அறிவு • அமைதி • மனிதநேயம்Thursday, August 20, 2026
August 20, 2026 ·

இமாமத் பற்றிய ஆய்வின் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, முஸ்லிம்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். பெரும்பான்மை சமூகமான ஒரு பிரிவினர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்குப் பின் ஒரு வாரிசையோ அல்லது இஸ்லாமியச் சமூகத்தின் தலைவரையோ தனது மறைவுக்கு முன்னால் நியமிக்கவில்லை என்றும், அந்தப் பொறுப்பை முஸ்லிம்களிடமே விட்டுச் சென்றார் என்றும் நம்பினர். ஆனால், மற்றொரு பிரிவினர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மறைவுக்கு முன்னால் இமாம் அலி பின் அபி தாலிப் (அலை) அவர்களைத் தனது வாரிசாக நியமித்தார் என்றும், முஸ்லிம்கள் அன்னாரின் கட்டளைப்படியே நடந்திருக்க வேண்டும் என்றும் நம்பினர்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்த காலத்திலிருந்தே தொடங்கிய இந்த கருத்து வேறுபாடு இன்றும் தொடர்கிறது. இது முஸ்லிம்களை ஷீஆ மற்றும் சுன்னி (அஹ்லுஸ் சுன்னா) என இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. சிலர், இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாரிசு யார் என்பதில் மட்டும்தான் என்றும், இது பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே முடிந்துபோன ஒரு வரலாற்றுச் செய்தி என்றும் கருதுகின்றனர். இந்த முன்முடிவோடு அவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள்: 'இமாமத் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாரிசுரிமை பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு, தமது பொது எதிரிகளைப் பற்றிச் சிந்திப்பது சிறந்தது அல்லவா? பிரிவினையை ஏற்படுத்துகின்ற 'நபிகள் நாயகத்தின் வாரிசு யார்?' என்ற இந்தத் தலைப்பை விட்டுவிட்டு பயனுள்ள விடயங்களைப் பற்றிப் பேசலாமே?'.


இக்குற்றச்சாட்டு தொடர்பில் இருவகையான பதில்கள் காணப்படுகின்றன: (1)


1. உண்மை யாதெனில், ஷீஆ மற்றும் சுன்னி சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையிலான வேறுபாடு சமூகத் தலைமைத்துவத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. இது பிக்ஹ் (சட்டவியல்), கலாம் (இறையியல்) மற்றும் தஃப்சீர் (குர்ஆன் விளக்கம்) போன்ற பிற துறைகளிலும் ஊடுருவியுள்ளது. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பாவமற்ற (மஃஸூம்) ஒருவரின் ஆட்சியையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தவறு செய்யக்கூடிய ஒரு மனிதனின் ஆட்சியையும் சமமாகக் கருத முடியுமா? வேறு விதமாகக் கூறுவதாயின், ஒரு அடிப்படையான மார்க்கக் கருத்தில் வழிகேடு ஏற்படும்போது, அது அங்கேயே நின்றுவிடாது, ஏனைய அனைத்து விவகாரங்களிலும் அது தீவிரமாகப் பரவும். எனவே, இந்த இரு பிரிவுகளில் ஒன்று நேர்வழியில் செல்ல, மற்றொன்று சரியான பாதையை இழந்துள்ளது என்று சொல்ல முடியும். இதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எழுபத்தி மூன்று பிரிவுகள்' என்ற புகழ்பெற்ற ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்: 'அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'பனூ இஸ்ரவேலர்களுக்கு என்னவெல்லாம் நிகழ்ந்ததோ, அவையனைத்தும் எனது சமுதாயத்திற்கும் (உம்மத்) அப்படியே நிகழும். பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். எனது சமுதாயமோ எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிரியும். ஒரு பிரிவைத் தவிர மற்ற அனைவரும் நரக நெருப்பிலேயே இருப்பார்கள்.' (2)


2. பொது எதிரிகளுக்கு எதிராக ஒற்றுமையைப் பேணுவது அறிவார்ந்த செயலாகும் என்பது ஐயமில்லை. ஆனால், அதற்காக அடிப்படை நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது அதன் பொருளல்ல. நாம் கண்ணியத்துடனும், தர்க்கரீதியாகவும் நமது நம்பிக்கைகளை நிரூபிக்க முடியும். இதற்கு வசைபாடலோ அல்லது பிடிவாதமோ தேவையில்லை. இத்தகைய ஆய்வுகள் பிரிவினையை ஏற்படுத்துவதில்லை என்பதுடன், அவை தவறான பிரச்சாரங்களால் உருவான கசப்புணர்வுகளை நீக்கிவிடும். (3) மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த அஹ்லுல்பைத் குடும்பத்தார் தம் தோழர்களுக்குக் கற்றுக்கொடுத்த தூய்மையான இறைஞானங்கள் ஷீஆ சிந்தனைப் பள்ளியில் காணப்படுகின்றன. ஷீஆ நம்பிக்கைக் கோட்பாடுகள் பற்றிய ஆய்வும், பரிசுத்த அஹ்லுல்பைத் குடும்பத்தாரின் தலைமைத்துவம் (விலாயத்) தொடர்பான நிரூபணமும் அந்தத் தூய்மையான ஞானங்களுக்குள் நுழைவதற்கான வாயிலாக அமையும். எனவே, அத்தகைய ஞானக்கருவூலத்திலிருந்து நாம் நம்மைத் தடுத்துக்கொள்ள முடியாமல் இருப்பது அவசியம்.


இமாமத் என்ற பதத்தின் மொழி ரீதியான பொருள்


'இமாம்' என்ற சொல்லுக்கு மொழி ரீதியாக 'தலைவர்' அல்லது 'வழிகாட்டி' என்று பொருள். ராகிப் அல்-இஸ்பஹானி கூறுகிறார்: 'இமாம் என்பவர், அவருடைய சொல் மற்றும் செயலில் மற்றவர்களால் பின்பற்றப்படுபவர் ஆகும். அவர் சத்தியத்தின் மீது இருந்தாலும் சரி அல்லது அசத்தியத்தின் மீது இருந்தாலும் சரி.' இமாம் என்ற பதத்தின் பன்மைச் சொல், 'அயிம்மாஹ்' என்பதாகும். இமாம் என்பது இந்த வசனத்தில்: 'يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ' '(நபியே! நினைவு கூர்வீராக!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் அவர்களுடைய தலைவரைக் கொண்டு நாம் அழைக்கும் அந்த நாளை.' (அல்-இஸ்ரா: 71). மேலும், இமாம் என்பது மக்கள் யாரைப் பின்பற்றுகிறார்களோ அவரைக் குறிக்கும். (4) எனவே, 'இமாம்' என்ற சொல் நேர்மறையான பொருளிலும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, திருக்குர்ஆன் கூறுவது போல: (وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا) 'நாம் அவர்களிலிருந்து எமது கட்டளைப்படி (மக்களுக்கு) நேர்வழி காட்டும் தலைவர்களை ஆக்கினோம்.' (அஸ்-ஸஜ்தா: 24). அதேபோல், இச்சொல் எதிர்மறையான பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, (وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ) 'மற்றும், (நரக) நெருப்பின் பக்கம் அழைக்கும் தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம்.' (அல்-கஸஸ்: 41). இதன் காரணமாகவே, உத்தேசிக்கப்பட்ட பொருள் எது என்பதைத் தீர்மானிக்க அந்த வாக்கியத்தில் ஒரு குறிப்பு (கரீனா) இருக்க வேண்டியது அவசியமாகிறது.


கலைச்சொல் பொருளில் ஷீஆ - சுன்னி வேறுபாடுகள்

'இமாம்' என்ற பதத்தின் கலைச்சொல் விளக்கத்தில், ஷீஆக்களுக்கும், அஹ்லுல் சுன்னாக்களுக்கும் இடையே முக்கியமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஷீஆக்கள் இமாமை அனைத்து விவகாரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரதிநிதியாகக் (வாரிசாகக்) கருதுகின்றனர். எனவே, நபிகள் நாயகத்தின் அனைத்துப் பொறுப்புகளும் இமாமையே சாரும். இதன் காரணமாகவே, இமாம் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு, இறைத்தூதர்களுக்குரிய அதே பண்புகளையும், தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இவ்விருவருக்கும் இடையிலான ஒரே வித்தியாசம் யாதெனில், இறைத்தூதர்களுக்கு 'வஹீ' (இறைச்செய்தி) அருளப்படும். ஆனால், இமாம்களுக்கு வஹீ அருளப்படமாட்டாது. மறுபுறம், 'இல்முல் லதுன்னி' (இறைவன் அருளிய ஞானம்) மற்றும் 'இஸ்மத்' (பாவமற்ற பரிசுத்த நிலை) போன்ற பண்புகளைக் கொண்டவர் யார் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். எனவே, அல்லாஹ் மட்டுமே இமாமைத் தேர்ந்தெடுக்க முடியும். மனிதர்களுக்கு அதற்கான தகுதி கிடையாது. (5) ஆனால், இமாமத் (தலைமைத்துவம்) என்பதன் பொருள் குறித்து சுன்னத் வல் ஜமாஅத்தினரின் கருத்துக்கள் மாறுபடுகின்றன. சிலர், இமாமத் என்பது மார்க்கம் மற்றும் உலகியல் விவகாரங்களின் தலைமை என்று கருதுகின்றனர். (6) இன்னும் சிலர், இமாமத் என்பது மார்க்க விவகாரங்களில் நபிகளாரின் பிரதிநிதித்துவம் என்று கூறுகின்றனர். (7) இருப்பினும், இமாமத் எனும் பதவி இறைவனால் நேரடியாக நிர்ணயிக்கப்படும் (தெய்வீகப்) பதவி அல்ல என்பதில் அனைத்துச் சுன்னத் வல் ஜமாஅத்தினரும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, இமாமுக்குரிய விசேட பண்புகள் அவர்களுக்கு முக்கியமல்ல. எந்தவொரு கொள்கையும், நடத்தையுமுள்ள ஒருவரால் நபிகளாரின் பிரதிநிதியாக வர முடியும் எனக் கருதுகின்றனர். (8) மேலும், இமாமுக்கென பிரத்யேகத் தகுதிகள் எதுவும் அவசியமில்லை என்பதால், எந்த முறையிலாவது ஆட்சியைப் பிடிப்பவர் எவரோ அவரே முஸ்லிம்களின் ஆட்சியாளராகக் கருதப்படுகிறார். (9)


அடிக்குறிப்புகள்:

1. ஐம்பது அகீதா பாடங்கள், நாசிர் மக்காரீம் ஷீராஸி, பக். 234 - 235.


2. சுனன் அத்-திர்மிதி, பா. 4, பக். 135, ஹதீஸ் 2779 - முஸ்னத் அஹ்மத், பா. 3, பக். 145 - அல்-முஸ்தத்ரக் அலா அஸ்-ஸஹீஹைன், பா. 1, பக். 129 - மஜ்மஉஸ் ஸவாயித், பா. 1, பக். 189 மற்றும் பா. 6, பக். 226 மற்றும் 233 - அப்துர் ரஸ்ஸாக் அல்-ஸன்ஆனியின் அல்-முஸன்னஃப், பா. 10, பக். 155 மற்றும் 156 - அம்ர் பின் அபி ஆஸிமின் கிதாப் அஸ்-சுன்னா, பக். 7 - அல்-அஜ்லூனியின் கஷ்ஃபுல் கஃபா, பா. 1, பக். 149 மற்றும் 309.


3. ஷீஆக்களின் எதிரிகள் நாயகத்தின் அஹ்லுல்பைத் குடும்பத்தாரைப் பின்பற்றுபவர்கள் மீது எந்தளவிற்கு அவதூறுகளை சுமத்தியுள்ளனர் என்றால், சில முஸ்லிம்கள் அவர்களை காஃபிர்கள் (இறைமறுப்பாளர்கள்) என்று கருதுகின்றனர். உதாரணமாக, ஷீஆக்கள் திருக்குர்ஆன் மாற்றப்பட்டுவிட்டதாக நம்புகிறார்கள் அல்லது அவர்கள் தங்களது இமாம்களை வணங்குகிறார்கள் என்று வஹ்ஹாபிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஷீஆக்களின் உண்மையான கொள்கைகளைப் பற்றி கலந்துரையாடுவது, இத்தகைய அவதூறுகளை நீக்கவும், முஸ்லிம்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தவும் உதவும்.


4. இமாம் (தலைவர்) என்பவர் பின்பற்றப்படுபவர் ஆவார். அவர் ஒரு மனிதராக இருக்கலாம் - அவருடைய சொல் அல்லது செயல் பின்பற்றப்படலாம்; அல்லது அது ஒரு வேதமாகவோ (புத்தகம்) அல்லது வேறு எதுவாகவோ இருக்கலாம். அவர் உண்மையான (நேர்வழி பெற்ற) தலைவராக இருக்கலாம் அல்லது வழிகெட்ட (தவறான) தலைவராகவும் இருக்கலாம். 'இமாம்' என்பதன் பன்மை 'அயிம்மாஹ்' (أئمة) என்பதாகும். அல்லாஹ்வின் திருவசனம்: (يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ) 'ஒவ்வொரு கூட்டத்தினரையும் அவர்களுடைய இமாம்களைக் (தலைவர்களைக்) கொண்டு நாம் அழைக்கும் நாளை (நினைவு கூர்வீராக).' (அல்-இஸ்ரா: 71). அதாவது, அவர்கள் யாரைப் பின்பற்றினார்களோ அவரைக் கொண்டு (அழைக்கப்படுவார்கள்).' ஆதாரம்: ராகிப் அல்-இஸ்பஹானி, அல்-முஃப்ரதாத் ஃபீ கரீப் அல்-குர்ஆன், பா. 1, பக். 24.


5. 'இமாமத் (தலைமைத்துவம்) என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பதவியாகும். இது இறைச் சட்டங்களை (ஷரீஅத்) பூமியில் நிலைநாட்டவும், மக்களை நேர்வழியின் பக்கம் வழிநடத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தலைமை, எவருக்குக் கீழ்ப்படிவது கடமையோ அத்தகைய மஃஸூம் (பாவமற்றவர்) என்பவரின் தலைமையின் கீழ் நிகழும்.' ஆதாரம்: முல்லா சத்ரா, முஹம்மது பின் இப்ராஹிம், ஷரஹ் உஸூல் அல்-காஃபி, கிதாப் அல்-அக்ல் வல்-ஜஹ்ல், பா. 01 மற்றும் 05, பக். 08. ஷெய்க் முஃபீத் இவ்வாறு கூறுகிறார்: 'இமாம் என்பவர் மார்க்க மற்றும் உலகியல் விவகாரங்களில் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரதிநிதியாக இருந்து மக்களுக்குத் தலைமை தாங்குபவர் ஆவார்.' ஆதாரம்: ஷெய்க் முஃபீத், அல்-நுகாத் அல்-இஃதிகாதிய்யா, பக். 39. மற்றும் செய்யித் முர்தழா இவ்வாறு கூறுகிறார்: 'இமாமத் என்பது ஒரு பொதுவான மார்க்கத் தலைமைத்துவமாகும். இப்பதவியை இமாம் மக்களின் பிரதிநிதியாக ஏற்பதில்லை. மாறாக அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (இறைக்கட்டளையாக) அதனைப் பெறுகிறார்.' ஆதாரம்: ரசாயில் அல்-ஷரீப் அல்-முர்தழா, செய்யித் முர்தழா, பா. 2, பக். 246.


6. அல்-தஃரீஃபாத், காழி ஜுர்ஜானி, பக். 16 மற்றும் ஷரஹ் அல்-மவாகிஃப், பா. 08, பக். 345.


7. ஷரஹ் அல்-மவாகிஃப், பா. 08, பக். 348.


8. இதன் காரணமாகவே, மது அருந்திய, நாய்களுடனும் குரங்குகளுடனும் விளையாடிய மற்றும் தனது நெருங்கிய உறவினர்களுடனேயே (மஹ்ரம்) தகாத உறவு வைத்திருந்த யஸீத் பின் முஆவியா போன்ற ஒருவரைக்கூட நபிகளாரின் வாரிசாகத் தகுதியுள்ளவர் என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் கருதுகின்றனர். அதேசமயம், இத்தகைய சீர்கேடுகளுக்கு எதிராகப் புரட்சி செய்த இமாம் ஹுசைன் (அலை), ஆட்சியாளருக்குக் கீழ்ப்படியவில்லை என்ற காரணத்திற்காகக் கொல்லப்படுவதற்குத் தகுதியானவர் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆதாரங்கள்: தாரீக் மதீனத் திமிஷ்க், பா. 27, பக். 429 - அத்-தபகாத் அல்-குப்ரா, பா. 05, பக். 66 - யனாபிஉல் மவத்தா, பா. 03, பக். 33.


9. 'இமாமத் (தலைமைத்துவம்) என்பது பைஅத் (விசுவாசப் பிரமாணம்), முந்தைய இமாமால் நியமிக்கப்படுதல் அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுதல் (ஆதிக்கம் செலுத்துதல்) ஆகியவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.' (அதாவது: இமாமத் என்பது மக்கள் அளிக்கும் வாக்குறுதி, அல்லது முந்தைய தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுதல், அல்லது இராணுவ ரீதியாக வலிமையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் ஒருவருக்குக் கிடைக்கிறது). 'அதேபோல், மிகச் சரியான கருத்தின்படி, ஒரு பாவி (ஃபாஸிக்) அல்லது அறிவில்லாதவர் (ஜாஹில்) தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும் அது செல்லுபடியாகும்.' ஆதாரம்: அல்-மின்ஹாஜ், பக். 518 (கிதாப் அல்-பிகாத்). சுன்னத் வல் ஜமாஅத் ஃபிக்ஹ் (சட்டக்கலை) விதிகளில் புழக்கத்தில் உள்ள இந்தச் சட்டக் கோட்பாடு, 'அல்-ஹுக்மு லிமன் கலப' (யார் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறாரோ, அவருக்கே அதிகாரம்) என்று அழைக்கப்படுகிறது. ஆதாரம்: தாரீக் சியாஸி இஸ்லாம் (இஸ்லாமிய அரசியல் வரலாறு), பா. 02, பக். 03.