அஷ்-ஷேய்க் ஜே.அஷரப் அலீ
சுவனத்தின் வாரிசான இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தூய சன்மார்க்கம் எனும் ரோஜாவை மலரச் செய்வதற்கு, தமது பிள்ளைகள், நண்பர்கள் என பலரது ஒத்துழைப்போடு, கர்பலாப் பயணத்தில் காற்தடம் பதித்திருந்தார். கர்பலாவில் தனக்கும், தன்னோடிருக்கும் எவருக்கும் மனித உரிமைச் சட்டங்கள் அறவே நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்பதாக நபிமார்களாலும், வலிமார்களாலும் குறிப்பிடப்பட்ட முன்னறிவிப்பைத் தெளிவாக அவர் விளங்கியிருந்தார்.
இதன் தொடரிலே, ஹரம் ஷரீஃபின் தூய்மையை அறியாதோர் உமையாக்கள் என்பதால், அபயமளிக்கப்பட்ட இப்புனிதத் தலத்தின் எல்லைக்குள் வைத்து தன்னைப்படுகொலை செய்து, தனது உதிரத்தைச் சிந்தச்செய்வதன் மூலமாக கஃபாவின் புனிதத்தை போக்கிவிடுவர் என்ற நல்லெண்ணத்தினாலும், கூஃபா மக்களின் தொடர்ந்தேர்ச்சியான அழைப்பின் பெயரிலுமே புனித கஃபாவிலிருந்து கூஃபா நோக்கி இமாம் புறப்பட்டார்.
தனது 57வது வயதிலே தொடங்கிய இமாமின் இவ்- ஆன்மீகப் பயணமானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். பல்லாயிரக் கணக்கான கடிதப் பரிமாற்றங்களையும், சந்திப்புக்களையும் கொண்டதான இப்பயணத்திலே பல்வேறு படிப்பினைகளும், தத்துவார்த்தங்களும் இருப்பதைக் காணலாம்.
நாட்களும், இடங்களும்
24 நாட்களைக் கொண்டதான இப்பயணம், சுமார் 1403 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியதாக அமைந்திருந்தத. ஹிஜ்ரி 60வது வருடம், துல்ஹஜ் 08 ஆம் நாளில் தொடங்கி, ஹிஜ்ரி 61வது வருடம், முஹர்ரம் 02 ஆம் நாளில் கர்பலாவில் நிறைவுற்றது. இதில் இமாமவர்களும். அவர்களோடிருந்த நபிகளாரின் வாரிசுகளும், நண்பர்களுமாக சுமார் 72 பேர்கள் ஒன்றிணைந்திருந்தனர்.
இப்பயணத்திலே, 38 மாகாணங்களைக் கடந்து சென்றுள்ளார். இவற்றுள், 14 மாகாணங்களில் தரிக்காமலும், 24 மாகாணங்களில் தரித்தும் சென்றுள்ளார். 24 நாட்களையுடைய இப்பயணத்திலே, 22 நாட்கள் துல்ஹஜ் மாதத்திலும், 2 நாட்கள் முஹர்ரம் மாதத்திலும் கழிந்துள்ளன. அவற்றுள் 15 நாட்கள் (ஹிஜாஸ்) சவூதி அரேபியாவிலும், 9 நாட்கள் ஈராக்கிலும் அமைந்திருந்தன. நாளொன்றுக்கு சுமார் 58.5 கி.மீ தூரம் பயணித்துள்ளார்.
‘அர்பயீன்’ எனும் விசேட நிகழ்வு
கொடூரமான கர்பலாப் படுகொலைகள் நடைபெற்று முடிந்த முஹர்ரம் 10வது நாளிலிருந்து, 40வது நாளன்று நபித்தோழரும், அஹ்லுல்பைத் நேசருமான ஹஸரத் அபூ அப்தில்லாஹ் அல்-அன்ஸாரி (ரழி) அவர்கள் தனது தள்ளாடும் வயதிலே, கர்பலா நோக்கிப் பயணித்து, அங்கே இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த சமாதியில் சங்கமித்து, அழுது புலம்பி தனது துயரை வெளிப்படுத்தினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு, வருடந்தோரும் ஸஃபர் 20வது நாளன்று ‘அர்பயீன்’ என்ற பெயரில் நினைவு கூறப்படுகிறது.
இதனை முன்னிட்டு, அன்று முதல் இன்றுவரை உலகின் நாலாப் பகுதிகளிலிருந்தும் ஷீஆ, சுன்னி முஸ்லிம்களும், ஏனைய சமயத்தவர்களும் உள்ளடங்களாக பல மில்லியன் கணக்கானோர், இந்நாளில், இமாமை தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்தும் 2015ம் ஆண்டு முதல், வருடம் தோறும் இமாமைத் தரிசிப்பதற்காக, கர்பலா நோக்கி இமாமின் நேசர்கள் பயணிக்கிறார்கள். இதன்போது, புனித நஜஃப் நகரிலிருந்து, கர்பலா நகர்வரைக்கும் இவர்கள் நடைபவனியில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்கள் எல்லோரும் அகோரம் நிறைந்த இப்பயணத்தில் பல்வேறு துன்பியல் நிகழ்வுகளையும், சிரமங்கள் நிறைந்த இடங்களையும் கடந்தும், தரித்தும் செல்லவேண்டி நேர்ந்தது. இப்பணத்தின் பிரமாண்டத்தை விளங்கிக்கொள்வதற்காக அவ்விடங்களையும், அவற்றின் தூரங்களையும் பின்வருமாறு பகிர்ந்துகொள்கிறோம்.