அஹ்லுல்பைத் என்போர் யார்?

இந்த ஆய்விற்கான அவசியம் என்ன?

முதலாவது:

வழிதவறாமலிருப்பதற்கான ஒரே வழி

إنّي تاركٌ فيكُم الثَقَلَيْن كتابَ الله وَعِتْرَتي أهلَ بَيْتي ما إِنْ تَمَسَّكْتُمْ بهما لَنْ تَضلُّوا أبَداً وإنّهما لَنْ يَفْتَرِقا حَتى يَرِدا عَلَيَّ الحَوْضَ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அருளினார்கள்:
நான் உங்கள் மத்தியில் பெறுமதிமிக்க இரு விடயங்களைவிட்டுச் செல்கிறேன். அது அல்லாஹ்வுடைய வேதமும், எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்துமாகும். அவ்விரண்டையும் நீங்கள் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள். இவ்விரண்டும் ஹவ்ழு (எனும் சுவனத்தின் நீர்தடாகத்தில் நீர் அருந்த) என்னிடம் வரும்வரை ஒன்றைவிட்டு ஒன்று பிரியமாட்டாது.
(ஆதாரம் – சுன்னுத்திர்மிதி 3718, 3720
சுனனுத்தாரமி 3182
முஸ்னத் அஹ்மத் 10681, 10707, 10779, 11135, 18464, 20596, …….
முஸ்தத்ரக் லில் ஹாகிம் 4576, 4577, 4711, 6272)
இஸ்லாமிய சமூகம் வழிதவறாமலிருப்பதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரே வழிமுறை திருக்குர்ஆனையும், திருநபிகளாரின் அஹ்லுல்பைத்தினரையும் பின்பற்றுவதே ஆகும்.
இவ்வகையில் அஹ்லுல்பைத் என்போர் யார்? என்பதை நாம் அறிந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

இரண்டாவது:

மேற்படி விடயத்தில் சுன்னாவை மதித்து நடத்தல்

அஹ்லுல்பைத்தைப் பின்பற்றுவதற்கான கட்டளை, சொல்சார்ந்த (سنة قولیة) சுன்னாவினால் பிறப்பிக்கப்பட்டதாகும். நபிகளாரின் சுன்னாவிற்கு மதிப்பளிக்கும் நாம், நிச்சயம் மேற்படி விடயத்தில் அக்கறையோடு நடந்துகொள்ளல் வேண்டும். இது மட்டுமன்றி, அஹ்லுல்பைத் குறித்த சுன்னாவின் போக்கு, ஒரே மாதிரியாக இருப்பதைக் காணலாம்.
مثل اهلبیتی فیکم کمثل سفینة نوح من رکبها نجا ومن تخلف عنها غرق
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அருளினார்கள்:
உங்கள் மத்தியில் எனது அஹலுல்பைத்தினருக்கு உதாரணம், நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பலைப்போன்றது. எவர் அதில் ஏறிக் கொள்கிறாரோ, அவர் வெற்றி பெறுவார். எவர் அதில் ஏற மறுக்கிறாரோ, அவர் மூழ்கி (அழிந்து) விடுவார்.
(ஆதாரம் -முஸ்னத் அஹ்மத் 1360
முஸ்தத்ரக் லில் ஹாகிம் 3312, 4720
மஜ்மஉ சவாயித் ஹைதமி 14980, 14981)
இவ்வகையில் அஹ்லுல்பைத் என்போர் யார்? என்பதை நாம் அறிந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

மூன்றாவது:

இதனைத் தடுக்கும் முயற்சியில் சிலர்

நாங்கள் ஒன்றைப் பின்பற்றும்போது, அது எங்களை ஒருபோதும் வழிகெடுக்கமாட்டாது என்ற உத்தரவாதம் அதற்கு இருத்தல் வேண்டும். இந்தவகையில் நபியவர்களின் சொல்சார்ந்த சுன்னாவினால் நாம் வழிதவறாமலிருப்பதற்கு முன்மொழியப்பட்ட திருக்குர்ஆனின் சந்தேகத்திற்கு இடமற்ற தன்மையும் (அத்:02,வச:02), அஹ்லுல்பைத்தினரின் பரிசுத்த நிலையும் (அத்:33,வச:33) அல்லாஹ், ரஸுலினால் எமக்கு உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களாக உள்ளன.

இருந்தபோதிலும், திருக்குர்ஆன் மற்றும் அஹ்லுல்பைத்தினரின் நம்பகத்தன்மைகளை கேள்விக்குள்ளாக்கும் முயற்சியில் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்திற்கு உள்ளும்-வெளியிலும், உள்ளூரிலும்- சர்வதேச மட்டத்திலும் செயற்பட்டு வருவதையும், அதனூடாக முஸ்லிம் சமுதாயத்தை வழிகெடுப்பதையும் நாம் பார்க்கலாம்.

ஷீஆக்களிடம் வேறொரு குர்ஆன் என்றும், காதியானிகளிடம் வேறொரு குர்ஆன் என்றும், கவாரிஜிகளிடம் வேறொரு குர்ஆன் என்றும், சுன்னிகளிடம் வேறொரு குர்ஆன் என்றும் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு இஸ்லாமிய உலகில் காணப்படும் திருக்குர்ஆனின் ஒருமுகத்தன்மையை கேள்விக்குறியாக்கி, திருக்குர்ஆனில் கையாடல், திரிபு மற்றும் எழுத்துப்பிழை என்றெல்லாம் கூறி எமது கைகளில் இருக்கும் திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்த குறிப்பாக வஹ்ஹாபிகள் முனைந்துவருவதைக் காணலாம்.
அதேபோன்றுதான், திருக்குர்ஆனில் அல்லாஹு தஆலாவினால் பரிசுத்தப்படுத்தப்பட்டோர் என புகழ்ந்துரைக்கப்பட்ட அஹ்லுல்பைத்தினரின் வரையறைக்குள் தவறிழைத்த, தவறிழைக்க முடியுமானோரை உள்நுழைத்து நபிகளாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அசுத்தப்படுத்திவிடுவதில் அதீத முயற்சி எடுத்துவருகின்றனர் இந்த வஹ்ஹாபிகள். அஹ்லுல்பைத்தினரின் பரிசுத்த நிலையைக் கேள்விக்கு உள்ளாக்கி, அவர்கள் நபிகளாரின் சொல்சார்ந்த சுன்னா கூறுவதைப் போலல்லாது, அவர்கள் பின்பற்றுவதற்குத் தகுதியற்றோர் என்ற பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இவ்வகையில் அஹ்லுல்பைத் என்போர் யார்? என்பதை நாம் அறிந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

நான்காவது:

ஐயம் நீங்கி, தெளிவுறல்

நபி(ஸல்) அவர்களின் இரத்த உறவுகள், பால்குடி உறவுகள் மற்றும் திருமண உறவுகள் என நீண்டு செல்லும் ஒவ்வொருவரும், அவர்களது குடும்ப அங்கத்துவராக இருக்கிறார்கள். இந்நிலையில் நபியவர்களது குடும்பத்தில் ஏதோவொரு வகையில் அங்கமாகிவிட்ட ஒவ்வொருவரும் பரிசுத்தமானவரா?. அப்படியென்றால், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் அபூஜஹ்ல், அபூ லஹப் போன்ற எத்துனையோ காஃபிர்களும், முஷ்ரிக்குகளும் இருப்பதை வரலாற்றில் அறிந்துள்ளோம்.
இந்நிலையில் எவ்வாறு ஏதோ ஒருவகையில் நபியவர்களின் குடும்பத்தினராக ஆகிவிட்ட அனைவரையும் பரிசுத்தமானவர்கள் என்று கூறமுடியும்?.
இவ்வகையில், பரிசுத்தமானோர் என்று திருக்குர்ஆன் அழைக்கின்ற அந்த அஹ்லுல்பைத் என்போர் யார்? என்பதை நாம் அறிந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

திருக்குர்ஆனின் சான்றில் அஹ்லுல்பைத்தின் பரிசுத்த நிலை

ஆயதுத்தத்ஹீர் எனும் திருக்குர்ஆனின் 33வது அத்தியாயமான சூரத்துல் அஹ்ஸாப், 33வது வசனத்தில் அல்லாஹு தஆலா, நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் உறவினரில் சிலரை குறிப்பாக அஹ்லுல்பைத்தினரே…! என விளித்து, அவர்களின் பரிசுத்த நிலை குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
(நபியுடைய வீட்டினரான) அஹ்லுல்பைத்தினரே! உங்களை விட்டும் எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான்.
மேற்படி வசனத்தின் மூலம் நபி (ஸல்) அவர்களுடைய உறவினர்களுள் அஹ்லுல்பைத் என்போரின் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட பரிசுத்த நிலை, உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ரிஜ்ஸ் என்பது திருக்குர்ஆனில் (05:90), (06:125), (06:145), (09:95) மற்றும் (22:30) ஆகிய இடங்களில் தவிர்ந்து கொள்ள வேண்டிய செயல்ரீதியிலான அனைத்துப் பாவங்களையும், மறதி மற்றும் தவறு உட்பட அனைத்து உள அசுத்தங்களையும் குறித்து வந்துள்ளதைக் காணலாம். அதனையே, அல்லாஹு தஆலா நபியவர்களின் குடும்பத்தினரை விட்டும் நீக்கிவிட விரும்புகிறான்.
ரிஜ்ஸ் என்ற சொல்லுக்கு பாவம், தவறு என்பதாகவே சுயூதி, தபரானி, பீரூஸ் ஆபாதி, ஸமர்கன்தி, மாவர்தி, இப்னு ஜவ்ஸி, பஃரு ராஸி, பைழாவி, மஹல்லி மற்றும் ஷவ்கானி முதலிய முன்னைய முஃபஸ்ஸிரீன்களும், அபூபக்கர் அல்ஜஸாயிரி, செய்யித் குத்ப் போன்ற தற்கால முஃபஸ்ஸிரீன்களும் தங்களது தஃப்ஸீர் கிரந்தங்களில் விரிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மேற்படி வசனத்திலுள்ள ரிஜ்ஸ் எனும் பதம், எவ்வகையான அசுத்தம் என்று வரையறுக்கப்படாது பொதுமையானதாக (முத்லக்) வந்துள்ளமை, அது அனைத்துவிதமான அசுத்தங்களையும் உள்ளடக்கமும் என்பதை, சட்டவாக்கப் பொதுவிதியியல் (உஸுலுல் பிக்ஹ்) துறையின் அணுகுமுறையில் இங்கு நாம் விளங்கிக்கொள்ளலாம். எனவே, அனைத்துவித அசுத்தங்களையே, அல்லாஹு தஆலா நபியவர்களின் குடும்பத்தினராகிய அஹ்லுல்பைத்தினரை விட்டும் பரிசுத்தப்படுத்தியுள்ளான் என்பது கவனத்திற்கொள்ளத்தக்கது.

ஆயதுத்தத்ஹீரும், ஒரு தவறான விரிவுரையும்

எந்த ஒரு அறபு வாசகத்தையும் மொழியியல் ரீதியில் ஆய்வு செய்வதற்கு ஆய்வாளர்கள், மொழித்துறை சார்ந்த அறிஞர்களையும், அவர்களின் நூல்களையுமே அணுகுவர். திருக்குர்ஆனில் வந்துள்ள ஒரு வாசகத்தை விளங்கிக்கொள்ளவதில் நபிகளாரின் சுன்னாவிற்கு பெரும்பங்கு உண்டு. சுன்னா என்பது திருக்குர்ஆனில் சுருக்கமானதாக வந்துள்ளதை விரிவாக்கியும், மூடலானதாக வந்துள்ளதை தெளிவாக்கியும் தரக்கூடியது. பலமான சுன்னா, திருக்குர்ஆனின் குறித்த வாசகத்தின் பொருள் இதுதான் என்பதை வரையறுத்துக் கூறும்போது அத்தகைய ஆய்வாளர்கள், மொழிவழக்கு மற்றும் பரிபாசை விளக்கங்களை நாடுவதில்லை. அவ்வாறு நாடி சுன்னாவிற்குப் புறம்பான விளக்கத்தை முன்வைத்தால் அது செல்லுபடியற்றதாகவே இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்தவகையில் ஆயதுத்தத்ஹீர் (தூய்மைப்படுத்தல்) எனும் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் அஹ்லுல்பைத் என்போர் யார் என்பதை நபி(ஸல்) அவர்களின் சுன்னா விரிவாகவும், தெளிவாகவும் விளக்கி வந்திருந்த போதிலும், மேற்படி வசனத்திற்கு விளகக்கமளிக்கும் சிலர், சுன்னாவிற்குப் புறம்பாகவே விரிவுரை வழங்கி வருகின்றனர். இதற்கு மொழிவழக்கு, பரிபாசை விளக்கங்களையும், பொருத்தமற்ற வேறு உதாரங்களையும் முன்வைப்பதைக் காணலாம். எனவே, ஆயத்துத்தத்ஹீருக்கு தவறான விரிவுரையை வழங்குவோர், அறபு வாசகத்தைப் புரிந்து கொள்வதில் எப்போது மொழிவழக்கையும், பரிபாசையையும் பயன்படுத்தல் வேண்டும் என்ற அணுமுறையைத் தெரிந்திருத்தல் வேண்டும்.

விதண்டாவாதமும் விளக்கமும்

அஹ்லுல்பைத்தினரே! உங்களை விட்டும் எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான் (33:33) எனும் திருக்குர்ஆனின் வசனம், நபி(ஸல்) அவர்களின் பரிசுத்த அஹ்லுல்பைத் குறித்து பேசுகிறது. நபியவர்களின் குடும்பத்தில் பாவம் செய்யாத நியைபெற்ற பரிசுத்தமானோர் என்று இவ்வசனம் யாரைக் குறிப்பிடுகிறது என்பதே இங்கே பேசும்பொருளாகும். மாறாக, யார்யாரையெல்லாம் நபிகளாரின் குடும்பத்தினர், உறவினர் என்று சொல்லலாம், சொல்லக்கூடாது என்ற கருத்தில் இங்கு ஆய்வு செய்யப்படவில்லை. ஷீஆக்கள், நபிகளாரின் குடும்பமாக அலீ, ஃபாதிமா, ஹஸன் மற்றும் ஹுஸைன் ஆகியோரை மட்டும்தான் கருதுகிறார்கள் என்ற விதண்டாவாதத்தையும், ஆயத்துத்தத்ஹீருக்குரிய விளக்கத்தையும் சிலர் வழங்கிவருகின்றனர்.
நபி(ஸல்) அவர்களின் இரத்த உறவுகள், பால்குடி உறவுகள் மற்றும் திருமண உறவுகள் என நீண்டு செல்லும் ஒவ்வொருவரும், அவர்களது குடும்ப அங்கத்துவராக இருக்கிறார்கள் என்பதை எந்தவொரு ஷீஆ அறிஞரும் மறுப்பதில்லை. இந்தவகையில் பின்வருவோர் அனைவரும் நபிகளாரின் உறவினர்கள் தான்.
1. உம்முஹாதுல் முஃமினீன்களான நபி(ஸல்) அவர்களின் மனைவியர்.
2. அஹ்லுல்பைத்தினரான அலி (அலை), பாத்திமா (அலை), ஹஸன் (அலை), ஹுஸைன் (அலை)
3. ஹஸரத் ஜஃபர்(ரழி), உகைல்(ரழி), அப்பாஸ் (ரழி) குடும்பம்.
4. பனூ ஹாஷிம் கிளையார்.
எனினும், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஏதோவொரு வகையில் அங்கமாகிவிட்ட ஒவ்வொருவரும் மேற்படி வசனம் குறிப்பிடுவது போன்று பரிசுத்தமானவரா? என்ற கேள்வி எழும்போது, மொத்தமாக நபியவர்களின் குடும்பமெனக் கருதப்படும் எல்லோரும் பரிசுத்தமானவர்கள் என்று ஷீஆ அறிஞர்கள் மட்டுமல்ல, சுன்னி அறிஞர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் பனூ ஹாஷிம் கிளையாரில் அபூஜஹ்ல், அபூ லஹப் போன்ற காஃபிர்களும், முஷ்ரிக்குகளும் இருப்பதை வரலாற்றில் அறிகிறோம். அதேபோன்று ஜாஹிலியத்திலிருந்து மீண்டு இஸ்லாத்திற்கு வந்த இரத்த உறவுகள், பால்குடி உறவுகள் மற்றும் திருமண உறவுகள் என பல்வேறு உறவுகள் திருநபிகளாருக்கு இருந்ததை இங்கு நாம் நினைவு கூறலாம். இந்நிலையில் எவ்வாறு ஏதோ ஒருவகையில் நபியவர்களின் குடும்பத்தினராக ஆகிவிட்ட அனைவரையும் பரிசுத்தமான அஹ்லுல்பைத் என்று கூறமுடியும்?.
எனவே இதனை விளங்கிக்கொள்ளாமல், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர், உறவினர் என்று யார்யார் வரமுடியும் என்று நிரூபிக்கும் வகையில் சிலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதைக்காணலாம். இவ்வாறான ஆய்வு அவசியமற்றதாகும். இதில் எவ்வித கருத்து முரண்பாடும் கிடையாது. அபூஜஹ்லும் நபிகளாரின் குடும்பம்தான், ஹஸரத் அப்பாஸும் நபிகளாரின் குடும்பம்தான், ஹஸரத் அலீயும் நபிகளாரின் குடும்பம்தான். ஆனால், இக்குடும்பத்தினரில் யாரை திருக்குர்ஆன் ஆயதுத்தத்ஹீரின் மூலம் பரிசுத்த அஹ்லுல்பைத் என்று அழைக்கிறது?

ஹதீதுல் கிஸாவும் ஆயதுத் தத்ஹீரும்

ஒருமுறை ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள், உம்முல் முஃமினீன் உம்மு சல்மா (ரழி) அவர்களின் வீட்டில் இருந்தபோது, ஆயத்துத்தத்ஹீர் (33:33) வசனம் நபியவர்களுக்கு அருளப்பட்டது. அச்சமயம் நபியவர்களின் அருமை மகளார் ஹஸ்ரத் பாத்திமா (அலை) அவர்களை நோக்கி, மகளே…! உங்கள் கணவரையும், புதல்வர்களையும் அழைத்து வாருங்கள் என்றார்கள். அவ்வாறே அவரும் அழைத்துவந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு போர்வையினால் தம்மையும், இமாம் அலீ(அலை), அன்னை பாத்திமா(அலை), இமாம் ஹஸன்(அலை), இமாம் ஹுஸைன்(அலை) ஆகியோரையும் போர்த்திய பின் தமது திருக்கரங்களை உயர்த்தி, வல்ல இறைவா…! இவர்களே எனது அஹ்லுல்பைத்தினர், இறiவா…! இவர்களை விட்டும் சகல அசுத்தங்களையும் போக்கி, பரிசுத்தப்படுத்தி வைப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள். அப்போது, உம்மு ஸல்மா (ரழி) அவர்கள, நான் இதில் இல்லையா? என்று நபிகளாரை வினவினார்கள். அதற்கு நபியவர்கள், இல்லை, ஆனால் நீங்கள் நன்மையில் இருக்கிறீர்கள் என்று கூறி போர்வையுள் புகவிடாமல் தடுத்துக்கொண்டார்கள்.
மேற்படி ஹதீதுக்கு, ஹதீதுல் கிஸா (போர்வை) என்று பெயர். இந்த ஹதீதுல்கிஸா இதே பொருள்பட சில பதமாற்றங்களுடன், பல்வேறு கதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. சுனனத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத், சுனன் நஸாயீ, அல்முஃஜம் தபரானீ மற்றும் சுனன் பைஹகீ போன்ற கிரந்தங்கள் இவற்றுள் முதன்மையானவை.
நபி (ஸல்) அவர்களின் மொத்த குடும்பத்தினர் மற்றும் உறவினர் முதலானோரில் குறிப்பிட்ட சிலரை மட்டும் அஹ்லுல்பைத் என விளித்து, தான் அவர்களை பரிசுத்தப்படுத்தியுள்ளதாக ஆயதுத்தத்ஹீரின் மூலம் அல்லாஹு தஆலா அறிவித்துள்ளதை முன்னர் பார்த்துள்ளோம். அவ்வாறு அல்லாஹு தஆலா பரிசுத்தப்படுத்தி அஹ்லுல்பைத் என விளித்த நபியவர்களின் குடும்பத்தினார் யார் என்தை மேலே நாம் குறிப்பிட்ட ஹதீதுல் கிஸா, எமக்குத் தெளிவுபடுத்துகிறது. இதன்படி கீழ்வருவோர், பரிசுத்த அஹ்லுல்பைத்தினராக கருதப்படுகின்றனர்.
1. நபி முஹம்மத்(ஸல்)
2. இமாம் அலீ(அலை)
3. ஸெய்யிதா ஃபாத்திமா(அலை)
4. இமாம் ஹஸன்(அலை)
5. இமாம் ஹுஸைன்(அலை)
ஆயதுத்தத்ஹீரின்படி பரிசுத்த அஹ்லுல்பைத் என்போர் இவர்கள் மட்டும்தான் என்பதை தெளிவுபடுத்தும் ஹதீதுல் கிஸாவில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைப் பிரயோகங்கள், மேலும் அழுத்தமாக இவர்கள் மட்டும்தான் நபியவர்களின் குடும்பத்தினுள் விஷேடமானோர் என்பதையும் வலியுறுத்துகிறது. இதன்படி, மேலே பரிசுத்த அஹ்லுல்பைத் என பெயர்
குறிப்பிடப்பட்டோரைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதை கவனத்திற்கொள்ளலாம்.
اللهم هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي وَأَهْلُ بَيْتِي أَحَقُّ
இறைவா…! இவர்கள்தான் எனது அஹ்லுல்பைத்தினர். எனது அஹ்லுல்பைத்தினரே தகுதியானோராக உள்ளனர். (முஸ்னத் அஹ்மத் 16374)
اللهم هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي وَخَاصَّتِي
இறைவா…! இவர்கள் எனது அஹ்லுல்பைத்தினரும், எனது விஷேடமானோரும் ஆவர். (முஸ்னத் அஹ்மத் 25300, சுனன் திர்மிதி 3806)
اللهم هؤلاء أهل بيتي وعترتي
இறைவா…! இவர்கள்தான் எனது அஹ்லுல்பைத்தினரும், உறவினரும் ஆவர். (அல்முஃஜமுல் அவ்ஸத் தபரானீ 2350)
اللهم هؤلاء أهل بيتي وحامتي
இறைவா…! இவர்கள்தான் எனது அஹ்லுல்பைத்தினரும், உறவினருள் விஷேடமானோரும் ஆவர்.
(முஸ்னத் அல்முவஸ்ஸலி 6866, அல்முஃஜமுல் கபீர் தபரானீ 2601, 2603)
பொதுவாக ஒரு வசனம் அருளப்பட்ட காரணத்தை விளக்கும் ஹதீத்களுக்கு பெரும் முக்கியத்துவம் அறிஞர்களிடத்தில் உண்டு. அதேபோல், ஆயதுத்தத்ஹீர் அருளப்பட்டதன் காரணத்தை (ஸபபுந்நுஸூல்) அறிவிக்கின்ற ஹதீதாக இருக்கின்ற ஹதீதுல் கிஸாவை அவ் ஆயத்திற்கு விளக்கமாக பல்வேறு தஃப்ஸீர்கலை அறிஞர்கள் (ஷீஆ-சுன்னி உட்பட) முன்வைத்துள்ளதை தஃப்ஸீர் கிரந்தங்களில் காணலாம். இருந்தும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் சுன்னாவுக்குப் புறம்பான விளக்கங்களை ஆயதுத்தத்ஹீருக்கு வழங்க முனைகின்றனர்.

பரிசுத்த அஹ்லுல்பைத்தைப் பின்பற்றுதலின் அவசியம்

பின்வரும் ஹதீஸுக்கு ஹதீதுத் தகலைன் (இருபெறுமதிகள்) என்று பெயர். இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் பலமுறை, பல்வேறு இடங்களில் அருளியுள்ளார்கள்:
நான் உங்கள் மத்தியில் பெறுமதிமிக்க இரு விடயங்களைவிட்டுச் செல்கிறேன். அது அல்லாஹ்வுடைய வேதமும், எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்துமாகும். அவ்விரண்டையும் நீங்கள் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள். இவ்விரண்டும் ஹவ்ழு (எனும் சுவனத்தின் நீர்தடாகத்தில் நீர் அருந்த) என்னிடம் வரும்வரை ஒன்றைவிட்டு ஒன்று பிரியமாட்டாது.
(ஜாமிஉத் திர்மிதி, சுனனுத் தாரமீ, முஸ்னத் அஹமத் மற்றும் அல்-முஸ்தத்ரக் லில் ஹாகிம்)
மேற்படி ஹதீஸ், நாம் பின்பற்றவேண்டிய இருபெறுமதியான விடயங்களை எமக்கு அறிவிக்கின்றது. நாம் சுன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுப்போராக இருந்தால் இந்த சொல்ரீதியிலான (سنة قولیة) சுன்னாவுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். ஏனெனில், இறைத்தூதர் எதனை உங்களுக்குக் கொடுத்தாரோ அதனை எடுத்துக்கொள்ளுங்கள் (59:07) என்று திருக்குர்ஆனில் அல்லாஹு தஆலா வலியுறுத்திக் கூறியுள்ளான்.
அஹ்லுல்பைத்தைப் பின்பற்றுவதற்கான அங்கீகாரம் திருக்குர்ஆனாலும், சுன்னாவாலும் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அஹ்லுல்பைத்தைப் பின்பற்றுவதன் மூலம் நாம் உண்மையில் அல்லாஹு தஆலாவையும், அவனது தூதரையும் பின்பற்றுவோராக மாறுகிறோம் என்பதை விளங்கி, அஹ்லுல்பைத்தினரின் வழியில் செயற்பட்டு அவர்களின் நேசத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *