1. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஷீஆ முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. மிக உறுதியான இஸ்லாமியத் தலைமைத்துவ கட்டமைப்பையும், மக்கள் பலத்தையும் தன்னகத்தே கொண்டது. அதன் அரசியல், பொருளாதார மற்றும் தொழிநுட்ப ரீதியான பௌதீக வளர்ச்சியானது, இன்று சர்வதேச மட்டத்தில் சகலரினதும் கவனத்தை ஈர்த்துவருகின்ற ஒன்று. இவ்வளர்ச்சியின் பரிணாமமாக ஈரானின் அணு-தொழிநுட்பம் காணப்படுகின்றது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, இஸ்லாமிய உலகில் ஒரு முன்மாதிரி நாடாகத் திகழ்வதுடன், மேற்கு நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு, வளர்ந்துவரும் நாடாகவும் காணப்படுகிறது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, மேற்கு நாடுகளின் ஆதிக்க சிந்தனைக்கு அடிபணியாத ஒரு இஸ்லாமிய நாடு மாத்திரமல்லாமல், சுதந்;திரவேட்கையைக் கொண்ட உலகமக்களின் இதயங்களை மிக வெகுவாக கவர்ந்தீர்த்துக்கொண்ட நாடாகவும் திகழ்கிறது.
இந்நிலை இவ்வாறே தொடருமாயின் மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் ஈரான்; ஒரு பலமிக்க வல்லரசாக மாறிவிடக்கூடும். இதன் காரணமாக, ஈரானின் இந்நிலையை அச்சுறுத்தலாகப் பார்க்கும் மேற்கு நாடுகளும், அவர்களின் அடிவருடிகளாக இருக்கும் சில அரபு நாடுகளும் ஈரானை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தி ஓரங்கட்டிவிடவும், அதன் வளர்ச்சியை குன்றச்செய்யவும் முயற்சிக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக், யமன், சிரியா போன்று தனது சகல வளங்களையும் பறிகொடுத்த ஒரு நாடாக ஈரானையும் மாற்றிவிடுவதற்கு விரும்புகின்றன. இதன் ஒருவகை தந்திரோபாயமாகவே, ஈரானியர்களில் பெரும்பான்மையினர் ஷீஆக்கள் என்பதனால் ‘ஷீஆ’ என்ற அம்சத்தை வைத்து, ஈரானைத் தீர்த்துக்கட்டுவதற்கு முயற்சிக்கின்றன.
1979ம் ஆண்டு, ஈரான் இஸ்லாமிய புரட்சி வெற்றி பெறுவதற்கு முன்பிருந்தே, ஈரானிய மக்கள் ஷீஆக்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். புரட்சிக்;குமுன்பு, ஈரானில் நிலைகொண்டிருந்த மன்னராட்சி, மேற்கு நாடுகளின் கைப்பாவையாக இருந்து வந்ததால் அப்போதெல்லாம் ‘ஷீஆ’ என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாகப் பார்க்கப்படவே இல்லை. அன்றைய சவூதி அறேபியா போன்ற அறபு நாடுகளால் நேசிக்கப்பட்ட மன்னர் ஷாஹ் கூட, ஒரு ஷீஆவாகவே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும், இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர்தான் ஈரான், ‘ஷீஆ’ என்ற சாட்டையால் பழிதீர்க்கப்படுகிறது. இதனைக் கருத்திற்கொள்ளும் எவரும் மேற்கு நாடுகளும், அவர்களின் அரேபிய அடிவருடிகளும் இரட்டை முகம் கொண்டவர்கள் என்பதை புரிந்து கொள்வார்கள்.
2. எமன், சிரியா, பாகிஸ்தான், ஈராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான்… போன்ற நாடுகளில் உலக ஏகாதிபத்திய சக்திகளால் அரங்கேற்றப்பட்டு வரும் இன, வள அழிப்புச் சதிகளில் சவுதியும், ஈரானும் இரு எதிர்முனை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. குறித்த நாடுகளின் பொருளாதாரம், அரசியல் போன்றவற்றை இலக்கு வைத்துள்ள மேற்கு நாடுகளின் சதிகளுக்கு ஆதரவாக சவுதியும், அதற்கு எதிராக ஈரானும் செயற்படுகின்றன. இந்த நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்காவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் ஆதரவாக செயற்படும் சவுதி ஈரானை தனது முழு எதிரியாகப் பார்க்கிறது.
மேலும், சவுதியின் அண்டை நாடுகளாக எமன் மற்றும் பஹ்ரைன் அமையப் பெற்றுள்ளன. எமனில் போராடிவரும் ஹவ்திகள் ஷீயாக்களுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதாலும், பஹ்ரைனிய மக்கள் ஷீஆக்கள் என்பதாலும் இவ்விரு நாடுகளிலும் தமக்கு எதிரான (ஷீஆ)ஆட்சி வந்து விடக்கூடாது என்பதில் சவுதி மிகவும் விழிப்பாக இருந்து வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளில் வாழும் மக்களுக்கு எதிராக சவுதி புரிந்து வரும் அடக்குமுறை, அநியாயங்களை நியாயப்படுத்த அம்மக்களை ஷீஆக்கள் என்றும் அவர்கள் வழிகெட்டவர்கள்;;, காபிர்கள் என்றும் பிரசாரம் செய்கிறது. இதனால், ஷீஆக்களுக்கெதிரான எதிர்ப்பிரசாரத்தை சவுதி கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இப்பிரசாரம் சவுதிசார் அமைப்புகளால் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு வருவது இதன் காரணமாகவே ஆகும்.
3. ஷீஆ-சுன்னி எனும் இஸ்லாமிய உட்பிரிவுசார்ந்த வேறுபாடு, சுமார் 1400 வருடங்களுக்கு முற்பட்டது. அது வரலாறு நெடுங்கிலும் இருந்தே வருகிறது. இவ்வேறுபாட்டுடன் ஷீஆக்களும், சுன்னிகளும் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகுவதை ஆபத்தாகக் கருதும், பிரித்தாளும் உலக ஏகாதிபத்தியம் குறிப்பாக, அமெரிக்காவும் சியோனிச இஸ்ரேலும் இவ்வொற்றுமையை சிதைப்பதற்குப் பாரிய சதித்திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன. எமது இலங்கைத் திருநாட்டிலும் கூட முஸ்லிம் சமூகத்தைத் துண்டாக்கும் நோக்கில், ஷீஆ-சுன்னி பிளவை உருவாக்க முயற்சிக்கின்றன. இதற்காக வெளிநாடுகளில் குறிப்பாக சவுதி, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தாலிபான், அல்கைதா சிந்தனை முகாம்களிலே ஷீஆக்களை எதிர்ப்பதற்கென்றே விஷேடமாகப் பயிற்றுவிக்கப்பட்ட பலர் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் நாவுகளும், பேனாக்களும் ஷீஆ-சுன்னி பிரிவினைவாதத்தையே கக்கிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆலிம் வேடம் தரித்துள்ள இவர்கள் ஜும்ஆ பயான்களிலும், மிம்பர் மேடைகளிலும் ஷீஆ எதிர்ப்புப் பிரசாரங்களையே செய்து வருகின்றனர்.
4. சமூகத்தில் பித்அத், ஷிர்க்கு, வழிகெட்ட கொள்கையொழிப்பு போன்ற கோஷங்களுடன், புதிது புதிதாக முளைத்துவரும் குழுக்கள் அரேபிய பணமூட்டைகளுடன் சமூகத்தைக் கூறுபோட்டுத் திரிகின்றன. தெருவுக்குத் தெரு, ஒழுங்கைக்கு ஒழுங்கை மஸ்ஜிதுகளைக் கட்டி ஒரு கிராமத்தில் ஒரு பள்ளிவாயலுடன் ஒற்றுமையாக வாழ்ந்த மக்களை, பல பள்ளிவாயல்களுக்குள் பிரித்து சிதைத்துள்னனர். இவர்கள் தங்களின் கால்களை சமூகத்தில் வேரூன்றச் செய்வதற்கும் தமது அபாயகரமான செயற்பாடுகளை மக்கள் கண்டுகொள்ளாது விடுவதற்கும் மக்களின் சிந்தனைகளை திசைதிருப்;ப ‘ஷீஆ!’ ‘ஷீஆ!’ எனக் கொக்கரிக்கின்றனர். வெளித்தோற்றத்தில், ஷீஆ எச்சரிக்கை! ஷீஆ எச்சரிக்கை! எனக்கூறி, மறைமுகமாக தமது சிந்தனைகளைப் பிரசாரம் செய்யும் பள்ளிவாயல்களையும், பிரசாரநிலையங்களையும் அமைத்து, பிரதேசத்தில் தமது சிந்தனைகளைப் பரப்புவதனூடாக அப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாறு, பல்வேறு காரணங்களின் பின்புலத்தில் ஷீஆ எதிர்ப்புப் பிரசாரம் நடைபெற்று வருகின்ற போதிலும், மேற்குறித்த விடயங்களே பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
அருமையான கட்டுரை. முற்றிலும் உண்மையான தகவல்கள்.
மிக அருமையான பதிவு. என் சில சந்தேகங்களுக்கு இப்பதிவில் விடை கிடைத்தது.
நன்றி இணைய ஆசிரியரே!