அஷ்-ஷேய்க் அஜ்மீர் முஸ்தஃபவீ
இறைவன், உலகின் முதல் மனிதர் ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கும் நோக்கில், தனது வானவர்களோடு உரையாடுகிறான். தான் பூமியில் தனது பிரதிநிதியைப் படைக்கப்போவதாக மலக்குகளிடம் கூறிய தருணத்தில், மலக்குகள் இறைவனைப் பார்த்து ‘இரத்தம் ஓட்டக்கூடியவர்களையா படைக்கப்போகிறாய்!’ என ஆச்சரியத்தோடு கேட்டனர். அப்போது, இறைவன் ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறிவிட்டு, முதல் மனிதரான ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கிறான். (பகரா:30)
மனிதப் படைப்பின் முதல் கட்டமாக இறைவனுக்கும், அவனது மலக்குகளுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் எமக்குப் பலவிடயங்களைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. மலக்குகள், இறைவனிடம் ஆச்சரியமாகக் கேட்ட விடயத்தைப் பற்றி ஆராய்வதென்றால் பலஆய்வுகள் தேவை. இங்கு நாம் இறைவனின் பதிலில் இருந்தே எமது தேடலைத் தொடங்குவோம்.
இறைவன், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறுகிறான். இறைவன் தனது பதிலில் முற்றுமுழுதாக மலக்குகளின் ஆச்சரியத்தை மறுக்கவில்லை. அதாவது, இரத்தம் ஓட்டுகின்ற சமூகத்தின் இருப்பை அல்லது மனிதன் இரத்தமோட்டுவதை இறைவன் முற்றுமுழுதாக மறுக்கவில்லை. நேரடியாக மலக்குகளைப் பார்த்து, நீங்கள் தவறாகக் கூறிவிட்டீர்கள் என்றும் இறைவன் கூறவில்லை. அதேபோல், மனிதன் மிகவும் தூய்மையானவன் என்றோ, நீங்கள் கூறுவது சரியல்ல என்றோ அல்லது மனிதன் இரத்தமோட்டிக் கொண்டுதான் இறுதிவரைக்கும் வாழப்போகிறான் என்றோ கூறவில்லை.
இறைவனுடைய இப்பதில், மனிதர்களை இரு வகையாகப் பிரித்து நோக்குவதற்கு எமக்குக் கற்றுத்தருகிறது. வரலாற்றில் போற்றப்படும் மிகவும் சங்கைநிறைந்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்களை, ஓர் திசையிலும், அவர்களுடைய இரத்தத்தை இப்பூமியில் சிந்தவிட்ட ஓர் பிரிவினரை மற்றோர் திசையிலும் வைத்து நோக்குவதற்கு எமக்குக் கற்றுத் தருகிறது.
இறைவனுடைய வார்த்தை ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்பது மனிதர்களாகிய எங்களது புத்திக்கு, சிலவிடயங்கள் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. அதாவது, மனிதன், தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொண்டு மலக்குகளைவிடவும் உயர்வான இடத்தை அடைந்திட முடிவும். அவ்வாறே, தன்னுடைய இருப்பைத் தாழ்த்திக்கொண்டு மிருகங்களைவிடவும் இழிவான நிலைக்கு சென்றுவிட முடியும்.
அவன் பயிற்றுவிக்கப்பட்ட விதம்தான், இவ்விரு வழிகளின்பாலும் மனிதர்களை வழிநடாத்திச் செல்வதற்கான முழுப்பங்கையும் வகிக்கிறது. வேறுவகையில் சொல்லப்போனால், மறுமையில் எமது வசிப்பிடத்தைத் தீர்மானிக்கும் முக்கிய பாத்திரங்களாக, எம்மை பயிற்றுவிக்கும் ஆசான்களும், எமது குடும்பமும், சமுதாயமும் திகழ்கின்றன. எமது இவ்வுலக வாழ்வினை இறைவழிகாட்டலுக்கேற்ப வகுத்துக் கொண்டால் மறுமையில் சுவனமும், அதற்கு மாறாக எமது வாழ்வினை மனம்போன போக்கில் செலுத்தினால் மறுமையில் நரகமும் எமது வசிப்பிடமாக அமைந்துவிடும். மறுமைக்கான மிகப்பெரும் நிரந்தரமான வசிப்பிடத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாகவே எமது பயிற்றுவிப்பு இருக்கிறது. மறுமையில் ஹஸ்ரத் ஸைனப் (அலை) மற்றும் அலீ அஸ்கர் (அலை) ஆகிய இருவரும் ஒரு புறத்திலும், இவர்களுக்கு எதிராக வாளேந்திய கூட்டம் மறுபுறத்திலும் இருந்தால், அங்கு எவ்வாறு இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். இவைகள் இறைவனுக்கும், மலக்குகளுக்குமிடையில் இடம்பெற்ற உரையாடலை எமக்கு விளக்குகின்றன. ஆஷூறாவினாலும், இமாம் ஹுஸைனாலும் பயிற்றுவிக்கப்பட்ட மனிதன், திருக்குர்ஆனிய பாசறையில் வளர்க்கப்பட்டவன் ஆவான். அவனே, பூமியில் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுபவன் ஆவான்.
வாழ்வும் மரணமும் பற்றிய எதார்த்தம்
வாழ்க்கை என்றால் என்ன? உலக வாழ்வின் இறுதிவரைக்குமான மனிதனின் கடமைகள் எவை? மனித வரலாற்றில் இக்கேள்விகளுக்கு பலவிதமான விடைகள் தரப்பட்டுள்ளன. சிலர் தங்களுடைய உலக இன்பங்களைக் களிப்பதற்கும், தேவைகளை நிறைவேற்றுவதற்குமான இடமாகவே உலகைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதுவே வாழ்க்கை பற்றிய கேள்விக்கான அவர்களது விடையாக இருக்கிறது. தங்களுடைய மனோஇச்சையைக் கட்டுப்படுத்த முடியாமல் இவர்கள் விலங்குகளைப்போல் வாழ்கின்றனர். தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பலவிதமான முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய அனைத்து தீயசெயல்களிலும், அவர்களின் ஆத்மாவே முன்னுரிமை பெறுகிறது. ஆன்மா, பாவத்தில் மூழ்கும்போது அவர்களின் புலனுறுப்புக்களும், அறிவும் பாவத்திலேயே தன் ஆயுளைக்; கழிக்க நேரிடுகிறது.
இவ்வாறு பாரதூரமான பாவச்செயலொன்றைப் புரிந்ததனூடாக, மனித வரலாற்றிலே தனக்கொரு கருப்புப் பக்கத்தினை வரைந்துகொள்வதற்கு ஹிஜ்ரி 61இல் முயன்று, அதில் வெளிப்படையாகவே ஒரு குழுவினர் வெற்றிபெற்றனர். ஆம், உலகின் அருட்கொடையாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களின் பேரரும், சுவனத்துப் பெண்களின் தலைவி அன்னை பாத்திமா (அலை) மற்றும் இறைத்தூதரின் முதலாவது பிரதிநிதி இமாம் அலீ (அலை) ஆகியோரின் புதல்வருமான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களையும், அவர்களின் குடும்பம் மற்றும் தோழர்களையும் அற்பவுலகின் ஆசைக்காக உமைய ஆட்சியாளன் யஸீத் பின் முஆவியாவின் கூலிப்படைகள், கர்பலா எனும் பலிபீட பூமியிலே கொன்றுகுவித்தனர். யஸீதியப் படையினரின் பார்வையில் வாழ்க்கை என்பது வெறுமனே உலக ஆசைகளை நிறைவுசெய்து, தங்களின் மனோஇச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதாகும். இமாம் அவர்களின் பார்வையிலும், அவர்களின் தோழர்களின் பார்வையிலும் ‘வாழ்க்கை’ என்பது, வேறொரு கருத்தினைக் கொண்டுள்ளது. இவ்வாழ்க்கையின் விளக்கமும், ஒரு தனிமனிதனின் அல்லது ஒரு குழுவின் பயிற்றுவிக்கப்பட்ட தன்மையிலேயே அமைந்துள்ளது. யஸீதின் பயிற்றுவிப்பில், அவனது குடும்பப் பின்னணி மிகவும் முன்னிலை வகிக்கிறது. நபிகளாரின் குடும்பமான அஹ்லுல்பைத்துக்களை விரோதிகளாகப் பார்த்து, அவர்களை அழிப்பதற்காகவே அவனுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. மறுபுறத்தில் நபிகளாரின் பேரர், சுவனத்து வாலிபர்களின் தலைவர் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் முற்றிலும் அதற்கு மாற்றமாக இருப்பதைக் காணலாம்.
யஸீதுடைய கூலிப்படையினர் வாழ்க்கை என்றாலே இவ்வுலகம் மட்டுமே என்று வாழ்ந்தவர்கள். வாழ்க்கையின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு மறுத்தவர்கள். திருக்குர்ஆன் கூறுவது போன்று அவர்கள் வாழ்க்கையின் வெளித்தோற்றத்தை மட்டுமே அறிந்தவர்கள். (ரூம்:07). வாழ்க்கையின் புறத்தோற்றம் மனோஇச்சைக்கும், ஆசைக்கும் உட்பட்டதாகும். ஆனால், வாழ்வின் அகத்தோற்றம் மனித பகுத்தறிவுக்கும், இறைகட்டளைக்கும் உட்பட்டதாகும். இறைகட்டளையை நிறைவேற்றுவதை வாழ்வின் எதார்த்தமாக நோக்குவோரின் பார்வையில் மறுமையே நிரந்தர வசிப்பிடமாகும். (அன்கபூத்:64).
ஆஷூறாவின் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட மனிதர்களின் பார்வையில் மறுமையே நிரந்தர வசிப்பிடமாக அமைகிறது. ‘ஈமான் கொண்டோரே! அல்லாஹ்வும், அவனது தூதரும் உங்களை, உங்களுக்கு உயிரளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்…’ (அன்ஃபால்:24). இவ் இறைவசனத்தினை பிரதிபளிப்பதாகவே அவர்களின் வாழ்க்கை அமைகிறது.
ஆஷூறாவின் பாசறையில் கல்விபயிலும் மாணவர்களின் ஆசானான இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், மக்காவை விட்டும் வெளியேறும்போது, ‘புகழனைத்தும் இறைவனுக்கே! இறைவனின் சாந்தியும், சமாதானமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது உண்டாகட்டும்! மரணம் என்பது மனிதர்களின் கழுத்தில் பிணைக்கப்பட்ட ஒரு மாலையைப் போன்றதாகும்.’ (அல்-லுஹூஃப், செய்யித் இப்னு தாவூஸ், பக் 26) என்றார்கள்.
இமாமவர்களின் இக்கூற்றிலிருந்து இருவிடயங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒன்று, மரணம் என்பது இறைவனால் அனைவருக்கும் விதிக்கப்பட்ட ஓர் தீர்ப்பாகும். அதிலிருந்து யாராலும் தப்பிக்கவே முடியாது.
இரண்டாவது, மரணம் மனிதர்களுக்கு ஓர் அலங்காரப் பொருளாகும். ஓர் இளம்பெண்ணின் கழுத்தினை அலங்கரிக்கும் மாலையைப் போன்றதே மரணமாகும். உலக வாழ்க்கை மனிதர்களுக்குத் தூக்கத்தைப் போன்றதாகும். மரணம் அவர்களைத் தழுவிவிட்டால் அவர்கள் விழிப்படைந்து விடுகின்றனர். எனவே, மனிதனுக்கு வாழ்வின் எதார்த்தத்தைப் புரியவைக்கும் ஓர் சாதனமாக மரணம் திகழ்கிறது. இதனால்தான், இமாம் இவ்வாறு கூறினார்கள், ‘எனது தந்தையைக் காண்பது எனக்கு, ஹஸ்ரத் யஃகூப் (அலை) அவர்கள் நபி யூஸுப் (அலை) அவர்களைச் சந்தித்ததைப் போன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.’ இமாம் அவர்கள் தனது உரையின் தொடரில், ‘யார் இறைவனைக் காண்பதற்கு விரும்புகிறாரோ அவர் எங்களோடு வாருங்கள்’ (அல்லுஹூப், செய்யித் இப்னு தாவூஸ், பக் 26) என்று குறிப்பிட்டார்கள்.
இறைவனைச் சந்திப்பதற்கான வாழ்க்கைதான் மரணத்தை என்பதாக தன்னுரையிலே, இமாம் எடுத்துக் கூறியிருப்பது கவனத்திற்கொள்ளத் தக்கதாகும்.
மனித நாட்டம்
மனிதன் சுயசிந்தனையும், தேர்வாற்றலும், நாட்டமும் கொண்ட படைப்பாக இருக்கிறான். இச்சிறப்பம்சத்தை மலக்குகளோ அல்லது விலங்குகளோ கொண்டிருக்கவில்லை. மனிதன் மட்டுமே, தன்னுடைய சுய விருப்பத்திற்கேற்ப தனது பாதையை தேர்ந்தெடுக்கும் தகுதியைப் பெற்ற படைப்பாவான். தன்னுடைய சிந்தனைக்கேற்ப, தனது சுதந்திர நாட்டத்தேர்வினை நடைமுறைப்படுத்துபவனே மனிதனாவான். தான் செல்லும்பாதை எதுவாக இருக்கவேண்டும் என்பதைத் தெரிவு செய்யும் சுதந்திரத்தை அவன் கொண்டுள்ளான். தான் பயணிக்க வேண்டிய பாதையானது, நீதியைக் காக்கும் பாதையா? அல்லது அநீதிக்கு துணைபோகும் பாதையா? என்பதை அவனே தீர்மானிக்க வேண்டும். அப்போதே சுவர்க்கம், நரகம் அர்த்தமுள்ளதாய் அமையும். ஆஷூறா, மனிதனின் சுய தேர்வினையும், அவனது நாட்டத்தின் உயர்வினையும் காட்சிப்படுத்தும் ஓர் களமாக வரலாற்றில் அமைந்துள்ளது. மனிதன், இருவிடயங்களான உலகம், மறுமை ஆகியவற்றில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற விடயத்தை எமக்குத் தெளிவுபடுத்திக் காட்டுகிறது. இத்தேர்வு மிகவும் கடினமானதாகும். மனிதர்களில் அதிகமானோர் உலகையே தேர்வு செய்கின்றனர். ஆனால், அவர்கள் மரணத்துக்குப்பின் உள்ள வாழ்வில் மிகவும் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஏனெனில், மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்வே நிரந்தரமானது.
கர்பலாக் களத்தில் சொற்ப மனிதர்களே மறுமையினைத் தேர்வுசெய்து இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் படையிலிருந்து அவர்களின் எதிர்த்தரப்போடு யுத்தம் புரிந்து ஷஹாதத் எனும் உயர்ந்த அந்தஸ்த்தினை அடைகின்றனர். மனித வரலாற்றில் கர்பலாவின் 72 ஷஹீதுகளின் அந்த சுதந்திர நாட்டமும், அவர்களின் தேர்வும் அனைவரையும் வியக்கச் செய்துள்ளது. அவர்கள் தங்களுடைய உயிரை, அந்த உயிரின் உரிமையாளனான அல்லாஹ்வின் மார்க்கம் பாதுகாக்கப்படுவதற்குத் தியாகம் புரிந்தனர். மனித வரலாற்றில் அதிகமாக இடம் பெற்ற யுத்தங்கள் உணவுக்காகவோ அல்லது ஆட்சிக்காகவோ இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம். ஆனால், கர்பலா யுத்தம் என்பது சத்தியத்திற்கும், அசத்தியத்திற்குமான ஓர் போராகும். கர்பலாவும், அதன் கதாநாயகர்களான இமாம் ஹுஸைன் மற்றும் அவர்களது தோழர்களின் வாழ்வும், ‘உலக வாழ்வா அல்லது மறுமை வாழ்வா இரண்டில் எதைத் தேர்வுசெய்வது?’ என்ற அடிப்படையான வினாவுக்கு விடையாக அமைகின்றன.
சுயகௌரவம்
இமாம் ஹுஸைன் (அலை) மற்றும் அவர்களது தோழர்களும் இஸ்லாத்தின் வெற்றிக்காகவும் அதன் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காகவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டார்கள். இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தன்னுடைய ஆறுமாத குழந்தையான அலீ அஸ்கர் அவர்களின் உதிரத்தைக் கூட இஸ்லாம் எனும் விருட்சத்தின் வளர்ச்சிக்காய் அர்ப்பணித்து விட்டார்கள்.
மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் அதாவது அவனது அரசியல், கலாசார, பொருளாதார, ஆன்மீக, சமூக, மற்றும் இன்னோரன்ன செயற்பாடுகளில் அவன் ஓர் இறை ஆசியைப் பெற்ற இறைப்பிரதிநிதி ஒருவரினால் பயிற்றுவிக்கப்பட்டால், அவன் இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெறுவான். அவ்வாறான, ஓர் வழிகாட்டளைப் பெற்ற பாக்கியவான்களாக இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தோழர்கள் உள்ளனர். கர்பலாவின் கதாநாயகர்களைப் பற்றி எழுதிய எழுத்தாளர்களில் அதிகமானோர் மறந்து விட்டுச் சென்ற ஓர் பகுதியே அவர்களின் சுயகௌரவமாகும்.
ஓர் மனிதனின் ஒழுக்கவியலில் மிகவும் ஆழமாகவும், அடித்தளமாகவும் திகழ்வது, அவனது சுயகௌரவமாகும். அதனைக் காட்சிப்படுத்தும் ஓர் களமாகவே கர்பலாவும், அதன் கதாநாயகர்களும் திகழ்கின்றனர். இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் நினைத்திருந்தால் இஸ்லாத்தைத் தூக்கி வீசிவிட்டு, இவ்வுலக இன்பங்களில் மூழ்கியிருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் இஸ்லாத்தினைப் பாதுகாப்பதற்கு, தனது இறுதி மூச்சுவரைப் போராடினார்கள். அவ்வாறே, தங்களுடைய மரணத்தை, கண்முன்னே கண்ணுற்றும்கூட தங்களின் இமாமின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தோழர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள்.
இமாம் ஹுஸைன் (அலை) அவர்களையும், ஆஷூறாவையும் யார் ஒருவர் மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறாரோ அவர் தன் கண்முன்னால் நடைபெறும் அநியாயங்களைப் பார்த்துக்கொண்டு வாய்மூடி மௌனியாக இருக்கமாட்டார். இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் யஸீதுக்கு பைஅத் செய்ய மறுத்து விட்டு ‘என்னைப் போன்ற ஒருவர், யஸீதைப் போன்ற ஒருவனுக்கு ஒருபோதும் பைஅத் செய்யமாட்டார்’ எனக் கூறினார்கள். இது, இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் சிந்தனைகளைத் தழுவிநிற்கும் மனிதர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பதையே எமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல், இமாம் அவர்கள் குறிப்பிடுகையில் ‘சுயகௌரவம் இழந்து வாழ்வதைவிடவும் மரணமே சிறந்ததாகும்’ என்றார்கள். சுயகௌரவம் என்பது ஓர் மனிதனின் வீரத்தினதும், விவேகத்தினதும் ஆரம்ப கட்டமாகும். நாம் சுயகௌரவத்தின் முழுவடிவமாய் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் காணலாம்.
பகுத்தறிவும் சிந்தனைத்திறனும்
நாம் மனித பகுத்தறிவின் செயற்பாடுகளை இருவிதமாக நோக்கலாம்.
1.தன்னுடைய அறிவாற்றலைப் பயன்படுத்தி, அதனை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டமாகக்கணித்து, தன்னுடைய அனுபவங்களை ஓர் எடுத்துக்காட்டாக அமைத்துக் கொள்ளல்.
2.ஆன்மீகப் பயணத்தில் மனிதர்களுக்கு வழிகாட்டுவதோடு, அவர்களுடைய ஆத்மாவை ஆன்மீகத்தின்பால் ஈர்த்தெடுத்தல். இச்சக்தி, மனிதனுடைய மனோஇச்சையைக் கட்டுப்படுத்தி, அவனை ஏனைய விலங்குகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.
மனித பகுத்தறிவுக்கும், அவனது மனதுக்கும் இடையிலான போராட்டமே அவனது வாழ்வின் எதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது. பகுத்தறிவுக்கும், மனோஇச்சைக்கும் இடையிலான போராட்டத்தில் ஒன்று மற்றொன்றை வீழ்த்திவிடவே போராடுகின்றன. கர்பலாவிலும் இதுவே இடம்பெற்றது. ஒருசாரார் பகுத்தறிவைப் பயன்படுத்தி வெற்றி பெற்றனர். ஒரு சாராரோ, மனோஇச்சையின் மேலீட்டினால் இம்மையிலும், மறுமைனிலும் தோல்வியைத் தழுவினர்.
மனோஇச்சையை மிகைத்துக்கொண்டு, பகுத்தறிவு கண்டடைந்த மாபெரும் வெற்றியே ஆஷூறாவாகும். யஸீதியர்களை மனித வரலாறு நெடுங்கிலும் தோல்வியைத் தழுவச்செய்தது, இப்பகுத்தறிவே. இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும், அவர்களது தோழர்களும் அன்றைய சூழ்நிலையில் மார்க்கத்தை விட்டுக்கொடுப்பதா? அல்லது உயிரையே மார்க்கத்திற்காய் அர்ப்பணிப்பதா? என்ற இருவழிகளில் மார்க்கத்தைப் பாதுகாக்க தங்களுடைய உயிரைத் தியாகம் செய்தார்கள். அன்று, அவர்களின் உதிரங்கள் வாட்களை வெற்றி கொண்டன. இன்று, இஸ்லாம் எமக்கு வந்தடைவதற்கு, அவர்களின் உதிரங்கள்தான் இஸ்லாம் எனும் விருட்சத்திற்கு நீராய் மாறியுள்ளது.
பரிபூரணத்துவத்தின் அழகுநிலை
மனிதன், தன்னுடைய வாழ்வில் அனைத்து விடயங்களிலும் பரிபூரணத்துவத்தை விரும்புகிறான். எம்மில் பலர், உடல் ரீதியான இவ்வுலக ஆசாபாசங்களிலே பரிபூரணத்துவத்தைத் தேடுகிறோம். ஆனால், இவைகளைவிடவும் மிகவும் முக்கியமான ஒரு பரிபூரணத்துவமே எமது ஆத்மாவின் பரிபூரணத்துவமாகும். அதைக் காட்சிப்படுத்தும் ஓர் களமே கர்பலாவாகும். மனிதனின் மனோஇச்சையின் மீதான பகுத்தறிவின் வெற்றியாக அது இருக்கிறது.
தமது சகோதரரும், தனது குடும்ப உறுப்பினர்களும் தண்ணீர் கொடுக்கப்படாது, மறுக்கப்பட்டு வாட்களால் கொல்லப்பட்டதையும், அவர்களின் உறவினர்கள் யுத்த கைதிகளாகப் பிடிக்கப்பட்டதையும் தம்கண்களால் கண்ணுற்ற அன்னை பாத்திமா (அலை) மற்றும் இமாம் அலீ (அலை) அவர்களின் மகளார் ஹஸ்ரத் ஸைனப் (அலை) அவர்கள், உபைதுல்லாஹ் இப்னு ஸியாதின் சபையில் வைத்து ‘நான் அழகைத்தவிர வேறெதனையும் காணவில்லை’ என்றார்கள். அவர்களின் இக்கூற்று எதை எமக்கு உணர்த்த வருகிறது என்பதை ஆராய்ந்தால், அது எமக்கு மிகப்பெரும் படிப்பினையாக அமையலாம். மனிதனின் பரிபூரணத்துவம் என்பது அவனது உடல் ரீதியானதோ அல்லது பண ரீதியானதோ அல்ல. மாறாக, அது மனோஇச்சையைக் கட்டுப்படுத்தி, இறைகட்டளையை நிறைவேற்றுவதிலேயே அமைந்துள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். மனிதனுக்கு ஏற்படும் அனைத்துவித இன்ப, துன்பங்களிலும் எது இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுள்ளதோ அதுவே அழகானது. அவ்வாறே, எது இறைவனின் கோபத்தை அதிகரிக்கிறதோ அதுவே அசிங்கமானது. இவ்வுண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டும் களமே கர்பலாவும், அதன் கதாப்பாத்திரங்களும் அமைந்திருந்ததைக் காணலாகும்.