மானுட சமூகத்தைப் படைத்த இறைவன், அவர்களை பரிபூரணம் பெற்ற மனிதர்களாக வாழவைக்க நபிமார்களை வழிகாட்டிகளாக அனுப்பினான். அவர்களில் முதலாமவர் ஹஸரத் ஆதம் (அலை) அவர்கள். அவ்வாறே, அவர்களின் இறுதியானவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். நபிமார்கள் மனித சமூகத்தைச் சேர்ந்தவர்களாயினும், அவர்கள் ஏனைய மனிதர்களை விடவும் சிறப்பிலும், குணத்திலும், இறைநெருக்கத்திலும் மிகவும் உயர்ந்தவர்கள்.
நபிமார்களில் ஷரீஅத்தும், வேதமும் கொடுக்கப்பட்டவர்களாக ஹஸரத் நூஹ் (அலை), ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை), ஹஸ்ரத் மூஸா (அலை), ஹஸ்ரத் ஈஸா (அலை), செய்யிதினா முஹம்மத் நபி (ஸல்) ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்கள் ‘உலுல் அஸ்ம்’ என்று அழைக்கப்படுகின்றனர். நபிமார்கள் அனைவரும் பிறப்பு முதல், இறப்பு வரை ஷரீஆவுக்கு எதிரான தவறுகள், பிழைகள் மற்றும் பாவங்கள் செய்யாத பரிசுத்தவான்கள் (மஃஸூம்) ஆவர்.
எந்தவொரு நபியும் பிழை, தவறு செய்ததாக குர்ஆனிலோ, ஹதீதிலோ கூறப்பட்டிருந்தால் அது உண்மையில் ஷரீஆவுக்கு எதிரான தவறையோ, பிழையையோ குறிக்காது என்பதுடன், அதற்கு சரியான முறையில் வியாக்கியானமும், விளக்கமும் வழங்கப்பட வேண்டும்.
நபிமார்களில் இறுதியானவர் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களாவர். மனிதப் படைப்புகளில் இவர்களை விட மிகச்சிறந்த மனிதரை இறைவன் படைக்கவில்லை. இறுதி நபியான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறுதி நபித்துவமும், இறுதி வேதமான அல்குர்ஆனும் வழங்கப்பட்டது. இவர்களுக்குப் பின் புதிய வஹியோ, புதிய நபியோ வருவதில்லை. மனிதர்களிடம் கால் மடித்து, கல்வி கற்காத உம்மி நபியான இவர்கள் இறைவனிடமிருந்து வஹியைப் பெற்று, அதனைப் பாதுகாத்து, அதனை மனிதர்களுக்கு எற்றிவைக்கும் பணியில் எக்குறையுமின்றி, முழுமையாகச் செயற்பட்டு, தமது பணியை சம்பூரணமாக நிறைவு செய்துள்ளார்கள் என்பது ஷீஆ நம்பிக்கையாகும்.
நுபுவ்வத் தொடர்பில், மேலே கூறப்பட்டதற்கு மாற்றமான நம்பிக்கை எதனையும் ஷீஆ முஸ்லிம்கள் ஏற்பதில்லை. எனினும், இதற்கு மாற்றமாக நுபுவ்வத் தொடர்பில் ஷீஆக்களுக்கு எதிரான கருத்துகள் போதிக்கப்படுவதைக் காணலாம். அவற்றில் ஒன்று, ‘இமாம் அலிக்கு கொடுப்பதற்கு, கொண்டு வரப்பட்ட நபித்துவத்தை, ஜிப்ரில் (அலை) அவர்கள் தவறுதலாக, முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிவிட்டதாக ஷீஆக்கள் நம்புகின்றனர்’ என்பதாக சொல்லப்படுவதாகும். இது பொய்யான பரப்புரையும், அபாண்டமும் ஆகும். இது பற்றி வரும் எந்த அறிவிப்பும் அடிப்படையற்றதும், நிராகரிக்கத்தக்கதும் ஆகும்.
(உஸூலுல் அகாயித், மகாரிம் ஷீராஸீ)


Leave a Reply