(நபிகளாரும், ஹஸ்ரத் அலீ ஆகிய இருவரும் சமமானவர்கள் எனும் வாதத்தின் தொடர்…)
ஹாபிழ்: நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் சரியானதும், அனைத்து முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும். என்றாலும், ஹஸரத் அலீ (கர்ரமல்லாஹு வஜ்ஹஹு) அவர்கள், இறைத்தூதருடன் ஆத்மார்த்தமான ஒருமைப்பாட்டைக் கொண்டுள்ளார் எனும் நமது உரையாடலின் கருப்பொருளோடு, இவ்விடயம் எவ்வாறு தொடர்புபடுகிறது?
அழைப்பாளர்: இச்சம்பவத்திலே இறங்கிய திருக்குர்ஆனிய வசனத்தில் வரும் ‘أنفسنا’ எனும் சொல்லினூடாகவே நாம் ஆதாரத்தை முன்வைத்து நிரூபிக்கவுள்ளோம். ஏனெனில், இச்சம்பவத்தில் பல்வேறுபட்ட பாரிய விடயங்கள் தெளிவாகவும், வெளிப்படையாகவும் உள்ளன.
முதலாவது, இச்சம்பவம் பெருமானார் (ஸல்) அவர்களின் சத்தியநிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி அவர் அசத்தியத்தில் இருந்திருந்தால், இவ்வாறான தெய்வீக சாபத்தை வேண்டியிருந்த விவாதத்திற்கு முன்வந்திருக்கமாட்டார். அவ்வாறே, கிறிஸ்தவப் பெரியார்களோ களத்திலிருந்து பின்வாங்கிவிடும் சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கமாட்டாது.
இரண்டாவது, இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ஆகியோர் பெருமானார் (ஸல்) அவர்களின் பிள்ளைகள் என்பதாக இவ்வசனம் அறிவித்துள்ளது. (வாரிசு தொடர்பில் முதலாம் நாள் இரவில் இதனைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன்).
மூன்றாவது, ஹஸரத் அலீ, ஹஸரத் ஃபாத்திமா, இமாம்களான ஹஸன் மற்றும் ஹுஸைன் (அலை) ஆகியோர் இறுதித்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு படைப்புகளில் சிறந்தோராகவும், நபிகளாரின் நேசத்திற்குரியவர்களாகவும் இருக்கின்றனர் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணமாகிறது. இது தொடர்பாக உங்களுடைய இமாம்களான ஸமஹ்ஷரி, பைழாவி, ஃபஹ்ர் ராஸி மற்றும் இவர்கள் அல்லாத ஏனைய அறிஞர்களும் எழுதியிருக்கிறார்கள்.
நான்காவது, ஹஸ்ரத் அலீ நபித்தோழர்கள் அனைவரையும் விட மேலானவராகவும், ஏனையோரைவிடவும் சிறப்பானவராகவும் இருந்ததன் காரணமாக அல்லாஹ் அவரை இறைத்தூதரின் ஆத்மாவோடு ஒன்றிணைத்து (أنفسنا) இவ்வசனத்தில் குறிப்பிட்டிருக்கிறான்.
குறிப்பாக, இமாம் ஜாருல்லாஹ் ஸமஹ்ஷரி அவர்கள், இவ்வசனம் தொடர்பிலான ஒரு விரிவான வியாக்கியானத்திலே ‘ஆலுல் அபா’ (போர்வையுடையோர்) எனும் இவ் ஐவரின் ஒற்றுமையும், சமமானதன்மையும் தொடர்பில் பல்வேறு யதார்த்தங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஒரு போர்வைக்குள் நபிகளாரோடு இடம்பிடித்துக்கொண்ட போர்வையுடையோரின் சிறப்பிற்கு ஆதாரமாக இருக்கும் இவ்வசனத்தை விடவும் ஒரு பலமான ஆதாரம் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
மேற்படி வசனத்திலே வரும் ‘أنفسنا’ என்ற சொல்லினால் நாடப்படுவது, இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமல்ல. ஏனெனில், அழைப்புக் கட்டளையானது, வேறொன்றையே வேண்டி நிற்கும். அதாவது, மனிதன் ஒருபோதும் தன்னைத் தானே அழைப்பது கிடையாது. எனவே, பெருமானாரின் ஆத்மார்த்தமான அந்தஸ்தில் இருக்கும் வேறொருவரை அழைப்பதே இங்கே நாட்டமாகும்.
ஷீஆ மற்றும் சுன்னிப் பிரிவுகளைச் சேர்ந்த குர்ஆனிய விரிவுரையாளர்கள், ஹதீஸ்கலை அறிஞர்களில் முதன்மையானோரின் ஏகோபித்த (இஜ்மாஃ) கருத்தின்படி, ஹஸரத் அலீ, ஹஸரத் ஃபாத்திமா, இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ஆகியோரைத் தவிர வேறெவரும் நபிகளாருடன் ‘முபாஹலாஹ்’வில் கலந்துகொள்ளவில்லை. எனவே, ‘أبنائنا’ என்பதன் மூலம் இமாம்களான ஹஸனும் ஹுஸைனும், ‘نساءنا’ என்பதன் மூலம் ஹஸரத் ஃபாத்திமா ஸஹ்றாவும் கருதப்பட்டு கழிந்துவிடுகிறார்கள். இப்போது, ‘أنفسنا’ என்று அழைக்கப்படுவதற்கு, அப்படியான புனித அந்தஸ்தில் இடம்பிடிப்பதற்கு ஹஸரத் அலீ (அலை) அவர்களைத் தவிர வேறெவரும் இருக்கவில்லை.
எனவே, ‘أنفسنا’ எனும் வார்த்தையின் மூலம் நபிகளாருக்கும், ஹஸரத் அலீக்கும் இடையில் ஆத்மார்த்தமான ஒருமைப்பாடு இருப்பது நிரூபணமாகிறது. அல்லாஹு தஆலா ஹஸரத் அலீ (அலை) அவர்களை, பெருமானார் (ஸல்) அவர்களின் نفس ஆக அழைத்திருக்கிறான். இவ்விரு ஆத்மாக்களுக்கும் இடையில் மெய்நிலை ஒருமைப்பாடு இருப்பது அசாத்தியமானது என்பதால், நிச்சயமாக இது புறநிலை ஒருமைப்பாட்டையே இங்கே குறித்து நிற்கிறது.
பெருந்தகைகளான நீங்கள் மிகவும் கற்றறிந்தோராக இருப்பவர்கள். இஸ்லாமிய சட்டப் பொதுவிதியியல் (இல்முல் உஸூல் அல்லது உஸூலுல் பிக்ஹ்) துறையில் ஒரு சொல்லை புறநிலையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒன்றின்மீது சுமத்துவதானது, புறநிலையில் மிகவும் தூரமாக இருக்கும் ஒன்றின்மீது சுமத்துவதைவிட முதன்மையானதாகும். புறநிலையில் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒன்று, எல்லா விடயங்களிலும் சமமாகவும், அனைத்து பரிபூரண குணாம்சங்களில் ஒன்றாகவும் பங்குகொள்ளக் கூடியது. எனினும், ‘ஆதாரபூர்வமாக விதிவிலக்காக்கப் படுவதைத்தவிர’ எனும் விடயமும் இங்கே வந்திருப்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். ஹதீஸ் மற்றும் இஜ்மாவின் மூலம் விதிவிலக்காக்கப் பட்டிருப்பதானது, நபிகளாருக்கேயுரிய நுபுவ்வத்தும், வஹி அருளப்படுவதுமாக உள்ளது. இவ்விசேடத்துவத்தில் நபிகளாரோடு ஹஸ்ரத் அலீயை இணையாக நாம் கருதுவதில்லை என்பதை முன்னரே நாம் தெரிவித்திருக்கிறோம்.
எனினும், இமாம் அலீ அவர்கள் இவ்வசனத்தின்படி ஏனைய சிறப்பம்சங்களில் நபிகளாருக்கு இணையாக இருக்கிறார். நிச்சயமாக இச்சிறப்பு அல்லாஹு தஆலாவிடமிருந்து இறைத்தூதரின் மூலமாக ஹஸ்ரத் அலீக்குக் கிடைத்திருக்கிறது. இது ‘ஆத்மார்த்தமான ஒருமைப்பாடு’ எனும் எமது வாதத்திற்கு ஆதாரமாகும்.
ஹாபிஸ்: தன்னை அழைத்தலின் மூலம் புறநிலையிலான ஒன்றை நாடப்படவில்லை என்பதாகவோ, புறநிலையான ஒன்று வேறொரு புறநிலையை விடவும் முதன்மையானதல்ல என்பதாகவோ ஏன் இருக்கக் கூடாது?
அழைப்பாளர்: குதர்க்கம் பண்ணுவதனூடாக சபையின் நேரத்தை வீணாக்கி, நீதியின் பாதையை விட்டும் விலகிச்செல்ல வேண்டாம். நீங்கள் விவாதமொன்றில் தடைப்பட்டு நிற்கின்றபோது நேர்மையோடு அதனை ஏற்றுக்கொண்டு விலகிவிடுங்கள். நிச்சயமாக உங்களைப் போன்ற நேர்மையுள்ள, கண்ணியமான அறிஞரிடத்தில் குதர்க்கமாக வாதம் புரிவதை நாம் எதிர்பார்க்க மாட்டோம்.
ஏனெனில், நப்ஸ் என்ற வார்த்தையின் பிரதிபலிப்பு புறநிலை அர்த்தத்தில், வேறொரு புறநிலையிலான ஒன்றை விடவும் விசாலமான ஒன்றாக இருப்பதை நீங்களும்கூட அறிவீர்கள். சான்றோரிடத்திலும்கூட இது நிரூபணமான ஒன்றே. சுன்னாவில், அறபு-அறபு அல்லாத சான்றோர்களிடத்தில், இலக்கியவாதிகள், கவிஞர்கள் ஆகியோரிடத்தில் ‘ஒருமைப்பாடு அழைப்பு’ (தன்னோடு பிறரை ஒன்றிணைத்து அழைத்தல்) புறநிலை அர்த்தத்தில் கையாளப்பட்டிருப்பது பரவலான ஒன்று. ஏலவே இதனைக் கூறியிருக்கிறேன். இது மீளவும் மீட்டப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கிடையில், ‘நீ என்னுடைய உயிராக இருக்கிறாய்’ என்று கூறியிருக்கிறார்கள். குறிப்பாக, ஹஸ்ரத் அலீ தொடர்பாக இவ்வாறான அர்த்தத்தில் ஹதீஸ்கள் பல வந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் போதுமான அளவுக்கு நமது நாட்டத்தை உறுதி செய்வதற்கான ஆதாரமாக உள்ளன.
இறைத்தூதரும் ஹஸ்ரத் அலீயும் சமமானவர்கள் என்பதற்கான ஹதீஸ் சான்றுகள்
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் தனது முஸ்னதில், ஷாபிஃயி அறிஞரான இப்னு மஆஸிலி அவர்கள் தனது மனாகிபில், முஅஃப்பக் பின் அஹ்மத் கதீப் குவாரஸ்ம் அவர்கள் தனது மனாகிபில் பின்வரும் ஹதீஸை பதிவு செய்திருக்கிறார்கள். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பலமுறை பின்வருமாறு அருளினார்கள்.
علي منّي و أنا منه من أحبّه فقد أحبّني و من أحبّني فقد أحبّ الله
‘அலீ என்னில் நின்றும் உள்ளவர். நான் அலீயில் நின்றும் உள்ளவர். அவரை நேசிக்கும் எவரும் என்னையும் நேசிக்கிறார்.’
இமாம் இப்னு மாஜாவும்கூட தனது சுனன் கிரந்தத்தின் முதலாம் பாகம் 92 பாடத்தில், இமாம் திர்மிதி தன்னுடைய சுனன் கிரந்தத்தில், இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இமாம்களான அஹ்மத், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா ஆகியோரைத் தொட்டும் தனது சவாயிக் எனும் கிரந்தத்தில் ஹஸ்ரத் அலீயின் சிறப்பு தொடர்பாக அறிவிக்கின்ற 40 ஹதீஸ்களில் 6வது ஹதீஸில், இமாம் அஹ்மத் இப்னு கம்பல் தனது முஸ்னத் கிரந்தத்தில் 4வது பாகத்தில், முஹம்மத் பின் யூசுப் கன்ஜி ஷாஃபியி அவர்கள் முஸ்னத் இப்னு சம்மாக் எனும் கிரந்தத்தின் 4வது பாகம் 47வது தலைப்பில், இமாம் தபரானி அவர்கள் தனது முஃஜம் அல்கபீர் எனும் கிரந்தத்தில், இமாம் அபூஅப்துர்ரஹ்மான் நஸாயி அவர்கள் தனது அல்-கஸாயிஸ் நூலில், சுலைமான் பல்ஹி ஹனபி அவர்கள் யனாபீஉல் மவத்தா கிரந்தத்தில் 8வது தலைப்பில் ஜைஷ் பின் ஜனாதா சலூலி என்பவரைத் தொட்டும் பின்வருமாறு அறிவிக்கிறார்கள். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின்போது அறபாவுடைய நாளில் பின்வருமாறு அருளினார்கள்.
علي منّي و أنا من عليّ ولا یؤدّي عنّي إلاّ أنا أو علّي
‘அலீ என்னில் நின்றும் உள்ளவர். நான் அலீயில் நின்றும் உள்ளவர். என்னை எவரும் பின்பற்றமாட்டார். அவர் நானாகவோ அல்லது அலீயாகவோ இருந்தாலேதவிர.’
சுலைமான் பல்ஹி ஹனபி அவர்கள் யனாபீஉல் மவத்தாவில் 7வது தலைப்பில் ஸவாயிதைத் தொட்டும், முஸ்னத் அஹ்மத், இப்னு அப்பாஸ் அவர்களைத் தொட்டும் பின்வரும் ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அன்னை உம்மு ஸல்மா அவர்களிடத்தில் பின்வருமாறு அருளினார்கள்.
عليّ منّي و أنا من عليّ لحمه من لحمي و دمه من دمي و هو منّي بمنزلة هارون من موسی یا أمّ سلمة إسمعی و إشهدی هذا عليّ سیّد المسلمین
‘அலீ என்னில் நின்றும் உள்ளவர். நான் அலீயில் நின்றும் உள்ளவர். அவருடைய சதைப்பிண்டம் என்னுடைய சதைப்பிண்டத்தில் நின்றும் உள்ளது. அவருடைய இரத்தம் என்னுடைய இரத்தத்தில் நின்றும் உள்ளது. ஹஸ்ரத் மூஸா அவர்களிடத்தில் ஹஸ்ரத் ஹாரூன் அவர்கள் கொண்டிருந்த அந்தஸ்தில் இவர் என்னில் நின்றும் இருக்கிறார். இவர் அதாவது, அலீ முஸ்லிம்களின் தலைவராக இருக்கிறார் என்பதற்கு உம்முஸல்மாவே! செவிமடுத்து, சாட்சியாளராய் இருந்துகொள்ளுங்கள்.’
ஹுமைதி அவர்கள் அல்-ஜம்உ பைனஸ் ஸஹீஹைன் எனும் நூலிலும், இப்னு அபில் ஹதீத் அவர்கள் ஷரஹு நஹ்ஜுல்பலாகா கிரந்தத்திலும் பின்வரும் ஹதீஸை பதிவு செய்திருக்கிறார்கள். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
عليّ منّي و أنا منه و عليّ منّي بمنزلة الرّأس من البدن من أطاعه فقد أطاعني و من أطاعني فقد أطاع الله
‘அலீ என்னில் நின்றும் உள்ளவர். நான் அவரில் நின்றும் உள்ளவர். உடலில் தலை பெற்றிருக்கும் அந்தஸ்தில் என்னில் அலீ இருக்கிறார். யார் அவருக்குக் வழிப்பட்டு நடக்கிறாரோ அவர் எனக்கு வழிப்பட்டு நடந்துவிட்டார். யார் எனக்கு வழிப்பட்டு நடக்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடந்துவிட்டார்.’
முஹம்மத் பின் ஹரீழ் தபரீ அவர்கள் தன்னுடைய தப்ஸீரிலும், மீர் செய்யித் அலீ ஹமதானி அவர்கள் மவத்ததுல் குர்பா நூலின் 8வது மவத்தாவிலும், நபிகளாரைத் தொட்டு பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்.
إنّ الله تبارک و تعالی أیّد هذا الدّین بعليّ و إنّه منّي و أنا منه و فیه أنزل أفمن کان علی بیّنة من ربّه و یتلوه شاهد منّه
‘நிச்சயமாக அல்லாஹு தஆலா இம்மார்க்கத்தை அலீயின் மூலம் உறுதிப்படுத்தி வைத்துள்ளான். நிச்சயமாக அவர் என்னில் நின்றும் உள்ளவர். நான் அவரில் நின்றும் உள்ளவர். தன்னைத் தொடர்ந்து தன்னில் நின்றுமான சாட்சியாளர் ஒருவர் வரும் நிலையில், இறைவனிடத்தில் நின்றுமான தெளிவான அத்தாட்சியில் இருப்பவரா? எனும் வசனம் அவருடைய விடயத்தில் இறங்கியதாகும்.’
மேலே கூறப்பட்ட வசனத்தில், இறைவனிடத்தில் நின்றுமான அத்தாட்சியின் மீதிருப்பவர் என்பது ஹஸரத் முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறிக்கின்றது. அவரை அடுத்து அவரில் நின்றுமான ஒரு சாட்சியாளர் வருவார் என்பது இமாம் அலீ (அலை) அவர்களைக் குறிக்கிறது.
ஷேய்க் சுலைமான் பல்ஹ்கி ஹனஃபீ அவர்கள் யனாபீஉல் மவத்தா கிரந்தத்தின் 7வது தலைப்பை இவ்விடயத்திற்கு ஒதுக்கி அதனை ஹஸ்ரத் அலீ அவர்கள் இறைத்தூதரின் ஆத்மாவைப் போன்றவர் எனும் தலைப்பில் அமைத்திருக்கிறார். இத்தலைப்பின் கீழ் 24 ஹதீஸ்களை பல்வேறு அறிவிப்பாளர் வரிசைகளில், வேறுபட்ட சொற்பிரயோகங்களில் இறைத்தூதரைத் தொட்டும் பதிவு செய்துள்ளார். அலீ எனது ஆத்மாவின் அந்தஸ்தில் இருக்கிறார் என்று நபிகளார் அருளினார்கள்.
இந்தத் தலைப்பின் இறுதியில் ஹஸ்ரத் ஜாபிர் (ரழி) அவர்களைத் தொட்டும் ஹதீஸ் ஒன்றை பின்வருமாறு பதிவு செய்துள்ளார். நபிகளார் அருளியதாக நான் செவிமடுத்தேன் அலீ அவர்களில் விசேட அம்சங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுகூட ஒருவருக்கு அமைந்துவிட்டால் அவரின் சிறப்பிற்கும், மகிமைக்கும் போதுமானதாக அதுவே ஆகிவிடும். அச்சிறப்பம்சங்கள் ஹஸ்ரத் அலீ தொடர்பாக நபிகளார் அருளியவற்றில் பின்வருமாறு உள்ளடங்கியிருக்கின்றன.
من کنت مولاه فعليّ مولاه. وقوله عليّ منّي کهارون من موسی. وقوله عليّ منّي و أنا منه وقوله عليّ منّي کنفسی طاعته طاعتي و معصیته معصیتي. وقوله حرب عليّ حرب الله و سلم عليّ سلم الله. وقوله وليّ عليّ وليّ الله وعدوّ عليّ عدوّ الله. وقوله عليّ حجّة الله علی عباده وقوله حبّ عليّ إیمان و بغضه کفر. وقوله حزب عليّ حزب الله و حزب أعدائه حزب الشیطان وقوله عليّ مع الحقّ والحقّ معه لا یفترقان وقوله عليّ قسیم الجنّة والنّار. وقوله من فارق عليّا فقد فارقني ومن فارقني فقد فارق الله. وقوله شیعة عليّ هم الفائزون یوم القیامة
‘யாருக்கெல்லாம் நான் தலைவனாக இருந்தேனோ அவருக்கெல்லாம் அலீ தலைவராக இருக்கிறார். ஹஸ்ரத் மூஸாவில் நின்றும் ஹஸ்ரத் ஹாரூனைப் போன்று அலீ என்னில் நின்றும் உள்ளார். அலீ என்னில் நின்றும் உள்ளவர். நான் அலீயில் நின்றும் உள்ளவர். அலீ என்னில் நின்றும் என்னுடைய ஆன்மாவைப் போன்றவர். அவருக்கு வழிப்பட்டு நடப்பது, எனக்கு வழிப்பட்டு நடப்பதைப் போன்றதாகும். அவருக்கு மாறுசெய்து நடப்பது, எனக்கு மாறுசெய்து நடப்பதைப் போன்றதாகும். அலீயோடு போர் புரிவது, இறைவனோடு போர் புரிவதாகும். அலீயோடு சமாதானமாகிவிடுவது இறைவனோடு சமாதானமாகிவிடுவதாகும். அலீயை நேசிப்பது இறைவனை நேசிப்பதாகும். அலீயைப் பகைப்பது, இறைவனைப் பகைப்பதாகும். அலீ இறையடியார்களுக்கு இறைவனின் அத்தாட்சியாக இருக்கிறார். அலீயை நேசிப்பது ஈமானாகும். அவரைப் பகைப்பது குப்ராகும். அலீயின் படை அல்லாஹ்வின் படையாகும். அலீயின் எதிரிகளின் படை ஷைத்தானின் படையாகும். அலீ சத்தியத்தோடு உள்ளார். சத்தியம் அவரோடே உள்ளது. அவ்விரண்டும் ஒன்றைவிட்டும் ஒன்று பிரிந்துவிட மாட்டா. அலீ சுவனத்தையும், நரகத்தையும் பங்கிடுபவர். அலீயை விட்டும் தனித்துப் போனவர் என்னைவிட்டும் தனித்துவிட்டார். என்னைவிட்டும் தனித்துப் போனவர் இறைவனை விட்டும் தனித்து விட்டார். அலீயைப் பின்பற்றுவோர் (ஷீஅது அலீ), மறுமை நாளில் அவர்களே வெற்றியார்கள்.’
மேற்கூறிய கிரந்தத்தில் குறித்த தலைப்பின் இறுதியில் வேறொரு ஹதீஸை பின்வருமாறு பதிவு செய்துள்ளார். ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
أقسم بالله الذي بعثني بالنبوّة و جعلني خیر البريّة أنّک لحجّة الله علی خلقه وأمینه علی سرّه و خلیفة الله علی عباده
‘நபித்துவத்திற்கு என்னைத் தெரிவுசெய்து மிகச்சிறந்த படைப்பாக என்னை அமைத்துவிட்ட அல்லாஹ்வின்மீது சத்தியமாக நிச்சயமாக, (அலீயே!) நீர் அல்லாஹ்வின் படைப்புக்களுக்கு அவனது அத்தாட்சியாகவும், அல்லாஹ்வின் அந்தரங்கத்தின்மீது அவனது நம்பிக்கையாளராகவும், அல்லாஹ்வின் அடியார்களின்மீது அவனது பிரதிநிதியாகவும் (கலீஃபாவாகவும்) இருக்கிறீர்கள்.’
இது தொடர்பான ஹதீஸ்கள் ஸஹீஹான கிரந்தங்களிலும், உங்களது அறிஞர்களே உறுதியாக ஏற்றுக்கொண்டுள்ள கிரந்தங்களிலும் அதிகமாக வந்துள்ளன. எனவே, இவ்வாறு மேற்கூறிய விடயங்களைக் கருத்திற்கொண்டாலோ அல்லது பின்னர் இவற்றை நீங்களாக ஆராய்ந்தாலோ, இவைகள் அனைத்தும் இப்புறப்பொருளுக்கான நெருங்கிய சான்றுகள் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள். எனவே, மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆனில் வந்துள்ள ‘أنفسنا’ என்ற சொற்றொடர் அறிவு ரீதியாகவும், செயல் ரீதியாகவும் அவ்வாறே குலம், கோத்திரம், புறத்தோற்றம் மற்றும் நற்குணங்களின் அடிப்படையில் நபிகளாரோடு ஹஸ்ரத் அலீயின் தொடர்பும், ஒருமைப்பாடும் மிகவும் பலமாக இருப்பதற்கான தெளிவான சான்றாகும்.
நீங்கள், கற்றறிந்தோராக இருப்பதால் இன்ஷாஅல்லாஹ் வீண்வாதங்களிலிருந்து நிச்சயமாக ஒதுங்கியே இருப்பீர்கள். எனவே, மேற்கூறிய திருக்குர்ஆனிய வசனம் நமது நோக்கத்தையும், வாதத்தையும் உறுதிசெய்வதற்கு பலமான சான்றாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், தங்களுடைய இரண்டாவது வினாவுக்குரிய பதிலையும் இவ்வசனத்திலிருந்தே வழங்குகிறேன்.
(தொடரும்…)