இந்நூலின் சொற்றிறனும், மொழிநயமும் அறபுலக மொழியியலாளர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஷீஆ அறிஞர்கள் உட்பட, சுன்னி அறிஞர்களில் சிலரும் ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவிலிருந்து சில பிரார்த்தனைகளை தம்முடைய நூற்களில் பதிவுசெய்துள்ளனர்.(1) இமாம் தன்தாவீ அவர்கள், ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா தொடர்பாக குறிப்பிடுகையில், ‘நான் இந்நூலில் எதை வாசித்தாலும் கூட அதனை படைப்புகளின் பேச்சுகளைவிட உயர்ந்ததாகவும், படைப்பாளனின் வார்த்தைகளுக்கு அடுத்த நிலையிலும் பார்க்கிறேன். உண்மையில் இது சங்கையான நூலாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்கள்.(2) பேராசிரியர் ஷஹீத் முதஹ்ஹரி அவர்கள், ஸஹீஃபாவை இஸ்லாத்தின் முஃஜிஸாக்களில் ஒன்றாகக்கருதி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்,
‘இஸ்லாம் தன்னுடைய பாசறையில், இப்படியான அற்புத வார்த்தைகளைப் பேசக்கூடியோரைப் பயிற்றுவித்துள்ளது. இமாம் அலீ இப்னு அபீதாலிப் மற்றும் இமாம் சைனுல் ஆபிதீன் அலைஹிமஸ்ஸலாம் ஆகியோரிடமிருந்து அமையப்பெற்ற இரு நூற்களைத் தவிர வேறெதையும் (இவற்றைவிடச் சிறந்ததாக) நாம் பெறவில்லை. மேலும் இஸ்லாமும், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக வேறெதையும் (இவற்றைப்போன்று) பெற்றிருக்கவுமில்லை என்பதற்குச் சான்றாக, ஜாஹிலிய்யாப் பாலைநில உலகிலிருந்து இஸ்லாத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களினால் இவ்வாறான இரு ஆக்கங்கள் வெளிப்பட்டிருப்பதே போதுமானதாகும். இவை அடிப்படையிலேயே அற்புதமானவை. இவற்றையன்றி வேறில்லை எனுமளவுக்கு, இவை உயர்வானவையும், மேலானவையுமாகும்’.(3)
செய்யித் இப்னு தாவூஸ் அவர்கள், இந்நூலிலுள்ள இது போன்ற வாசகங்களைக் கொண்டுவருவதற்கு, சாதாரண மனிதர்களால் முடியாது எனுமளவுக்கு, பிரார்த்தனை சார்ந்த மிகமுக்கியமான ஆக்கங்களின் வரிசையில் இதனைக் கருதியுள்ளார்கள்.(4) ஷேய்க் இப்னு சுஹ்ர் ஆஸுஃப் அவர்கள், பஸராவைச் சேர்ந்த மனிதர் ஒருவரைப் பற்றியதான படிப்பினைக் கதையொன்றைச் சுட்டிக்காட்டியதனூடாக, மொழிநய ரீதியில் இந்நூலின் உயர்நிலையை சுட்டிக்காட்டி பின்வருமாறு எழுதியுள்ளார்கள், ‘பஸராவாசிகளுள் மொழிநயம் கற்றறிந்த ஒருவர் இருந்தார். அவரிடத்தில், ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவைப் பற்றிப் பேசப்பட்டபோது, அதற்கு அவர், உங்களுக்காக (இதுபோன்ற ஒன்றை) நானும் எழுதிக்கொடுக்கிறேன், என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார். (இமாம் சைனுல் ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று இவ்வாறான வாசகங்களை என்னாலும் கூட கூறமுடியும் எனும் பொருளில் குறிப்பிட்டிருந்தார்). பின்னர், எழுதுகோலைக் கையிலெடுத்து (எழுதுவதற்காக) தனது தலையை கீழே சாய்த்தார். ஆனால், தலையை அவர் உயர்த்தவே இல்லை. அதேநிலையில் உலகைவிட்டும் அவரது உயிர் பிரிந்துவிட்டது.(5)
(1). இப்னு அபில் ஹதீதின் ஷரஹு நஹ்ஜுல் பலாகா, பா:06, பக்:177,178 மற்றும் பா:11, பக்:192
(2). ஷேய்க் ஹம்த் ஆஃபரன்தீ பதிப்பித்த ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யாவின் முன்னுரையிலிருந்து…
(3). பேராசிரியர் முர்தஸா முதஹ்ஹரியின் ஆசாதியே மஃனவீ (ஆன்மீகச் சுதந்திரம்), பக்:61
(4). இப்னு தாவூசின் ஃபத்ஹுல் அப்வாப், பக்:76
(5). இப்னு ஷுஹ்ர் ஆஷுபின் மனாகிபு ஆலி அபீதாலிப், பா:03, பக்:279