فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
(ஒரு விடயத்தில்) நீங்கள் அறியாதோராக இருப்பீராயின், (அது குறித்து) அறிவைக் கொண்டோரிடம் வினவி(த் தீர்வைப் பெற்றுக்)கொள்ளுங்கள்.
(திருக்குர்ஆன் 16:43)
உடல் நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் மனநலப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண நிபுணர்கள் இருக்கிறார்கள்.
உங்களுக்கு பல்லில் வலி வந்தால் அதற்கான சிகிச்சைக்காக ஒரு பல் மருத்துவரிடம் செல்கிறீர்கள், மூட்டுகளில் வலி இருந்தால் ஓர் எலும்பு சிகிச்சை நிபுணரிடம் செல்கிறீர்கள். இப்படி எந்த மாதிரி உடல் நலக் குறைவு ஏற்படுகிறதோ, அதற்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய பல்வேறு விதமான நிபுணர்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதே சமயம் மனநலப் பிரச்னை வந்தால் மட்டும், அதற்கு யாரிடம் சென்று சிகிச்சை பெறுவது என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. எங்கே செல்வது யாரிடம் பேசுவது என்று புரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
மனநலம் சார்ந்த பிரச்னைகளைக் குணப்படுத்தக் கூடிய நிபுணர்களில் சிலர், உளவியலாளர்கள், மனநல நிபுணர்கள், ஆலோசகர்கள், மனநலச் சமூகப் பணியாளர்கள், மனநலச் செவிலியர்கள். இந்த வகையில் உள்ள ஒவ்வொருவரையும் பற்றியும் சுருக்கமாக இங்கே காண்போம். குறிப்பாக, இவர்கள் எதில் நிபுணத்துவம் வாய்ந்து காணப்படுகிறார்கள், இவர்களுடைய திறன் என்னென்ன போன்றவற்றை நாம் தெரிந்துகொள்வோம். இதன்மூலம், யாருக்காவது மனநலப் பிரச்னைகள் வந்தால், அவர்கள் யாரைத் தொடர்புக்கொள்வது நல்லது என நம்மால் ஆலோசனை வழங்க இயலும்.