ஆக்கம்: ஆஷிகே மஃஸூமீன்
இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளார் அன்னை ஃபாத்திமா மஃஸூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் பிறந்த தினம் தொடர்பான ஒரு வரலாற்றுக் குறிப்பு.
அஹ்லுல்பைத் இமாம்களின் வரிசையில் 7வது இமாமாக இருக்கின்ற இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளார் அன்னை ஃபாத்திமா மஃஸூமா அவர்கள், மஃஸூமது கும் (கும் நகரின் புனிதப்பெண்), ஹஸ்ரத் மஃஸூமா என்றெல்லாம் பல்வேறு வகையில் உலக அஹ்லுல்பைத் நேசர்களின் மத்தியில் அறியப்படுகிறார்.
அன்னையவர்கள், இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களது மரியாதைக்குரிய அன்பு மனைவி அன்னை நஜ்மா காதூன் ஸலாமுல்லாஹி அலைஹா ஆகியோருக்கு, மதீனா முனவ்வராவிலே அல்லாஹு தஆலாவின் பேரருளாகக் கிடைக்கப் பெற்றிருந்தார்.
அன்னையவர்கள் உதயமாகிய வருடம் தொடர்பிலே கருத்துவேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவிப்பின்படி அன்னாரது பிறந்த தினமானது, துல்கஃதா 01 என்பதே மிகச்சரியானது. இந்தவகையில் உலகவாழ் முஸ்லிம்களுக்கும், அஹ்லுல்பைத் நேசர்களுக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னையவர்களின் பிறந்த தினத்தைப் பற்றி அறிவிக்கின்ற ரிவாயத்துக்களை இங்கு நாம் பகி;ர்ந்து கொள்கின்றோம்.
1. ‘ஃபாத்திமா மஃஸூமா அவர்கள் ஹிஜ்ரி 173யில் துல்கஃதா மாதத்தின் ஆரம்பத்தில் பிறந்தார்கள்’ என்பதாக ஷேய்க்; அலி நமாசி (ரஹ்) அவர்கள் (மரணம் ஹி 1405 ) குறிப்பிடுகிறார்.
2. ‘இமாம் காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளார் அன்னை ஃபாத்திமா (மஃஸூமா) அவர்கள், ஹிஜ்ரி 173யில் துல்கஃதா மாதத்தின் ஆரம்பத்தில் மதீனா நகரிலே பிறந்தார். மேலும், ஹிஜ்ரி 201யில் ரபீஉத்தானி மாதத்தின் 10யில் மரணித்தார்’ என்பதாக ஷேய்க் முல்லாஹ் முஹ்ஸின் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்.
ஃபாத்திமா மஃஸூமா அவர்கள் துல்கஃதா மாதத்தின் ஆரம்பத்திலேதான் பிறந்திருந்தார் என்பதை ஆய்வுரீதியில் நிறுவிய பிரபலமான அறிஞர்கள்:
1. அல்லாமா ஷேய்க் பஹ்ரானி (ரஹ்) – அவானிஉல் உலூம் – (அறபி), பாகம் 21, பக்கம் 328.
2. கலாநிதி ஷேய்க் முஹம்மத் காதி ஆமினி – ஃபாத்திமா பின்த் மூஸா காழிம் – (அறபி), பக்கம் 21.
3. ஷேய்க் அஹ்மத் சாதே – சிந்தகானே ஹஸ்ரத் மூசா இப்னு ஜஃபர் – (பாரஸி) பாகம் 2, பக்கம் 375.
மேலும் அன்னை ஃபாத்திமா மஃஸூமா அவர்கள் பிறந்த வருடம் ஹிஜ்ரி 173 ற்கு பதிலாக ஹிஜ்ரி 183 ஐ சில அறிவிப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதையும் காணமுடிகிறது.
இதனை, இரு காரணங்களுக்காக பிழையானது எனக் கருதப்படுகிறது.
1. இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றை கவனிக்கும்போது, இமாம் அவர்கள் ஹிஜ்ரி 183யில் ரஜப் மாதத்தின் 25வது நாளில் பக்தாத் சிறையிலே வைத்து ஷஹீதாக்கப்பட்டிருந்தார். மேலும், இமாமவர்கள் சிறையிடப்பட்டிருந்த காலப்பகுதியில் குறைந்தது 4 வருடங்களாவது அவர்கள் சிறையில் இருந்தார். அக்காலப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மதினாவில் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே ஃபாத்திமா மஃஸூமா அவர்கள் ஹிஜ்ரி 183யில் பிறந்திருக்க வாய்ப்பில்லை .
2. இமாம் காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மகள்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘ஃபாத்திமா’ என்றே பெயரிட்டிருந்தார். மேலும், அன்னை ஃபாத்திமா மஃஸூமா அவர்கள் மூத்தவராக காணப்பட்டார். இந்தவகையில் அவர், ஃபாத்திமா குப்றா என்ற அழைக்கப்பட்டார். சிலநேரங்களில் மேற்படி ரிவாயத்துக்கள், ஏனைய ‘ஃபாத்திமா’களில் ஒருவரைப் பற்றியதாகவே அமைந்திருக்கக் கூடும்.
எனவே ஃபாத்திமா மஃஸூமா அவர்கள் ஹிஜ்ரி 183யில் பிறந்திருக்கவில்லை. மேலும், அவ்வாறு பதிவு செய்திருப்போர், எண்ணிக்கையிலோ அல்லது எழுத்திலோ தவறுதலாக பதிந்திருக்கலாம். இந்தவகையில், ஹிஜ்ரி 173ம் வருடத்தில் அன்னையவர்கள் பிறந்திருந்தார் என்பதே மிகச்சரியானதாகும்.