வைப்பதற்கு, கடந்த காலத்தை சரியாக அறிந்து கொள்ளல் அவசியம்

இப்போது, இஸ்லாமியக் குடியரசின் வாழ்நாளில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்திலேமிகப்பெரும் இஸ்லாமிய ஈரானைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய போராட்டத்தின் மற்றொரு பகுதியைத் தொடங்குவதற்காக, செயற்களத்தில் கால்பதிக்கின்ற எனது அன்பிற்குரிய இளைஞர்களுக்கும், தலைமுறையினருக்கும்உரையாற்ற விரும்புகிறேன். எனது முதலாவது உரை கடந்த காலத்தைப் பற்றியதாகும்.

அன்பர்களே! தெரியாதவைகளை வெறுமனே தங்கள் சொந்த அனுபவத்திலிருந்தோ அல்லது மற்றவர்களின் அனுபவத்திலிருந்தோ மட்டும் அறிந்துகொள்ள முடியாது. நாங்கள் கண்டு, அனுபவித்த பல்வேறு விடயங்களை தங்களது தலைமுறையினர் இன்னும் அனுபவிக்கவுமில்லை, காணவுமில்லை. நாங்கள் கண்டவற்றை, நீங்கள் காண்பீர்கள். எதிர்வரும் தசாப்தங்கள் உங்களுடைய தசாப்தங்களே. தகுதிவாய்ந்தவர்களாகவும், உந்துதல் நிறைந்தவர்களாகவும் இருந்து தங்களது புரட்சியை பாதுகாக்க வேண்டியது நீங்களே. நவீன இஸ்லாமிய நாகரிகத்தை உருவாக்குதல் மற்றும் இமாம் மஹ்தி (அலை) எனும் சூரியோதயத்திற்காகத் தயாராகுதல் எனும் பெரும் இலட்சியத்தை நோக்கி, அதனை அதிகளவில் நெருங்கச் செய்யுங்கள். எதிர்காலத்தில் நிலையான எட்டுக்களை எடுத்துவைப்பதற்கு, கடந்த காலத்தைப் பற்றிய நல்லறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மூலோபாயம் புறக்கணிக்கப்பட்டால், பொய்கள் உண்மையின் இடத்தில் அமர்ந்துகொள்ளும். ஏதிர்காலம் அறியப்படாத அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவிடும். புரட்சியின் விரோதிகள் திடகாத்திரமான எண்ணத்தோடு நிகழ்காலம் உட்பட கடந்த காலத்தைப் பற்றிய உண்மைகளைச் சிதைப்பதிலும், பொய்யான பரப்புரைகளை மேற்கொள்வதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பணத்தையும், அதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் அதற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். சிந்தனை, கோட்பாடு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றைக் கொள்ளையிடுவோர் ஏராளம். உண்மையை எதிரியிடமிருந்தோ, அவனுடைய காலாற்படையிடமிருந்தோ செவிமடுக்க முடியாது.

பூஜ்ஜிய நிலையிலிருந்தான இஸ்லாமியப் புரட்சி மற்றும் அரசின் தொடக்கம்

இஸ்லாமியப் புரட்சியும், அதன் மூலமாக எழுந்த அரசும் பூஜ்ஜிய நிலையிலிருந்தே தொடங்கின.

முதலாவதாக, தங்கிநிற்றல், ஊழல், அடக்குமுறை மற்றும் கிளர்ச்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றல் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருந்தமைக்கு அப்பால், அந்நியரின் கைக்கு – தங்களது வாளின் வலிமையினால் அன்றி – கொண்டுவரப்பட்டிருந்தஈரானின் முதலாவது முடியாட்சியான(பஹ்லவி வம்சத்தின்) கொடுங்கோல் ஊழலாட்சியாக இருந்தாலும் சரி, அமெரிக்க அரசாகவோ, ஏனைய மேற்குலக அரசுகளாக இருந்தாலும் சரி, அல்லது ஈரானுக்குள் நிலவிய மிகவும் குழப்பமான நிலைமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அரசியல், ஆன்மீகம் மற்றும் வேறு எந்த சிறப்பம்சத்திலும் காணப்பட்ட பின்தங்கிய நிலையாக இருந்தாலும் சரி. இவ்வாறு எல்லாமே எங்களுக்கு எதிராகவே இருந்தன.

இரண்டவாதாக, எங்களுக்கு முன்னே எந்தவொரு முன்னோடி அனுபவமோ, கடந்துவந்த பாதையோ இருக்கவில்லை. மார்க்சிய எழுச்சிகளோ அல்லது அது போன்ற உதாரணங்களோ இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் ஞானம் ஆகியவற்றின் இதயத்திலிருந்து தோன்றிய ஒரு புரட்சிக்கு முன்னுதாரணமாகக் கருதப்பட முடியாது என்பது வெளிப்படையானது. இஸ்லாமியப் புரட்சியாளர்கள் எவ்வித முன்னுதாரணமும், அனுபவமும் இன்றியே தொடங்கியிருந்தனர். ஜனநாயம் மற்றும் இஸ்லாமியம் ஆகியவற்றின் கலவையும், அதன் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளும் தெய்வீக வழிகாட்டல், இமாம் குமைனி (ரஹ்) அவர்களின் பிரகாசித்த மனம், மற்றும் பெரும் சிந்தனை ஆகிவற்றினாலேயே அன்றி, அடையப் பெறவில்லை. இதுவேஇஸ்லாமியப் புரட்சியின் முதலாவது பிரகாசமாக அமைந்திருந்தது.

இஸ்லாம் மற்றும் மேலாதிக்கம்’ எனும் புதிய இரட்டை முரண்பாடு: சமகால உலகின் ஒரு முக்கிய தோற்றப்பாடு

ஈரானிய தேசத்தின் இஸ்லாமியப் புரட்சி அன்றைய இரு துருவங்களைக் கொண்ட உலகை, மூன்று துருவங்களைக் கொண்ட உலகாக மாற்றியமைத்தது. பின்னர், சோவியத் ஒன்றியம், அதன் நட்பு நாடுகள் ஆகியவற்றின் வீழ்ச்சி மற்றும் மறைவோடு, அதிகாரத்தின் புதிய துருவங்கள் தோன்றின. அதனூடாக, ‘இஸ்லாம் மற்றும் மேலாதிக்கம்’ எனும் புதிய இரட்டை முரண்பாடு சமகால உலகின் ஒரு முக்கிய தோற்றப்பாடாகவும், உலகோரின் கவனத்தை ஈர்த்த பார்வையாகவும் மாறியது. ஒருபுறம், ஒடுக்கப்பட்ட நாடுகள், உலக விடுதலை இயக்கங்கள் மற்றும் சுதந்திரத்தை வேண்டிநின்ற மாநிலங்கள் ஆகியவற்றின் நம்பிக்கைபூர்வமான எதிர்பார்ப்பும், மறுபுறம், கொடுங்கோல் அரசுகள், உலகை மிரட்டிக் கொள்ளையிடும் அட்டூழியக்காரர்கள் ஆகியோரின் நல்லெண்ணமற்ற, வெறுப்புணர்வு கொண்ட பார்வையும் அதன்பால் பிணைக்கப்பட்டன. இவ்வாறு, உலகின் பயணப்பாதை மாறியது. புரட்;சியின் அதிர்வு, சொகுசு கட்டிலில் உறங்கிக்கிடந்த பிர்அவ்ன்களை உலுக்கிப் போட்டது. பகைமைகள், அனைத்துவித தீவிரத்தோடும் எழத்தொடங்கின. விசுவாசத்தின் பிரமாண்ட வலிமையும், இத்தேசத்தினரின் செயலூக்க எண்ணமும், நமது மேலான இமாமின் ஒப்புதலளிக்கப்பட்ட தெய்வீக தலைமைத்துவமும் இல்லாது விட்டிருந்தால், விரோதம், கொடுமை, சதி மற்றும் கேவலம் ஆகியவை அனைத்திற்கும் எதிரே ஈடுகொடுப்பது சாத்தியமில்லாமலேயே போயிருக்கும்.

புரட்சிகர மேலாண்மை, ‘எங்களால் முடியும்’ என்ற கொள்கையின் மீதான நம்பிக்கை: எல்லாத்துறைகளிலும் ஈரானின் கௌரவத்திற்கும், முன்னேற்றத்திற்கும் காரணிகளாகும்

இக்கடுமையான பிரச்சினைகள் அனைத்தையும் மீறி, இஸ்லாமியக் குடியரசு நாளுக்கு நாள் அதிகமாகவும், வலுவாகவும் தனது எட்டுக்களை முன்வைத்துச் சென்றது. கடந்த நான்கு தசாப்தங்களில், இஸ்லாமிய ஈரானில் பெரும் முயற்சிகள், பிரகாசிக்கும் பெருமைகள் மற்றும் அற்புதமான முன்னேற்றங்கள் ஆகியவை காணப்பட்டன. ஈரானிய தேசமக்களின் நான்கு தசாப்தகால முன்னேற்றத்தின் பிரமாண்டமானது இக்கால அளவை, பிரெஞ்சுப் புரட்சி, சோவியத் ஒன்றியத்தின் அக்டோபர் புரட்சி மற்றும் இந்தியப் புரட்சி போன்ற பெரும் புரட்சிகளில் காணப்படும் கால அளவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் நன்கு அறியப்பட முடியும். எங்கள் அனைவருக்கும் இமாம குமைனி (ரஹ்) அவர்கள் போதித்துத் தந்த இஸ்லாமிய விசுவாசத்திலிருந்து தூண்டப்பட்ட புரட்சிகர மேலாண்மைகளும், ‘எங்களால் முடியும்’ என்ற கொள்கையின் மீதான நம்பிக்கையும் ஈரானை எல்லாத்துறைகளிலும் கௌரவத்தையும், முன்னேற்றத்தையும் அடையச் செய்தது.

இஸ்லாமியப் புரட்சியின் மிகப்பெரும் அருள்கள்

இப்புரட்சி ஒரு நீண்ட வரலாற்று வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பஹ்லவி மற்றும் காஜார் வம்சத்தினரின் ஆட்;சிக்காலங்களில் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டு, முற்றிலும் பின்னடைவிலிருந்த நாடு, முன்னேற்றப் பாதையில் மிகவும் வேகமாக பயணித்தது. முதலாவது கட்டத்தில், பஹ்லவி வம்சத்தின் கொடுங்கோல் முடியரசின் இழிவான ஆட்சியை ஒரு பொதுஜன, ஜனநாயக அரசாக மாற்றிவிட்டது. மேலும், விரிவான மற்றும் மெய்யான முன்னேற்றத்தின் உயிர்-ஆதாரமாகக் காணப்படுகின்ற தேசிய அபிப்பிராயம் எனும் அலகை நாட்டினுடைய மேலாண்மையின் மையநோக்கில் இடம்பெறச் செய்தது. இது இளைஞர்களை முன்னேற்றங்களின் முக்கிய முன்னோடிகளாகவும், நாட்டின் மேலாண்மைத் துறைகளில் உள்ளிணைக்கப்பட்டோராகவும் மாற்றியமைத்தது. ‘எங்களால் முடியும்’ என்ற நம்பிக்கையையும், மனப்பாங்கையும் எல்லோருக்கும் கொடுத்தது. எதிரிகளின் பொருளாதாரத் தடைகளின் மூலம் ஏற்பட்ட அருளால், உள்நாட்டுத் திறன்களையே நம்பியிருப்பதற்கு எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தது. இது பெரும் அருள்களுக்கு ஆதாரமாக அமைந்திருந்தது.

  1. ஈரானின் தாயக ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்

எதிரிகளின் கடுமையான அச்சுறுத்தல்களால் குறிவைக்கப்பட்டிருந்த நாட்டின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, தாயக ஒருமைப்பாடு மற்றும் எல்லைகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது. இது எட்டு ஆண்டுகால யுத்தத்தில் வெற்றியின் அதிசயத்திற்கும், ஈராக்கின் எதேச்சதிகார அரசு மற்றும் அதன் அமெரிக்க, ஐரோப்பிய, கீழைத்தேய ஆதரவாளர்களின் போர் தோல்விக்கும் வழிவகுத்தது.

  1. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் முன்னணி இயந்திரமும், வாழ்வியல், பொருளாதார மற்றும் அபிவிருத்தி உட்கட்டமைப்புகளின் உருவாக்கமும்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் முன்னணி இயந்திரமும், வாழ்வியல், பொருளாதார மற்றும் அபிவிருத்தி உட்கட்டமைப்புகளின் உருவாக்கமும் இன்றுவரைக்கும் பெருகக்கூடிய பயன்களை நாளுக்கு நாள் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான அறிவு நிறுவனங்கள், அபிவிருத்தி துறைகளில் நாட்டிற்கு அவசியமான ஆயிரக்கணக்கான கீழ்கட்;டுமானத் திட்டங்கள், போக்குவரத்து, கைத்தொழில், மின்சாரம், கனியவளம், சுகாதாரம், விவசாயம், நீர் வளங்கள் மற்றும் இவை போன்றன, மில்லியன் கணக்கான பல்கலைக்கழக பட்டதாரிகள், மாணவர்கள், நாடு முழுவதுமான ஆயிரக்கணக்கான கல்லூரிகள், அணு எரிபொருள் சுழற்சி, அடிப்படைக் கலங்கள், நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் இவையல்லாதவை ஆகியவற்றில் உலகளவில் முதல்தரமிக்க நூற்றுக்கணக்கான பெருந்திட்டங்கள், எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகளின் அறுபது மடங்கு வளர்ச்சி, கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமான தொழில்துறை அலகுகள், தொழில்துறைகளின் தரம் முன்பைவிட பத்து மடங்கு அதிகமான முன்னேறியமை, பாகங்களைப் பொருத்தும் மாண்டேஜ் தொழில்துறை உள்நாட்டு தொழில்நுட்பமாக மாற்றப்பட்டமை, பாதுகாப்பு தொழில்துறைகள் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் துறைகளில் குறிப்பிட்டளவு சிறப்பானதன்மை, மருத்துவம்சார்ந்த முக்கியமான, விஷேட துறைகளில் பிரகாசித்தமையும், அதிலே நிபுணத்துவத்தின் மூலாதார அந்தஸ்தை அடைந்தமையும், அபிவிருத்தியின் ஏனைய நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் என இவையனைத்தும் கூட்டு மனப்பாங்கு, கூட்டுப் பிரசன்னம், கூட்டு உணர்வு ஆகியவற்றின் விளைவுகளாகக் காணப்படுகின்றன. இவை இஸ்லாமியப் புரட்சியானது, நாட்டிற்கு வழங்கிய அருட்கொடைகளாகும். புரட்சிக்கு முன்னர் ஈரான், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்வதிலும், (வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட) உதிரிப்பாகங்களைப் பொருத்துவதைத் தவிர, தொழில் துறையிலும் பூஜ்ஜிய நிலையிலேயே காணப்பட்டது. அவ்வாறே, மொழியாக்கம் செய்வதைத் தவிர, அறிவிலே எந்தத் திறனையும் அது கொண்டிருக்கவில்லை.

  1. பொதுமக்கள் பங்கேற்பும், சேவை புரிகின்ற போட்டித்தன்மையும் ஊக்குவிக்கப்பட்டமை

தேர்தல்கள், உள்நாட்டு குழப்பங்களை எதிர்கொள்ளல், தேசிய அரங்குகளில் பங்கேற்றல் மற்றும் மேலாதிக்கத்தை எதிர்த்தல் போன்ற அரசியல் விவகாரங்களில் பொது மக்களின் பங்கேற்பானது உச்சத்தை எட்டியது. புரட்சிக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டிருந்த மனிதாபிமான உதவிகள், தொண்டு நடவடிக்கைகள் போன்ற சமூக விடயங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்டளவு மேலோங்கிக் காணப்பட்டது. புரட்சிக்குப் பின்னர், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் சமூக குறைபாடுகள் ஆகியவற்றில் சேவை புரிகின்ற போட்டித்தன்மையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

  1. சமூக தனியன்களின் அரசியல் பார்வையில்வியத்தகு மேம்பாடு

சமூக தனியன்களின் அரசியல் பார்வையையும், சர்வதேச விவகாரங்கள் குறித்த அவர்களின் அவதானத்தையும் வியக்கவைக்கும் வகையில் மேம்படுத்தியது. குறிப்பாக அமெரிக்கா போன்ற மேற்குலகின் குற்றச்செயல்கள் சார்ந்த விடயங்கள், பலஸ்தீன் மற்றும் அத்தேசத்தினருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி குறித்த விடயங்கள், பிற நாடுகளின் விவகாரங்களில் கொடூரசக்திகளின் தலையீடுகள், போர்களை மூட்டிவிடல் மற்றும் இழிவான செயல்கள் குறித்த விடயங்கள் மற்றும் இவை ஒத்தவிடயங்கள் முதலானவற்றில் காணப்பட்ட அரசியல் பகுப்பாய்வையும், சர்வதேச விவகாரங்களின் புரிதலையும் ‘அறிவொளிபெற்றவர்’ என்று தம்மை அழைத்துக்கொண்ட ஒரு குறிப்பிட்ட உயரடுக்கு வர்க்கத்தின் ஏகபோகத்திலிருந்து வெளிக்கொண்டு வந்தது. இவ்வாறான அறிவொளி நாடு முழுவதும், வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மக்களிடத்தில் நிலைபெற்றோடியது. மேலும், இதுபோன்ற விடயங்கள் பதின்பருவத்தினர் மற்றும் சிறுபராயத்தினருக்கும் கூட புரிந்து கொள்ளக் கூடியதாகவும், தெளிவாகவும் மாறிவிட்டன.

  1. நாட்டின் பொது வசதிகளை பங்கிடுவதில் நீதியளவையைக் கணப்படுத்தல்

இஸ்லாமியப் புரட்சியானது, நாட்டின் பொது வசதிகளைப் பங்கிடுவதில் நீதியின் அளவீடுகளைக் கணப்படுத்தியது. இந்த உயர்ந்த மதிப்பு இஸ்லாமியக் குடியரசில் ஒரு தனித்துவமான ரத்தினம் போல பிரகாசிக்க வேண்டும். இன்னும், இவ்வாறு இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில்தான் நாட்டினுடைய நீதியின் செயல்பாட்டில் எனது அதிருப்தி அமைந்திருக்குமே தவிர, நீதியை நிறுவுவதற்கு எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டாம். உண்மை என்னவென்றால், கடந்த நான்கு தசாப்தங்களாக அநீதியை எதிர்த்துப் போராடியதன் சாதனைகள், கடந்த காலங்களில் வேறெந்த தசாப்தத்துடனும் ஒப்பிடப்பட முடியாதவையாக இருக்கின்றன. பஹ்லவி வம்சத்தின் கொடுங்கோல் ஆட்சியில் நாட்டின் பெரும்பாலான சேவைகளும், வருவாய்களும் தலைநகரில் வசிப்போரில் ஒரு சிறிய குழுவினருக்கோ அல்லது நாட்டின் பிற பகுதிகளில் இருந்த அவர்களது சகாக்களுக்கோ மட்டுமே கிடைக்கப் பெற்றன. பெரும்பாலான நகரங்களில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக தொலைதூரப் பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்தோர் பட்டியலின் இறுதியிலேயே காணப்பட்டனர். பெரும்பாலும், அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கல் தேவைப்பாடுகளை இழந்தவர்களாகக் காணப்பட்டனர். இஸ்லாமியக் குடியரசு, சேவைகளையும், செல்வங்களையும் தலைநகரிலிருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், நகரங்களின் வசதியான பகுதிகளிலிருந்து அவற்றின் பின்தங்கிய பகுதிகளுக்கும் வழங்குவதில் உலகின் மிகவெற்றிகரமான அரசாங்கங்களில் ஒன்றாக உள்ளது. சாலைகளை அமைத்தல், வீட்டுவசதி கட்டுமானம், தொழில்துறை மையங்களை நிறுவுதல், விவசாய விடயங்களின் சீர்திருத்தம், மின்சாரம் மற்றும் நீர்வசதிகளை வழங்குதல், மருத்துவ மையங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், அனைக்கட்டுக்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் இவைபோன்றவற்றை தொலைதூரப் பகுதிகளுக்குக் கூட விநியோகிப்பது பற்றிய பெரும் புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே பெருமைக்குரியவையாக உள்ளன. நிச்சயமாக, இந்த முயற்சிகள் அனைத்தும் அதிகாரிகளின் திறனற்ற பிரச்சாரங்களில் பிரதிபலிக்கவுமில்லை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விரோதிகளின் பேச்சுகளில் ஒப்புக்கொள்ளப்படவுமில்லை. ஆயினும்கூட, அது இருக்கத்தான் செய்கிறது. மேலும், இது இறைவனிடத்திலும், படைப்புகளிடத்திலும் நேர்மையாக இருந்த, புரட்சிகர மேலாளர்களுக்கான நற்கூலியாகவும் காணப்படுகிறது. என்றாலும், இமாம் அலி (அலை) அவர்களினால் நிறுவப்பட்ட அரசாங்கத்தை (முன்மாதிரியாகப்) பின்பற்ற விரும்புகின்ற இஸ்லாமியக் குடியரசிலே எதிர்பார்க்கப்படும் நீதியானது இவற்றைவிட மிகவும் உயர்ந்ததாகும். அதனை நிலைநாட்டுவதற்குரிய நம்பிக்கைபூர்வமான எதிர்பார்ப்பு இளைஞர்களாகிய உங்களின்பாலே உள்ளது. இது பற்றி தொடர்ந்தும் குறிப்பிடவுள்ளேன்.

  1. சமூகப் பொதுவெளிகளில் ஆன்மீகம் மற்றும் அறநெறி ஆகிவற்றின் குறிப்பிடத்தக்க மேம்பாடு

இஸ்லாமியப் புரட்சியானது, சமூகப் பொதுவெளிகளில் ஆன்மீகம் மற்றும் அறநெறியின் அளவை, கணிசமான விதத்தில் மேம்படுத்தியுள்ளது. புரட்சிக் காலப்பகுதியிலும், புரட்சியின் வெற்றிக்குப் பின்னரும் இமாம் குமைனி (ரஹ்) அவர்களின் சுயப் பண்பும், நடத்தையும் இந்த அருள்மிகுந்த தோற்றப்பாட்டை, அனைத்தையும் விட அதிகமாக வியாபிக்கச் செய்திருந்தது. உலகாயுத மயக்கங்களிலிருந்து தூய்மையான, ஞானம்மிகுந்த அந்த ஆன்மீக மனிதர், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனால், நாட்டு மக்களுடைய விசுவாசத்தின் காரணிகள் மிகவும் ஆழமாக வேரூன்றின. பஹ்லவி ஆட்சிக் காலத்தில் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேட்டை ஊக்குவிக்கும் பிரச்சாரங்களின் நீட்சியான கைகள், அவற்றைக் கடுமையாகத் தாக்கியிருந்தாலும் கூட, மேற்கத்தியப் பண்பாட்டு மாசுகளின் வெறியாட்டம் நடுத்தர மக்களின் வாழ்க்கையில், குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கையில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தாலும் கூட, இஸ்லாமியக் குடியரசிலே காணப்பட்ட சமய மற்றும் அறநெறிசார்ந்த அணுகுமுறை, தகுதியான மற்றும் ஒளிமிகுந்த இதயங்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவர்ந்து ஈர்த்து, சமூக தளத்தை சமயம் மற்றும் அறநெறியின்பால் மாற்றிவிட்டது. (அமெரிக்க ஆதரவுடன் ஈரான் மீது சதாம் மேற்கொண்ட படையெடுப்பிற்கு எதிரான) தாயகப் பாதுகாப்பு உள்ளிட்ட கஷ்டம் நிறைந்த களங்களில் இளைஞர்களின் போராட்;டங்கள் தியானம், பிரார்த்தனை, சகோதரத்துவ உணர்வு மற்றும் தியாகம் ஆகிவற்றுடன் கலந்திருந்தன. இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்று நிகழ்வுகளை அனைவருடைய கண்களின் முன்னே தெளிவாகவும், உயிர்ப்புடனும் நினைவூட்டின. தந்தையர், தாய்மார் மற்றும் மனைவிமார் போராட்டத்தின் பல்வேறு முனைகளுக்கு விரைந்து புறப்பட்டுச் சென்ற தங்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து சமயக் கடமையின் உணர்வோடு விடைபெற்றுக்கொண்டார்கள். பின்னர், இரத்தத்தில் நனைந்த அல்லது காயமுற்ற உடல்களை எதிர்கொண்டபோது ஏற்பட்ட பெரும் துயரை, இறைவனுக்கு நன்றி கூறி ஏற்றுக்கொண்டார்கள். மஸ்ஜித்களும், ஆன்மீகத் தலங்களும் முன்னெப்போதும் இல்லாதவாறு தழைத்தோங்கின. இஃதிகாப் எனும் சமய அனுஷ்டானத்தில் பங்கெடுப்பதற்கான பல்லாயிரம் இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோரின்காத்திருப்பு பட்டியலும், போராட்ட முகாம்களிலும், ஆக்கபூர்வமான எழுச்சிப்போராட்டங்களிலும், புத்தாக்க மக்களணிகளிலும் இணைந்துகொள்வதற்கானபல்லாயிரக்கணக்கான தன்னார்வ, தியாகமனப்பாங்கு கொண்ட இளைஞர்களின் காத்திருப்பு பட்டியலும் நிரம்பியிருந்தன. தொழுகை, ஹஜ், நோன்பு, யாத்ரீக பயணங்கள், பல்வேறு சமய விழாக்கள், வாஜிப் மற்றும் முஸ்தஹப்பான கொடைகள் மற்றும் ஸதகாக்கள் எல்லா இடங்களிலும், குறிப்பாக இளைஞர்களிடையே செழித்து வளர்ந்தன. இன்றுவரை, இது தரத்தில் சிறப்பாகவும், அளவில் பெரியதாகவும் நாளுக்கு நாள் மாறியிருக்கின்றன. மேற்குலகு மற்றும் அதன் ஆதரவாளர்களின் நாளாந்தம் அதிகரித்துவரும் பண்பாட்டு வீழ்ச்சியும், ஆண்களையும், பெண்களையும் சீர்கேட்டின் வெறியாட்டங்களுக்குள் தள்ளுவதற்கான அவர்களின் பாரிய பிரச்சாரங்களும், உலகின் முக்கிய பகுதிகளில் ஆன்மீகத்தையும், அறநெறியையும் தனிமைப்படுத்தியமையும் நடந்தேறிய நேரத்தில்தான் இது நிகழ்ந்தது. இது ஆக்கபூர்வமான, முன்னேறிய இஸ்லாமியப் புரட்சி மற்றும் அரசின் மற்றொரு அற்புதமாகும்.

  1. உலக மேலாதிக்கவாதிகள், அட்டூழியக்காரர்கள் மற்றும் கொடுமைக்காரர்களின் எதிரே நாளாந்தம் எதிர்த்து நின்றமை

உலகின் மேலாதிக்கவாதிகள், அட்டூழியக்காரர்கள், கொடுமைக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு தலைமை வகித்த உலகைக்கொள்ளையிடும், குற்றமிழைக்கும் அமெரிக்கா ஆகியோருக்கு எதிரேயான போராட்டத்தின் பெருமையும், மகத்துவமும், கம்பீரமும் கொண்ட வெளிப்பாடு நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்றது. இந்த நான்கு தசாப்தங்களில், மேலாதிக்க, திமிர்பிடித்த அரசுகளுக்கு முன்னிலேசரணடையாமை, புரட்சி மற்றும் அதன் தெய்வீகக் கொடையையும், மகத்துவத்தையும், உயர்வையும் பேணிப் பாதுகாத்தமை, ஈரான் மற்றும் ஈரானியரின், குறிப்பாக இந்நிலத்தின் இளைஞர்களின் தெளிவான சிறப்பம்சங்களாக குறிப்பிட முடியும். மற்ற நாடுகளின் சுதந்திரத்தை மீறுவதிலும், அவற்றின் நலன்களை தங்களது சொந்த கெட்ட நோக்கங்களுக்காக கொள்ளையிடுவதிலும் தங்களது வாழ்வை எப்போதும் கழித்து வந்த உலகின் ஏகபோக சக்திகள் புரட்சிகர, இஸ்லாமிய ஈரானின் முன்னிலே தங்களது பலவீனத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். புரட்சியின் உயிரோட்டமான சூழ்நிலையில் ஈரானிய தேசம், முதலில் அமெரிக்காவின் கைப்பாவைகளையும், தேசத்தை காட்டிக்கொடுத்த முகவர்களையும் வெளியேற்ற முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்றுவரை நாட்டின் மீதான உலகக் கொடுங்கோலரின் மறுபடியுமான ஆதிக்கத்தைக் கடுமையாகவும், தீவிரமாகவும் தடுக்க முடிந்தது.

நான்கு தசாப்தத்தையுடைய புரட்சியும், மாபெரும் இரண்டாம் கட்டமும்

அன்பிற்குரிய இளைஞர்களே! இவை இஸ்லாமியப் புரட்சியின் நான்கு தசாப்தகால வரலாற்றில் ஒரு முக்கிய எண்ணிக்கையிலான தலைப்புகள் மட்டுமே. அல்லாஹ்வின் கிருபையால் நீங்கள் புரட்சியின் இரண்டாவது மாபெரும் கட்டத்தின் எட்டை எடுத்து வைக்க வேண்டியுள்ள அற்புதமான, நீடித்த, பிரகாசமான ஒரு புரட்சி இதுவாகும்.

கடந்த நான்கு தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலன், இன்றும் நம் கண்களின் முன்னே உள்ளது.   சுயாதீனம், சுதந்திரம், வல்லமை, கண்ணியம், சமயப்பற்று, அறிவியலில் மேம்பாடு, மதிப்புமிக்க அனுபவங்கள் நிறைந்த, நம்பிக்கையும் திடகாத்திரமும் கொண்ட, பிராந்தியத்தில் அடிப்படையான தாக்கத்தை பிரதிபலிக்கின்ற, உலகளாவிய பிரச்சினைகளில் வலுவான தர்க்கத்தை கையாளுகின்ற, விஞ்ஞான முன்னேற்றங்களின் வளர்ச்சிப் போக்கில் சாதனை படைத்த, அணு அறிவியல், அடிப்படைக் கலங்கள், நானோ தொழிநுட்பம், விண்வெளி மற்றும் இவை போன்றவை உள்ளிட்ட முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் உயர்ந்த இடங்களை அடைந்துகொள்வதில் சாதனை படைத்த, சமூக சேவைகளை விரிவாக்குவதில் முன்னணிவகித்த, இளைஞர்களிடையே எழுச்சிமிகு உந்துதல்களை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கிய, செயலூக்க இளைஞர் சமூகத்தை உருவாக்கிய, இன்னும் பல பெருமைக்குரிய விஷேடத்துவங்களைக் கொண்ட நாடும், தேசத்தினருமாக நீங்கள் இருக்கிறீர்கள். இவையனைத்தும் புரட்சியின் விளைவாகவும், புரட்சிகர முன்னெடுப்புகளின் பயனாகவும் உள்ளன. புரட்சியின் நான்கு தசாப்தகால வரலாற்றின் அத்தியாயங்களில் புரட்சியின் இலட்சியங்களைக் கருத்திற்கொள்ளாமையும், புரட்சிகர இயக்கப்பாட்டை அலட்சிப்படுத்தாமையும் (துரதிர்ஷ்டவசமாகவும், சேதங்களை விளைவித்ததாகவும் காணப்பட்டதைப் போன்று) இல்லாதுவிட்டிருந்தால், சந்தேகமின்றி புரட்சியின் அடைவுகள் இதைவிடவும் அதிகமாகவும், உயரிய இலட்சியங்களை நோக்கிய அடைவுப்பாதையில் நாடு மிகவும் முன்னேறிய நிலையிலும் இருந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமியப் புரட்சியின் இறையாண்மை, சவால்களில் மாற்றம் மற்றும் மேலாதிக்கவாதிகளின் தோல்வி

இறையாண்மையுள்ளஈரான், புரட்சியின் தொடக்கத்தைப் போன்று இன்றும் கூட மேலாதிக்கவாதிகளின் சவால்களை எதிர்கொண்டே வருகிறது. ஆனால், முற்றிலும் வித்தியாசமான பொருளில். அந்நாட்களில் வெளிநாட்டு முவர்களின் ஊடுருவலை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது தெஹ்ரானில் இருந்த சியோனிச அரசின் தூதரகத்தை மூடுவது அல்லது (தெஹ்ரானில் இருந்த முன்னாள் அமெரிக்க தூதரகமான) உளவுக்கூட்டை அம்பலப்படுத்துவது போன்றவற்றில் அமெரிக்காவுடனான சவால் இருந்தபோதிலும், சியோனிச அரசின் எல்லைகளுக்கு அருகே இறையாண்மையுள்ள ஈரான் பிரசன்னமாவதிலும், மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும், ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களின் மையத்தில் பலஸ்தீனிய மக்களின் புரட்சிகர போராட்டங்களுக்கு இஸ்லாமியக் குடியரசு ஆதரவு வழங்குவதிலும், இப்பிராந்தியம் முழுவதுமான போராட்டம் மற்றும் ஹிஸ்புல்லாஹ்களின் மேலெழுந்துள்ள கொடி ஆகியவற்றை ஆதரிப்பதிலுமே இன்றைய சவால் காணப்படுகிறது. அன்று, ஈரானுக்கு அத்தியாவசியமான ஆயுதங்களை வாங்குவதைத் தடுப்பதே மேற்குலகின் பிரச்சினையாக அமைந்திருந்தது என்றால், இன்று போராட்டப் படைகளுக்கு ஈரானின் முன்னேற்றகரமான ஆயுதங்கள் வழங்கப்படுவதைத் தடுப்பதே அதன் பிரச்சினையாக இருக்கிறது. அன்று, தன்னை விற்பனைசெய்துகொண்ட ஈரானியர் சிலர் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் உதயுடன் இஸ்லாமிய அரசையும், ஈரானிய மக்களையும் கைப்பற்றிவிட முடியும் என்று அமெரிக்கா கருதியிருந்தால், இன்று, இஸ்லாமியக் குடியரசை அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக எதிர்கொள்வதற்கு வலுக்கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது கவரப்பட்ட பல கணக்கான அரசுகளின் பெரும் கூட்டணியின்பால் தன்னை அமெரிக்கா காண்கின்றது. என்றாலும், இன்னமும் அது தனது கனவுகளில் தோல்வியைத்தான் தழுவிக் கொண்டிருக்கிறது. ஈரான், புரட்சியின் அருளால் தற்போது உயர்ந்துவளர்ந்து, உலகோர் காணக்கூடியவாறு ஈரானிய மக்களுக்குப் பொருத்தமான நிலையில், அடிப்படைப் பிரச்சினைகளிலே காணப்பட்ட அனேக சவாலான திருப்பங்களைக் கடந்து நிற்கிறது.

இளைஞர்கள் முன்னேறிய இஸ்லாமிய அமைப்பை நிலைபெறச்செய்வதின் மையமாக உள்ளனர்

எவ்வாறாயினும், இதுவரை கடந்துவந்த பாதை இஸ்லாமியக் குடியரசின் உயர்ந்த இலட்சியங்களை நோக்கிய புகழ்பெற்ற பாதையின் ஒரு பகுதி மட்டுமே. இப்பாதையின் தொடர்ச்சியானது, பெரும்பாலும் கடந்தகால கஷ்டநிலையாக அமையாத போதிலும், இளைஞர்களாகிய நீங்கள் உங்களது மன-திடகாத்திரம், விழிப்புணர்வு, விரைவான செயற்பாடு மற்றும் புதுமை ஆகியவற்றுடன் பயணிக்க வேண்டியுள்ளீர்கள். அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், சர்வதேச உறவுகள் ஆகிய துறைகளிலும், இன்னும் மதம், அறநெறி, ஆன்மீகம், நீதி ஆகிய தளங்களிலும் இளம் மேலாளர்கள், இளம் நிர்வாகிகள், இளம் சிந்தனையாளர்கள், இளம் ஆர்வலர்கள் தமது தோள்களில் பொறுப்புகளை ஏற்பதற்குத்தயாராக வேண்டும். கடந்தகால அனுபவங்கள் மற்றும் படிப்பினைகளிலிருந்து பயனடைய வேண்டும். புரட்சியின் பார்வை, புரட்சியின் மனோநிலை மற்றும் புரட்சிகர வேலைப்பாடு ஆகியவற்றை கையாள வேண்டும். ஈரானிய தேசத்தை இஸ்லாத்தின் முன்னேறிய முழுமையான அமைப்பின் மாதிரியாக கட்டியெழுப்ப வேண்டும்.

சமயம் மற்றும் விசுவாசம் சார்ந்த அடிப்படையான, ஆழமான அடித்தளங்களுடன் கூடிய திறமையான, செயலூக்கமுள்ள மனித வளங்கள்: நாட்டிற்கு நம்பிக்கையூட்டுகின்ற மிகவும் முக்கியமான திறனாகும்

எதிர்காலத்தை உருவாக்குவோர் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், இயற்கை மற்றும் மனித வளங்களின் அடிப்படையில் தனித்துவமான ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதாகும். இந்த வளங்கள் பல அதிகாரிகளின் அலட்சியங்கள் காரணமாகப் பயன்படுத்தப்படாமல் அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றன. இளைஞர்களின் புரட்சிகர எண்ணங்கள் மற்றும் மேலான முயற்சிகள் என்பன அவற்றை ஆக்கப்பாடானதாக மாற்றி, உண்மையான அர்த்தத்தில் பௌதீக, ஆன்மீக முன்னேற்றத்தில் உந்துதலளிக்க முடியும்.

நாட்டிற்கு நம்பிக்கையூட்டும் மிகவும் முக்கியமான திறனாக, சமயம் மற்றும் விசுவாசம் சார்ந்த அடிப்படையான, ஆழமான அடித்தளங்களுடன் கூடிய திறமையான, செயலூக்கமுள்ள மனித வளமாகும். அறுபதுகளில் தோன்றிய சமூக அலையின் விளைவாக தனது முக்கியமான ஒரு பகுதியைக்கொண்டிருக்கும் நிலையிலே, நாற்பது வயதிற்குட்பட்ட இளம் மக்கள் தொகை, நாட்டிற்கு மிகவும் மதிப்புமிக்க வாய்ப்பைக் குறிக்கிறது. 15 முதல் 40 வயதுக்குட்பட்ட 36 மில்லியன் மக்கள் தொகையினர், உயர்கல்வியைப் பெற்ற சுமார் 14 மில்லியன் பேர், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடம், புரட்சிகர மனப்பாங்கோடு, நாட்டிற்காக உழைக்கத் தயாராகவுள்ள இளைஞர்கள் கூட்டம், விஞ்ஞான, கலாச்சார, தொழில்துறை மற்றும் பிறவகையான உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏராளமான அறிவார்ந்த, ஆய்வு-ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் நாட்டிற்கு மகத்தான செல்வமாகும். இவற்றோடு எந்தவொரு பௌதீக வளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

நாட்டின் பௌதீக வாய்ப்புகளின் நீண்ட பட்டியல்

மேற்கூறிய சொத்துக்களுக்கு மேலதிகமாக, நாட்டின் பௌதீக வாய்ப்புகளும் மிகவும் நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளது. திறமையான, எண்ணப்பாடுகொண்ட, புத்திசாலித்தனமான மேலாளர்கள் அவற்றை ஆக்கபூர்வப்படுத்தி, பயனடைவதன் மூலம் தேசிய உற்பத்தியை கணிசமான அளவுக்கு அதிகரித்து, நாட்டை செல்வந்த, தன்னிறைவான மற்றும் சரியாகக் கூறுவதாயின் தன்னம்பிக்கைகொண்ட நாடாக மாற்றி, தற்போதைய சிக்கல்களை நீக்க முடியும். ஈரான், உலக சனத்தொகையில் நூற்றுக்கு ஒரு சதவீதத்தினரைக் கொண்டிருப்பதோடு, உலகளாவிய கனிய வளங்களில் நூற்றுக்கு 7 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதன் பௌதீக வளங்களாக பாரிய நிலத்தடி வளங்கள், கிழக்கிற்கும் மேற்கிற்கும் மற்றும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் காணப்படும் புவியியல் சார்ந்த சிறப்பம்சம், பெரிய தேசிய சந்தை, 600 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட 15 அண்டை நாடுகளையும் உள்ளடக்கிய பரந்த பிராந்திய சந்தை, நீண்ட கடலோர எல்லைகள், பல்வேறு வகையான விவசாயப் பொருட்களுடன் வளமான நிலங்கள், பாரிய மற்றும் பல்துறைப் பொருளாதாரம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை, நாடு கொண்டுள்ள வாய்ப்புகளில் ஒரு பகுதியே. அனேக வளங்கள் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளன.

பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட இயற்கை மற்றும் மனித வளங்களைப் பொருத்தமட்டில் ஈரான் உலகின் முதலாவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, விசுவாசமும், பெரும் முயற்சியும் கொண்ட இளைஞர்களாகிய நீங்கள்தான் இப்பெரும் குறையை நீக்க முடியும். வெளிப்படையான இரண்டாம் தசாப்தத்தில், முந்தைய அடைவுகளிலிருந்தும், அவ்வாறே பயன்படுத்தப்படாத வளங்களிலிருந்தும் பயன்படுத்திக்கொள்வதில்தான் காலம் மையப்படுத்தப்பட வேண்டும். மேலும், நாட்டின் அபிவிருத்தி தேசிய உற்பத்தி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்டவைகளை மேம்படுத்தப்பட வேண்டும்.

புரட்சியின் இரண்டாம் கட்டமும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம் கொண்ட பார்வை ஆகியவற்றின் வெளிச்சத்தில் அமைந்த அடிப்படை பரிந்துரைகளும், விளக்க குறிப்புகளும்

இப்போது, எனது அன்பிற்குரிய பிள்ளைகளாகிய உங்களுக்கு சில அத்தியாவசியமான தலைப்புகளில் பரிந்துரைகளை வழங்க விரும்புகிறேன். அத்தலைப்புகளாவன, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, ஆன்மீகம் மற்றும் அறநெறி, பொருளாதாரம், நீதி மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம், சுயாதீனம் மற்றும் சுதந்திரம், தேசிய கௌரவம், சர்வதேச உறவுகள், எதிரியுடனான எல்லைக்கோட்டை வரைதல் மற்றும் வாழ்வியல் முறை.

இருந்தாலும், அனைத்திற்கும் முன்பு, எனது முதலாவது பரிந்துரை எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும், நல்லெண்ணம் கொண்ட பார்வையுமாகும். அனைத்துவகை பூட்டுக்குமான இந்த அடிப்படைத் திறவுகோலின்றி, எந்தவொரு எட்டையும் எடுத்துவைக்க முடியாது. நான் குறிப்பிடுவது, வெளிப்படையான யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான நம்பிக்கையாகும். பொய்யான மற்றும் அவநம்பிக்கையை நான் எப்போதும் தவிர்த்துள்ளேன். ஆனால், ஆதாரமற்ற அவநம்பிக்கை மற்றும் தவறான பயத்திலிருந்து என்னையும், மற்றவர்களையும் எச்சரித்துவருவதோடு, தவிர்த்தும் வருகிறேன். இந்த நான்கு தசாப்தகாலப் பகுதியிலே, எப்போதும் போல இப்போதும், எதிரியின் பிரச்சார, ஊடக அரசியலும், அதன் செயல்திறன்மிக்க திட்டங்களும் எதிர்காலம் தொடர்பில் எமது அதிகாரிகள், மேலாளர்கள் உட்பட பொது மக்களை அவநம்பிக்கையுறச் செய்வதிலே இருந்து வருகிறது. பொய்யான செய்திகள், பக்கச்சார்பான பகுப்பாய்வுகள், உண்மைகளை மாற்றியமைத்தல், நம்பிக்கைக்குரிய அம்சங்களை மறைத்தல், சிறிய குறைகளை பெரிதாக்கிக் காண்பித்தல், பெரும் நன்மைகளை சிறிதாக்கிக் காண்பித்தல் அல்லது மறுத்தல் என்பன ஈரான் தேசத்தவரின் எதிரிகளுடைய ஆயிரக்கணக்கான ஒலி, ஒளி மற்றும் இணைய அடிப்படையிலான ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலாக எப்போதும் இருந்து வருகின்றன. இருந்தும், அவற்றின் தொடர்களை சுதந்திரங்களைப் பயன்படுத்தி எதிரியின் சேவையில் பணியாற்றுவதை நாட்டிற்குள் கூட காணக்கூடியதாக உள்ளன. இளைஞர்களாகிய நீங்கள் இத்தகைய பிரச்சாரத்தின் முற்றுகையை உடைத்தெறிவதில் முன்னோடியாக இருக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின் செடியை உங்களுக்குள்ளேயும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குள்ளேயும் வளர்த்தெடுங்கள். உங்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் பயத்தையும், ஏமாற்றத்தையும் விரட்டிவிடுங்கள். இது உங்களின் முதலாவது மற்றும் மிக அடிப்படையான போராட்டமாகும். நம்பிக்கையின் அறிகுறிகள் (அவற்றில் சில குறிப்பிடப்பட்டுள்ளன) உங்கள் கண்களின் முன்னே உள்ளன. புரட்சியின் துளிர்கள் அதன் வேர்களை விடவும் மேலே கடந்துவிட்டன. மேலும், ஊழல்காரர்கள், துரோகிகள் மற்றும் பேராசை கொண்டவர்களை விடவும் விசுவாசமுள்ள, உதவிபுரிகின்ற கைகளும், இதயங்களும் மிகவும் அதிகம். பல துறைகளில் ஈரானிய இளைஞன், ஈரானிய விடாமுயற்சி மற்றும் ஈரானிய புதியகண்டுபிடிப்புகள் ஆகிவற்றின்பால் உலகம் அதிக மரியாதையோடும், சங்கையோடும் நோக்குகின்றது. தங்களுடைய ஆற்றலை அறிந்துகொள்ளுங்கள். இறைவன் கொடுத்த ஆற்றலோடு எதிர்காலத்தை நோக்கி எழுச்சியுற்று, காவியத்தைப் படைத்தளியுங்கள்.

பரிந்துரைகள்:

  1. அறிவியல் மற்றும் ஆராய்ச்சி
  •  

அறிவு என்பது ஒரு நாட்டினுடைய கௌரவம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் மிகத்தெளிவான கருவியாகும். அறிவின் மற்றைய முகமே ஆற்றலாகும். மேற்குலகு, தனது அறிவின் அருளால் இருநூறு வருட செல்வத்தையும், செல்வாக்கையும், சக்தியையும் தனக்காக ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. மேலும், அறநெறி மற்றும் நம்பிக்கைக் கோட்பாடு சார்ந்த அடித்தளங்களின் வெறுமையோடு அறிவுப் பயணத்தில் பின்தங்கிய சமூகங்களின் மீது மேற்கத்திய வாழ்வியல் முறையை திணித்ததன் ஊடாக அவர்களின் அரசியல், பொருளாதார தெரிவுரிமையை தனது கைக்குக் கொண்டுவர முடிந்தது. மேற்குலகு செய்ததைப் போன்று அறிவை துஷ்பிரயோகம் செய்வதற்கு நாம் பரிந்துரைக்கவில்லை. எவ்வாறாயினும், அறிவின் நீரூற்றுகளை நம்மிடையே பாய்ச்ச வேண்டியது நாட்டின் தேவையாக உள்ளதை வலியுத்துகிறோம். நமது தேசத்தில் அறிவு மற்றும் ஆராய்ச்சியின் திறன் உலகின் சராசரியை விட அதிகமாக உள்ளமையினால் இறைவனுக்கே புகழனைத்தும். ஏறக்குறைய இரண்டு தசாப்தகாலமாக நாட்டில் அறிவியல் எழுச்சி தொடங்கப்பட்டு, உலகளாவிய பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வேகத்தில் (அதாவது, உலகில் அறிவியலின் சராசரி வளர்ச்சியின் பதினொரு மடங்கு) முன்னேறியுள்ளது. நமது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தின் சாதனைகள் இக்காலப்பகுதியில் உலகின் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் 16வது இடத்தைப் பிடித்து, உலகளாவிய பார்வையாளர்களின் ஆச்சரியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. சில முக்கியமான, புதிய துறைகளில் முதல் தரங்களுக்கு வளர்ந்துள்ளது. இவை அனைத்தும் நாடு பொருளாதாரத் தடையிலும், அறிவியல் தடையிலும் இருந்தபோதுதான் நிகழ்ந்தன. பகைமையை உருவாக்கி விடுகின்ற போக்குகளுக்கு முன்னே எதிர்நீச்சலைக் கொண்டிருந்ததன் மூலம் பெரும் சாதனைகளை அடைந்துகொண்டோம். இது மிகப்பெரும் அருளாகும். இதற்காகவே இரவும், பகலும் இறைவனுக்கு நன்றி செல்ல வேண்டியுள்ளது.

கடந்துவந்த இப்பாதை, அதன் அனைத்து முக்கியத்துவங்களோடும் ஒரு தொடக்கம் மட்டுமே. அதைத்தவிர வேறொன்றுமில்லை என்பதையே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உலக அறிவியலின் உச்சங்களைப் பொறுத்தமட்டில் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம். நாம் அவ் உச்சங்களை அவசியம் அடைய வேண்டும். அதிமுக்கியமான துறைகளில் அறிவின் தற்போதைய எல்லைகளுக்கு அப்பால், நாம் செல்ல வேண்டும். நாம் இக்கட்டத்தில் இன்னும் பின்னடைவில் இருக்கிறோம். நாம் பூஜ்ஜிய நிலையிலிருந்தே தொடங்கியிருந்தோம். பஹ்லவிகள் மற்றும் காஜார்களின் காலப்பகுதிகளிலும், உலகின் அறிவியல் போட்டி புதிதாகக் தொடங்கியிருந்த போதும் காணப்பட்ட வெட்கக்கேடான அறிவியல் பின்னடைவு எங்களுக்கு பலத்த அடியை கொடுத்து, வேகமாக நகரும் இப்பயணத்தில் பல மைல்கள் எங்களை பின்னடைவில் வைத்திருந்தது. நாம் இப்போது இயங்கத் தொடங்கி, முழுவீச்சுடன் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பின்னடைவை ஈடுசெய்வதற்கு இந்த விரைவானநிலையை பலத்த வேகத்துடன் பல வருடங்கள் தொடர வேண்டியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகங்கள், கல்வியியலாளர்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு நான் எப்போதும் அன்பாகவும், உறுதியாகவும் அறிவுறுத்தி, அழைப்புவிடுத்துள்ளேன். இருப்பினும், இப்போது இப்பொதுவான விடயங்கள் குறித்து இளைஞர்களாகிய உங்களிடம் நான் வேண்டிக்கொள்வது, இப்பாதையை ஒரு போராட்டமாகக் கருதி, அதிக பொறுப்புணர்வுடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் ஒரு அறிவியல் புரட்சியின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்புரட்சி, அணு அறிவியல்சார்ந்த உயிர்த்தியாகிகள் உட்பட பல்வேறு உயிர்த்தியாகிகளை (ஷஹீதுகளை) வழங்கியுள்ளது. உங்களது விஞ்ஞானப் புரட்சியை கடுமையாக அஞ்சுகின்ற, தீங்கையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற எதிரியைத் தோற்கடிப்பதற்கு எழுந்திருங்கள்.

  1. ஆன்மீகம் மற்றும் அறநெறி

ஆன்மீகம் என்பது நேர்மை, தியாகம், இறைவனை நம்பியிருத்தல், தன்னிலும் சமூகத்திலும் விசுவாசமாக நடத்தல் ஆகியவை உள்ளடங்களாக ஆன்மீக விழுமியங்களை வலியுறுத்துவதாகும். அறநெறி என்பது நல்லெண்ணம், மன்னிப்பு, தேவையுடையோருக்கு உதவுதல், உண்மைத்தன்மை, தைரியம், பணிவு, தன்னம்பிக்கை மற்றும் ஏனைய அறநெறிகள் போன்ற நற்பண்புகளைக் கடைப்பித்து ஒழுகுவதாகும். ஆன்மீகமும், அறநெறியும் தனிமனித, சமூக இயக்கப்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தையும் வழிநடாத்தக் கூடியதாகவும், சமூகத்தின் அடிப்படைத் தேவையாகவும் காணப்படுகின்றன. அவற்றின் இருப்பு, வாழ்க்கைச் சூழலை பௌதீக பற்றாக்குறைகள் இருந்தாலும் ஒரு சொர்க்கமாக மாற்றிவிடுகிறது. அவைகளின்றி, எவ்வளவுதான் பௌதீக நிறைவுகளைக் கையாண்டாலும் கூட நரகமே உருவாகிவிடுகிறது.

சமுதாயத்தில் ஆன்மீக உணர்வும், தார்மீக மனசாட்சியும் எந்தளவு வளர்ச்சியைப் பெறுகிறதோ, அந்தளவுக்கு அதிக அருள்களை அவை கொண்டுவருகின்றன. இதற்கு உண்மையில் போராட்டமும், முயற்சியும் தேவைப்படுகிறது. மேலும், இந்த போராட்டமும், முயற்சியும் அரசாங்கங்களின் உதவியின்றி அதிகம் வெற்றி பெறமாட்டாது. ஆன்மீகமும், அறநெறியும் நிச்சயமாக கட்டளைகள் மற்றும் உத்தரவுகளின் மூலம் அடைந்துவிட முடியாதவை. எனவே, அரசாங்கங்கள் அவற்றை பலத்தைப் பிரயோகித்து உருவாக்கிவிட முடியாது. இருப்பினும், முதலாவதாக தான் ஆன்மீக மற்றும் தார்மீக நடத்தையையும், போக்கையும் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவதாக சமூகத்தில் அவற்றை பரப்புவதற்கான களத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், இது சம்பந்தமாக சமூக அமைப்புகளுக்கு களத்தை வழங்கி, உதவிகளைப் புரிந்திட வேண்டும். ஆன்மீகம் மற்றும் அறநெறிக்கு எதிரான மையங்களோடு பகுத்தறிவு அணுகுமுறையுடன் போராட வேண்டும். சுருக்கமாகக் கூறுவதாயின், தீயவர்கள் மக்களை திணித்தும், ஏமாற்றியும் தீயவர்களாக மாற்றிவிடுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது.

மேம்பட்ட மற்றும் பரவலான தகவல்தொடர்பு சாதனங்கள், ஆன்மீகத்திற்கும், அறநெறிக்கும் எதிரான மையங்களின் கைகளுக்கு மிகவும் ஆபத்தான வசதிகளை வழங்கியுள்ளன. இச்சாதனங்களைப் பயன்படுத்தி சிறுவர்கள் உட்;பட பதின்பருவத்தினர், இளைஞர்கள் ஆகியோரின் தூய்மையான இதயங்கள் மீது எதிரிகளின் அதிகரித்துவரும் தாக்குதல்களை இப்போதும் நாம் பார்க்கிறோம். பொறுப்புவாய்ந்த அரசாங்க நிறுவனங்கள் இந்த விடயத்தில் புத்திசாலித்தனமாகவும், முழுப்பொறுப்புடனும் செயற்பட வேண்டிய பெரும் கடமைப்பாட்டைக் கொண்டுள்ளனர். நிச்சயமாக, அரசு சாரா நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் இது தொடர்பில் எந்தப் பொறுப்பும் கிடையாது என்று அர்த்தமில்லை. அடுத்துவரும் தசாப்தத்தில் இந்த விடயத்தைப் பற்றி முழுமையான குறுகியகால மற்றும் மத்திமகால திட்டங்களை வகுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

  1. பொருளாதாரம்

பொருளாதாரம் என்பது தீர்மானிக்கும் ஒரு முக்கிய புள்ளியாகக் காணப்படுகின்றது. ஒரு வலுவான பொருளாதாரம், ஆதிக்கம் மற்றும் ஊடுருவலைத் தடுப்பதற்கான வலுவான விடயமாகவும், முக்கிய காரணியாகவும் அமைந்துள்ளது. பலவீனமான பொருளாதாரம் எதிரிகளின் ஊடுருவல், ஆதிக்கம் மற்றும் தலையீடு ஆகியவற்றுக்கு பின்புலத்தை அமைத்துக்கொடுக்கின்ற ஒரு பலவீனமான புள்ளியாக அமைந்துவிடுகின்றது. வருமையும், செல்வமும் மனிதகுலத்தின் இலௌகீக மற்றும் ஆன்மீக விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொருளாதாரம், நிச்சமாக இஸ்லாமிய சமுதாயத்தின் இலட்சியமாக அமைந்துவிட முடியாது. ஆனால், அது ஒரு வழிமுறையாகும். அது இல்லாமல் இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது. பல்வேறு தரமான உற்பத்தி, நீதியின் அடிப்படையிலான விநியோகம், வீண்விரயமற்ற அளவான நுகர்வு மற்றும் புத்திசாலித்தனமான நிர்வாக உறவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் சுயாதீனமான பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு, சமீபத்திய ஆண்டுகளில் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்ற அந்த வலியுறுத்தலானது, சமுதாயத்தின் இன்றைய மற்றும் நாளைய வாழ்க்கையில் பொருளாதாரமானது நம்பமுடியாத தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதாலேயே ஆகும்.

இஸ்லாமியப் புரட்சியானது பஹ்லவியின் அட்டூழிய ஆட்சிக் காலப்பகுதியில் நிலவிய பலவீனமான, சார்புடைய மற்றும் ஊழல் நிறைந்த பொருளாதாரத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியாகும். இருப்பினும், பலவீனமான செயல்திறன் நாட்டின் பொருளாதாரத்தை உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் சவால்கள் நிறைந்ததாக மாற்றியுள்ளது. உட்புறப் பிரச்சினைகள் சீர்செய்யப்படும் போது பொருளாதாரத் தடைகளின் வெளிப்புறச் சவால்களும், எதிரியின் சோதனைகளும் குறைந்த செயல்திறனைக் கொண்டவையாக அல்லது பயனற்றவையாக மாறிவிடும். உட்புறச் சவால் என்பது கட்டமைப்புக் குறைபாடுகளும், நிர்வாக பலவீனங்களும் ஆகும்.

மிகவும் முக்கியமான குறைபாடுகளாக எண்ணெய்யின் மீது பொருளாதாரம் தங்கியிருத்தல், அரசாங்கத்தின் பொறுப்புகளுக்கு பொருந்தாத பொருளாதாரத் துறைகளில் ஒரு பகுதி அரசாங்கத்திற்கு உரியதாக இருத்தல், உள்நாட்டு திறன் மற்றும் வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொள்ளாது வெளிநாட்டு இறக்குமதிக்கு காத்திருத்தல், நாட்டின் மனிதவள சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகப் பயன்படுத்தல், குறைபாடான மற்றும் சமநிலையற்ற நிதித்திட்டம், இறுதியாக பொருளாதார நிறைவேற்றுக்கொள்கைகளில் நிலையானதன்மையின்மை, முன்னுரிமைகளைப் பேணாமை, அரச நிறுவனங்களில் சிலவற்றில் அதிகப்படியான மற்றும் வீணான செலவுகள் உள்ளமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றின் விளைவாக இளைஞர்களிடையே வேலையின்மை, வரிய மற்றும் இதுபோன்ற சமூக வகுப்பினரின் வருமானக் குறைவு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எழுகின்றன.

இப்பிரச்சினைகளுக்கான தீர்வு, பொருளாதாரத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான நிறைவேற்று செயற்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு, வலுவான, பொறுப்பான மற்றும் உயிரோட்டமான முறையில் அரசாங்கங்களினால் பின்தொடரப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு புரட்சிகர பொருளாதாரக் கொள்கைகளிலேயேதங்கியுள்ளது. நாட்டினுடைய பொருளாதாரத்தின் உள்நாட்டு உற்பத்தி, அதன் அறிவு அடிப்படையிலானதான மாற்றம், பொருளாதாரத்தை மக்கள்மயப்படுத்தல், அரசாங்கத்தின் தலையீட்டைத் தடுத்தல், முன்னர் குறிப்பிடப்பட்ட வாய்ப்பு, வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெளி உற்பத்தியை மேற்கொள்ளுதல் ஆகியவை இத்தீர்வுகளின் முக்கியமான பகுதிகளாகும். சந்தேகத்திற்கு இடமின்றி, அரசாங்கத்தின் உள்ளே பொருளாதார அறிவுகளின் மீது நிபுணத்துவம்வாய்ந்த, விசுவாசமுள்ள, கற்றறிந்த இளைஞர் கூட்டத்தினால் இவ் இலக்குகளை அடைந்துகொள்ள முடியும். எதிர்வரும் காலப்பகுதி இப்படியான கூட்டத்தாரின் ஆக்கபூர்வமான களமாக அமையட்டும்.

நாடு முழுவதிலும் உள்ள அன்பான இளைஞர்களே! எல்லாத் தீர்வுகளும் நாட்டிற்குள் உள்ளன என்பதை புரிந்துகொள்ளுங்கள். ‘பொருளாதாரப் பிரச்சினைகள் வெறுமனே பொருளாதாரத் தடையினால் உருவாகின்றன. பொருளாதாரத் தடைக்குக் காரணம் மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடுவதும், எதிரியின் முன்னே சரணடையாதிருப்பதுமாகும். எனவே, தீர்வானது எதிரியின் முன்னே மண்டியிடுவதும், ஓநாயின் பாதத்தை முத்தமிடுவதும் ஆகும்’ என்று யாராவது கருதினால், அது மன்னிக்க முடியாது பெருந்தவறாகும். முற்றிலும் தவறான இப்பகுப்பாய்வு, சில சமயங்களில் நாட்டினுள் இருக்கும் சில அலட்சியக்காரர்களின் வாயிலிருந்தும், பேனாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டாலும், அதன் தோற்றுவாய் வெளிநாட்டு சிந்தனை மற்றும் சூழ்ச்சிக் குழுக்களாக உள்ளது. இது பலரின் மூலமாக கொள்கைவகுப்பாளர்கள், முடிவெடுப்போர் மற்றும் நாட்டிற்குள் உள்ள பொது மக்களின் சிந்தனைகளில் தூண்டப்பட்டு வருகின்றது.

  1. நீதி மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம்

நீதியும், ஊழலுக்கு எதிரான போராட்டமும் ஒன்றுக்கொன்று அத்தியாவசியமானதும், தேவையுடையதுமாகும். பொருளாதாரம், அறநெறி மற்றும் அரசியல் சார்ந்த ஊழல் என்பது நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் உடலிலுள்ள கட்டியைப் போன்றது. அரசாங்கங்களின் உடலில் அது காணப்பட்டால், பேரழிவின் அதிர்வாகவும், அதன் நம்பகத்தன்மைக்கு பெரும் அடியாகவும் அமைந்துவிடும். இது, பொதுவான சட்டபூர்வமான தன்மைகளை விடவும் மேலான சட்டபூர்வத் தன்மையையும், சமூக அங்கீகாரத்தின் அடிப்படையையும் வேண்டி நிற்கின்ற இஸ்லாமியக் குடியரசு போன்ற ஒரு ஸ்தாபனத்திற்கு, ஏனைய அமைப்புகளை விடவும் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததும், அடிப்படையானதுமாகும். செல்வம், அதிகாரம் மற்றும் அந்தஸ்து குறித்த மனமருட்சியானது, வரலாற்றில் மிகவும் உயர்வான ஆட்சியாகக் காணப்பட்ட இமாம் அலீ (அலை) அவர்களின் ஆட்சியிலே சிலரை பலவீனப்படுத்தியிருந்தது. எனவே, ஒரு காலப்பகுதியில் தனது அதிகாரிகளும், மேலாளர்களும் புரட்சியின் பக்தியில் ஒருவருக்கொருவர் போட்டியிட்;டு, ஒரு எளிய வாழ்க்கை முறையைப் பேணிவந்த இஸ்லாமியக் குடியரசிலும் கூட இத்தகைய அச்சுறுத்தலினால் தோன்றும் ஆபத்து, ஒருபோதும் அசாத்தியமாக இருந்ததில்லை, இருக்கவுமாட்டாது. இதனால், உண்மையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு குறிப்பாக அரச நிறுவனங்களில், (சட்டத்துறை, நிர்வாத்துறை, நீதித்துறை ஆகிய) முத்துறைகளில் கூர்மையான பார்வையும், தீர்க்கமான நடவடிக்கையும் கொண்ட திறமையான அமைப்பொன்றின் நிலையான பிரசன்னத்தை இது வலியுறுத்துகின்றது.

நிச்சயமாக இஸ்லாமியக் குடியரசின் அரசாங்க அதிகாரிகளிடையேயான ஊழலானது ஏனைய நாடுகள் பலவற்றோடும், குறிப்பாக, முழுவதுமாக ஊழல் நிறைந்தும், ஊழலை ஊக்குவித்தும் வந்த பஹ்லவி அட்டூழிய ஆட்சியோடும் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்தளவே காணப்படுகிறது. இவ் அரசின் அதிகாரிகள் பெரும்பாலும் தம்மை சுத்தமாகவே பார்த்துக்கொண்டதனால் இறைவனுக்கே புகழனைத்தும். ஆனாலும், சிறிதளவு ஊழல் கூட ஏற்றுக்கொள்ள முடியாததாகும். பொருளாதாரத் தூய்மையானது, இஸ்லாமியக் குடியரசின் அரசாங்க அதிகாரிகள் அனைவரையும் அங்கீகரிப்பதற்கான நிபந்தனை என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும். பேராசை எனும் ஷைத்தானிலிருந்து எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஹராமான (முறைகேடான) வருவாயைத் தவிர்க்க வேண்டும். இவ்விடயத்தில் இறைவனிடம் அவர்கள் உதவியை வேண்டிநிற்கட்டும். அரசாங்க மற்றும் மேற்பார்வை புரிகின்ற நிறுவனங்கள் உறுதியாகவும், உணர்திறனுடனும் ஊழல் கருத்தரிக்கப்படுவதைத் தடுத்து, அதன் பரவலோடு போராட வேண்டும். இப்போராட்டம், விசுவாசமுள்ள, புரட்சிகரமான, அடிமைப்படாத, தூய்மையான கரங்கள் மற்றும் பிரகாசமான இதயங்களைக் கொண்ட மனிதர்களின்பால் தேவையுடையதாக இருக்கிறது. இப்போராட்;டம், நீதியை நிலைநாட்டும் பாதையிலே இஸ்லாமியக் குடியரசு மேற்கொள்ள வேண்டிய அனைத்துவகை முயற்சிகளின் ஒரு பயனுள்ள பகுதியாக இருக்கிறது.

அனைத்து தெய்வீக தீர்க்கதரிசிகளின் முதன்மையான இலட்சியங்களின் மையத்தில் நீதியே இருந்துவருகின்றது. இஸ்லாமியக் குடியரசிலும் கூட அதே அந்தஸ்தையும், மதிப்பையும் அது பெற்றுள்ளது. இது, எல்லாக் காலங்களிலும், எல்லா தேசங்களிலும் புனிதத்துவம்வாய்ந்த வார்த்தையாக உள்ளது. மேலும், இமாம் மஹ்தி (அலை) அவர்களின் ஆட்சியிலே தவிர, ஒரு முழுமையான வடிவில் அது நிறுவப்பட மாட்டாது. இருந்தும், இது ஒப்பீட்டளவில் எப்போதும், எல்லா இடங்களிலும் எல்லோரின் மீதும், குறிப்பாக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரமிக்கோர் ஆகியோரின் மீதும் சாத்தியமாகவும்;, கடமையாகவும் இருக்கிறது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு இந்த வழியில் உயர்வான எட்டுகளை எடுத்துவைத்துள்ளது. முன்னர் இது பற்றி சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டது. இருந்தும், அதனை விளக்குவதற்கும், விவரிப்பதற்கும் அதிகமான காரியங்கள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது புரட்சியின் எதிரிகளின் பலமான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படக்கூடிய அம்சங்களான யதார்த்தத்தை திசைதிருப்பல், அவ்விடயத்தில் குறைந்தபட்சம் அமைதியாக இருத்தல் மற்றும் அதனை மறைத்தல் ஆகிய சதித்திட்டத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும்.

இவற்றுக்கு அப்பால், இப்போதுவரை என்ன செய்யப்பட்டுள்ளது என்பது என்ன செய்யப்பட வேண்டியிருந்ததோ அல்லது செய்யப்பட வேண்டுமோ அதனோடு ஒப்பிடுகையில் ஒரு பாரிய இடைவெளியைக் கொண்டுள்ளது என்பதை நாட்டின் எதிர்காலம் யாரை நம்பிக்காத்திருக்கின்றதோ அத்தகைய அன்பிற்குரிய இளைஞர்களுக்கு தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். இஸ்லாமியக் குடியரசிலே அதிகாரிகளின் இதயங்கள் தொடர்ந்தும் சமூகப் பற்றாக்குறைகளை நீக்குவதற்காகவே துடிக்க வேண்டும். சமூக வர்க்கங்களில் ஆழமான பிளவுகள் ஏற்படுவது குறித்து கடுமையாக அஞ்சுதல் வேண்டும். இஸ்லாமியக் குடியரசிலே செல்வத்தைத் தேடுவது ஒரு குற்றம் அல்ல. அது உண்மையில் ஊக்குவிக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால், பொது வளங்களை விநியோகிப்பதில் பாகுபாடு காண்பதும், சிறப்பு சலுகைகளை வழங்குவதும், பொருளாதார ரீதியாக ஏமாற்றுவோரை சகித்துக்கொள்வதும் இவை அனைத்தும் அநீதியைப் புரிவதால் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட வேண்டும். அவ்வாறே, ஆதரவை வேண்டிநிற்கும் சமூக வகுப்பினரைப் புறக்கணிப்பதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த உபதேசங்கள் அரசியல் கொள்கைள், சட்டங்கள் முதலான வடிவத்தில் பலமுறை மீட்டப்பட்டுள்ளன. இருந்தும், அதன் முறையான செயலாக்கத்திற்கு இளைஞர்களாகிய தங்களையே நம்பி எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு துறைகளின் தலைமை விசுவாசமுள்ள, புரட்சிகர, கற்றறிந்த, திறமையான இளைஞர்களிடம் (அல்லாஹ்வின் அருளால் அவர்கள் தகுதியாகவே இருக்கிறார்கள்) ஒப்படைக்கப்பட்டால் இந்த நம்பிக்கை நிறைவேறும். இன்ஷா அல்லாஹ்.

  1. சுயாதீனம் மற்றும் சுதந்திரம்

தேசிய சுயாதீனம் என்பது உலக மேலாதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்பு, திணிப்பு ஆகியவற்றிலிருந்து தேசமும், அரசும் சுதந்திரத்தைப் பெற்றிருப்பதைக் குறிக்கும். சமூக சுதந்திரம் என்பது, சமூகத்தில் உள்ள அனைத்து நபர்களுக்குமாக சிந்திக்கவும், தீர்மானிக்கவும், செயற்படவுமான உரிமையைப் பெற்றிருப்பதைக் குறிக்கும். இவ்விரண்டும் இஸ்லாமிய விழுமியங்களாகும். அவை மனிதர்களுக்கு வழங்கப்பட்ட தெய்வீக அருட்கொடைகள். அவற்றில் எதுவும் மக்களுக்கான அரசின் பரிசுகளல்ல. அரசுகள் இவ்விரண்டையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளன. சுதந்திரம் மற்றும் சுயாதீனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை, அதற்காகப் போராடியவர்களே நன்கு அறிந்துகொள்வார்கள். ஈரானிய தேசம், தனது நான்கு தசாப்தகால போராட்டத்தோடு அவற்றை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இஸ்லாமிய ஈரானின் தற்போதைய சுயாதீனம் மற்றும் சுதந்திரம் என்பன சாதனையாக மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான உயர்ந்த, தைரியமுள்ள, சுய-தியாக மனிதர்களின் இரத்தத்தால் அடையப்பெற்றதாகும். பெரும்பாலும், இளைஞர்கள் உட்பட எல்லோரும் மனிதாபிமானத்தின் உயர்வான தரங்களில் உள்ளனர். புரட்சியின் தூய்மையான விருட்சத்தின் இப்பயனை, அப்பாவித்தனமான, சில சமயங்களில் பக்கச்சார்பான வலிந்துரைகள் மற்றும் நியாயப்பாடுகளால் ஆபத்தில் வைத்துவிட முடியாது. அனைவரும், குறிப்பாக இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கம் தமது முழு இருப்பைக் கொண்டும் அவற்றைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர். ‘சுயாதீனம்’ என்பதை, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தமது எல்லைகளுக்கு மத்தியில் சிறையிட்டுக்கொள்ளல் என்ற பொருளிலும், ‘சுதந்திரம்’ என்பதை, தெய்வீக அறநெறி, சட்டம், விழுமியங்கள் மற்றும் பொது உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிரானது என்ற பொருளிலும் வரையறுக்கப்படல் கூடாது.

  1. தேசிய கௌரவம், வெளிநாட்டு உறவுகள் மற்றும் எதிரியுடனான எல்லைக்கோட்டை வரைதல்

தேசிய கௌரவம், வெளிநாட்டு உறவுகள் மற்றும் எதிரியுடனான எல்லைக்கோட்டை வரைதல் ஆகிய இவை மூன்றும் சர்வதேச உறவுகளில் ‘கண்ணியம், மதிநுட்பம் மற்றும் பொருத்தம்காணல்’ எனும் கொள்கைவிதியின் கிளைகளாகும். உலகளாவிய தளம், இன்று நிகழ்ந்து இருக்கின்ற அல்லது நிகழ்வதற்கு இருக்கின்ற தோற்றப்பாடுகளுக்கு சாட்சியாக உள்ளது. அவற்றுள் அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட மாதிரியின் அடிப்படையில் இஸ்லாமிய விழிப்புணர்வு இயக்கத்தின் புதிய நகர்வு, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க அரசியல் கொள்கைகளின் தோல்வியும், பிராந்தியத்தில் அவர்களின் துரோக நட்பு நாடுகளின் பின்னடைவும், மேற்கு ஆசியாவில் இஸ்லாமியக் குடியரசின் சக்திவாய்ந்த அரசியல் பிரசன்னமும், மேலாதிக்க உலகு முழுவதிலும் அதன் பரந்த பிரதிபலிப்பும் ஆகியவற்றைக் குறிப்பிட முடியும்.

இவை இஸ்லாமியக் குடியரசினுடைய கௌரவத்தின் வெளிப்பாடுகளில் ஒரு பகுதியாகும். இவை, புரட்சிகர மேலாளர்;களின் தைரியம் மற்றும் மதிநுட்பத்தின் மூலமேயன்றி அடைந்துகொள்ளப்படவில்லை. இதனால், ஆதிக்க அமைப்பின் தலைவர்கள் கவலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களின் முன்மொழிவுகள் அனைத்தும் பொதுவாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் பொய் ஆகிவற்றையே உள்ளடக்கியுள்ளன. இன்று ஈரானிய தேசம், அட்டூழியக்கார அமெரிக்காவுக்கு அப்பால், ஐரோப்பிய அரசுகளில் சிலவற்றையும் சதிகாரர்களாவும், நம்பமுடியாதவர்களாகவும் கருதுகின்றது. இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கம், அவர்களுடனான தனது எல்லைக்கோட்டை வரைவதில் கவனம் செலுத்தல் வேண்டும். தனது புரட்சிசார், தேசிய விழுமியங்களிலிருந்து ஒரு எட்டுகூட பின்வாங்கக் கூடாது. அவர்களின் வெற்று அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக் கூடாது. எல்லா நிலையிலும், தனது நாட்டின், தேசமக்களின் கௌரவத்தை கருத்திற்கொள்ளல் வேண்டும். புரட்சி நிலைப்பாட்டோடு இருந்து அவர்களுடனான உறவுகளில் தனது தீர்க்க முடியுமான பிரச்சினைகளை மதிநுட்பமாகவும், விவேகத்துடனும் தீர்க்க முயற்சிக்கட்டும். அமெரிக்காவின் விடயத்தில் எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்தல் என்பது கற்பனை செய்ய முடியாததாகும். மேலும், அதனுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இலௌகீக மற்றும் ஆன்மீக தீங்குகளைத் தவிர வேறெந்த விளைவையும் கொண்டிருக்க மாட்டாது.

  1. வாழ்வியல் முறை

வாழ்வியல் முறை தொடர்பில் அவசியம் பேசவேண்டியவை அனேகம் உள்ளன. அவற்றுக்காக மற்றொரு சந்தர்ப்பத்தை ஒதுக்கி, இங்கே இவற்றை மட்டும் குறிப்பிடுவதோடு போதுமாக்கிக்கொள்கிறேன். ஈரானில் மேற்கத்திய வாழ்வியல் முறையை பரவலாக்குவதில் மேற்குலகின் முயற்சி, அறநெறி, பொருளாதாரம், சமயம் மற்றும் அரசியல் ரீதியில் ஈடுசெய்ய முடியாத பாதிப்புகளை நாட்டிற்கும், நமது தேசமக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளன. அதனை எதிர்கொள்வதற்கு ஒரு விரிவான மற்றும் புத்திசாலித்தனமான போராட்டம் தேவைப்படுகிறது. இவ்விடயத்தில் இளைஞர்களாகிய உங்களையே மீண்டும் நம்பி எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக, அன்பிற்குரிய தேசமக்களின் உற்சாகமான, பெருமைக்குரிய மற்றும் எதிரியைத் தோற்கடிக்கின்ற இப்பிரசன்னத்திலே புரட்சி வெற்றி தினமான பிப்ரவரி 11 குறித்தும், மகத்தான இஸ்லாமியப் புரட்சியின் நான்கு தசாப்தகாலத்தின் பூர்த்தியைக் குறித்தும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்காக, சர்வவல்லமையுள்ள இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இமாம் மஹ்தி அவர்களின்மீது சாந்தி உண்டாவதாக. இமாம் குமைனி (ரஹ்) அவர்களின் பரிசுத்த ஆன்மாவின்மீதும், மேலான ஷுஹதாக்களின் பரிசுத்த ஆன்மாக்களின்மீதும் சாந்தி உண்டாவதாக. ஈரானின் அன்பிற்குரிய தேசமக்கள் அனைவரின் மீதும், குறிப்பாக இளைஞர்களின் மீதும் சாந்தி உண்டாவதாக.

தங்களுக்காக பிரார்த்தித்துக்கொண்டு

செய்யித் அலீ காமனயீ

பிப்ரவரி 11, 2019

Scroll to Top
Scroll to Top