ரமழான் மாதத்தின் சிறப்பு

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவனே இரவையும் பகலையும் இயக்கக் கூடியவன். மாதங்களையும் வருடங்களையும் சுழன்று வரச் செய்பவன். அவன் அரசன். தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன். மகத்துவத்திலும் நீடித்திருப்பதிலும் தனித்துவம் உடையவன். குறைபாடுகளை விட்டும் மனிதர்களுக்கு ஒப்பாகுதல் என்பதை விட்டும் தூய்மையானவன்!

நரம்புகள் மற்றும் எலும்புகளினுள் இருப்பதென்ன என்பதையும் அவன் பார்க்கிறான். மெல்லிய குரல்களையும் நுண்ணிய பேச்சையும் கேட்கிறான்! அவன் கருணை பொழியும் இறைவன். அதிக அளவு உபகாரம் செய்பவன். ஆற்றல் மிக்கவன். தண்டனை வாங்குவதில் கடுமையானவன். உலகிலுள்ள எல்லாவற்றையும் சரியாக நிர்ணயிப்பவன். அழகிய முறையில் அவற்றை இயக்குபவன். சட்ட நெறிகளை வகுத்தவன்!. அவனது ஆற்றல் கொண்டு தான் காற்று சுழல்கிறது! மேகம் செல்கிறது. அவனது நுண்ணறிவு மற்றும் கருணையினால் தான் இரவு – பகல் மாறி மாறிச் சுழன்று வருகின்றது!

இறைவனை – அவனுடைய மாட்சிமை மிக்க ஆற்றல்களுக்காகவும் அழகிய அருட்கொடைகளுக்காகவும் புகழ்கிறேன். அதிக அளவில் அருளை வேண்டுபவன் போல் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்!அவனைத் தவிர வணக்கத்துக்குத் தகுதியான வேறு இறைவன் இல்லை என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்கிற முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சி அளிக்கிறேன்.

அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! மேலும் நபியவர்களின் வாழ்க்கையை உண்மையாக பின் பற்றி வாழ்ந்த உத்தம நபித் தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக!, அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!

அல்லாஹ்வின் அடியார்களே! அறிந்து கொள்ளுங்கள்: தன் படைப்பினங்களின் விஷயத்தில் தீர்ப்பளிக்கும் நிறைவான அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அவனுடைய படைப்புகளிலும் நெறிமுறைகளிலும் உள்ள நிறைவான தத்துவங்களை அவன் மட்டுமே அறிவான். படைப்பதிலும் நெறிமுறைகளை வகுப்பதிலும் அவன் விவேகமானவன்.

மனிதர்களை விளையாட்டுக்காக அவன் படைக்கவில்லை. அவர்களை வெறுமனே விட்டு விடவுமில்லை. ஷரீஅத் – நெறி முறைகளை அவர்களுக்கு வகுத்து அளித்திருப்பது வீணுக்காக அல்ல! மாறாக பெரியதோர் இலட்சியத்திற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான். ஒரு மகத்தான காரியத்திற்காகவே அவர்களை உலகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறான்! நேரான வழியை அண்ணல் நபி மூலமும் அன்னார் குடும்பத்தினரான அஹ்லுல்பைத்தினர் மூலமும் அவர்களுக்கு விளக்கிக் கொடுத்திருப்பதும், ஷரீஅத் – நெறிமுறைகளை அவர்களுக்கு வகுத்தளித்திருப்பதும் எதற்காக எனில், அவர்களின் ஈமான் – இறைநம்பிக்கை அதிகரிக்க வேண்டும். அவற்றின் மூலம் அவர்களின் வழிபாடு முழுமை அடைய வேண்டும் என்பதற்காகத் தான்!

ஆம்! அல்லாஹ் மனிதர்களுக்கு வகுத்தளித்த எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் ஒரு நிறைவான தத்துவம் உண்டு. அதனை அறிந்தவர்கள் அறிந்தார்கள். அறியாதவர்கள் அறியாமல் போயினர்! ஏதேனும் வழிபாட்டின் தத்துவத்தை நாம் அறியா திருப்பதன் பொருள், அந்த வழிபாட்டிற்கு எந்;த தத்துவமும் இல்லை என்பதல்ல. மாறாக அல்லாஹ் அதில் வைத்துள்ள தத்துவத்தை அறிவதில் நம்மிடம் குறைபாடு உள்ளது என்பதைத் தான் அது சுட்டிக் காட்டுகிறது.

திண்ணமாக அல்லாஹ் வழிபாடுகளை வகுத்தளித்திருப்பதும் நடைமுறை விவகாரங்களை ஒழுங்குபடுத்தி இருப்பதும் – மனிதர்களைச் பரீச்சித்துப் பார்க்கும் நோக்கத்தில் தான்! அதாவது யார் இறைவனை வழிபடுகிறார், யார் தன் மனம் போன போக்கிலே தான்தோண்டிதனமாக தன் இச்சைக்கு வழிபடுகிறார் என்று அதன் மூலம் தெளிவாக வேண்டும் என்பதற்காகத் தான்!

இந்த வணக்கவழிபாடுகளையும் அந்த நெறிமுறைகளையும் திறந்த உள்ளத்துடனும், மன நிம்மதியுடனும் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவர்தான் தன் இறைவனை வழிபடக்கூடியவர். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்படுவதற்காக மன இச்சையைத் துறந்தவர்!

எவர் வணக்க வழிபாடுகளில் தான் விரும்பும் சிலவற்றை மட்டும் ஏற்றுக் கொள்கிறாரோ – தனது விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் ஒத்துவரும் நெறிமுறைகளை மட்டும் பின்பற்றுகிறாரோ அவர் தனது மன இச்சையை வழிபடக் கூடியவராவார். அல்லாஹ்வின் ஷரீஅத்தை வெறுத்தவராவார். தன் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் புறக்கணித்தவராவார்! அத்தகையவர் தனது மன இச்சையைத் தன் தலைவராக ஆக்கினாரே தவிர மனத்தைத் தனது ஆதிக்கத்துக் கீழடங்கிப் போகக் கூடியதாய் ஆக்கவில்லை! தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைய வேண்டும் எனும் வகையில் அல்லாஹ்வின் ஷரீஅத்தை ஆக்கி விட்டார். அவரது அறிவு குறைபாடு உடையதாக இருந்தும் – அதன் விவேகம் குறைந்திருப்பதுடனும் அவர் இப்படி விரும்பி விட்டார்! அல்லாஹ் இதை இவ்வாறு கூறுகிறான்:

சத்தியம் அவர்களின் மன இச்சையைப் பின்பற்றிச் செல்லுமாயின் வானம், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்தின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும் – உண்மை என்னவெனில் அவர்ளுக்கே உரிய நல்லுரையை அவர்களிடம் நாம் கொண்டு வந்திருக்கிறோம். அவர்களோ தங்களது நல்லுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள்!? (23:71)

அல்லாஹ்வுடைய விவேகத்தின்பாற்பட்டது தான் இதுவும். அதாவது, வணக்க வழிபாடுகளை பல வகைகளாக அவன் ஆக்கியுள்ளான் என்பது! அதன் நோக்கம் ஏற்றுக்கொள்வதும் திருப்தி அடைவதும் தெளிவுபட வேண்டும் என்பதே!

மக்களில் சிலர் உள்ளனர். அவர்கள் வழிபாடுகளில் ஒரே ஒரு வகையை மட்டும் பொருந்திக் கொள்கின்றனர். அவற்றை மட்டும் நிறைவேற்றுகின்றனர்! ஆனால் அவர்கள் வேறு சில வழிபாடுகளை வெறுக்கின்றனர். அதில் அலட்சியம் செய்கின்றனர்!

அல்லாஹ் சில வழிபாடுகளை உடலுறுப்புகளுடன் தொடர்பு உடையவையாக ஆக்கினான். தொழுகையைப் போன்று! வேறு சிலவற்றை மனத்திற்கு உகந்த செல்வத்தைச் செலவு செய்வதுடன் தொடர்புடையவையாக ஆக்கினான். ஜகாக்தை, கும்ஸைப் போன்று! – வேறுசில வழிபாடுகளை உடலுறுப்புகள், செல்வம் ஆகிய இரண்டுடனும் தொடர்பு உடையவையாக ஆக்கினான். ஹஜ் மற்றும் ஜிஹாதைப் போன்று! – இன்னும் சில வழிபாடுகளை, பிரியமானவை, ஆசைக்குரியவற்றை விட்டும் மனத்தைக் கட்டுப்படுத்துவதோடு தொடர்புடையவையாக ஆக்கினான். நோன்பைப் போன்று!

ஒரு மனிதன் இப்படிப்பட்ட வணக்க வழிபாடுகளைச் செயல்படுத்தினால், எந்த முறையில் நிறைவேற்ற வேண்டுமென உள்ளதோ அந்த முறையில், எவ்வித வெறுப்பும் குறைபாடுமின்றி முழுமையாக அவற்றை நிறைவேற்றி னால், அவ்வழியில் களைப்பையும் கடும் சிரமத்தையும் தாங்கிக் கொண்டால், அதாவது அவனுக்கு விருப்பமான செல்வத்தைப் பிறருக்கு வழங்கிடவும் மேலும் தன் மனத்தை அதன் ஆசைகளை விட்டும் தடுத்திடவும் செய்தால் (இவை அனைத்தையும்)தன் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவனாகவும் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட்டவனாகவும் அவனது ஷரீஅத்தில் விருப்பம் கொண்டவனாகவும் நிறைவேற்றினால் அது, தன் இறைவனுக்கு அவன் முழுமையாக அடிமைப்பட்டு விட்டான் என்பதற்கான அடையாளமாகும். மேலும் அவன் தன் இறைவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிகிறான். அவனை நேசிக்கிறான் என்பதற்கும் அடையாளமாகும் – ஆம்! இதன் மூலம், அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலித்து வரும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு முழுமையாய் அடிமைப்பட்டிருக்கும் தன்மை அவனில் உறுதியாகி விடுகிறது! – இதுவரை சொல்லப்பட்;ட விஷயங்கள் தெளிவாகி விட்டதெனில் இப்போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்: நோன்புக்கு அநேகத் தத்துவங்கள் உள்ளன. நோன்பை இஸ்லாத்தின் கடமையாகவும் அதன் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும் ஆக்கியது அந்தத் தத்துவங்கள் தாம்!

நோன்பின் தத்துவங்களில் ஒன்று என்னவெனில், அது அல்லாஹ்வுக்குரிய ஒரு வழிபாடு. அதை மேற்கொள்ளும் மனிதன் தன் இரட்சகனின் பக்கம் நெருங்கிச் செல்கிறான். உணவு – பானம், உடலுறவு ஆகியவை – அவனுக்கு விருப்பமானவையாகவும் ஆசை கொள்ளத் தக்கவையாகவும் உள்ள நிலையில் அவற்றைத் துறப்பதன் மூலம் இறையண்மை அவனுக்குக் கிடைக்கிறது.

இப்படிச் செய்வதன் மூலம் அவனது இறைநம்பிக்கையின் உண்மை நிலை வெளிப்படுவதுடன் அல்லாஹ்வுக்கு அவன் அடிமைப்பட்டிருப்பதும் அல்லாஹ்வின் மீது அவன் கொண்டுள்ள அன்பின் வலிமையும் – அல்லாஹ்விடமுள்ள மறுமைப் பேறுகளை அவன் ஆதரவு வைத்திருப்பதும் தெரிய வருகிறது!

ஏனெனில் ஒருமனிதன் தன் மனத்திற்கு உகந்ததை விட்டு விடுகிறான் எனில் அவனிடத்தில் அதை விட முக்கியமாக உள்ள ஒன்றைக் கருத்தில் கொண்டு தான் அப்படிச் செய்வான்!

எந்தப் பொருள்களின் ஆசை இயற்கையாக மனிதனின் உள்ளத்தில் படைக்கப்பட்டுள்ளதோ அந்தப் பொருள்களின் ஆசையைத் துறந்து விட வேண்டும். இதுதான் நோன்பின் மூலம் இறைவன் விரும்புவது என்பதை அறிந்து கொண்ட ஓர் இறைநம்பிக்கையாளன் தனது மனவிருப்பத்தை விடவும் தன் எஜமானான இறைவனின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்தான் எனில் மேலும் அந்தப் பொருள்களின் மீது அதிக அளவில் அவன் ஆசை கொண்டிருந்த நிலையில் அவற்றை அவன் விட்டு விட்டான் எனில் – எதற்காக அப்படிச் செய்தான்? ஆம்! அல்லாஹ்வுக்காக அவற்றைத் துறப்பதில் தான் தனக்கு இன்பமும் மனஅமைதியும் உள்ளன என்று அறிந்ததால் தான் அப்படிச் செய்தான்!

இதனால்தான் முஸ்லிம்களில் பெரும்பாலோரைக் காணலாம்: ரமளாhன் மாதத்தின் ஒரே ஒருநாள் நோன்பைக் கூட தக்க காரணமின்றி விட்டு விடுமாறு அவர்களை வற்புறுத்தினால் கூட- அவர்களை அடித்தாலும் கூட – சிறைப்பிடித்தாலும் கூட அதற்கு அவர்கள் உடன்படுவதில்லை! -இதுதான் நோன்பின் தத்துவங்களில் மிகப்பெரிய – முக்கியத்துவம் வாய்ந்த தத்துவமாகும்!

நோன்பின் மற்றொரு தத்துவம் – அது இறையச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் நீங்கள் இறையச்சம் கொள்ளக்கூடும் என்பதற்காக உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (2: 183)

ஏனெனில் நோன்பு நோற்பவன் வணக்க வழிபாடு செய்ய வேண்டும் என்றும், பாவங்களை விட்டும் விலக வேண்டும் என்றும் ஏவப்பட்;டுள்ளான். நபியவர்கள் கூறியது போன்று:

எவர் பொய் பேசுவதையும் பித்தலாட்டம் செய்வதையும் அபத்தமாக நடப்பதைம் விட்டு விடவில்லையோ அவர் உண்ணாமல் – பருகாமல் இருப்பது குறித்து அல்லாஹ்வுக்கு எந்த அக்கரையும் இல்லை!?

நோன்பாளி நோன்பு வைத்திருக்கும் நேரத்தில் ஏதேனும் பாவச் செயல் செய்ய நாடும் போது, தாம் ஒரு நோன்பாளி என்பதை நினைவு கூர்கிறார். உடனே அந்தப் பாவச்செயலை விட்டும் விலகி விடுகிறார். இதனால் தான் தன்னைத் திட்டக் கூடிய – ஏசக்கூடிய மனிதனிடம் நான் நோன்பாளி என்று கூறவேண்டும் என்று நபி (ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள், இதன் நோக்கம் திட்டுவதையும் ஏசுவதையும் விட்டு விலகியிருக்க நோன்பாளிக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது என்று தன்னை ஏசுபவனுக்கு எச்சரிக்கை செய்வதாகும். மேலும் நோன்பாளி – தாம் நோன்பு வைத்திருப்பதைத் தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொள்வதுமாகும். அப்போது பதிலுக்குப் பதில் திட்டுவதையும் ஏசுவதையும் தவிர்த்துக் கொள்வார்!

நோன்பின் மற்றொரு தத்துவம் யாதெனில், சிந்திப்பதற்கும் (இறைவனை திக்ர்) நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்குத் தனிமை கிடைக்கிறது என்பதாகும். ஏனெனில் ஆசைப்படும் பொருள்களையெல்;லாம் உண்பதென்பது மெய்மறதியை உண்டாக்கும்.

நோன்பின் இன்னொரு தத்துவம் என்னவெனில், ஒரு செல்வந்தனுக்குச் செல்வத்தின் மூலம் அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடையை அந்தச் செல்வந்தன் அறிந்து கொள்வதாகும். உணவு, பானம் மற்றும் மனைவியுடன் கூடி வாழும் பேறு ஆகியவற்றை அவனுக்கு வழங்கி அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். அதே நேரம் மக்களில் பலர் இவை கிடைக்காமல் உள்ளனர்! எனவே இத்தகைய அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வை அவன் புகழ்கிறான்! இந்த வசதியை வழங்கியமைக்காக அவனுக்கு நன்றி செலுத்துகிறான்! மேலும் உணவின்றி வெறும் வயிறுடன் இரவைக் கழிக்கும் தன் ஏழை சகோதரனை நோன்பின் பயனாக அந்தச் செல்வந்தன் நினைத்துப் பார்க்கிறான். அவனுக்குச் செல்வத்தைத் தர்மம் செய்கிறான். அந்த ஏழை, அந்தப் பணத்தைக் கொண்டு ஆடைகள் வாங்கி தன் மானத்தை மறைக்கிறான். உணவு வாங்கித் தனது பசியைப் போக்குகிறான்

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் மக்களிலெல்லாம் அதிகம் வாரி வழங்கும் வள்ளலாய்த் திகழ்ந்தார்கள் என்று ஹதீஸில் வந்துள்ளது! அதுவும் ரமளான் மாதத்தில் – அவர்களை ஜிப்ரீல் சந்தித்து குர்ஆனை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் நேரத்தில் இன்னும் அதிகமாக கொடை வழங்குபவர்களாய் இருந்தார்கள்!

நோன்;பின் மற்றொரு தத்துவம் மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை அடக்குவதற்கும் பயிற்சி தருவதாகும். மனத்தின் கடிவாளத்தைக் கைப்பற்றும் ஆற்றல் பெறுவதுமாகும். அப்போது தான் மனிதன் தன் மனதின் மீது அதிகாரம் செலுத்தி மனதை வென்றடக்க முடியும்! அதன் நன்மையும் நற்பேறும் எதில் உள்ளதோ அதன் பால் அதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்லவும் முடியும். ஏனெனில் மனித மனம் தீமை செய்யுமாறு அதிகம் தூண்டக்கூடியது. மனிதன் தனது மனத்தின் கடிவாளத்தை அவிழ்த்து விட்டால் அது அவனை அழிவில் தள்ளிவிடும்! அதன் மீது அதிகாரம் செலுத்தி அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினால் உன்னதமான பதவிகளின் பால் -உயர்ந்த குறிக்கோள்களின் பால் அதனை அவன் வழி நடத்திச் செல்ல முடியும்.

இத்தோடு ரமழான் மாத்தில் ஓதவேண்டிய துஆக்களையும் அவை பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதையும் பார்ப்போம்.நபி (ஸல்) அவர்கள் புனித நோம்பு வருவதையிட்டு மக்களுக்கு மத்தில் ஒரு பிரசங்கம் செய்தார்கள் அதன் சுருக்கத்தை உங்கள் பார்வைக்காக தருகின்றோம்.

செய்க் சதூக் (றஹ்) அவர்கள் மிகவும் சரியான ஸனதுடன் ஒரு ஹதீஸை இமாம் றிழா(அலை) அவர்களிடமிருந்து தன் பாட்டனார்களிமிருந்து அவர்கள் கூற அறிவித்துள்ளார்கள். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கொத்பா பிரசங்கம் செய்தார்கள். அப்போது அவர்கள் சொன்னார்கள். ஏய் மனிதர்களே உங்களை நோக்கி அருள் பொருந்திய பரக்கத்துக்கள் நிறைந்த பாவமன்னிப்புடைய இறைவனது மாதம் வந்து கொண்டிருக்கின்றது. அது இறைவனிடத்தில் மாதங்களில் மிகச்சிறந்த மாதமாகும். அதனுடைய நாட்கள் நாட்களில் மிகச் சிறந்த நாட்களாகும். அதன் இரவுகள் இரவுகளிலெல்லாம் மிகச் சிறந்த இரவுகளாகும்.அதன் நேரங்கள் நேரங்களில் மிகச் சிறந்த நேரங்களாகும். அதில் நீங்கள் இறைவனது விருந்தினராக அழைக்கப் பட்டுள்ளீர்கள். அதில் நீங்கள் விடம் மூச்சகளுக்கு தஸ்பீஹுடைய நன்மைகள் இருக்கின்றன. உங்களுடைய தூக்கத்திற்கு இபாதத்துடைய நன்மைகள் இருக்கின்றன. அதில் உங்களுயைட அமல்கள் ஏற்றுக்கொள்ளப் படும். உங்களுயைட துஆக்கள் அங்கீகரிக்கப்படும். எனவே உங்களுயைட இறைவனிடத்தில் சரியான நிய்யத்திற்கும், பாவங்கள், கெட்ட செயல்களிலிருந்து தங்களைப் பாது காப்பதற்குமாக பாக்கியத்தையும், நோன்பு நோற்பதற்கும், அல் குர்ஆனை அதிகமாக ஓதுவதற்கும் பாக்கியத்திதைத் தருமாறு துஆச் செய்து கொள்ளுங்கள். இந்த மாத்தில் எவ ருடைய பாவங்கள் மன்னிக்கப் படவில்லையோ அவர் பாவி, மூதேவியாகும்.இந்த மாத்தில் உங்களுக்கு ததாகம் பசி ஏற்படும் போது மறுமையில் ஏற்படும் தாகத்தையும் பசியையும் ஞாபகித்துக் கொள்ளுங்கள். இதில் ஏழைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும் ஸதகா தனதருமம் செய்யுங்கள். உங்களில் பெரியவர்களை கண்ணிப் படுத்துவதுடன் சிறியசவர்களுக்கும் இரக்கம் காட்டுங்கள். இந்த மாதத்தில் எவர் ஒருவர் குர்அனில் ஒரு வசனத்தை ஓதினாலும் அதன் கூலி மற்ற மாதங்களில் குர்ஆன் முழுவதையும் ஓதிய நன்மை அவருக்கு கிடைக்கின்றது. மனிதர்களே இந்த மாதத்தில் சுவர்க்க கதவுகள் திறக்கப் படு;கின்றது எனவே உங்கள் மீதும் அதன் வாசம் வீச துஆச் செய்து கொள்ளுங்கள். அதேபோல் நரகத்தின் வாசல் மூடப் படுகின்றது உங்களை அதல் நுளைவிக்காது இருப்பதற்கு துஆச் செய்து கொள்ளுங்கள். இந்த மாதத்தில் ஷைத்தான்கள் விலங்கிடப் படுகிறார்கள் எனவே அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலிருக்க துஆச் செய்து கொள்ளங்கள். ..

மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது இறைவன் நோம்பின் கடைசி நேரத்தில் அதாவது இப்தாருடைய நேரத்தில் ஆயிரக் கணக்கான நரக வாதிகளை விடுதலை செய்கிறான். வெள்ளிக் கிழமை இரவிலும் பகலிலும், அதன் ஒவ்வொரு மணித்தியாளத்திலும் நரகத்திற்கு தகுதியான ஆயிரக்கணக்கான பாவிகளை விடுதலை செய்கிறான். ரமழானின் கடைசி இரவில் சென்ற நாட்களில் விடுதலை செய்த அளவுக்கு விடுதலை செய்கிறான். எனவே அன்புக்குறிய வாசகர்களே ரமழான் மாதம் உங்கள் பாவங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் உம்மை விட்டும் செல்லாதிருக்கும் வண்ணம் உமது நடவடிக்களை ஆக்கிக் கொள் அதாவது ரமழான் மாதத்தில் உமது பாவங்களுக்குறிய மன்னிப்பை பெற்றுக் கொள் உமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமாயின் இவைகளை உரிய முறையில் செய்து கொள்! அதாவது அதிகமாக குர்ஆன் ஓது, இரவிலும் பகலிலும் இறைவனை வணங்கு, உன்மீது கடமையான வணக்கங்களை அதற்குறிய நேரத்தில் நிறைவேற்று அதை கழாச் செய்து விடாதே!, அதிகமாக பாவமன்னிப்புத் தேடு ஹராமானவைகளை பார்ப்பதை விட்டும் உன் பார்வையை தடுத்துக் கொள், ஹராமான பொருள்களினால் நோன்பு திறவாதே,அத்துடன் செய்யிதினா இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் நமக்கு உபதேசம் செய்தள்ளது போல் நடந்து கொள் அவர்கள் நமக்குச் சொன்னார்கள். நீ எப்போதாவது நோன்பு நோற்றால் உனது காது,கண்,முடி, தோல் மற்றும் ஏனைய உறுப்புக்களையும் நோன்பு நோற்க வை. அதாவது ஹராமாக்கப்பட்டவைகளை விட்டும் இல்லை மக்ரூஹாக்கப்பட்;வைகளை விட்டும் உன்னைத் தடுத்துக் கொள். அவர்கள் சொன்னார்கள் நீ நோன்பு நோற்ற நாள் நீ அதைத் திறக்கும் நாளைப் போன்று இருக்கக் கூடாது. மேலும் அவர்கள் சொன்னார்கள்: நோன்பு என்பது வெறுமுனே உண்பதையும், பருகுவதையும் தவிர்ந்து கொள்வதல்ல. மாறாக ஹராமானவற்றை பார்ப்பதை விட்டும் தம் கண்களைப் பாதுகாக்க வேண்டும். பொய் கூறுவதிலிருந்து நம் நாவைத் தடுத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் சண்டை செய்யக் கூடாது. மற்றவர் மீது பொறாமை கொள்ளக் கூடாது. மற்றவர் பற்றி புறம் பேசக் கூடாது. பொய்யை நிரூபிக்க விவாதம் செய்யாதீர்கள். பொய்ச் சத்தியம் செய்யாதீர்கள். பட்டப் பெயர் சூட்டாதீர்கள். தூசனம் பேசாதீர்கள். அல்லாஹ்வுடைய ஞாபகிப்பதை விட்டும் தொழுகையை விட்டும் பராமுகமாக இருக்காதீர்கள். சொல்லக் கூடாததை சொல்வதை விட்டும் மௌனமாக இருங்கள். பொறுமையாக இருங்கள். உண்மையாளராக இருங்கள். கெட்டவர்களுடன் சேர்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். கெட்ட வார்த்தை, வதந்தி, பொய் கூறுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். கோல் சொல்லாதீர்கள். இமாம் மஹ்தி அவர்களின் வருகையை எதிர் பார்த்திருங்கள். மறுமையின் பிரயாணத்துக்காக ஸாலிஹான நல்லமல்களின் பொதியை எடுத்துக் கொள்ளுங்கள்.

Scroll to Top
Scroll to Top