இந்நூலின் பண்பாட்டுத் தாக்கம் குறித்து எப்போதும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உண்மையில் இந்நூலை நேர்வழியின் தீபமாகக் கருதுகின்றனர். மனித சமுதாயம் எப்போதும் இதன்பால் தேவையுடையதாக இருக்கின்றது. ஆயதுல்லாஹ் செய்யித் பாகிர் சத்ர் அவர்கள், ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவுக்கு தான் வழங்கியுள்ள முன்னுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், ‘இமாம் ஸஜ்ஜாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னகத்தே கொண்டிருந்த தலைமைத்துவக் கடமைப்பாட்டின் காலகட்டத்தில் காணப்பட்ட சமூகத் தேவைப்பாடுகளோடு பொருத்தமாக அமைந்திருந்த மிகப்பெரும் சமூக சேவையாக, ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. மேலும், தனித்துவமான தெய்வீக கலாசார சொத்தாக இருப்பதோடு, ஒரு சிந்தனையின் மிகப்பெரும் மூலாதாரமாகவும், தெய்வீக வழிகாட்டல்களின் தீபமாகவும், இஸ்லாத்தின் பண்பாடு மற்றும் அறநெறியின் பள்ளியாகவும் இது இருக்கிறது. காலங்கள் பல கடந்த போதிலும் கூட இன்றும் நிலைத்து நிற்கின்றது. மனிதசமுதாயம் எப்போதும் இவ்வாறான முஹம்மதிய, அலவியப் பாரம்பரிய சொத்தின்பால் தேவையுடையதாகவே இருக்கிறது. ஷைத்தானின் வழிகெடுப்புகள் மற்றும் உலகின் ஏமாற்றங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், இந்நூலின் பாலான தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.(2)
ஆயதுல்லாஹ் ஜௌபர் சுப்ஹானி தாமத் பரகாதுஹு அவர்கள், ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவை அறநெறியின் உயர் பள்ளியாகவும், வாழ்க்கைப் பாடமாகவும், மாபெரும் போதனையாகவும் அறிமுகம் செய்து, இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், ‘அன்றைய சமுதாயத்தின் மீது ஆட்சிசெலுத்திக் கொண்டிருந்த சூழ்நிலைகளுக்கு அமைவாக ஆன்மீகப் பிரார்த்தனைகள் மற்றும் பக்திப் பாசுரங்களின் வடிவில், தௌஹீத் எனும் ஏகத்துவக் கொள்கையையும் மற்றும் ஜௌஹர் இர்ஃபானி எனும் மெய்ஞ்ஞான சாரம்சத்தையும் அமைத்துக் கொடுப்பதனூடாக, முஸ்லிம்கள் மிகச்சிக்கலான சூழ்நிலைகளில் தாம்கொண்டிருந்த கடமைப்பாடுகளைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எவ்வாறு தௌபாவின் வாயில்களை நாம் திறப்பது, சமூகத்தோடு என்ன முறையில் நாம் நடப்பது, பெற்றோர்கள் – பிள்ளைகள் – நண்பர்கள் மற்றும் அயலவர்களுக்கு எவ்வாறு நல்லுபகாரம் புரிவது, பண்பாட்டையுடைய மனிதனின் ஆத்மீகப்பயணம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பனவற்றை இமாம் அவர்கள், தமது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்குப் போதிக்கிறார்கள். இந்நூல் உண்மையிலேயே ஒரு தெய்வீகப்பள்ளியாகும். எல்லா வகையான பண்பாட்டு, சமூக, அரசியல் போதனைகளும் இதில் உள்ளன. ஒரு கோணத்தில், பண்பாட்டிற்கான முன்னுதாரணப் பள்ளியாகத் திகழ்கிறது. செய்யிதுஸ் ஸாஜிதீன் இமாம் ஸஜ்ஜாத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இல்ஹாம் இலாஹி எனும் தெய்வீக உள்மனத்தூண்டல்களோடு பிரார்த்தனைகளின் வடிவில் இதனை அமைத்திருக்கிறார்கள்.(2)
(1). ஆயதுல்லாஹ் செய்யித் முஹம்மத் பாகிரின் ஸஹீஃபாவுக்கான முன்னுரையிலிருந்த…
(2). மன்ஸுர் காக்ஸாரின் ஃபர்கங்கே ஸஹீஃபயே ஸஜ்ஜாதிய்யா (ஸஹீஃபா அகராதி)