இஸ்மாயில் ஸலபியின் முகநூல் பதிவுக்கான எமது பதில்

https://www.facebook.com/100063523781421/posts/1330387055755408/?mibextid=cr9u03 எனும் இஸ்மாயில் ஸலபியின் முகநூல் பதிவுக்கான எமது பதில்
வஹ்ஹாபிகளின் இவ்வாறான குற்றச்சாட்டுகள், ஷீஆ முஸ்லிம்களின் நடைமுறைகளைத் தவறாகப் புரிந்து கொண்டமையால் எழுந்தவையாகும். இது பொதுவாக இஸ்லாம் குறித்த அவர்களுடைய தவறான அல்லது அகமுரண்பாடுடைய புரிதல்களின் நீட்சியாக உள்ளது.
👉 ஷீஆக்களுக்கு எதிரான இந்த வஹ்ஹாபியக் குற்றச்சாட்டுகளுக்கு, குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பது நமது கடமையாகும்.
இந்த வஹ்ஹாபியவாதம் சர்ச்சைக்குரியது என்பதால், ஷீஆ மற்றும் சுன்னி ஆதாரங்களை சமநிலையுடன் பார்த்து, உண்மையான நிலைப்பாடுகளை விளக்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
ஷீஆக்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை (தவ்ஹீத், நபித்துவம், மஆத்) பின்பற்றுபவர்கள், மற்றும் அவர்களின் நடைமுறைகள் குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களுடன் இணைந்தவை. பொருத்தமெனக் கண்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தனித்தனியாக பதிலளிக்கிறோம்.
1. இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் படுகொலைக்காக துக்கம் அனுஷ்டிப்பது ஏன்? இமாம் அலி (அலை) அவர்களின் படுகொலைக்காக ஏன் இல்லை? இது முரண்பாடா?
ஷீஆக்கள், 12 அஹ்லுல்பைத் இமாம்களின் இறப்பை முன்னிட்டு துக்கம் அனுஷ்டிப்பதைப் போன்று, இமாம் அலி (அலை) அவர்களின் ஷஹாதத்துக்கும் (ரமழான் 21ம் நாள்) துக்கம் அடுஷ்டிக்கின்றனர் என்பது வஹ்ஹாபிகள் நன்கறிவார்கள்.
இதனை ஷீஆக்கள் அவர்களின் மஜ்லிஸ்கள், நோன்பு, துஆக்கள் மற்றும் சியாரத் ஆகியவற்றின் மூலம் நினைவு கூர்கின்றனர்.
ஆனால், கர்பலா சம்பவம் (முஹர்ரம் 10) இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய துயரமாகும். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும், ஏனைய நபிகளாரது குடும்பமும் கொடூரமாகக் கொல்லப்பட்டமை ஷீஆக்களிடம் மட்டுமன்றி, சுன்னிகளிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நபிகளாரின் குடும்பத்தை மொத்தமாக கருவறுத்த உமையா சண்டாளர்களின் கொடூரத்தின் பிரமாண்ட நிலையை இது வெளிப்படுத்துவதால், இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஷஹாதத்தின் இலட்சியங்களும், இலக்குகளும் சமுதாயத்தில் பிரதிபளிக்க வேண்டும் எனும் வகையில் அதனை பிரமாண்டமாக அனுஷ்டிப்பது ஒவ்வொரு முஃமினின் கடமையாகும்.
இது குர்ஆனின் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (2:156, 157) போன்ற வசனங்களுடன் இணைந்ததாகும். முஃமின்கள் தமது துயரத்தில் பொறுமையை கடைப்பிடிப்பதை வலியுறுத்துவதோடு, இறைவனின் ஸலவாத்தையும் ரஹ்மத்தையும் அவர்களுக்கு உத்தரவாதப்படுத்துகின்றது.
இமாம் ஹுசைன் போன்ற ஈமானில் உயர்ந்த நிலையிலுள்ள ஒரு முஃமின், இஸ்லாமிய எழுச்சிப் பாதையில் “மாபெரும் துயரங்களை” பொறுமையோடு (ஷஹாதத் மூலம்) சகித்துக்கொண்டதனால் அல்லாஹ்வின் ஸலவாத் மற்றும் ரஹ்மத் ஆகியவற்றுக்கு உரித்தாகமாட்டாரா? அந்த ஸலவாத்தின் அல்லது ரஹ்மத்தின் வெளிப்பாடாக இந்த தனித்துவம் அமையாதா?
இந்த பிரமாண்டத்தை தனித்துவமாக அனுஷ்டிப்பது அறிவுபூர்வமானது கிடையாதா?
வஹ்ஹாபிகளிடத்தில் ஒரு கேள்வி:
மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருடைய மரணத்தை முன்னிட்டு துக்கம் அனுஷ்டிக்க வேண்டாம் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் ஏன்? அபூ தாலிப் (ரழி) மற்றும் அன்னை கதீஜா (அலை) ஆகியோரின் மரணத்தை முன்னிட்டு “ஆமுல் ஹுஸ்ன்” துக்க வருடம் எனப் பெயரிட்டு, ஒரு வருட காலத்திற்கு துக்கம் அனுஷ்டித்தார்கள்?! இது முரண்பாடா?! இல்லை குறித்த மரணங்களின் தனித்தன்மைகளைப் புலப்படுத்துகின்றதா?!
இறப்பை முன்னிட்டு துக்கம் அனுஷ்டிப்பதற்கான ஹதீஸ் ஆதாரங்கள்:
ஷீஆ நூல்களில் (அல்-காபி) மற்றும் சுன்னி நூல்களில் (சஹீஹ் புகாரி, தொகுதி 2, புத்தகம் 23, ஹதீஸ் 390) நபி (ஸல்) அவர்கள் தமது மகன் இப்ராஹீம் இறந்தபோது கண்ணீர் வடித்து துக்கம் அனுஷ்டித்தார்கள்.
இமாம் ஜஃபர் சாதிக் (அலை) கூறினார்கள்: “ஹுஸைன் (அலை) அவர்களின் துயரம் எங்கள் இதயங்களை உருகச் செய்கிறது” (பிஹார் அல்-அன்வார்).
இமாம் அலி (அலை) அவர்களின் ஷஹாதத் மிக முக்கியமானதுதான். ஆனால், கர்பலாவின் கொடூரத்தின் பிரமாண்ட நிலை (72 உறவினர்கள் கொல்லப்பட்டது), சிறப்பு நினைவுகூரலை ஏற்படுத்துகிறது.
இது முரண்பாடு அல்ல; ஹஸன், ஹுஸைன் (அலை) அவர்கள், இமாம் அலி (அலை) அவர்களின் இறப்புக்காக துக்கம் அனுஷ்டித்துள்ளனர். ஆனால், அது அப்போதைய அரசியல் சூழலமைவு காரணமாக பொதுவாக நீண்ட நாட்களுக்கு நடக்கவில்லை. மேலும், அவ்-இரு ஷஹாதத்துகளின் இலட்சியம் மற்றும் சூழமைவுகளின் அடிப்படையில் வித்தியாசங்கள் காணப்படுவதால், அவை நினைவுகூரப்படும் விதத்திலும் வித்தியாசங்கள் காணப்படுவது இயல்பானதே. எனினும், ஷீஆக்கள் இரண்டுக்கும் மதிப்பு கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. உடலை காயப்படுத்துதல் (தத்பீர்), கன்னத்தில் அடித்தல், கருப்பு ஆடை அணிதல் – இவை இமாம்களின் போதனைகளுக்கு எதிரானவையா?
• தத்பீர் (உடலைக் காயப்படுத்துதல்): கடுமையான ரத்தம் வரும் வகையில் உடலைக் காயப்படுத்துவது (தத்பீர்) பல ஷீஆ முஜ்தஹித்களால் (இமாம் காமெனயி, ஆயதுல்லாஹ் சீஸ்தானி) தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
ஆனால், இது ஹிஜாமா (இரத்தம் குத்தி எடுக்கும் மருத்தவம்) சார்ந்த பாரம்பரியமாகவும், வீரக்கலை மரபாகவும் ஷீஆக்கள் மத்தியில் வளர்ந்துவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சாகசங்களை பக்கீர் பாவாக்கள் சுன்னி சமூகத்தில் மேற்கொண்டு வருவதை மனதிற்கொள்ளவும்.
எனினும், லேசாக மார்பில் அடிப்பது (லதம்) அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில், குர்ஆனில் (சூரா 12:84) யாகூப் நபி தமது மகன் யூசுபுக்காக துக்கத்தில் அழுது அழுது தன்னை வருத்திக்கொண்டார். இதன் மூலம் அவர் “கண்பார்வை அற்றவர்” ஆனார்.
ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸா (ரழி) அவர்களின் இறப்புக்காக பெண்கள் கன்னத்தில் அடித்ததை அனுமதித்தார்கள் (சஹீஹ் புகாரி, தொகுதி 2, புத்தகம் 23, ஹதீஸ் 375).
இமாம் அலி (அலை) கூறிய “தொடையில் அடிப்பது அமல்களை அழிக்கும்” (அல்-ஹிஸால்: 621) என்பது ஜாஹிலியா காலம் போன்ற அதீத துக்கத்தை குறிக்கும், ஹுஸைன் (ரழி) அவர்களின் துக்கம் அல்ல. இமாம் அலியின் கூற்றை அதற்குரிய பின்புலத்தில் ஒப்பிட்டு புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
• இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வஸிய்யத்: “முன்தஹல் அமால்” நூலில் கூறப்பட்ட செய்தியானது, ஜாஹிலியா காலத்தைப் போன்று இறைநம்பிக்கையை இழக்கும் வகையில் கிழித்தல், பிராண்டுதல் போன்ற காரியங்களைப் புரிவதையே தடைசெய்கின்றது. ஆனால், துக்கம் அனுஷ்டிப்பதை அனுமதிக்கின்றது; ஹஸரத் ஸைனப் (அலை) அவர்கள் கர்பலாவுக்குப் பின் துக்கம் அனுஷ்டித்தார்கள். ஆனால், ஜாஹிலியா நடைமுறைகளைப் போன்று அதீதமாக இல்லை.
• துக்கம் அனுஷ்டிப்பது தொடர்பான இப்படியான போதனைகள், முரண்பாடுகளைத் தோற்றுவித்து இமாமத் கொள்கையை பாதிக்க மாட்டாது. ஏனெனில், இமாம்கள் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். எனினும், அவர்களின் போதனைகளை சரியான சூழலமைவுகளுடன் கச்சிதமாகப் பொறுத்திப் பார்க்கும் திறனை வளர்த்துக் கொள்வது நமது கடமையாகும். இது இஸ்லாமிய மூலாதாரங்களின் எல்லாப் போதனைகளையும் இவ்வாறே அணுக வேண்டியது அவசியமானது. ஆனால், வஹ்ஹாபிய குறைமதிக்கு இது விளங்குவதில்லை.
• கருப்பு ஆடை: சில ஹதீஸ்களில் (மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்: 1/232) தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், அது பிர்அவ்னின் ஆடை அல்லது அப்பாஸியர்களின் அடையாளம் என்பதாலாகும். ஆனால், இந்த தடை ஹராம் என்ற தரத்திலன்றி, மக்ரூஹ் என்ற தரத்தில் உள்ளது. ஏனெனில், துக்கத்தில் கருப்பு ஆடை அணிவது சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஜாபர் இப்னு அபீ தாலிப் இறந்தபோது கருப்பு ஆடை அணிய அனுமதித்தார்கள் (பிஹார் அல்-அன்வார்). இது மக்ரூஹ் (விருப்பத் தகாதது) என்றாலும், துக்கத்தில் ஏற்கப்படுகிறது.
இவை இமாம்களின் போதனைகளை மீறுவது அல்ல; அவை சூழலமைவைப் பொறுத்து விளக்கப்படுகின்றன.
3. இமாம்களான ஹஸன், ஹுஸைன் (அலை) அவர்கள், இமாம் அலி (அலை) அவர்களின் இறப்புக்காக துக்கம் அனுஷ்டிக்கவில்லையா? இது முரண்பாடா?
அவர்கள் துக்கம் அனுஷ்டித்தனர்; ஆனால் அப்போதை அரசியல் அழுத்தம் காரணமாக பொதுவாக நீண்ட நாட்களுக்கு அது நடைபெறவில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஹதீஸில், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், இமாம் அலி (அலை) அவர்களின் இறப்புக்காக கண்ணீர் வடித்தார்கள் (பிஹார் அல்-அன்வார்) என்பதாக வந்துள்ளது. இமாம்கள் மஃஸூம் எனும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அதாவது ஷரீஆவுக்கு முரணாக அவர்களுடைய செயல் அமையாது எனும் வகையில் அவர்களின் செயல்கள் சரியானதே. எனவே, ஷீஆக்கள் அவர்களை பின்பற்றி துக்கம் அனுஷ்டிப்பதில் எந்த குற்றமும் கிடையாது.
4. அப்துல் ஹுஸைன், அப்துல் அலி போன்ற பெயர்கள் ஷிர்க்கா? இமாம்கள் ஏன் வைக்கவில்லை?
அப்த் என்ற அறபுச் சொல்லுக்கு, “இறையடியான்” என்றே மொழிபெயர்ப்புச் செய்து பழக்கப்பட்டதன் விளைவுதான் இப்படியான கேள்விகள் எழுவதற்குக் காரணமாக அமைகின்றது. இது அறபு மொழியில் தனக்குள்ள புலமைத்துவ குறைபாட்டையே காண்பிக்கின்றது.
அப்து என்ற அறபுச் சொல்லுக்கு, “சேவகன்” அல்லது “பணியாளன்” என்ற பொருள்களும் உள்ளன. இந்தவகையில் “ஹுசைனின் சேவகன்” “அலியின் பணியாளன்” என்ற பெயர்களெல்லாம் ஒருபோதும் ஷிர்க்காக அமையாது. மேலும், இவை தவ்ஹீதை பாதிக்கவும் மாட்டாது. இவை, இமாம்களின் மீதான அன்பை அல்லது பற்றை வெளிப்படுத்தும் பெயர்களாக இருப்பதால் இவற்றுக்கு அனுமதி உண்டு.
இமாம்கள் தமது காலத்தில் அரசியல் காரணங்களால் இவ்வாறான பெயர்களை வைக்காமல் விட்டிருக்கலாம். ஆனால், ஷீஆக்கள் அது இமாம்களின் வழிமுறை என்று கூறிக்கொண்டு இவ்வாறான பெயர்களை சூடிக்கொள்வதில்லை – அது அன்பின் வெளிப்பாடு மட்டும் தான்.
ஹதீஸின் வாயிலாக, நபி (ஸல்) அவர்கள் “அப்துல் முத்தலிப்” போன்ற பெயர்களை தடுக்கவில்லை, அனுமதித்தார்கள் என்பது தெளிவாகின்றது. எனவே, அப்துல் ஹுஸைன் என்பதும், அப்துல் அலி என்பதும் தவறானது கிடையாது.
5. உமர் எனும் பெயரை வெறுப்பது சரியா? ஷீஆ ஹதீஸ் அறிவிப்பாளர்களில் உமர்கள் இருப்பது ஏன்?
ஷீஆக்கள் உமர் இப்னு கத்தாப் ரழியை (அவர்களின் செயல்களால்) வெறுப்பதாகச் சொல்லப்படுவதில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதோடு, சரியான புரிதல்களின் அவசியமும் உணரப்படுகின்றது. எல்லா இயக்கங்களிலும் காணப்படுவதைப் போன்று, சில தீவிரப்போக்கைக் கொண்டோர் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். இதனால், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறைகூற முடியாது அல்லது கூடாது.
இந்தவகையில் “உமர்” என்ற பெயரை ஷீஆக்கள் வெறுப்பதாக ஒரு மாயையான சிந்தனையை சுன்னிகளின் மத்தியில் வஹ்ஹாபிகள் பரப்புரை செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும்.
அல்-காபி நூலில் உமர் இப்னு உமர், உமர் இப்னு ஹன்ஸலா போன்ற அறிவிப்பாளர்கள் உள்ளனர். இது ஷீஆக்கள் இந்தப் பெயரை வெறுக்கவில்லை என்பதற்கான சான்றாக உள்ளது.
மேலும், கிலாபத் விடயத்தில் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் “அபூபக்ர்” “உமர்” “உஸ்மான்” போன்ற பெயர்களை வெறுக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. பெயர் என்பது வேறு, ஆள் என்பது வேறு. நபியவர்களின் காலத்தில் உமர் எனும் பெயரில் 35 நபர்கள் இருந்துள்ளனர். ஷீஆ இமாம்களும் இப்பெயரை தம் பிள்ளைகளுக்கு சூட்டியுள்ளனர். இதில் எந்த தவறும் கிடையாது.
ஆனால், இதன் மூலம் கிலாபத் உரிமைக்கான அங்கீகாரத்தை நாடுவதும், இவற்றை சான்றாக முன்வைக்க முயல்வதும் ஒருபோதும் அறிவுடமை ஆகாது. கிலாபத் உரிமை (கிலாபத் யாருக்குரியது என்பது) குர்ஆன்-சுன்னா மூலம் நிறுவப்பட வேண்டும். தவிர, முதல்தர மூலாதாரங்களை தவிர்த்துவிட்டு உமர் ரழியை இமாம் அலி நேசித்தார், ஒத்துழைப்பு வழங்கினார் என்பதன் மூலம் உமர் ரழியின் கிலாபத்திற்கு இமாம் அலியின் அங்கீகாரத்தை போலியாக உருவாக்குகின்ற வேறு விளக்கங்களை நாடிச்செல்வது இவ்விடயத்திலுள்ள பலவீனத்தையே காட்டுகின்றது.
ஹஸரத் ஹாரூன் (அலை) அவர்கள், ஹஸரத் மூஸா (அலை) அவர்களின் கலீபாவாக இருப்பதாக குர்ஆன் (07:142) இயம்புகின்றது. இதன்படி, ஹஸரத் ஹாரூன் (அலை) அவர்கள், ஹஸரத் மூஸா (அலை) அவர்களுக்கு கலீபாவாக இருக்கின்ற அந்தஸ்தில் இமாம் அலி (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் கலீபாவாக இருப்பதாக ஹதீஸ் மன்ஸிலத் (ஸஹீஹ் முஸ்லிம்) குறிப்பிடுகின்றது. இது, நபியவர்களுக்குப் பிறகு பணிக்கப்பட்ட ஒரே கலீபா இமாம் அலி தான் என்பதை நேரடியாக இயம்புகின்றது. ஆனால், மற்றவர்களின் கிலாபத்தை நிறுவிக்கும் விடயத்தில் வலிந்துரைகளும், சுயவிளக்கங்களும் தேவைப்படுவதைக் காண முடிகின்றது.
🫵🏻 எனவே, இந்தக் குற்றச்சாட்டுகள் ஷீஆக்களின் நடைமுறைகளை தவறாகப் புரிந்து கொண்டமையினால் எழுந்தவை என்பதை அறிவுறுத்துவதுடன், இன்னும் ஆழமாகத் தேடவும் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.
அல்லாஹு அக்பர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *