அஹ்லுல்பைத் இமாம்களின் வாழ்க்கையிலே காணப்பட்ட பிரச்சாரம், போராட்டம் மற்றும் எழுச்சி ஆகியவற்றின் கூறுகள் தொடர்பாக ஆன்மீகத் தலைவரின் கருத்துரை
நிறுவனமயப்படுத்தப்பட்ட இயக்கப்பாடு
இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அறிவாளியாகவும் போராளியாகவும், அதேபோன்று நிறுவனத் திறமை வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். அறிவுசார்ந்த மனிதராகவே அவரை நாம் அறிந்திருக்கிறோம். அவரின் போதனைகள், அவர் திரட்டியிருந்த அறிவுக்குழுமங்கள் அனைத்தும் அவருக்கு முன்னரும், பின்னருமான அஹ்லுல்பைத் இமாம்களின் வாழ்க்கைச் சரித்திரத்திலே தனித்துவமான ஒன்றாவே அமைந்திருந்தன. நிராகரித்தோர், ஊழல் செய்தோர், மேலும் அறியப்படாதோர் மூலமாக முந்திய நூற்றாண்டிலே சிதைக்கப்பட்டிருந்த இஸ்லாத்தின் மெய்யான கற்பிதங்களும், திருக்குர்ஆனின் அதிகாரபூர்வமான கருத்தாக்கங்களும் இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் மீளவும் சரியாக வெளிக்கொணரப்பட்டன.
இருந்தும், ஒரு பிரச்சாரத் தலைவராக அவரை நாம் மிகக்குறைவாகவே அறிந்திருக்கிறோம். ஆனால், இமாம் சாதிக் அலைஹிஸ்ஸாம் அவர்களோ, தொடர்ந்து பிரச்சாரத்திலேயே ஈடுபட்டிருந்தார். அது, அப்போதிருந்த அநீதியான அரசை, இமாம் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் போதனைகளின் அடிப்படையில் அமையப்பெற்ற ஒரு இஸ்லாமிய அரசாக மாற்றுவதற்கான பிரச்சாரமாக அமைந்திருந்தது. மேலும் இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ உமையாக்களை வீழ்த்தி, ‘அலவிய’ அரசான, அதாவது இமாம் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அடிப்படைவிதிகளில் அமையப்பெற்ற உண்மையான இஸ்லாமிய அரசதிகாரத்தை முன்நிறுத்துவதற்கு தொடர்ந்து களமமைத்துக் கொண்டிருந்தார்.
இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவு மற்றும் எழுச்சிப்போராட்டம் என்பனவற்றுக்கு அப்பால், நாம் மிகவும் அரிதாகவே அறிந்திருக்கின்ற அவருடைய ஆளுமையின் மூன்றாவது அம்சமானது, அவரிடம் காணப்பட்ட நிறுவனமயப்பட்ட அணுகுமுறையாகும். குராஸான், டிரான்ஸொக்சியா மற்றும் வட ஆபிரிக்காவரை விரிவுபட்டிருந்த இஸ்லாமிய உலகிலே ‘அலவிய’ அரசியல் இயக்கத்திற்கு உதவக்கூடிய விசுவாசிகளைக் கொண்ட ஒரு அற்புதமான சமூகத்தை அவர் உருவாக்கியிருந்தார்.
இங்கே, இமாமின் ‘நிறுவனமயப்படுத்தல்’ என்பது என்ன அர்த்தம் தருகிறது? அதாவது, இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஒரு பிரச்சினை தொடர்பாக மக்களுக்கு தெரிவிப்பதற்கு விரும்பிய போது, அத்தகவல், தமது தூதுவர்கள் மூலமாக ஒரு சமூகத்தின் அனைத்து மக்களையும் சென்றடையுமளவிற்கு திறன்பட தொடர்பாடப்பட்டிருந்தது என்பதே அர்த்தமாகும். மேலும், இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தூதுவர்களும், பிரதிநிதிகளும் எல்லா நகரங்களிலும் பிரசன்னமாயிருந்தமையால், இமாமின் ஆதரவாளர்கள் தங்களது சமய அரசியல் கடமைப்பாடுகள் குறித்து அவர்களை நாடி அறிந்துகொள்ள முடிந்தது என்பதே அர்த்தமாகும்.
அரசியல் கடமையானது, சமயக் கடமையைப்போன்று பெறுமானமிக்க ஒன்றேயாகும். அது அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தவகையில், இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், சமூகங்களிடையே இவ்வாறானவொரு பாரிய களத்தையும், நிறுவனமயப்படுத்தலையும் உருவாக்கியிருந்தார். இது மக்களுடைய உதவிகளின் மூலமாக அமையப்பெற்ற ஒரு பாரிய நிறுவனமயப்படுத்தலாக இருந்தது.
இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ உமையாக்களுக்கு எதிராகப் போராடினார். பனீ உமையாக்களுக்கு எதிரிலே இமாமின் வெற்றி உறுதியான போது, பனீ அப்பாசிகள் திடீரென்று ஒரு தடையாகவும், சந்தர்ப்பவாத அலையாகவும் உருவெடுத்தனர். இதனையடுத்து இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், உமவிகளுக்கும், அப்பாசிகளுக்கும் எதிராக தமது போராட்டத்தைத் தொடர்ந்து சென்றிருந்தார்.
செப்டம்பர் 05, 1980.