ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா ஓர் அறிமுகம்

ஷீஆக்களின் நான்காவது இமாமான இமாம் செய்னுல் ஆபிதீன் அலீ இப்னு ஹுஸைன் அஸ்-ஸஜ்ஜாத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து சுமார் 54 துஆக்களையும், 15 முனாஜாத்துகளையும், 7 நாளாந்த திக்ருகளையும் உள்ளடக்கிய நூலாக ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா அமைந்துள்ளது. ஷீஆக்களிடத்தில் திருக்குர்ஆன் மற்றும் நஹ்ஜுல் பலாகா ஆகியவற்றிற்கு அடுத்ததாக, மிகமுக்கிய இடத்தை இது பிடித்திருக்கிறது. இது, ‘ஆலுமுஹம்மதின் ஸபூர்வேதம்’ என்றும் ‘அஹ்லுல்பைத்தின் இன்ஜீல்வேதம்’ என்றும் பிரபலம் பெற்றுள்ளது. அல்லாமா ஷேய்க் ஆகாபுஸோர்க் தெஹ்ரானி என்பவர், அத்-தரீஆ எனும் நூலில் ஸஹீஃபாவுக்கு எழுதப்பட்டுள்ள சுமார் 70 விரிவுரைகளின் பட்டியலைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் மிகப் பிரபல்யமானது, செய்யித் அலீகான் ஷராயீ அவர்களால் எழுதப்பட்ட ரியாழுஸ் ஸாலிகீன் ஆகும்.

ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா, அறபு மொழியை மூலமாகக் கொண்டது. இது, தற்போது தமிழ், பாரசீகம், உருது, ஆங்கிலம், பிரஞ்சு, துருக்கி, இஸ்பானிஷ், பொஸ்னியன், ஜேர்மனி மற்றும் பல உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஷீஆ முஸ்லிம் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு அப்பாலும், சுன்னி முஸ்லிம் அறிஞர்களிடத்திலும், ஃபஸாஹத் எனும் சொற்றிறக்கலை (Eloquence), பலாகத் எனும் மொழிநயம் (Rhetoric) என்பவற்றின் அடிப்படையில் புகழ்ந்து பேசப்பட்டதாகவும், வரவேற்பை பெற்றதாகவும் காணப்படுகிறது.

இமாம் ஸஜ்ஜாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அதிகளவிலான இஸ்லாமிய அறிவுகளை தனது பிரார்த்தனைகளில் உட்பொதிந்ததாக விளக்கியிருக்கிறார்கள். இறையியல், பிரபஞ்சவியல், மாந்தரியல், பௌதீகவதீத விடயங்கள், வானவர்கள், இறைத்தூதர்களின் தூதுத்துவம், இறுதித்தூதரின் குடும்பத்தாரின் சிறப்பும் அந்தஸ்தும், இமாமத், நல்லொழுக்கங்களும் தீயகுணங்களும், பெருநாட்களை சிறப்பித்தல், சமூக பொருளாதார விடயங்கள், வரலாற்றுக் குறிப்புகள், பல்வேறுபட்ட இறையருள்கள், பிரார்த்தனையின் ஒழுங்குகள், குர்ஆனை ஓதும் ஒழுங்குமுறைகள், திக்ர், தொழுகை, வழிபாடு முதலான தலைப்புகள், ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவில் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன. ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவின் மிக பிரபல்யமான துஆ, ‘மகாரிமுல் அஹ்லாக்’ எனும் பெயர்கொண்டதாகும்.

Scroll to Top
Scroll to Top